ஷமியின் பந்துவீச்சு பற்றி பாகிஸ்தான் வீரர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அபிஜித் ஸ்ரீவஸ்தவா
- பதவி, பிபிசி செய்தியாளர்
தொடக்க ஆட்டங்களில் அணியில் சேர்க்கப்படாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இப்போது இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார்.
அவரது பந்துவீச்சு இந்திய அணியின் முக்கியமான வெற்றிகளுக்கு உதவியதுடன், வலிமையான வேகப்பந்து வீச்சு அணியைக் கட்டமைக்கவும் உதவியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்படும் ஷமி, பாகிஸ்தானிலும் பாராட்டுப் பெறுகிறார். பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள், அவரைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்திருக்கின்றனர்.
இந்திய அணியின் திறமையான பந்துவீச்சாளர்கள் குறித்து நன்கு அறிந்திருந்த கிறிஸ் சில்வர்வுட், “உண்மையாக சொல்ல வேண்டுமானால், உலகின் எந்தவொரு அணியும் இப்படியொரு அதிரடி பந்துவீச்சு வேண்டும் என விரும்புவார்கள்” என்று அவர்களை பாராட்டினார்.
சில நாட்களுக்கு முன்பு, வங்கதேசத்தின் தலைமை பயிற்றுநர், சந்திகா ஹதுருசிங்கேவும், “இந்திய அணி விளையாடுவதை பார்த்தால் அச்சமாக உள்ளது” என்று கூறியிருந்தார்.
இது போன்ற வார்த்தைகளால் இந்திய அணியை பாராட்டி பேசுவது கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒன்றே.
ஆம். 1970, 1980 களில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் பல்வேறு காலக் கட்டங்களில் ஆஸ்திரேலிய அணியும், இந்தியா தற்போது உலகக் கோப்பை போட்டியில் ஆடுவது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானிலும் பேசப்படும் இந்தியாவின் வெற்றி
இந்தியாவின் அபாரமான இந்த ஆட்டம் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளார் ஷோயப் அக்தர், “இந்தியா தற்போது வெறித்தனமாக ஆடும் அணியாக மாறியுள்ளது. உங்கள் பந்துவீச்சாளர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். ஏனென்றால், வான்கடே அரங்கில் ஒவ்வொரு பந்துக்கு அரங்கம் அதிர கரகோஷம் எழுப்பப்பட்டது. ஒவ்வொரு இந்தியனும் சந்தோஷமாக இருந்தார். நானும் மகிழ்ச்சிக் கொண்டேன், ஷமி நல்ல ஃபார்மில் வந்துவிட்டார் என்பதற்காக. மூன்று போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பதினான்கு உலகக் கோப்பை போட்டிகளில் 45 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். சிராஜ் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் துவம்சம் செய்கிறார்” என்றார்.
பும்ரா குறித்து ஷோயப் அக்தர், “பும்ரா மிகவும் கொடியவர். பும்ரா தான் ஷமி மற்றும் சிராஜ் சிறப்பாக விளையாடுவதற்கான இடத்தை தந்துள்ளார். பும்ராவின் திறன்கள் ஆச்சர்யப்படும் படி உள்ளன” என்றார்.
அதே போன்று வாசிம் அக்ரம், “ஷமி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அவர் ஆட்டத்தில் நுழைந்த உடனேயே சீம் பவுலிங் செய்ய தொடங்கி விடுகிறார். பந்தை உள்ளேயும் வெளியேயும் வேகமாக சுழற்றுவதில் கைதேர்ந்துள்ளார். அவரது பந்துவீச்சு பும்ராவின் பந்துவீச்சிலிருந்து வித்தியாசமானது. அவரது பந்துகளில் பேட்ஸ்மென்கள் அதிர்ந்து போய்விடுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், TWITTER/SHOAIB AKHTAR
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்ஸன், “இந்திய அணியை பார்க்கும் போது, 2003, 2007 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய ஆஸ்திரேலிய அணியை நினைவுப்படுத்துகிறது” என்று இந்தப் போட்டி தொடங்கும் முன் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய அணி இந்த தொடரில் தொடர்ந்து ஏழு வெற்றிகளை கண்டுள்ளது. உலகின் சிறந்த பினிஷர் விராட் கோலி, ஸ்டிரைக் பந்துவீச்சாளர்கள் மற்றும் பல ரன்களை குவித்த ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ராகுல் போன்ற அதிரடி பேட்ஸ்மென்களை கொண்டுள்ளது.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அனைத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களும் அசத்தலான ஃபார்மில் உள்ளனர். காயம் ஏற்பட்டு திரும்பிய பும்ராவும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இரு திசைகளிலும் பந்தை சுழற்றுவதில் கைதேர்ந்தவர் அவர். உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளிலும் இவரை போல், தொடர்ந்து யார்க்கர் வீச யாராலும் முடியாது. எதிரணியில் இருப்பவர்கள் சராசரியாக இவரது பந்துகளில் நான்கு ரன்களுக்கும் குறைவாகவே எடுக்க முடிகிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகள் எடுத்ததும் இவர் தான்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா vs இலங்கை: போட்டியில் என்ன நடந்தது?
- இந்தியா முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்தது.
- விராட் கோலி (88 ரன்கள்), சுப்மன் கில் (92 ரன்கள்) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (88 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
- பும்ரா முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார்.
- சிராஜ் ஏழு பந்துகளில் எந்த ரன்களும் கொடுக்காமல் மூன்று விக்கெட் எடுத்தார்.
- ஷமி ஐந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.
- ஐந்து இலங்கை பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள்.
- இலங்கை அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- இந்தியா இலங்கையை 302 ரன்களுக்கு தோற்கடித்தது.
- உலகக் கோப்பை 2023 இல் இந்தியாவின் தொடர்ச்சியான ஏழாவது வெற்றி.

பட மூலாதாரம், Getty Images
ஷமி பற்றி பேசினால், இந்த உலகக் கோப்பையில் அவர் ஆடும் விதத்தில் வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் ஆடியிருக்க மாட்டார்கள்.
வெறும் மூன்று போட்டிகளில் 5, 4 மற்றும் 5 விக்கெட்டுகளை அதாவது மூன்று போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் உலகக் கோப்பையில் விளையாடும் அனைத்து அணிகளிடையேயும் அதிகம் பேசப்படுகிறார்.
இந்த உலகக் கோப்பையின் முதல் நான்கு போட்டிகளில் வாய்ப்புக்காக காத்திருந்த அதே வீச்சாளர் தான் இவர். ஷமி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான சாதனையையும் படைத்தார்.
வெறும் 11 நாட்களுக்கு முன்பு இந்திய அணியில் அவர் இடம் பெற கூடவில்லை. இன்று அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு வந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா காயமடைந்திருந்ததால் வாய்ப்பு கிடைத்ததும், இனி அவர் அணியில் இருந்து நீக்க முடியாது என்பதை உணர்த்தியிருக்கிறார்.
சரித்திரம் படைத்த முகமது ஷமி

பட மூலாதாரம், Getty Images
முதல் போட்டியிலேயே நியூசிலாந்து போன்ற வலுவான அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் நான்கு பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். இப்போது மீண்டும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா 15 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜம்பா, ஜான்சன் மற்றும் ஆப்ரிடி ஆகியோர் தலா 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். தற்போது, இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கே இந்தப் பட்டியலில் 17 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஷமி, உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராகவும் ஆகியுள்ளார். ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் வசம் இருந்த 44 விக்கெட்டுகளின் சாதனையை முறியடித்துள்ளார். ஷமி இதுவரை 14 உலகக் கோப்பை போட்டிகளில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
போட்டிக்குப் பிறகு ஷமி கூறுகையில், "எங்களின் கடின உழைப்பினாலும், நாங்கள் செல்லும் வேகத்தினாலும், நீங்கள் ஒரு புயலை காண்கிறீர்கள். நாங்கள் அனைவரும் பந்து வீசும் வேகத்தைப் பார்க்கும்போது, யாரும் அதை அனுபவிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. நாங்கள் ஒரே அணியாக இணைந்து பந்து வீசுகிறோம். அதன் விளைவுகளை நீங்கள் காண்கிறீர்கள்." என்றார்.
தனது பந்துவீச்சு பற்றி ஷமி கூறுகையில், "நான் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். நான் நல்ல வேகத்தில் இருக்க முயற்சிக்கிறேன். பெரிய தொடரில் வேகம் குறைந்தால், அதை மீண்டும் பெறுவது கடினம்."

பட மூலாதாரம், Getty Images
கேப்டன் ரோஹித் என்ன சொன்னார்?
'ஆட்ட நாயகன்' முகமது ஷமி ஆக இருக்கலாம். ஆனால் போட்டிக்குப் பிறகு, முகமது சிராஜுக்கே கேப்டனிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்தன.
தனது அணியின் பந்துவீச்சாளர்களின் அற்புதமான ஆட்டம் குறித்து பேச ரோஹித்துக்கு வார்த்தைகள் இல்லை. "பந்துவீச்சாளர்கள் பற்றி என்ன சொல்ல முடியும்" என்று மகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.
பின்னர் அவர், "சிராஜ் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது வேலையைச் செய்யும்போது, அதன் பிறகு எங்களுக்கு மிகவும் எளிதாகிவிடுகிறது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சிராஜ் Vs இலங்கை
சிராஜைப் பொறுத்தவரை, அவரது பந்துவீச்சை பார்க்கும்போது இலங்கை அவருக்கு மிகவும் பிடித்தமான அணியாக மாறி வருகிறது என்று சொல்வது தவறில்லை.
ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான், தனது புல்லர், லெங்த் மற்றும் ஆங்கில்ட் பந்துகளுடன் தனது சிறந்த திறமைகளை அவர் காட்டியிருந்தார். அதன் மூலம் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை சுருண்டு விழ செய்திருந்தார்.
அவரது மொத்த விக்கெட்டுகளில் 19 விக்கெட்டுகள், அதாவது சுமார் 30 சதவீதம் விக்கெட்டுகள் இலங்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளாகும்.
அவர் தனது சிறந்த ஃபார்மில் இருக்கும்போது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அவர் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறார். இந்தப் போட்டியிலும், சிராஜ் வெறும் 7 பந்துகளில் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.
சிராஜ் இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவற்றில், அவர் தொடக்க வீரர்கள் மற்றும் மூன்றாவது பேட்ஸ்மேன்களை 36 முறை (57%) வெளியேற்றியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்ரேயாஸ் ஐயரும் பங்களித்தார்
இந்திய அணி இந்தப் போட்டியில் 357 ரன்கள் எடுத்தபோது, விராட் கோலி, சுப்மன் கில் தவிர, ஸ்ரேயாஸ் ஐயரும் நன்றாக விளையாடினார்.
தனது சொந்த மைதானத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ், 56 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் அடித்தார்.
அவரது பேட்டிங்கைப் பார்க்கும்போது, கடந்த 6 போட்டிகளில் அவர் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்ததாக ஒரு கணமும் தோன்றவில்லை.
போட்டிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவும் அவரைப் பாராட்டி, "ஸ்ரேயாஸ் மனரீதியாக மிகவும் வலுவானவர். இன்று அவர் எதிரணிக்கு தான் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்தார்" என்றார்.
அரையிறுதியை எட்டியதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரோஹித், "இதுதான் முதல் இலக்கு" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த போட்டி தென்னாப்பிரிக்காவுடன் உள்ளது. இதுவும் இந்த தொடரில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கான ஒரு முக்கியமான போட்டியாகும்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஷோயப் அக்தர், "இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யுமா அல்லது முதலில் பந்துவீசுமா என்பது முக்கியமே அல்ல. இப்போது இயற்கை மட்டுமே அவர்களை தோற்கடிக்க முடியும், வேறு யாரும் இல்லை. இப்போது ஒரு அணி மட்டுமே எஞ்சியுள்ளது, தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்காவையும் தோற்கடித்தால், உலகக் கோப்பை அன்றே முடிந்துவிட வேண்டும். இந்தியாவைப் பார்க்கும்போது, உலகக் கோப்பை நடப்பதாகவே தெரியவில்லை. ஏனென்றால், விளையாடுவது அவர்கள் மட்டுமே." என்று புகழ்ந்து பேசினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












