தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவ கல்லூரி தொடங்கவே முடியாதா? புதிய விதிகளால் என்ன சிக்கல்?

மருத்துவப் படிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

குறிப்பிட்ட அளவுக்கு மேல் மருத்துவ இடங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி கிடையாது என தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

இது தமிழ்நாட்டை எப்படி பாதிக்கும்?

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், புதிதாக மருத்துவக் கல்லூரியைத் துவங்க வேண்டும் என்றாலோ, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்) இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றாலோ குறைந்தபட்சமாக என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், இந்த விதிகள் யாருக்கெல்லாம் பொருந்தும் என்றும் அந்த அறிக்கை விவரித்தது. அதில் இறுதியாகக் குறிப்பிட்டிருந்த ஒரு வரிதான் தமிழகத்தை அதிரவைத்திருக்கிறது.

தமிழ்நாடு, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாது

"ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ பத்து லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் என்ற விதிக்கு அந்த மருத்துவக் கல்லூரி" பொருந்தியிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது 7 கோடியே 21 லட்சமாக இருந்த நிலையில், தற்போது சுமார் எட்டு கோடியே 36 லட்சமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆகவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் வரை இருக்கலாம். ஆனால், தற்போதே அந்த எண்ணிக்கை 8,500-ஐ தாண்டிவிட்டது. ஆகவே, தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்குவதோ, ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்போது இனிமேல் இயலாத காரியமாக மாறக்கூடும்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் எந்தத் தென்னிந்திய மாநிலமும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க முடியாது. மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், கோவா, சண்டிகர், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க முடியாது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இருப்பதிலேயே அதிகபட்சமாக பத்து லட்சம் பேருக்கு 1,329 மருத்துவ இடங்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சிகிச்சை பெற பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள் என்றும் தரமான மருத்துவச் சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற விதியை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எந்தக் காரணத்தையும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உருவாக்க நினைக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இந்த விதி அச்சுறுத்தலாக எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்," என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன

தமிழ்நாட்டில் பிற மாநில மக்கள் மட்டுமல்லாது, பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற வருகிறார்கள் என்றும் தரமான மருத்துவச் சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாநில மட்டத்தில் பார்க்கும்போது, போதுமான மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிந்தாலும் பல மாவட்டங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதன் மூலமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்றும் கூறியிருக்கிறார்.

மாநிலத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதற்கு, மாநில அரசுகள் மற்றும் தனியாரின் முதலீடுகளே காரணம் என்றும் மத்திய அரசின் முதலீடு காரணமல்ல என்றும் கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் போன்ற திட்டங்களே இன்னும் துவங்கப்படாத நிலையில், இம்மாதிரி கட்டுப்பாடுகள் மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் தமிழ்நாட்டில் புதிதாக எந்தத் திட்டமும் துவங்கப்பட முடியாத நிலைக்கு வழிவகுக்கும் என்று கூறியிருக்கிறார்.

‘நிதி ஆயோக் முன்வைத்த திட்டம்’

தமிழ்நாடு, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கவேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 1,000 பேருக்கு 1.6 மருத்துவர்கள் உள்ளனர்

மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலங்களில், இயல்பாகவே 'மருத்துவர்:மக்கள்' தொகை விகிதம் அதிகமாகவே இருக்கிறது.

1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கவேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 1,000 பேருக்கு 1.6 மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் உள்ள சில பின்தங்கிய மாநிலங்களில் 4,000 பேருக்கு ஒரு மருத்துவர் தான் உள்ளனர்.

பின்தங்கிய மாநிலங்கள் சிலவற்றில் மிகக் குறைவான மருத்துவக் கல்லூரிகளே இருக்கும் நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளை அங்கு ஈர்க்கும் முயற்சியாகவே இந்த விதி வகுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் சில மருத்துவ நிபுணர்கள்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர், நிதி ஆயோக் முன்வைத்த ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த விதி வகுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

‘தனியார் மருத்துவமனைகளை கொண்டுவர முயல்கிறது மத்திய அரசு’

தமிழ்நாடு, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை வைத்திருக்க வேண்டும் என்பதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறது

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நாடு முழுவதுமே இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க முடியாத மாநிலங்களில், தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகளை நடத்தலாம் என ஒரு திட்டத்தை நிதி ஆயோக் வகுத்திருக்கிறது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “இதற்கு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்ட மருத்துவமனைகள் தேர்வுசெய்யப்பட்டு, அவை தனியாரிடம் அளிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் மருத்துவர்களை நியமித்து நோயாளிகளைக் கவனிக்கலாம். ஒரு நோயாளிக்கு எவ்வளவு கட்டணம் என்று மாநில அரசு நிர்ணியித்து, அதனை தனியாருக்குச் செலுத்திவிடும். தனியார் நிறுவனங்கள், அந்த மருத்துவமனையை முன்வைத்து மருத்துவக் கல்வியையும் அளிக்க முடியும். குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தத் திட்டம் ஏற்கனவே செயல்பட ஆரம்பித்துவிட்டது,” என்றார்.

“இந்த மாதிரி மருத்துவமனைகளை இயக்க தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகம் முன்வர வேண்டிய தேவை இருக்கிறது. அதனால்தான், ஏற்கனவே நிறைய மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலங்களில் புதிதாக கல்லூரிகள் ஆரம்பிப்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்க விரும்பும் தனியாரை மருத்துவக் கல்லூரிகள் குறைவாக உள்ள மாநிலங்களுக்குக் கொண்டுவர நினைக்கிறது மத்திய அரசு" என்கிறார் அவர்.

‘மத்திய அரசுக்கு உரிமை இல்லை’

தமிழ்நாடு, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை
படக்குறிப்பு, மாநில திட்டக் குழுவின் உறுப்பினரான மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்

ஆனால், ஏற்கனவே உள்ள கட்டமைப்பை மேம்படுத்த நினைக்கும் மாநிலங்கள் இந்தத் திட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற கவலை இருக்கிறது. உதாரணமாக தமிழ்நாடு அரசு, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை வைத்திருக்க வேண்டும் என்பதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறது. ஆகவே, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க விரும்புகிறது.

ஆனால், தேசிய மருத்துவக் கமிஷனின் இந்த விதியால், இனி புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்காது.

ஆனால், மருத்துவக் கல்வி என்பது பொறியியல், சட்டம் போன்ற கல்வியைப்போல கிடையாது, இது நேரடியாக மக்களின் பொது சுகாதாரத்தோடு தொடர்புடையது, என்கிறார் மாநில திட்டக் குழுவின் உறுப்பினரான மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

“ஒரு மாநிலத்திற்கு எவ்வளவு மருத்துவர்கள் தேவை, எவ்வளவு மருத்துவர்களை அரசுப் பணியில் சேர்க்க முடியும், எவ்வளவு பேர் தனியார் மருத்துவத் துறையில் பணியாற்றுவார்கள், எவ்வளவு பெண் மருத்துவர்கள் தேவை, எவ்வளவு மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்பதையெல்லாம் அந்தந்த மாநில அரசுகள்தான் கணக்கிட முடியும். தங்கள் மாநிலத்திற்குத் தேவையான அளவுக்கு மருத்துவர்களை உருவாக்கும் உரிமை மாநில அரசுக்குத்தான் உண்டு. மாநில அரசுகள் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இதில் மத்திய அரசுக்கோ, தேசிய மருத்துவ ஆணையத்திற்கோ எந்த உரிமையும் கிடையாது" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

“எவ்வளவு மக்கள் தொகைக்கு எவ்வளவு மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டும் என்பதை மாநில அரசுதான் முடிவுசெய்ய முடியும். காரணம், மாநிலத்தின் ஒரு இடத்தில் மக்கள் தொகை அடர்த்தியாக இருக்கலாம். இன்னொரு இடத்தில் அடர்த்தி குறைவாக இருக்கலாம். ஆகவே, வெறும் இவ்வளவு மக்கள் தொகைக்கு இவ்வளவு மருத்துவர்கள் என்று முடிவுசெய்ய முடியாது. இதெல்லாம் மாநில வல்லுனர் குழு உட்கார்ந்து முடிவுசெய்ய வேண்டும். ஜனநாயகபூர்வமாக தேர்வுசெய்யப்படாத ஆணையத்திற்கு இதில் எந்த உரிமையும் கிடையாது. மருத்துவக் கல்லூரியின் தகுதியை நிர்ணியிப்பதோடு அதன் பணி முடிந்துவிடுகிறது. ஆனால், இந்த ஆணையத்தை வைத்து அதிகாரத்தைக் குவிக்க நினைக்கிறது மத்திய அரசு என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

‘விருப்பமில்லை எனில் நீதிமன்றத்தை அணுகலாம்’

தமிழ்நாடு, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை

பட மூலாதாரம், Raama Sreenivasan / Facebook

படக்குறிப்பு, இந்த விதியை ஏற்க விரும்பாத மாநிலங்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்கிறார் பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம. ஸ்ரீநிவாசன்

இந்த விதி ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதில் தெளிவு இல்லாததால், இந்த விதிக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவிக்க யாரும் முன்வரவில்லை. இந்த விதியை ஏற்க விரும்பாத மாநிலங்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்கிறார் பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம. ஸ்ரீநிவாசன்.

"இது பிராந்திய ரீதியான சமநிலையை உருவாக்க எடுக்கப்பட்ட முடிவு. இந்த ஆணையில் கருத்து வேறுபாடு இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்," என்கிறார் ராம. ஸ்ரீநிவாசன்.

ஆனால், மருத்துவ நிபுணர்களைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்தில் எவ்வளவு மருத்துவர்கள் இருந்தாலும் மருத்துவ சேவைகளை அளிப்பதில் கிராமப்புற, நகர்ப்புற வித்தியாசம் இருந்துகொண்டே இருக்கும். அதற்கு, தொடர்ந்து மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு மூன்றாம் நிலை நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிறுநீரக நிபுணரை பணியில் அமர்த்தினால், வேறு சிறப்பு நிபுணர்கள் இல்லாமல் அவரால் முழுமையாகச் செயல்பட முடியாது. இருதய நோய் நிபுணர்கள், புற்றுநோய் நிபுணர்கள் போன்ற எல்லா மருத்துவர்களுக்கும் இது பொருந்தும். அதற்கேற்றபடி மாநில அரசு கட்டமைப்பை மேம்படுத்திவரும். அந்தப் பொறுப்பை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)