ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி? ஐ.டி. ரெய்டின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், JAGATHRATCHAGAN
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தி.மு.க. எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் ரொக்கமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த ஜெகத்ரட்சகன் யார்? அவரது பின்னணி என்ன? ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டது ஏன்?
தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் ஐந்தாம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல்வேறு ஆவணங்களும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியன.
எவ்வளவு ரொக்கம், எவ்வளவு மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த தகவல்களை வருமான வரித்துறை இதுவரை வெளியிடவில்லை. அதேபோல, ஜெகத்ரட்சகன் தரப்பும் இந்த சோதனைகள் குறித்து இதுவரை எந்தவித விளக்கத்தையோ, தகவலையோ ஊடகங்களுக்கு அளிக்கவில்லை. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் தரப்புக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கெனவே, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த போக்குவரத்துத் துறை தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.
அது தவிர, சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியையும், அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க எம்.பியுமான கௌதம சிகாமணியையும் அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் விசாரணை செய்தது.
தி.மு.க. தலைவர்களிலேயே மிகுந்த பணபலம் மிக்கவராக கருதப்படும் எஸ். ஜெகத்ரட்சன் மீது இப்போது நடத்தப்பட்டிருக்கும் இந்த சோதனை, தேர்தல் நெருங்கும் நிலையில் அக்கட்சி எதிர்கொள்ள வேண்டிய இன்னொரு நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது. இந்த சோதனைகளை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கண்டித்திருக்கிறார். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் பிறந்து, மாநிலத்தின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்த ஜெகத்ரட்சகனின் வளர்ச்சி சாதாரணமானதல்ல.

யார் இந்த ஜெகத்ரட்சகன்?
ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் 1950ல் ஆகஸ்ட் மாதம் பிறந்தார். வழுதாவூரில் பள்ளிக் கல்வியை முடித்த ஜெகத்ரட்சகன், ரயில்வேல் ஊழியராக பணிக்குச் சேர்ந்தார். ஆனால், விரைவிலேயே அரசியல்தான் தனக்குச் சரியாக இருக்கும் எனக் கருதிய ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆர். துவங்கியிருந்த அ.தி.மு.கவில் இணைந்தார்.
1980ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அவருக்குப் போட்டியிடும் வாய்ப்பை அளித்தார் எம்.ஜி.ஆர். வெறும் 30 வயதில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், அபார வெற்றிபெற்றார். இதற்கடுத்து 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, அவருக்கு செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலும் வெற்றிபெற்ற அவர், அ.தி.மு.கவின் நாடாளுமன்ற கட்சித் தலைவராகவும் இருந்தார். அ.தி.மு.கவிற்குள் அவருக்கு பின்பலமாக அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இருந்தார்.
எம்.ஜி.ஆர். இறந்தவுடன் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டபோது, ஜானகி அணியின் பக்கம் சென்றார் ஜெகத்ரட்சகன். 1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், படுதோல்வியடைந்தார்.

பட மூலாதாரம், Facebook
இதற்குப் பிறகு, அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர், அ.தி.மு.கவில் இருந்து ஆர்.எம். வீரப்பனும் நீக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். கழகத்தைத் துவங்கியபோது அதன் பொதுச் செயலாளர் ஆனார். அந்தக் கட்சி, 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது. அந்தக் கூட்டணியின் சார்பில் தி.மு.க. சின்னத்தில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கினார் ஜெகத்ரட்சகன். அந்தத் தேர்தலில் வெற்றி கிடைத்தது. இதற்குப் பிறகு, 2004ஆம் ஆண்டு 'வீர வன்னியர் பேரவை' என்ற அமைப்பைத் துவங்கினார்.
2004ஆம் ஆண்டில் ஜெகத்ரட்சகன் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தார். ஆனால், போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2004ஆம் ஆண்டு ஆகஸ்டில் அவரது 'வீர வன்னியர் பேரவை', 'ஜனநாயக முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியாக உருமாறியது. 2009ல் இந்தக் கட்சி தி.மு.கவுடன் இணைந்தது. மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பா.ம.கவின் வேட்பாளரான ஆர்.வேலுவைத் தோற்கடித்தார் ஜெகத்ரட்சகன்.
இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இணையமைச்சரான ஜெகத்ரட்சகன், 2012ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் இணை அமைச்சராக்கப்பட்டார். அவர் அந்தப் பதவியை ஏற்பதற்கு முன்பாகவே, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இணை அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
2014ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற அவர், 2019ல் மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பல தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, இவரும் ஒரு அனுமதியைப் பெற்றார். 1984ல் பாரத் பொறியியல் கல்லூரியைத் துவங்கிய அவர், வெகு சீக்கிரமே அதனை சிறப்பாக வளர்த்தெடுத்தார். 2002ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது.
இதற்குப் பிறகு 2004ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரி, 2007ஆம் ஆண்டில் புதுச்சேரியில் ஸ்ரீ இலட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம், 2002ல் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 2007ல் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைத் துவங்கினார்.
இது தவிர, வேறு நான்கு பொறியியல் கல்லூரிகளும் ஒரு மருத்துவக் கல்லூரியும் அவராலோ அவருக்கு நெருக்கமானவர்களாலோ நடத்தப்பட்டு வருகின்றன.
1999ல் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, ஒரு மதுபான ஆலையையும் துவங்கினார் ஜெகத்ரட்சகன். இதற்குப் பிறகு நட்சத்திர ஹோட்டல்கள், மருந்து நிறுவனங்கள் என அவரது சாம்ராஜ்ஜியம் விரிந்தது.

பட மூலாதாரம், JAGATHRATCHAGAN/X
ஜெகத்ரட்சகனைத் தொடரும் சர்ச்சைகள்
- 1999ல் இவர் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகுதான், மதுபான ஆலைக்கு உரிமத்தைப் பெற்றார் என்பதால், அது ஒரு விவாதமானது.
- 2009ஆம் ஆண்டில் இவரால் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரி ஒன்றில், எம்பிபிஎஸ் இடத்திற்கு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு செய்தி வெளியிட்டது.
- 2012ஆம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டது. இவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான ஜேஆர் பவர் ஜெனரேஷன் பி. லிட் என்ற நிறுவனத்திற்கு 2007ல் ஒரு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டது. சிறிது நாட்களுக்குப் பிறகு ஜேஆர் பவர் நிறுவன பங்குகள் கேஎஸ்கே எனர்ஜி வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டன. சுரங்கமும் அந்த நிறுவனத்திற்குச் சென்றது. 2012ல் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
- 2019ஆம் ஆண்டில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் 3.85 பில்லியன் டாலர்கள் தனியார் முதலீட்டில் கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்று நிறுப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சில்வர்பார்க் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம்தான் அந்தத் திட்டத்தில் முதலீடுசெய்யும் என்ற தகவல்கள் விரைவில் வெளியாயின. இந்த நிறுவனத்தில், ஜெகத்ரட்சகனின் உறவினர்களே இயக்குநர்களாக இருந்த நிலையில், இவ்வளவு பணம் அவருக்குக் கிடைத்தது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டது.
- இதற்குப் பிறகு அமலாக்கத் துறையின் பார்வை அவர் மீது பட்டது. 2020ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகளுக்குப் பிறகு, ஃபெரா சட்டத்தின் கீழ் அவர் தொடர்புடைய ரூ. 89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
- மற்றொரு பக்கம், ஜெகத்ரட்சகன் தீவிரமான கடவுள் நம்பிக்கையாளர். சென்னை தியாகராய நகரில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் என்ற பெயரில் ஒரு ஆய்வு நிலையத்தை நடத்தி வருகிறார். இந்த மையம், ஆன்மீகம் தொடர்பான நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளது. ஜெகத்ரட்சகன் எழுதியதாக 30க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












