பெருமூளை வாதம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
- பதவி, பிபிசி தமிழ்
(அக்டோபர் 6-ஆம் தேதி உலகப் பெருமூளை வாத நாளாகக் [World Cerebral Palsy Day] கடைபிடிக்கப்படுகிறது.)
பெருமூளை வாதம் எனப்படும் cerebral palsy, ஒரு நபரின் பேச்சு, கை கால் அசைவுகள், மற்றும் நடை ஆகியவற்றை பாதிக்கும் ஒரு குறைபாடு.
குழந்தை கருவில் இருக்கும் போது அதன் மூளை வளர்ச்சி தடைபடுவதால் அல்லது பாதிக்கப்படுவதால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு வகையான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.
சிலரால், நடக்கவே முடியாமல் போகும், ஆனால் நடப்பதற்கான கருவிகளைப் பயன்படுத்தி நடக்க முடியும்.
அதேபோல், சிலருக்குக் கைகளால் செய்யக்கூடிய வேலைகளைச் செய்ய முடியாமல் போகும்.
சிலருக்கு அறிவுசார் குறைபாடுகள் இருக்கும், சிலருக்கு வலிப்பு நோய் தாக்குதல் ஏற்படும். மேலும் சிலருக்குப் பேச்சிலும், சிலருக்கு பார்வையிலும் குறைபாடுகள் இருக்கலாம்.
இக்குறைபாடு ஏன் ஏற்படுகிறது, இதன் வகைகள் என்ன, இதனை முழுவதும் குணப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
பெருமூளை வாதத்தின் வகைகள்
மருத்துவ அறிவியல் பெருமூளை வாதத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கிறது:
- ஸ்பாஸ்டிக் பெருமூளை வாதம் (Spastic cerebral palsy) – தசைப்பிடிப்பு
- டிஸ்கினெடிக் பெருமூளை வாதம் (Dyskinetic cerebral palsy) – கட்டுபடுத்த முடியாத கை கால் அசைவுகள்
- ஏடாக்ஸிக் பெருமூளை வாதம் (Ataxic cerebral palsy) – உடலியக்கங்களின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பில் பாதிப்பு
- மிக்ஸட் பெருமூளை வாதம் (Mixed cerebral palsy) – மேற்சொன்ன பாதிப்புகளின் கலவை
இவற்றில், ஸ்பாஸ்டிக் பெருமூளை வாதம் எனப்படும் தசைப்பிடிப்பு தான் மிகவும் பரவலான வகை.
பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80% ஆன இதனால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பெருமூளை வாதம் ஏன் ஏற்படுகிறது?
பெருமூளை வாதம் எனப்படும் இந்தக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது, இதனை ஆரம்பக் கட்டங்களிலேயே எப்படிக் கண்டறிவது, இதற்கான தீர்வுகள் உண்டா போன்றவற்றை அறிந்துகொள்ள, பிபிசி தமிழ் கோவையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் அருள் செல்வனிடம் பேசியது.
குழந்தை கருவாகத் தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதே அதற்கு ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் அளவும் குறைவாக இருப்பின் நரம்பணுக்களுக்குச் (neurons) சேதம் ஏற்படும். இதன் விளைவாகவே பெருமூளை வாதம் ஏற்படுகிறது என்கிறார் அவர்.
இந்தக் குறைபாட்டை ‘non-progressive disorder’ என்று மருத்துவ அறிவியல் வகைப்படுத்துவதாகக் கூறுகிறார் அவர். அதாவது, ஒருமுறை இந்த பாதிப்பு ஏற்பட்டால், அது மோசமாகவோ, பரவவோ செய்யாது.

பட மூலாதாரம், Getty Images
உடல் சுயமாக இதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமா?
மேலும் பேசிய மருத்துவர் அருள் செல்வன், கரு வளரும்போது, அதன் மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதி ரத்த ஓட்டம் இல்லாமலோ, ஆக்சிஜன் குறைபாட்டினாலோ பாதிக்கப்பட்டிருந்தால், அப்பகுதி, அருகிலிருக்கும் ஒரு பகுதியிடம் உதவிக்குச் செல்லும் என்கிறார்.
“உதாரணமாக, பேச்சு என்ற செயலை நிர்வகிக்கும் மூளையின் பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது கைகளின் இயக்கத்தை நிர்வக்கும் மூளையின் பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலோ, அது அருகில் இருக்கும் பகுதியின் உதவியை நாடும். அப்பகுதி பாதிகப்பட்டப் பகுதிக்கு உதவி செய்து, பாதிப்பினைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்,” என்கிறார் அவர்.
இதன்மூலம், மூளையில் உள்ள நரம்பணுக்கள், தமக்குள் வலைப்பின்னலைப் போன்ற ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கின்றன, என்கிறார் அவர். இதற்கு நியூரோனல் நெட்வொர்க் (neuronal network) என்று பெயர்.
அதேபோல், இம்முறையில் மூளையின் பகுதிகள் தமக்குள் உதவிக்கொள்ளும் முறைக்கு நியோரோ பிளாஸ்டிசிட்டி (neuro plasticity) என்று பெயர், என்கிறாற் மருத்துவர் அருள் செல்வன்.

பட மூலாதாரம், Getty Images
பெருமூளை வாதத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியுமா?
ஒரு குழந்தை கருவிலே இருக்கும் போதே பெருமூளை வாதம் இருக்கிறதா என்று கண்டறிய MRI ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் (ultrasound), போன்ற முறைகளில் கண்டறியலாம், என்கிறார் மருத்துவர் அருள் செல்வன்.
MRI ஸ்கேனில் கதிரியக்க அளவுகள் பாதுகாப்பானவை என்றாலும், ஒரு கருவுக்கு MRI ஸ்கேன் செய்யும்போது அது அந்தக் கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்படும், அதனால் மிகவும் அவசியமான சூழ்நிலைகளிலேயே கருவுக்கு இந்தச் சோதனை முறைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் அவர்.
அப்படி ஒரு கருவுக்கு பெருமூளை வாதத்திற்கான சோதனை எப்போது அவசியமாகிறது?
- கருவின் அசைவு குறைந்து காணப்படும்போது
- பனிக்குடத்தின் நீர் குறைந்து காணப்படும்போது
- குடும்பத்தில் முன்னர் பிறந்த குழந்தைகளுக்கு பெருமூளை வாதம் இருக்கும் பட்சத்தில்
குழந்தை பிறந்த பிறகு அதற்குப் பெருமூளை வாதம் இருக்கிறதா என்பதை MRI ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், மற்றும் எலெக்ட்ரோ என்செஃபாலோகிராம் (electroencephalogram - EEG) ஆகிய முறைகளைப் பயன்படுத்திக் கண்டறியலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு எப்போது பெருமூளை வாதத்திறகான சோதனை அவசியமாகிறது?
- மருத்துவ சோதனைகள் அதற்கான அறிகுறிகளைக் காட்டினால்
- குழந்தையின் கை கால்கள் விறைப்பாக இருந்தால்
குறிப்பாகக், குழந்தைகளின் கைகளோ அல்லது கால்களோ விறைப்பாக இருப்பது பெருமூளை வாதத்திற்கான ஆரம்பகட்ட அறிகுறி என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பெருமூளை வாதத்தைச் சரிசெய்ய முடியுமா?
துரதிர்ஷ்டவசமாக பெருமூளை வாதத்தை முற்றிலும் குணாமாக்க முடியாது என்கிறார் மருத்துவர் அருள் செல்வன்.
“இது ஒருமுறை ஏற்பட்டால், அது நிரந்தரமானது. ஆனால் பாதிக்கப்பட்டவருடைய செயல்பாடுகளை மேம்படுத்த முயற்சி செய்யமுடியும்,” என்கிறார் அவர்.
பொதுவாக, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது உடலியக்கத்தை சீர்செய்ய வழங்கப்படும் இரண்டு வழிமுறைகள்:
- உடற்பயிற்சிச் சிகிச்சை (Physiotherapy)
- அன்றாட வாழ்விற்குத் தேவைப்படும் செயல்பாடுகளைச் செய்யப் பயிற்சி (Occupational Therapy)
- இவற்றுக்கு மேல், மருந்துகளும் உள்ளன. மருந்துகளின் மூலம், மூளையின் neuroplasticity-யை மேம்படுத்தும் மருந்துகள் மூலம் இந்தக் குறைப்பாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
பெருமூளை வாதம் குறித்த விழிப்புணர்வு எந்த அளவு உள்ளது?
2019-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வு, இந்தியாவில் ஒவ்வொரு 1,000 குழந்தைகளுக்கும் கிட்டத்தட்ட 3 குழந்தைகளுக்குப் பெருமூளை வாதம் ஏற்படுவதாக நிறுவப்பட்டுள்ளது.
அன்றாட அனுபவத்தில் பார்க்கும்போது, முன்னர் இருந்ததைவிட பெருமூளை வாதத்தைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது மேம்பட்டிருக்கிறது என்கிறார் மருத்துவர் அருள் செல்வன். அதேபோல, நவீன மருத்துவ வசதிகளால் பெருமூளை வாதம் ஏற்படும் எண்ணிக்கையும் பரவலும் குறைந்திருப்பதாகக் கூறுகிறார்.
முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டில் நிகழ்ந்தன, ஆனால் இப்போது பிரசவத்தின் போதைய கண்காணிப்பும், பிரசவமும் மருத்துவமனைகளில் நிகழ்வதால் நல்ல மருத்துவ கண்காணிப்பும் ஆதரவும் இருப்பதால் இதன் பரவல் குறந்திருக்கிறது என்கிறார் அவர்.
“ஆனாலும், இதுபற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது. கருவின் அசைவில் குறைபாடு இருந்தால் உடனடியாக அதைச் சோதிக்க வேண்டும் எனும் விழிப்புணர்வு மிக அவசியம்,” என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












