ஸீலாண்டியா: கடலுக்கடியில் 50 லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் எட்டாவது கண்டமா? ஆய்வுகள் கூறுவது என்ன?

பண்டைய உலகின் மேதைகளான அரிஸ்டாடில், எரடோஸ்தீனஸ் மற்றும் டோலமி இக்கண்டத்தைப் பற்றி விவரித்தனர்.
வரைபடங்களை வடிவமைத்தவர்கள் இதற்கு Terra Australis Incognita – ‘தெற்கிலிருக்கும் அறியப்படாத நிலம்’ என்ற லத்தீன் பெயராலும் அழைத்தனர்.
இதுநாள் வரை இது ஒரு கற்பனை கண்டம் என்று நம்பப்பட்டது.
பண்டைய கிரெக்க மக்கள், பூமியின் வடிவியல் காரணங்களுக்காக இது உலகின் மறுபுறத்தில் இருக்க வேண்டும் என்று நம்பினர்.
டச்சு ஆய்வாளர் ஏபெல் தாஸ்மன், 1642-இல் ஒரு புதிய நிலத்தைத் தேடி இப்போது நாம் நியூசிலாந்து என்று அழைக்கப்படும் தீவுக் கூட்டத்தை கண்டுபிடித்தார். ஆனால் அவர் தேடியதைவிட இது மிகவும் சிறியதாகத் தோன்றியது.
அதன்பிறகு, ‘ஸீலாண்டியா’ (Zealandia) என்று அழைக்கப்படும் இந்தக் கண்டம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சுமார் 375 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
இக்கண்டம் 94% தண்ணீருக்குள் மூழ்கியிருப்பதால் வெளியில் தெரியாது. ஆனால் இப்போது இந்தக் கண்டத்தின் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள GNS Science எனும் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், கடலின் தரையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து ஸீலாண்டியாவின் பரப்பளவைக் கண்டறிந்து ஒரு புதிய விரிவான வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் இக்கண்டத்தின் முழு பரப்பளவையும் நிறுவியுள்ளனர். அதன்படி, அந்த கண்டத்தின் பரப்பளவு 50 லட்சம் சதுர கி.மீ.
ஆனால் கடலின் அலைகளுக்கு அடியில் இருக்கும் ஸீலாண்டியாவை ஒரு கண்டமாக எப்படிக் கருதுவது?
இதற்கான விடை புவியியலோடு தொடர்புடையது.

ஸீலாண்டியா எப்படி உருவானது?
ஸீலாண்டியாவின் தோற்றம் ‘கோண்ட்வானா’வின் இருந்து துவங்குகிறது.
கோண்ட்வானா எனும் பெருங்கண்டம் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது. அதன் பகுதிகள் தான் இன்று நாம் அறிந்த கண்டங்களாக உருவாகின.
ஸீலாண்டியா சுமார் 8 கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது. ஆனால் அதன் அண்டை கண்டங்களான அண்டார்டிகா மற்றும் ஆஸ்திரேலியா (ஓசியானியா) போலல்லாமல், அதன் பெரும்பாலான பகுதிகள் தண்ணீருக்கு அடியில் இருந்தன.
கடலுக்கு மேல் காணக் கூடியவையாக இருந்த ஸீலாண்டியா கண்டத்தின் பகுதிகள்: நியூசிலாந்து தீவுகள், நியூ கலிடோனியாவின் பிரெஞ்சு பிரதேசம் (French territory of New Caledonia), மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதேசங்களான லார்ட் ஹோவ் தீவு (Lord Howe Island) மற்றும் பால்ஸ் பிரமிட் (Ball's Pyramid) போன்ற பகுதிகள்.
நீருக்கடியில் இருப்பதால், ஸீலாண்டியா அரிதாகவே ஆய்வு செய்யப்பட்டது. இதனால் அதன் வடிவம் மற்றும் எல்லைகள் பற்றிய முரண்பட்ட தகவல்களே உலவி வந்தன. இதுவரை, இக்கண்டத்தின் தெற்கு மட்டுமே வரைபடமாக்கப்பட்டிருந்தது.
புவியியலாளர் நிக் மோர்டிமர் தலைமையில் புதிய ஆய்வை மேற்கொண்ட குழு, இக்கண்டத்தின் மீதமுள்ள மூன்றில் இரண்டு பகுதியை வரைபடமாக்கியிருக்கிறது. "இந்த ஆய்வு இக்கண்டத்தின் மொத்த 50 லட்சம் சதுர கி.மீ. நிலம் மற்றும் கடலோரப் பகுதிகளின் புவியியல் வரைபடத்தை நிறைவு செய்கிறது," என்று இந்த ஆய்வு கூறுகிறது.

ஸீலாண்டியாவின் வயது என்ன?
புவியியலாளர்கள் மற்றும் நில அதிர்வு வல்லுநர்கள் கொண்ட குழு, தீவுக் கரையில் காணப்படும் மாதிரிகள், கடலடியில் தரையைத் துளையிடுவதன் மூலம் பெறப்பட்ட ஆழமான பாறை மாதிரிகள், மற்றும் வண்டல் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
விஞ்ஞானிகள் பேசால்ட் மற்றும் கூழாங்கற்கள் மற்றும் மணல் கற்கள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து அவற்றின் வயதைக் கணித்தனர்.
இவற்றுள் இருந்த மணல்கற்கள் 9.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிற்கால கிரெட்டேசியஸ் சகாப்தத்திலிருந்து (Late Cretaceous epoch) வந்தவை என்று கண்டுபிடித்தனர். இவை ஆரம்பகால கிரெட்டேசியஸின் சகாப்தத்தைச் சேர்ந்த (13 கோடி முதல் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு) கிரானைட் கற்கள், மற்றும் எரிமலைக் கூழாங்கற்களைக் கொண்டிருந்தன என்பதைக் கண்டறிந்தனர்.
பேசால்ட் கற்களின் வரத்து 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஈசீன் சகாப்தத்தைச் சேர்ந்தவை (Eocene epoch) என்று கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஸீலாண்டியாவை முழுவதுமாகக் கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு நாட்களாகின?
இப்படி கற்களின் பாறைகளின் வயதை நிர்ணயித்தும், காந்த முரண்பாடுகளைப் புரிந்துகொண்டதன் மூலமும், விஞ்ஞானிகள் வடக்கு ஸீலாண்டியா முழுவதும் உள்ள முக்கிய புவியியல் அலகுகளை வரைபடமாக்கினர்.
1642ஆம் ஆண்டு ஏபெல் டாஸ்மன் ஒரு ஐரோப்பியராக முதன்முதலில் இக்கண்டத்தைப் பதிவு செய்தார். (டாஸ்மேனியா தீவு இவர் பெயரால் தான் அழைக்கப்படுகிறது).
உண்மையில், ஸீலாண்டியாவைத் தேடிச் சென்ற பல ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் அதன் மேலிருந்த கடல்மீது பயணம் செய்தனர். அவர்கள் தாம் தேடிவந்த கண்டத்தின் மேல் மிதக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்திருக்கவில்லை.
1895-ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள தீவுகள் குறித்த தொடர் ஆய்வுக்காக ஒரு பயணத்தில் கலந்து கொண்ட ஸ்காட்டிஷ் இயற்கை ஆர்வலர் சர் ஜேம்ஸ் ஹெக்டர் (Sir James Hector) ஸீலாண்டியாவின் இருப்புக்கான முதல் உண்மையான தடயங்கள் சேகரித்தார்.
அதன் புவியியலைப் படித்த பிறகு, நியூசிலாந்து என்பது "தெற்கு மற்றும் கிழக்கே நீண்டு பரந்து விரிந்த ஒரு பெரிய கண்டப் பகுதியை உருவாக்கிய மலைச் சங்கிலியின் எச்சம், அது இப்போது நீரில் மூழ்கியுள்ளது..." என்று முடிவு செய்தார்.
1995-ஆம் ஆண்டு, அமெரிக்கப் புவி இயற்பியலாளர் புரூஸ் லுயெண்டைக் (Bruce Luyendyk) மீண்டும் இப்பகுதியை ஒரு கண்டம் என்று விவரித்தார் மற்றும் அதை ‘ஸீலாண்டியா’ என்று அழைக்கப் பரிந்துரைத்தார்.
கண்டங்களில் மேலோடுகளின் தடிமன் பொதுவாக 40 கி.மீ. இருக்கும். கடல் தரையின் மேலோடு சுமார் 10 கி.மீ. தான் இருக்கும்.
அறிவியலையும் தாண்டிய தாக்கங்கள்
ஆனால் ஸீலாண்டியா புவியியல் அழுத்தத்திற்குள்ளானதால் அதன் வடிவம் நீளமானது, அதன் மேலோடுட்டின் தடிமன் வெறும் 20 கி.மீ மட்டுமே உள்ளது.
இறுதியில், செதில் போல மெல்லிய மேலோட்டைக் கொண்டிருந்த இக்கண்டம் கடலில் மூழ்கி மறைந்தது.
ஸீலாண்டியாவின் மேலோட்டின் தடிமன் மற்றும் அதன் பாறைகளின் வகையை வைத்து அதனை ஒரு கண்டம் என்று வாதிடுகின்றனர்.
ஆனால், இது அறிவியலையும் தாண்டிய தாக்கங்களைக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு, நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் (370 கி.மீ.) வரை நீளும் தங்கள் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அப்பால் தங்கள் சட்டப் பகுதிகளை நீட்டிப்பதன் மூலம், தங்கள் ‘விரிவாக்கப்பட்ட கண்டத்தின் பரப்பை’ (extended continental shelf) பெறமுடியும் என்று கூறுகிறது. இதன்மூலம் அப்பகுதியிலிருக்கும் செல்வம் மற்றும் எண்ணெயை அந்நாட்டிற்கு பாத்தியதையாக்குகிறது.
நியூசிலாந்து ஒரு பெரிய கண்டத்தின் சிறு பகுதி என்பது நிரூபிக்கப்பட்டால், அது தனது நிலப்பரப்பை ஆறு மடங்கு அதிகரிக்க முடியும். அதன்மூலம் கடல் ஆய்வுக்கான நிதியையும் அதிகமாகப் பெறமுடியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












