ராஜா ராம் மோகன் ராய்: உடன்கட்டை ஏறுதலை ஒழித்த இவரது கல்லறை கூட இந்தியாவில் இல்லை - ஏன்?

பட மூலாதாரம், Getty Images
(‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ என்று பல வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி ராஜா ராம் மோகன் ராயின் 190-வது நினைவு தினம் இன்று.)
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு பெரும் மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நின்று கொண்டிருந்தது.
ஒருபுறம் அரசியல் ரீதியாக ஆங்கிலேயர்கள் நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தனர், மறுபுறம் பல பழமைவாதத் தீமைகள் சமூகத்தை பின்னோக்கி இழுத்துக் கொண்டிருந்தன.
அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், ஒரு சில சமுதாயத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை சிலர் கையில் எடுத்தனர். அதில் முன்னோடியாக இருந்தவர் ராஜா ராம் மோகன் ராய். அவர் சிலை வழிபாடு மற்றும் இந்துக்களின் பழமைவாதப் பழக்கவழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக இருந்தவர். ‘சதி’ என்றழைக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும், குழந்தைத் திருமணத்தையும் தீவிரமாக எதிர்த்தவர். அந்த பழக்கம் இந்தியாவில் ஒழிக்கப்பட காரணமாக இருந்தவர்.
இன்று, ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ என்று பல வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய், 1833-ஆம் ஆண்டு, தனது 61-ஆம் வயதில் இங்கிலாந்தில் காலமான போது, அவர் ஒரு உலகளவில் பிரபலமான மேதையாகவும் அறிவுலகவதியாகவும் அறியப்பட்டார்.
ஆறடி உயரத்தில், வசீகரமான தோற்றம் கொண்டிருந்த இந்த மனிதர், இந்திய பாணியில் நீளமான அங்கி போன்ற ஆடையை அணிந்தார், ஆனால் மேற்கத்ய்திய பாணியில் ஷூ அணிவதை விரும்பினார். அவரது இந்த ஆடைத் தேர்வு, அவரது அறிவுலக, சமூகச் செயல்பாட்டிலும் பிரதிபலித்தது. இந்தியச் சமூகத்தை சீர்திருத்தப் பணியாற்றிய அவர், இந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் ஒரு பாலமாகவும் இருந்தார்.
ராம் மோகன் ராய் தான், இந்தியாவைத் தாண்டியும் ஒரு மனிதச் சமூகம் இருக்கிறதென்பதையும், இந்தியா இந்த சர்வதேசச் சமூகத்தின் ஒரு பகுதி என்பதையும் தெளிவாக உணர்ந்த இந்தியச் சிந்தனையாளர், என்கின்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான க்றிஸ்டோஃபர் பேலி.
வங்காளி ஜமீன்தார் குடும்பத்தில் 1772-ஆம் ஆண்டு பிறந்த ராம் மோகன் ராய், தனது 20-களில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிக்குச் சேர்ந்தார். தனது வருமானத்திலிருந்து ஆங்கிலேய அதிகாரிகளுக்குக் கடன் கொடுத்தும் வருமானம் ஈட்டினார். தனது குடும்பச் சொத்துகளுடன் மேலும் செல்வம் சேர்த்து, தனது 42-வது வயதில் தான் மிகவும் நேசித்த கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றில் தனது முழு கவனத்தைச் செலுத்தினார்.
தனது சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியமான குறிக்கோளாக ராம் மோகன் ராய் கொண்டிருந்தது பெண்களின் முன்னேற்றம். முக்கியமாகச், ‘சதி’ என்றழைக்கப்பட்ட உடன்கடை ஏறுதல் எனும் கொடுமையை ஒழிப்பது. கொல்கத்தாவின் காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் ‘சதி படித்துறையில்’ நடந்த பல உடன்கட்டை ஏறும் நிகழ்வுகள் ராம் மோகன் ராயை வெகுவாகப் பாதித்திருந்தன.
1818-ஆம் ஆண்டு, ராம் மோகன் ராய், சதிக்கு எதிரான 'A Conference between an Advocate for, and an Opponent of the Practice of Burning Widows Alive' என்ற தலைப்பிலான தனது அறிக்கையை வெளியிட்டார். அது இந்தக் கொடூரமான பழமைவதப் பழக்கத்தைப் பற்றி வெளியுலகிற்கும் அறியத் தந்தது. இதைத்தொடர்ந்து சதியை எதிர்த்து தீவிரமான பிரசாரத்தையும் மேற்கொண்டார் ராம் மோகன் ராய்.
அதற்கு முன் வரை, கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், இந்தியர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று ‘சதி’யைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் சதிக்கு எதிரான ராம் மோகன் ராயின் பிரசாரம் அதனை அசைத்துப் பார்த்தது.
இந்த முயற்சிகளின் பலனாக, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் பிரபு 1829-ஆம் ஆண்டு முதன்முதலாகச் ‘சதி’ பழக்கத்துக்குத் தடை விதித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ராம் மோகன் ராயின் கல்லறை எங்கு உள்ளது?
இந்தியாவிற்காகவும், இந் தியச் சமூகத்தைச் சீர்திருத்தவும் தீவிரமாகப் பணியாற்றிய ராஜா ராம் மோகன் ராயின் கல்லறை கூட இந்தியாவில் இல்லை. அது இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரத்தில் உள்ளது.
பிரிஸ்டல் நகரத்தின் மிகப்பழமையான கல்லறை தோட்டம் அர்னோஸ் வேல் (Arnos Vale Cemetery). இங்கு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறியப்படாத கல்லறைகளுக்கு மத்தியில் அவரது கல்லறையும் உள்ளது.
ஆனால், இந்தியாவின் சமூகத் தீமைகளுக்கு எதிராகப் போராடிய ராஜா ராம் மோகன் ராய் எப்படி இங்கிலாந்தில் அடக்கம் செய்யப்பட்டார்?
இக்கேள்விக்குப் பின் சுவாரஸ்யமான வரலாறு உண்டு.

பட மூலாதாரம், Getty Images
‘ராஜா’வான ராம் மோகன் ராய்
19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதல் இந்தியச் சுதந்திரப் போர் என்றழைக்கப்படும் 1857-ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் நடப்பதற்கு முன்னரே, முகலாயப் பேரரசு தனது அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
1830-ஆம் ஆண்டு முகலாயப் பேரரசின் கடைசி மன்னர்களில் ஒருவரான இரண்டாம் அக்பர் (அக்பர் ஷா), இங்கிலாந்து அரசரிடமிருந்து தனக்கு நிதியுதவி பெற்றுவருவதற்காக ராம் மோகன் ராயை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு அவர் இங்கிலாந்து அரசரை சந்திக்க வகை செய்யும் பொருட்டு, அவருக்கு ‘ராஜா’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.
ஆனால், ராம் மோகன் ராயை இங்கிலாந்து அனுப்ப மன்னர் இரண்டாம் அக்பருக்கு வேறு சில காரணங்களும் இருந்தன.
அப்போது ராம்மோகன் ராய் முன்னின்று கொண்டுவந்த சதி ஒழிப்பு மசோதாவைப் பழமைவாத இந்துக்கள் எதிர்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வெற்றிபெறுவதை முகலாய மன்னர் விரும்பவில்லை. எனவே சதி பழக்கத்திற்கு எதிராக இங்கிலாந்தில் பிரசாரம் செய்ய ராம் மோகன் ராயைத் தேர்ந்தெடுத்தார்.
அதேபோல், இரண்டாம் அக்பருக்கு, இங்கிலாந்தில் தனது தூதுவராக இருக்க ஒரு பிரபலமன, திறமைமிக்க நபர் தேவைப்பட்டார். அதனால் அப்போது பிரம்மோ சமாஜம் என்ற சமூகச் சீர்திருத்த அமைப்பினை நிறுவி மிகப் பிரபலமாக இருந்த ராம் மோகன் ராயை அதற்குத் தேர்ந்தெடுத்தார். ராய் மேற்கத்திய உலகில், இந்தியாவின், முகலாய சாம்ராஜ்ஜியத்தின் குரலாக இருப்பார் என்று இரண்டாம் அக்பர் நம்பினார்.

இங்கிலாந்தில் இறந்த ராம் மோகன் ராய்
ராம் மோகன் ராயின் இந்த மேற்குலகப் பயணத்தைப் பற்றி முன்னர் பிபிசியிடம் மேசிய எழுத்தாளரும் வரலாற்று ஆர்வலருமான ஸ்வாகதா கோஷ், இங்கிலாந்திற்குச் சென்ற ராஜா ராம் மோகன் ராய், அங்கு பல இடங்களில் உரை நிகழ்த்தியதாகக் கூறுகிறார்.
“அவர் தனது கருத்துகளைப் பல இடங்களில், பல கூட்டங்களில் தெரிவித்தார். அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்ல விரும்பினார். ஆனால், அதற்கிடையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு மூளைக்காய்ச்சல் (meningitis) ஏற்பட்டது. அதன் பிறகு அவர் இறந்தார்,” என்றார்.
மேலும் பேசிய ஸ்வாகதா கோஷ், ராம் மோகன் ராய் இங்கிலாந்தில் கழித்த அவரது இறுதி இரண்டரை வருடங்கள் தான் அவரது வாழ்வின் முக்கியாமான காலம் என்றார்.
ராம் மோகன் ராய், 1833-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தனது 61-வது வயதில் இங்கிலாந்தில் காலமான போது, அங்கு இந்து முறைப்படி அவரை தகனம் செய்ய அங்குள்ள நாடைமுறை அனுமதிக்கவில்லை. எனவே அவர் பிரிஸ்டல் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கைவிடப்பட்ட கல்லறை, மீட்டெடுத்த ஆங்கிலப் பெண்
ஆனால், அவரது கல்லறை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தது.
இங்கிலாந்தின் மேற்கத்திய பாணிக் கல்லறைத் தோட்டத்தில், இந்தியக் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்ட ஒரேயொரு கல்லறையான ராம் மோகன் ராயின் கல்லறையை மீட்டெடுத்து மீண்டும் பராமரிக்கத் துவங்கியது ஒரு ஆங்கிலப் பெண்மணி.
கார்லா கான்ட்ராக்டர், இங்கிலாந்தில் பிறந்து, மும்பையைச் சேர்ந்த ஒரு பார்சி நபரைத் திருமணம் செய்துகொண்டவர். அவர் சில காலம் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். பிறகு சோஃபியா கல்லூரியில் பணியாற்றினார்.
அவர் கூறுகையில், “நான் ராஜா ராம் மோகன் ராயைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன், கற்றுக் கொடுக்கவும் செய்தேன். நான் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற போது அங்கு அவரது கல்லறை பராமரிப்பின்றிக் கிடந்ததைக் கண்டோம். அதைச் சரிசெய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம்,” என்கிறார்.
அதன்பிறகு அப்போதைய கல்கத்தா மாநகரட்சி மேயராக இருந்த பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சர்யாவின் உதவியோடு ராம் மோகன் ராயின் கல்லறை புதுப்பிக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு பிரிஸ்டல் நகரத்தின் தேவலயத்துக்கு அருகில் உள்ள காலேஜ் கிரீன் எனும் இடத்தில் அவரது உருவச் சிலை நிறுவப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












