தேனி அருகே 'கடன் கட்டவில்லை' என வீட்டுச் சுவற்றில் எழுதிய நிதி நிறுவன ஊழியர் - என்ன நடந்தது?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தேனி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்ற நபர் ஒருவர் அதை திரும்ப செலுத்தாததாகக் கூறி அவரது வீட்டின் சுவரில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எழுதியது சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானது.
ஆனால், தான் கடனை திருப்பிச் செலுத்தி விட்டதாகவும் பாக்கி எதுவும் இல்லை என அந்த நபர் கூறுகிறார். இந்நிலையில், தனி நபர் பகை காரணமாக நிறுவன ஊழியர் சுவரில் எழுதிவிட்டார் என நிதி நிறுவனம் கூறியுள்ளது.
என்ன நடந்தது இச்சம்பவத்தில்?
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியில் வசிப்பவர் பிரபு. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு 'வெரிடாஸ்' (VERITAS) என்ற தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானமாக வைத்து 3 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார்.
இந்த அடமானத் தொகையை 60 மாதங்களில் மாதம் 5-ஆம் தேதிக்குள் 8000 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும் என நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அதன்படி கடந்த ஆகஸ்ட் வரை கொரோனா காலத்தில் கட்டாமல் விட்ட ஏழு தவணையையும் சேர்த்து 67 மாதங்கள் பணம் கட்டி இருக்கிறார்.
ஆனால், மேலும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என நிறுவனத்தினர் கூறியுள்ளனர் அதனை வீட்டின் உரிமையாளர் பிரபு மறுக்கவே, அவரது வீட்டுக்குச் சென்ற அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வீட்டின் 4 புற சுவற்றிலும் வெரிடாஸ் நிதி நிறுவனத்திற்கு 'வீட்டு கடன் கட்டவில்லை', என சிவப்பு நிற ஸ்பிரே கொண்டு பெரிதாக எழுதி இருக்கிறார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பிரபு, "நான் 2017-ஆம் ஆண்டு எனது வீட்டை அடமானமாக வைத்து வெரிடாஸ் ஃபைனான்ஸ் (VERTAS FINANCE) என்ற நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றேன். இதற்கு 8,630 ரூபாய் மாதம் தவணையாக 60 மாதங்கள் கட்ட வேண்டும் என நிதி நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்தேன். அதனைத் தொடர்ந்து நாங்கள் மாதம்தோறும் பணத்தை திரும்பிக் கட்ட துவங்கினோம்," என்றார்.

உடல் நலக் குறைவால் பணம் கட்டுவதில் சிக்கல்
தொடர்ந்து பேசிய பிரபு, தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தம்மால் ஒரு மாதம் தவணை கட்ட முடியாமல் போனது என்றார்.
"மேலும், அதனைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தின் ஒப்பந்தப்படி 5-ஆம் தேதிக்குள்ளாகப் பணம் செலுத்த முடியாத நிலைமை சில மாதங்கள் இருந்தது. ஆனால், நிதி நிறுவனம் கூறிய படி 60 மாதத்தில் ஒரு மாதம் தான் கட்டாமல் இருந்தோம். பின்பு, அதனையும் கட்டி விட்டோம். கொரோனா காலத்திற்கான 7 மாதம் கட்டாமல் விட்டதால் கூடுதலாக ஏழு மாதங்கள் தவணையை செலுத்தி ஆகஸ்ட் மாதம் வரை நிறைவு செய்தேன்," என்றார்.
மேலும் பேசிய அவர், "ஆனால் நீங்கள் இன்னமும் 20 மாதம் தவணை கட்ட வேண்டும் என நிதி நிறுவன அதிகாரிகள் என்னிடம் கூறினர். உரிய விளக்கம் கேட்டால் அதெல்லாம் கூற முடியாது 20 மாதம் கட்ட வேண்டும் கூறினர். அதாவது, ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் இன்னமும் பாக்கி இருக்கிறது. அதனைக் கட்டினால் மட்டுமே கடன் தொகை முழுமை அடையும் எனக் கூறினார். ஆனால், நான் தற்போது வரை 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி நிறுவனத்திற்கு செலுத்தி இருக்கிறேன்," என்றார்.
"பலமுறை நிதி நிறுவனத்தினர் எங்களின் வீட்டுக்கு நேரடியாக வந்து தவணையைச் செலுத்தக் கூறினர். ஆனால், முறையான விவரங்களை கொடுத்தால் மட்டுமே பணம் நான் செலுத்துவேன் எனக் கூறினேன். நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது குழந்தைகள்,மனைவி மட்டும் இருந்த போது நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வீட்டின் நான்கு புறச் சுவற்றில் எழுத முற்பட்டார்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அப்போது எனது குழந்தை அவர்களிடம் சென்று என்ன செய்றீங்க எனக் கேட்க மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டின் நான்கு புற சுவர்களிலும் "வெரிடாஸ் வீட்டுக் கடன் செலுத்தவில்லை" என மிகப்பெரிய எழுத்துக்களில் சிவப்பு நிறத்தில் ஸ்பிரே பெயிண்ட் வைத்து எழுதிவிட்டுச் சென்றார்," என்றார்.
மேலும், "இந்த நிகழ்வு எனக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆண்டிப்பட்டி கானா விலக்கு காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளேன். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்", என்று தெரிவித்தார்.
தனிப்பட்ட பகை காரணமா?
ஆனால், இச்சம்பவத்தில் வெரிடாஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நபர் தனிப்பட்ட பகையால் வீட்டின் சுவற்றில் எழுதியதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சக்தி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தேனியைச் சேர்ந்த பிரபு தங்களது நிதி நிறுவனத்தில் வீட்டை அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகச் சொன்னார். "ஆனால் அதனை பிரபு முறையாக திரும்பிச் செலுத்தவில்லை. கொரோனா காலத்தில் 7 மாதம் தவணை செலுத்தவில்லை. 67 தவணையில் 61 தவணை பின் தேதியில் செலுத்தி இருக்கிறார். தாமதமாக தவணை கட்டியதால் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் அவருக்கு கூறப்பட்டது," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் மகேந்திரன் என்பவருக்கு பிரபுவுடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மகேந்திரன், பிரபு செலுத்த வேண்டியத் தவணை தொகையை தனது ஊதியத்தில் இருந்து செலுத்தி வந்துள்ளார்," என்றார்.
"மொத்தமாக 28,000 ரூபாயைப் பிரபுக்குப் பதிலாக மகேந்திரன் செலுத்தி இருக்கிறார். மகேந்திரன் கட்டிய பணத்தை திரும்பி கேட்க பணத்தை திரும்பத் தருவதில் காலம் தாழ்த்தி இருக்கிறார் பிரபு. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் வீட்டிற்குச் சென்ற நிறுவனத்திற்கு தெரியாமல் பெயிண்டை பயன்படுத்தி நிறுவனத்தின் பெயரை எழுதி உள்ளார்," என்று கூறினார்.

மேலும் பேசிய சக்தி, "தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கானா விலக்கு காவல்நிலையத்திற்கு நிதி நிறுவன அதிகாரிகளுடன் நானும், கடன் பெற்றப் பிரபுவும் நேரில் ஆஜராகினோம். அங்கு இரு தரப்பின் விளக்கங்களை அளித்தோம்," என்றார்.
மேலும் பெசிய அவர், "இதில் பிரபு, மகேந்திரனுடன் எற்பட்ட தனிப்பட்டப் பிரச்சனையால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பதை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த பிரபு 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் இந்த வழக்கை வாபஸ் பெற்று விடுவேன் எனக் கூறினார்," என்று குறிப்பிட்டார்.
கடன் கட்டத் தவறிய வீட்டின் மீது வெரிடாஸ் ஃபினான்ஸ் நிறுவன ஊழியர் எழுதிய புகார் தொடர்பாக ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி ராமலிங்கத்தை பிபிசி சார்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், வீட்டில் பெயிண்ட் வைத்து எழுதிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கானா விலக்கு காவல் நிலையத்தில் அளித்தப் புகார் அடிப்படையில் நிறுவனத்தில் பணிபுரியும் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது, என்றார்.
"அதில் வெரிடாஸ் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பெயரில், வீட்டின் மீது தான் எழுதவில்லை எனவும், தான் வழங்கிய பணத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதற்காக தான் தன்னிச்சையாக இதனைச் செய்ததாக மகேந்திரன் போலீசாரிடம் கூறினார்," என்றார்.

நிதி நிறுவனம் காவல்நிலையத்தில் அளித்த புகார்
இந்நிலையில், வெரிடாஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், கடன் பெற்ற பிரபு சமூக வலைதளங்களில் தங்களது நிறுவனத்தைப் பற்றி அவதூறு பரப்புவதால் தங்களது நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைந்ததாகக் கூறி கானா விலக்கு போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். இதன் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று கூறினார் ராமலிங்கம்.
மேலும் பேசிய அவர், "இரு வழக்குகளையும் காவல்துறை விசாரத்து வருகின்றனர். விசாரணை முடிந்தபின் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தனியார் வங்கி மேலாளர் ஒருவர், வங்கிகளில் வழங்கப்படும் கடனை வசூல் செய்வதற்கான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே வங்கிக் கடன்களை வசூல் செய்து வருகிறோம், என்றார்.
"வங்கியில் கடன் பெற்றவர் 3 மாதத்திற்கு மேலாக கடனை திரும்பிச் செலுத்தாமல் இருந்தால் அந்த கோப்புகள் தனியார் நிதி வசூல் செய்யும் நிறுவனங்களிடம் வழங்கப்படும்," என்றார்.

மேலும் பேசிய அவர், "பின் அந்த தனியார் நிதி வசூல் செய்யும் நிறுவனங்கள் கடன் பெற்ற நபரை அணுகி பணத்தைப் பெற்று வங்கியில் செலுத்தினால் தனியார் நிதி நிறுவனத்திற்கு 1%-5% வரை கமிஷனாக வழங்கப்படும். வங்கிகள் எந்தச் சட்ட விரோத வழிமுறைகளையும் பயன்படுத்தி பணத்தை திரும்பச் பெறச் செய்ய மாட்டோம்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "வங்கியில் கடன் பெற்ற ஒருவர் திரும்பிச் செலுத்தாவிட்டால் அவரது சொத்துக்கள் சட்ட ரீதியாக முடக்கப்படும். பின் அதனை விற்பனை செய்து அந்தத் தொகையை வங்கி எடுத்தும் கொள்ளும் அல்லது கடன் பெற்ற நபர் மீது செக் பவுன்ஸ் வழக்கு தொடர்ந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழியினை பார்ப்போம்," என்றார்.
மேலும், "தற்பொழுது சிறிய அளவிலான கடன் வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை முறையாக ஆர்.பி.ஐ விதிகளை பின்பற்றாமல் கடன் பெற்றவர்களை மிரட்டுவது, தகாத வார்த்தைகள் பேசி அவமானப்படுத்துவது போன்ற பல்வேறு சங்கடங்களைச் செய்து பணத்தை வசூல் செய்து வருகின்றனர், என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












