சாதிவாரி கணக்கெடுப்பு: ஓ.பி.சி. மக்களை ஈர்க்கும் காங்கிரசின் உத்தி எடுபடுமா? பாஜக வாக்கு வங்கியை பாதிக்குமா?

பாஜக/ காங்கிரஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் முடிவும், டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளிலும், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17- ஆம் தேதியும், மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதியும், தெலுக்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் முடிவும், டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தான், சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் உள்ளன. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியில் இருக்கிறது.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த ஐந்து மாநிலத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

ஐந்து மாநிலங்களில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் நேரடிப்போட்டி நிலவுகிறது.

ஜுலையிலேயே தொடங்கிய தேர்தல் பணி

தேர்தல் பணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் ஜுலை மாதம் முதல் ஐந்து மாநிலத் தேர்தலுக்காக தங்களது தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர்.

இரண்டு கட்சிகளுமே இந்த ஐந்து மாநிலத் தேர்தலுக்காக ஜுலை மாதம் முதலே தங்களது திட்டமிடலையும், பணிகளையும் தொடங்கிவிட்டன.

ஜுலை 4 ஆம் தேதி பாஜக.வின் தெலுங்கானா உட்பட 4 மாநிலங்களில் பாஜக தலைவரை கட்சி தலைமை மாற்றியது. அதற்கு முன்பாக, 13 பாஜக தேசிய துணைத் தலைவர்கள், 9 பாஜக பொதுச் செயலாளர்கள், 13 தேசிய செயலாளர்களை புதிதாக அறிவித்திருந்தது.

அதேபோல காங்கிரசும், ஜுலை மாதம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோராம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளர்களாக மதுசூதன் மிஸ்திரி, சசிகாந்த் செந்தில் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக ரன் தீப் சுர்ஜேவாலா, சந்திரகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஷ்கர் மாநில பேரவை தேர்தல் பார்வையாளராக பிரீதம் சிங், மீனாட்சி நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளராக தீபா தாஸ்முன்ஷி, ஸ்ரீவல்லா பிரசாத் நியமனம் செய்யபட்டுள்ளனர்.

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளராக சச்சின் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸின் பிரம்மாஸ்திரமா சாதிவாரி கணக்கெடுப்பு ?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார் ராகுல் காந்தி

இந்நிலையில், ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கொண்டிருந்த அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டமும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்று வந்தது.

இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பெகல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்,” என்றார்.

இதுகுறித்து மேலும் பேசிய ராகுல் காந்தி, “இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.” என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரசின் முக்கிய உத்தியாக கருதப்படுகிறது.

கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வட மாநிலங்களில் உயர்சாதியினருக்கு எதிரானதாகக் கருதும் அபாயம் உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர் எஸ்.சத்தியமூர்த்தி எச்சரித்தார்

"உயர் சாதியினருக்கு எதிரானதாக பார்க்கும் அபாயம் உள்ளது"

இதுகுறித்து பேசிய அரசியல் ஆய்வாளர் எஸ்.சத்தியமூர்த்தி, தேசிய அளவில் இது ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். ஆனால், இது வட மாநிலங்களில் உயர்சாதியினருக்கு எதிரானதாகக் கருதும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

“வட மாநிலங்களில் உயர்சாதி இந்துகள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களை ஓபிசி வகுப்பினரும் பெரிதும் மதிக்கின்றனர். அதனால், இந்த கணக்கெடுப்பு உயர்சாதி இந்துக்களுக்கு எதிரானதாக பிரச்சாரம் செய்யப்படுவதற்கான அபாயம் உள்ளது,” என்றர்.

ஆனால், இதன் உண்மையான கூறுகளை அடித்தட்டு மக்கள் வரை எடுத்துச் சென்றால், காங்கிரஸால் இந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்றார்.

“காங்கிரஸுக்கு இருக்கும் சவாலே இதனை அந்தந்த மாநிலத்தில் உள்ள ஓ.பி.சி. மக்களிடம் சரியாக எடுத்துச் செல்வது தான். இதனை வட மாநிலங்களுக்கான பிரசார யுக்தியாக பார்க்கலாம். இதில், வெற்றி கண்டால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இது வட மாநிலங்களில் எதிரொலிக்கும்,”என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு எப்படி காங்கிரஸுக்கு உதவும் என்பதை விரிவாக பேசிய சத்தியமூர்த்தி, பாஜக பக்கம் இருக்கும் பெரும்பான்மை இந்துகள் அணிதிரள்வதை தங்கள் பக்கம் முழுக்க உதவும் என விளக்கினார்.

“எப்போதும் பெரும்பான்மை இருக்கும் பக்கம் தான் ஆதரவு அதிகரிக்கும். இந்நிலையில், பாஜக பக்கம் பெரும்பான்மையான இந்துக்கள் இருப்பதால், அவர்களிடம் இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் உண்மையையும், அதனால், அவர்கள் அடையப்போகும் பலனையும், அது உயர்சாதி இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்றும் மக்களிடம் சென்று சேர்த்தால், அந்த பெரும்பான்மையான இந்துகள் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பார்கள்,” என்றார்.

என்ன சொல்கிறது பாஜக?

பாஜக

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை விட உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சால், வட மாநிலங்கள் முழுவதிலும் காங்கிரஸ் தனது ஆதரவை இழந்துள்ளதாக கூறினார் ஸ்ரீநிவாசன்

பாஜக.வும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகத்தான் இருப்பதாகவும், இதனால், எந்தத் தேர்தலிலும் தாக்கம் ஏற்படாது என்கிறார் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்.

“சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக எப்போதும் ஆதரவாகத்தான் உள்ளது. அதனால், தற்போது காங்கிரஸின் அறிவிப்புக்கு எந்த பலனும் இல்லை,” என்றார்.

இந்த சாதிவாரி கணக்கெடுப்பை விட உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சால், வட மாநிலங்கள் முழுவதிலும் காங்கிரஸ் தனது ஆதரவை இழந்துள்ளதாக கூறுகிறார் ஸ்ரீநிவாசன்.

“இதனால், எங்களுக்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் ஆதரவான சூழல் உள்ளது. அதனால், மிகவும் எளிதாக அங்கு ஆட்சிக்கு வந்துவிடுவோம். தெலங்கானாவில் ஆட்சி அமைக்க கடுமையாக முயற்சிப்போம்.” என்றார்.

காங்கிரஸ் சசிகாந்த் செந்தில்

பட மூலாதாரம், TNCC

படக்குறிப்பு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் யுக்திகள் மாறுபடும் என்கிறார் காங்கிரஸ் சசிகாந்த் செந்தில்

காங்கிரஸ் என்ன சொல்கிறது ?

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்த ஐந்து மாநிலத் தேர்தலை குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவல்ல என்கிறார் காங்கிரஸ் கட்சியின் இந்த ஐந்து மாநில தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் செந்தில்.

“ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் உத்திகள் மாறுபடும். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது பாஜக.வின் முகத்திரையை கிழிப்பதற்கான ஒரு வாய்ப்பு இது.

அவர்கள், தங்கள் போலி முகத்தைக் கொண்டு, தாங்கள் ஓ.பி.சி.யினருக்காக இருப்பதாகக் காண்பிக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியில்லை,” என்றார்.

“எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்,”என்றார்.

இரு கட்சிகளின் தேர்தல் வியூகங்கள் குறித்து பேசிய அரசியல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி, "காங்கிரஸைப் பொருத்தவரை அவர்கள் மாநில பிரச்சனைகளை முன்வைத்தும், பாஜக.வைப் பொறுத்தவரையில் பிரதமர் மோதியை முன்னிறுத்தியும், தேசிய பாதுகாப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முன்வைத்தும் வாக்கு சேகரிப்பார்கள்" என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)