பிக் பாஸ் ஜோவிகா சர்ச்சை: 'கல்வி தேவையில்லை' என்பதன் பின்னணியில் கார்பரேட் நிறுவனங்களா?

பட மூலாதாரம், X/VIJAY TELEVISION
- எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஜோவிகா பள்ளிக் கல்வி அவசியமில்லை எனக் கூறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸின் 7-ஆவது சீசன் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் உள்ளன; 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
நடிகையின் மகள் என்பதாலும், வனிதா விஜயகுமார் முந்தைய சீசன் ஒன்றில் பங்கேற்ற போது பல சர்ச்சைகளில் சிக்கினார் என்பதாலும் அவரது மகளான ஜோவிகா மீது இயல்பாகவே ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

கல்வி அவசியமில்லை என சண்டை போட்ட ஜோவிகா
நடிகை விசித்ராவும், ஜோவிகாவும் கல்வி குறித்து விவாதித்ததுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதில் விசித்ரா, ’அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதனால் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து முடித்துவிடு’ என்று ஜோவிகாவுக்கு அறிவுரை கொடுத்தார்.
இதற்கு ஜோவிகா, ”எனக்கு படிப்பு வரல. அதனால் தான் நான் 9-ம் வகுப்போடு நிறுத்திவிட்டேன். என்னைப்போல் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன். படிச்சா தான் முன்னேற முடியும் என்பது கிடையாது. எல்லாரும் டாக்டருக்கு படிச்சா யாரு கம்பவுண்டர் வேலை பார்ப்பது. இப்படி படிக்க சொல்லி வற்புறுத்துவதால்தான் நீட் மரணங்கள் நடைபெறுகின்றன” எனக் கூறி ஆவேசமாக பேசினார்.
ஜோவிகாவின் பேச்சுக்கு சக போட்டியாளர்களில் பலரும் ஆதரவு கொடுத்தார்கள். குறிப்பாக இலக்கியவாதி பவா செல்லத்துரை, “படிப்பெல்லாம் இன்னிக்கி முக்கியமில்லை” எனக் கூறி ஜோவிகாவிற்கு கைகொடுத்தார்.
கமல் பேசியது என்ன?
இந்த விவகாரம் சர்ச்சையான பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் தொடக்கத்திலிருந்தே இந்த விவகாரம் குறித்து தான் பேசினார். பங்கேற்பாளர்களிடம் நேரடியாக பேசுவதற்கு முன்பாக அவர், “வெவ்வேறு தலைமுறையினர், வெவ்வேறு உலக அனுபவங்கள் கொண்டவர்கள், அவர்கள் கற்ற கல்வி தான் மற்றவர்களுக்கு கல்விக்கூடமாக வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த தலைமுறை இடைவெளி தான் முதல் வாரத்தை சுவாரஸ்யமாக்கியதை பார்த்தோம். அதனால் ஏற்பட்ட மோதல்களை பார்த்தோம். இது யாருக்கும் புதிதல்ல. நம் வீடுகளிலும் நடைபெறும் மோதல்கள் தான்” என்று பேசினார்.
பின்னர், ஜோவிகாவிடம் கருத்தை கேட்ட பின் பேச ஆரம்பித்த கமல், “ உயிரை கொடுத்தாவது கல்வி என்பது முக்கியம் இல்லை என்று நினைப்பவன் நான். படிக்க சொன்னதில் என்னை விட இவருக்கு (ஜோவிகாவுக்கு) என்ன கோபம் என்று நினைத்தேன். கல்வி தான் கலங்கரை விளக்கம் என்று கூறுகிறார்கள். ஆனால் காட்டில் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, கலங்கரை விளக்கம் ஏது? கடலுக்கு போனால் தான் கலங்கரை விளக்கம்.
இது தான் கல்வி என்று யாரும் சொல்ல முடியாது. ஔவை சொன்னது போல் கல்லாதது உலகளவு. கை மண் அளவு கற்று, இதிலிருந்து தான் கட்டடம் எழுப்ப வேண்டும் என்று கூறினால் நடக்க வாய்ப்பில்லை. அவர் (விசித்திரா) குடியிருக்கும் ஊரில், ஒரு தலைமுறையை கல்வியை நோக்கி கடை தேற்றி விட்டார்கள். நான் கேரளாவை குறிப்பிடுகிறேன். அதன் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு அவரே முன்னுதாரணமாக இருக்கிறார். இந்த வயதில் பி எச் டி முடித்திருக்கிறார் அவர். அது அவர்கள் நம்பும் விஷயம். தமிழ் தெரியுமா என்று கேட்கிறார்கள். நான் ஒன்றை கூறுகிறேன். அது ஒரு மொழி. நீங்கள் எந்த வீட்டில் வளர்க்கிறீர்களோ அந்த மொழியை கற்று கொள்வீர்கள். நீ படிக்காதவன், நீ கல்வியைப் பற்றி கிண்டல் அடிக்கிறீயா என என்னை கேட்பார்கள். சமீபமாக என்னை பார்த்து இவ்வளவு படிக்கிறீர்களா என கேட்கிறார்கள். நான் விட்டதை பிடிக்கிறேன். தான் விட்டதை எப்போது பிடிக்க வேண்டும் என ஜோவிகா முடிவு செய்து கொள்ளட்டும்.” என்று பேசினார்.

பட மூலாதாரம், X/VIJAY TELEVISION
கல்வி குறித்து நிகழ்ச்சியில் பவா செல்லத்துரை கூறியதை குறிப்பிட்டு பேசிய கமல், “ ஞானக்கூத்தன் ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழ் தான் என் மூச்சு, அதை பிறர் மேல் விட்டுக்கொண்டே இருக்க மாட்டேன் என்றார். அதில் தமிழுக்கு பதில் கல்வி என்று போட்டுக் கொள்ளலாம். கல்வி தான் என் மூச்சு, அதை பிறர் மேல் விட்டுக்கொண்டே இருக்க மாட்டேன். நான் கற்றவன், கற்றவன் என்று சொல்லிக் கொள்வதை விட கல், நான் கற்றேன், இதனால் இந்த பயன், எனவே கற்றுப்பார் என்று சொல்லலாம்....கல்விச் சுவற்றுக்கு அப்பால் விழுந்தவற்றை பொறுக்கி சாப்பிட்டவன் நான்....எழுதுவதும் படிப்பதும் மட்டும் படிப்பல்ல என்பதற்கு பல படித்தவர்கள் உதாரணமாக இருக்கிறார்கள்.
செய்தித்தாள்களில் பார்க்கிறோம்- அம்மாவும் படித்தவர், மகனும் படித்தவர், ஆனால் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறார்கள். அந்த படிப்பு படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? எனவே கல்வி உங்களை காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து காப்பாற்றாது. அதிலிருந்து உங்களை காப்பாற்றுவது நீங்களாக மட்டும் தான் இருக்க முடியும். உங்கள் சூழலாக தான் இருக்க முடியும். நிஜமான அன்பால் மட்டுமே முடியும்” என்று கூறினார்.
அடிப்படை பள்ளிக் கல்வி அவசியம் என கூறிய விசித்திராவின் கருத்துகளை கேட்ட பிறகு பேசிய கமல், “ஒவ்வொருத்தரின் வாழ்க்கை சூழலும் வேறு. ஒருவருக்கு படிப்பு எல்லாம் தேவை இல்லை என நான் தோளை குலுக்கி சொல்லி விட முடியாது. படிப்பை வைத்தே குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படித்து தான் தீர வேண்டும். ஆனால், ஜோவிகா மாதிரி என்னை மாதிரி வரலைங்க என்பவர்களை விட்டுதான் ஆக வேண்டும்” என்றார்.
ஜோவிகாவின் பள்ளிக் கல்வி குறித்த பேச்சு, அதற்கு கமல் அளித்த பதில் மற்றும் விளக்கம் ஆகியவை சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளது. பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கல்வியால் மட்டுமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட குடும்பங்களுக்கு மத்தியில் அடிப்படை பள்ளிக் கல்வியே அவசியமில்லை எனப் பேசிய 2கே கிட்ஸின் பிரதிநிதியான ஜோவிகாவின் பேச்சு பற்றி கல்வியாளர்களிடம் பிபிசிக்காக கலந்துரையாடினோம்.
வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள் : அருள்மொழி
"உலகமயமாதலால் கார்பரேட் கம்பெனிகள் கட்டமைக்கும் கருத்துகளை மேம்போக்காக உள்வாங்கிக் கொண்டு வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள்" என கூறுகிறார் திராவிட கழகத்தின் பிரச்சார செயலாளர் அருள்மொழி.
அவர், “அடிப்படை பள்ளிக் கல்வி தேவையில்லை என்று கூறுவதெல்லாம் எந்தவொரு புரிதலுமில்லாமல் பொத்தாம்பொதுவாக கூறும் கருத்து. இன்று உலகமயமாதலால் கார்பரேட் நிறுவனங்கள் கட்டமைக்கும் கருத்துகளை மேம்போக்காக உள்வாங்கிக் கொண்டு வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர் படிக்கவில்லை; காமராஜர் படிக்கவில்லை என்று கூறுவதற்கு பின்பு மாபெரும் உண்மை உள்ளது. காமராஜருக்கு ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் இருந்தது. பள்ளிக் கல்வித்துறையில் தொண்டாற்றினார். அதேபோல், யாரெல்லாம் படிக்காமல் முன்னேறினார்கள் என்று தொடர்ந்து கூறுகிறார்களோ அவர்கள் அனைவரும் விதிவிலக்கு; அதேநேரத்தில் அவர்கள் அனைவரும் துறைசார்ந்த ஆழ்ந்த அறிவினை கொண்டிருந்தார்கள்” என்றார்.

இது பின்நவீனத்துவ கோட்பாட்டின் பிரதிபலிப்பு : பிரின்ஸ் கஜேந்திர பாபு
இதுபோன்ற கருத்துகள் பின்நவீனத்துவ (Post-modernism) கோட்பாட்டின் பிரதிபலிப்பு என்றும் அவற்றின் அடிப்படையே அமைப்பியலை (Institution) உடைப்பது தான் என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
இதுகுறித்து மேலும் விளக்கி பேசிய அவர், “அதாவது, குடும்பம் என்ற அமைப்பினை உடைப்பது; பள்ளி என்ற அமைப்பினை உடைப்பது. காலங்காலமாக எதுவெல்லாம் அமைப்பாக செயல்படுகிறதோ அதையெல்லாம் உடைப்பது.
பிக்பாஸில் ஜோவிகா அடிப்படைக் கல்வி தேவையில்லை. அனைவரும் மருத்துவராகிவிட்டால், பின்பு யார் கம்பவுண்டர் ஆவது எனக் கேட்பதெல்லாம் மிகவும் அபத்தமாக இருக்கிறது. காலங்காலமாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் அடிப்படை பள்ளிக் கல்வி என்பது மிகவும் முக்கியம். இதில், வெகு சிலர் அடிப்படைப் பள்ளிக் கல்வி முடிக்காமல் சாதித்திருக்கலாம். அவர்கள் விதிவிலக்கு.
நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், விதிவிலக்குகள் என்றும் விதிகளாக மாற முடியாது. பள்ளி என்பது பல்வேறு தரப்பு மாணவர்களும் ஒன்றாக பாகுபாடுகள் ஏதுமின்றி, ஒன்றாக வேறுபாடுகளைக் களைந்து கூடும் இடம். பள்ளி என்பது வெறுமனே படித்து விட்டுச் செல்வது அல்ல. ஒரு மாணவன் சக மாணவனோடு இணைந்து நட்பு பாராட்டுகிறான்; சில நேரங்களில் சண்டையிடுகிறான்: பின்னர் சண்டையை சமாதானமாக மாற்றுகிறான். இப்படி மனிதன் சக மனிதனோடு இணைந்து பழகி எது சரி, எது தவறு எனப் புரிந்து கொள்கிறான். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக பிளவுபட்டிருப்பவர்கள் ஒன்றாக கூடும் இடம் பள்ளிக்கூடம்." என்றார்.

தொடர்ந்து பேசும்போது, "இப்படியாக வைத்துக் கொள்வோம். ஒரு மாணவன் பள்ளிக்குச் செல்லவே இல்லை. அவன் ஹோம் ஸ்கூலிங் செய்கிறான் என வைத்துக் கொள்வோம். அவன் அவனது அப்பா, அம்மா, ஆசிரியர் உள்ளிட்டோரின் உலகிலிருந்து மட்டுமே விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும்போது அவனுடைய வயதொத்த மாணவர்களோடு பழகி, வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள முடியும்.
வர்க்க ரீதியாக பார்க்கும்போது, மேல்தட்டு மாணவர்களுக்கு வேண்டுமானால், அடிப்படைக் கல்வி பள்ளிக்கு செல்லாமல் கிடைக்கலாம்; ஆனால் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு, பள்ளி அடிப்படைக் கல்வி என்பது அவசியம்” என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.
சுய சிந்தனைக்கு அடிப்படை பள்ளிக் கல்வி அவசியம் : விழியன்
அடிப்படை பள்ளிக் கல்வி மாணவர்களை சுயமாக சிந்திக்க வைத்து, தானாக வாழக் கற்றுக் கொடுக்கும் என்கிறார் சிறார் எழுத்தார்ளர் விழியன். அவர் பேசும்போது, “பிக்பாஸில் விசித்ரா, ஜோவிகாவை அவருக்கு தமிழ் மொழி எழுதத் தெரியுமா எனக் கேட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன்படி, மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்சி இப்படி எந்த வழியில் பள்ளிக் கல்வியைக் கற்றாலும், 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்போது மொழிப்பாடமாக தமிழைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மொழியறிவு என்பது கட்டாயம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிப்படைக் கல்வி வேண்டாம் என்று வாக்குவாதம் செய்த போட்டியாளர் ஜோவிகா, மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் அடிப்படை பள்ளிக் கல்வியை துறந்து விட்டு அவர்களது வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், பொருளாதார பின்னணியில் பின் தங்கியவர்கள் அப்படிக் கூற முடியாது.
அடிப்படை பள்ளிக் கல்வி என்பது, மாணவர்களை சுயமாக சிந்திக்க வைத்து, தானாக வாழக் கற்றுக் கொடுக்கிறது. ஒருபோதும், பள்ளிக் கல்வி வேண்டாம் எனக் கூற முடியாது. இன்றைய 2கே கிட்சுகள் மேம்போக்காக ஒரு விடயத்தை அணுகுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி உலகை சிறிதாக்கிவிட்டது என ஒரு பார்வை இருக்கிறது. அதே வேளையில், அவர்களது உலகமும் சிறிதாகிவிட்டது. சென்னையைத் தாண்டி 50 கிமீ-க்கு அப்பால் என்ன நடக்கிறது, மற்ற மனிதர்களின் வாழ்வு என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. வரலாறு தெரியாது. மிகவும் முக்கியமாக கல்வி எவ்வளவு போராட்டத்திற்கு பிறகு நமக்கு கிடைத்தது எனத் தெரியாது,” என்றார்.

பட மூலாதாரம், Facebook
பள்ளிக்கல்வி பாகுபாடின்றி வாழ கற்றுக் கொடுக்கும்: மனுஷ்ய புத்திரன்
ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் தன்மை கொண்ட மனுஷ்யபுத்திரனிடம் பேசினோம். இது குறித்து அவர், “ நான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. ஜோவிகாவின் சர்ச்சை பேச்சிற்கு பின்பு பார்த்தேன். அதைப் பார்த்த பின்பு, ஜோவிகா மேல் எனக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால் அவர் இந்த தலைமுறையின் பிரதிபலிப்பு மட்டுமே. இந்தத் தலைமுறையினர் மிகவும் மேம்போக்காக எந்தவொரு விடயத்தையும் அணுகுகிறார்கள். அவர்களுக்கு வரலாறு தெரியாது. முழுக்கமுழுக்க படிப்பினை வைத்து மட்டுமே முன்னேறிய சமூகம் நமது சமூகம்.
ஜோவிகா போன்ற மேல்தட்டு வர்க்க குழந்தைகளுக்கு நல்ல பின்னணி உள்ளது. அதனால், அடிப்படைப் பள்ளிக் கல்வி வேண்டாமெனக் கூறலாம். ஊடகம் போன்ற ஒரு துறையில் இருக்கும்போது அவர்களுக்கு நல்ல தொடர்புகளும், வாழ்க்கையை வசதியாக வாழவும் வாய்ப்புள்ளது. அவர்கள் எதற்கும் மெனக்கிட வேண்டிய அவசியமில்லை.
பள்ளிக் கல்வியில் அடிப்படையான விஷயமே மாணவர்கள் எந்தவொரு பாகுபாடுமின்றி மற்றவர்களுடன் பழகக் கற்றுக் கொள்கிறார்கள். சமூகத்தில் அனைவருடனும் பழகக் கற்றுக் கொள்வதே மிகப் பெரிய திறமை. அது பள்ளிக் கல்வியின் வாயிலாக மட்டுமே கிடைக்கிறது.
மேலும், பெண்கல்வி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்த மாநிலம் தமிழ் நாடு. சிறிய ஊர்களிலிருந்து, சென்னை போன்ற பெருநகரத்தில் இடம்பெயரும் நிறைய நடுத்தரவர்க்க பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு பணிபுரிகிறார்கள். இப்படி அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைவது எதைக் காட்டுகிறதென்றால், பல சமூக கட்டமைப்புகளை உடைத்தெறிந்து, சாதி, மத அடக்குமுறைகளைக் களைந்து அவர்கள் தங்களது சுதந்திரத்தை உணர்வது படிப்பினால் மட்டுமே என்பதைத் தான்.

பட மூலாதாரம், Facebook
இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஜோவிகாவின் பேச்சு மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது. அவரது இந்தப் பேச்சிற்கு கமல்ஹாசனும், பவா செல்லத்துரையும் மேம்போக்காக பதில் கூறியதும் வருத்தமாக இருந்தது. உலகளவில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் இது போன்ற கருத்துகளை பிரபலமானவர்கள் கூறும்போது அது அவர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. விசித்ரா மிகவும் தீர்க்கமாக ஜோவிகா அடிப்படை பள்ளிக் கல்வியை முடிக்க வேண்டும் எனக் கூறியதே சரி. ஆனால், சக போட்டியாளர்கள் விசித்ராவின் கருத்தை பொருட்படுத்தவே இல்லை.
இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு உள்ளது. எனது இரண்டு குழந்தைகளுக்கும் கற்றல் குறைபாடு உள்ளது. அவர்களுக்கு கல்வியில் வித்தியாசமான அணுகுமுறை தேவை என உணர்ந்து நான் அவர்களுக்கான பள்ளியைத் தேடிச் சென்றேன். இப்பொழுது அவர்கள் ப்ரைவேட் ஸ்கூலிங் செய்கிறார்கள். ஆனால், நான் அவர்களை கண்டிப்பாக கல்லூரியில் சேர்ப்பேன்.
பெண்களிடம் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசியவர்கள் நாம். அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர அரசு கல்வி உதவித்தொகைகள் வழங்குகிறது. ஏனென்றால், அப்படியாவது பெண்களின் இடைநிற்றல் கல்வி விகிதத்தை குறைக்கலாம் என்று தான்.
ஜோவிகா போன்ற பெண்களுக்கு மேல் தட்டு வர்க்கம் என்பதால் சமூகத்தில் மிகப் பெரிய சலுகை (privilege) இருக்கிறது. ஆனால், எங்களுக்கு அப்படி கிடையாது. பள்ளி அடிப்படைக் கல்வி என்பது மிகவும் அவசியம்” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












