ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிய இலங்கையுடனான தோல்வி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதின் ஸ்ரீவத்சவா
- பதவி, பிபிசி செய்தியாளர்
உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி வலிமையாகக் களமிறங்கிய தருணங்களுள் முக்கியமானது 2007. அந்த எதிர்பார்ப்பு கொடூரமான தோல்விகளுடன் முடிவுக்கு வந்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அதே உத்வேகத்துடன் களமிறங்கி இருக்கிறது இந்திய அணி.
2007ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அது ‘கனவு 11’ என்று கூறும் அளவுக்கு வலிமையாக இருந்தது.
அணியின் தலைவர் ராகுல் டிராவிட், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, விரேந்திர சேவாக், மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், சஹீர் கான், ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர் அணியில் இடம்பெற்றிருந்தனர். சர்ச்சைகளுக்குள்ளான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் க்ரெக் சாப்பெல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
இந்த போட்டி குறித்த செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர் பங்கஜ் பிரியதர்ஷி சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார் . “இந்திய அணி முழுவதும் ஜாம்பவான்களாக இருந்தாலும், அணியில் ஒற்றுமை இல்லை. பெரிய ஆட்டக்காரர்களுக்கு இடையில் பீல்டிங், பேட்டிங் ஆகியவற்றில் இருந்த வித்தியாசங்கள் அப்பட்டமாக தெரிந்தது. இதனை சிலர் தங்கள் நூல்களில் கூட குறிப்பிட்டுள்ளனர். அணியின் தலைவராக இருந்த ராகுல் டிராவிடுக்கு இவற்றை எல்லாம் கையாள்வது கண்டிப்பாக கடினமாக இருந்திருக்கும்” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
2007- உலகக் கோப்பையில் என்ன நடந்தது?
ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி கோப்பையை தூக்கி வரும் உத்வேகத்துடன்தான் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்திருந்தது.
அந்த உலகக் கோப்பைத் தொடர் தர வரசையில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கையுடன் ஆறாம் இடத்தில் இருந்த இந்தியாவும் ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தன. பெர்முடாவையும், வங்கதேசத்தையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தது.
சச்சின், கங்குலி, யுவராஜ், சேவக், டிராவிட் என நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது இந்தியாவின் அணி. இளம் அதிரடி வீரராக தோனி நம்பிக்கையளித்திருந்தார்.
இந்தியாவுக்கு முதல் போட்டியே வங்கதேசத்துடன்தான். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அந்தப் போட்டி நடந்தது.
பெரிய பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்த இந்திய அணி அந்தப் போட்டியில் வெறும் 191 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. கங்குலி 66 ரன்களும், யுவராஜ் 47 ரன்களும் எடுத்தார்கள். மற்ற யாரும் குறிப்பிடத் தகுந்த ரன்களை எடுக்கவில்லை.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அந்தப் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சும் மிக மோசமாக இருந்தது. வீரேந்திர சேவக், யுவராஜ், சச்சின் உள்பட 7 பேர் இந்தியாவுக்காக பந்துவீசினார்கள். ஆனாலும் 191 ரன்களுக்குள் வங்கதேசத்தை முடக்க முடியவில்லை.
முஷ்ஃபிகுர் ரஹீமும், ஷாகிப் அல் ஹசனும் அரைச் சதம் அடித்து வங்கதேசத்தின் வெற்றியை உறுதி செய்தனர்
கொடுங்கனவாக முடிந்த இலங்கையுடனான ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்துடனான போட்டி அதிர்ச்சியாக அமைந்தது என்றால், இலங்கையுடனான போட்டியும் அதே மாதிரியாகவே முடிவுக்கு வந்தது.
போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் களமிறங்கியது. உபுல் தரங்கா, சமர சில்வா ஆகியோரின் அரைச் சதத்தால் இந்திய அணி 254 ரன்களை எடுத்தது.
ஆனால் இந்த ஸ்கோரை இந்திய அணியால் நெருங்க முடியவில்லை. கேப்டன் ராகுல் டிராவிட் மட்டும் அதிகபட்சமாக 60 ரன்களை எடுத்தார். சச்சின் டெண்டுல்கரும், மகேந்திர சிங் தோனியும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது இந்திய அணியை நெருக்கடியில் தள்ளியது. 185 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ராகுல் டிராவிட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கையுடனான இந்தப் போட்டி கொடுங்கனவாக இருந்தது. அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதப்பட்டதும் இந்தப் போட்டியில்தான். இந்தத் தொடருக்குப் பிறகு ராகுல் டிராவிட்டின் கேப்டன்சி மீதான கடுமையான விமர்சனங்கள் எழுந்து, படிப்படியாக அவரது கிரிக்கெட் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
அதே நேரத்தில் டி20 அணிக்கான கேப்டன் பதவி தோனியிடம் வந்து, இந்தியக் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கும் இது காரணமானது.

பட மூலாதாரம், Getty Images
2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு சில மாதங்களுக்கு பிறகு, 2007ம் ஆண்டில் , தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை போட்டியில் இளம் வீரர் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதே போன்று 2011 -ல் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
ஆனால் ராகுல் டிராவிட் அந்த அணியில் இடம் பெறவில்லை. அதே ஆண்டு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .
தற்போது ராகுல் ட்ராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ராகுல் டிராவிட்டின் இலக்கு
ஒரு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட்டின் ஆட்டம் குறித்து பேசும் போது, எப்படி இலங்கை மற்றும் வங்க தேசத்திடம் 2007ம் ஆண்டில் சுருண்டு விழுந்தது என்பது குறிப்பிடப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ராகுல் ட்ராவிட், “நான் கிரிக்கெட் வீரராக இருந்து பல காலம் ஆகி விட்டது. நான் விளையாடினேன் என்பது கூட எனக்கு நினைவு இல்லை என்பது தான் உண்மை. நான் அதை எல்லாம் விட்டு, தற்போது இந்திய அணி தனது கவனம் சிதறாமல் இருக்க உதவுகிறேன்” என்றார்.
ஆனால், ராகுல் டிராவிட் காலத்தில் ஆடிய இலங்கை ஆட்டக்காரர் சனத் ஜெய சூர்யா, “ராகுல் டிராவிட் போன்ற பெரிய வீரருக்கு 2007ம் ஆண்டு கொடுங்கனவாக இருந்திருக்கும்.” என்றார்.
“அதிக நேரம் விளையாடிய வீரர், டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனை படைத்தவர் ராகுல் டிராவிட். அவரை போன்றவர்கள் இருப்பது வரலாற்றில் அரிதான ஒன்றே. தற்போது ராகுலின் பயிற்சியும் இந்திய அணியில் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றினால் ராகுலை விட திருப்திஅடையக் கூடியவர் யாரும் இருக்க முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பயிற்சியில் கவனம்
ஆட்டக்காரராக இருந்த போது தனது பயிற்சியில் எவ்வளவு கவனம் செலுத்தினாரோ அதே அளவு கவனத்தை இன்றும் கூட ஒரு பயிற்றுநராக ராகுல் டிராவிட் தனது பயிற்சிகளின் மீது செலுத்தி வருகிறார்.
பயிற்சிக்கு முதல் ஆளாக வரும் டிராவிட், அனைத்து வீரர்களும் எப்படி ஆடுகிறார்கள் என உன்னிப்பாக கவனித்து தனது ஆலோசனைகளை வழங்குகிறார். பேட்டிங் பயிற்றுநர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்றுநர் பரஸ் மம்ப்ரே ஆகியோரை ஒவ்வொரு விஷயத்தில் இணைத்துக் கொள்கிறார் .
அணியின் பீல்டிங் பயிற்றுநர் டி திலிப் வழங்குவது போன்ற பயிற்சியை தற்போது வெகு சில அணிகளிலும் மட்டுமே காண முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமையன்று, இந்திய அணி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்துக்கு பயிற்சிக்காக வந்தது. டிராவிட் முதலில் மைதானம் எப்படி உள்ளது என கணித்தார். முந்தைய நாள் ஷுப்மன் கில், ஒன்றரை மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்த போது கூட, மைதான ஊழியர்களிடம் ட்ராவிட் பேசிக் கொண்டிருப்பதை காண முடிந்தது.
வான்கடே மைதாம் செம்மண்ணால் ஆனது. இதனால் பந்துகள் லேசாக எகிறக் கூடும். எனவே பேட்ஸ்மேன்களை முதலில் வேகப்பந்து வீச்சு பயிற்சி பெற செய்தார்.
கடந்த சனிக்கிழமை, லக்னௌவில் ஏக்னா மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்துக் கொண்டிருந்த போதும் கூட, ராகுல் டிராவிட் , பந்தை மைதானத்தில் வீசிப் பார்த்து, பல முறை மைதானத்தின் தன்மையை ஆராய்ந்துக் கொண்டிருந்தார். அந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என டிராவிட் நினைத்தார். அதே போன்று, அந்தப் போட்டியில் குறைந்த ரன்களே எடுக்க முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தில் ஒழுக்கம்
2022ம் ஆண்டு நவம்பரில் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெர்த் நகரத்திலிருந்து குவாண்டஸ் விமான சேவை அடிலெய்ட் செல்ல புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியும் அதே விமானத்தில் இருந்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்திய அணி சோர்வாக இருந்தது. ஆனால், பயிற்றுநரான ராகுல் ட்ராவிட் விமானம் புறப்பட்ட உடனே தனது லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு அடுத்த ஆட்டத்துக்கு தயாரானார்.
ராகுல் டிராவிடுடன் விளையாடியுள்ள மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் அணித் தலைவர் டாரென் சாமி, “ராகுல் தற்போது தயாராக உள்ளார்” என இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
“டிராவிட் போன்று கடுமையாக உழைக்கும் வீரர்களை அரிதாகவே பார்த்துள்ளேன். முதலில் ஜூனியர் அணிக்கு பயிற்சி வழங்கினார். தற்போது பாதி பேர் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருக்கும் இந்திய அணிக்கு பயிற்சி வழங்குகிறார். இது எளிதான காரியமே அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த பெரும் ஆட்டக்காரரும் இந்திய அணியின் பயிற்றுநருமான ராகுல் டிராவிடின் கண்கள் தற்போது கிரிக்கெட் உலகில் பெரிதாக கருதப்படும் உலகக் கோப்பையின் மீது உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












