FRIENDS புகழ் மேத்யூ பெர்ரி காலமானார் - உலகையே சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை எப்படி இருந்தது?

FRIENDS புகழ் மேத்யூ பெர்ரி காலமானார்

பட மூலாதாரம், GETTY IMAGES/ Warner Bros. TV

    • எழுதியவர், ஜார்ஜ் ரைட் & தாமஸ் மேகின்டோஷ்
    • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்காவில் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள பல்வேறு 90ஸ் கிட்ஸ் மத்தியில் புகழ் பெற்றிருந்த ஃபிரெண்ட்ஸ் நகைச்சுவைத் தொடர் மூலம் பிரபலமான நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார்.

ஃபிரெண்ட்ஸ் தொலைக்காட்சித் தொடரில் சேண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் நன்கு அறியப்பட்டார். அவர் தனது 54 வயதில் காலமானார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் அவர் இறந்து கிடந்ததாக சட்ட அமலாக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

நியூயார்க் நகரில் வசிக்கும் ஆறு இளம் நண்பர்களின் வாழ்க்கையைப் பற்றிய F.R.I.E.N.D.S என்ற நகைச்சுவை நாடகத் தொடர், 1994 முதல் 2004 வரை ஒளிபரப்பானது.

FRIENDS புகழ் மேத்யூ பெர்ரி காலமானார்: உலகையே சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பட மூலாதாரம், Getty Images

அதன் இறுதி அத்தியாயத்தை அமெரிக்காவில் 5.25 கோடி மக்கள் பார்த்தனர். அதன்மூலம் அது, 21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மிகவும் அதிகமாகப் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி அத்தியாயமாக மாறியது.

பெர்ரி உயிரிழந்துவிட்டதாக முதலில் செய்தி வெளியிட்ட எல்.ஏ. டைம்ஸ், TMZ ஆகிய ஊடகங்கள், அவரது வீட்டில் உள்ள வெந்நீர் அடங்கிய ஹாட் டப்பில் மயக்கமடைந்த நிலையில் அவர் கண்டறியப்பட்டதாகக் கூறின.

வருத்தத்தில் வார்னர் பிரதர்ஸ் தொலைக்காட்சி

லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் இதுகுறித்துப் பேசியபோது, "தண்ணீரில் ஆபத்து" சம்பவம் தொடர்பாக பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் உள்ள ஒரு முகவரிக்குச் சென்றதாகக் கூறினார். ஆனால் அவர்கள் பெர்ரி பெயரை குறிப்பிடவில்லை.

ஃபிரெண்ட்ஸ் தொடரைத் தயாரித்த வார்னர் பிரதர்ஸ் டிவி, "எங்கள் அன்பான நண்பர் மேத்யூ பெர்ரி காலமானதால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்," என்று கூறியுள்ளது.

FRIENDS புகழ் மேத்யூ பெர்ரி காலமானார்: உலகையே சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பட மூலாதாரம், Getty Images

"மேத்யூ ஒரு நம்ப முடியாத அளவுக்குத் திறமை வாய்ந்த நடிகர் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தொலைக்காட்சிக் குழும குடும்பத்தின் ஒரு அழிக்க முடியாத பகுதியாக இருந்தவர்," என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

"அவரது நகைச்சுவை நுண்ணறிவின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்பட்டது. அவரது பாரம்பரியம் பலரின் இதயங்களில் வாழும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியவர்களுக்கும், அவரது அனைத்து அர்ப்பணிப்பு மிக்க ரசிகர்களுக்கும் எங்கள் அன்பை அனுப்புகிறோம்," என்று வார்னர் பிரதர்ஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மேத்யூ பெர்ரியை உலகம் அறியச் செய்த சாண்ட்லர் விங் கதாபாத்திரம்

மேத்யூ பெர்ரி 1969ஆம் ஆண்டு மாசசூசெட்ஸில் பிறந்தார். கனடாவின் ஒட்டாவாவில் வளர்ந்தார். அங்கு அவர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொடக்கப்பள்ளியில் படித்தார். ட்ரூடோ பின்னர் கனடாவின் பிரதமராக ஆனார்.

FRIENDS புகழ் மேத்யூ பெர்ரி காலமானார்: உலகையே சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பட மூலாதாரம், Getty Images

பதின்பருவ வயதில், பெர்ரி லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தார். பாய்ஸ் வில் பி பாய்ஸ் (Boys Will Be Boys) என்ற தொடரில் சாஸ் ரஸ்ஸல் (Chazz Russell) கதாபாத்திரத்தில் நடித்தார். அதோடு குரோயிங் பெயின்ஸ் (Growing Pains) உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆனால், ஃபிரெண்ட்ஸ் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமானார். இந்தத் தொடர், நியூயார்க்கில் வசிக்கும் ஆறு நண்பர்களின் காதல், தொழில் மற்றும் நட்பு வாழ்க்கையைப் பற்றியது.

ஜெனிபர் அனிஸ்டன், கோர்டினே காக்ஸ், டேவிட் ஷிவிம்மர், மாட் லெபிளாங் மற்றும் லிசா குட்ரோவ் ஆகியோருடன் இணைந்து மேத்யூ பெர்ரி நடித்த இந்த நகைச்சுவைத் தொடர், அனைத்து கால கட்டத்திலும் மிகவும் வெற்றிகரமான ஒளிபரப்பாகக்கூடிய தொடர்களில் ஒன்றாக மாறியது.

இன்றளவும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றாக அது விளங்குகிறது.

மது அடிமைத்தனத்தில் இருந்து விடுபட பெர்ரி நடத்திய போராட்டம்

FRIENDS புகழ் மேத்யூ பெர்ரி காலமானார்: உலகையே சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பட மூலாதாரம், WARNER BROS

மேத்யூ பெர்ரி, தனது கிண்டலான வசனங்களுக்குப் பெயர் பெற்ற சாண்ட்லர் பிங் என்ற வினோதமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் 2002ஆம் ஆண்டில் ப்ரைம்டைம் எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

பெர்ரி பல ஆண்டுகளாக வலி நிவாரணிகள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையானவராகப் போராடினார், மேலும் பலமுறை மறுவாழ்வு மையங்களுக்குச் சென்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டில், பிபிசி ரேடியோ 2க்கு அளித்த பேட்டியில், மது மற்றும் போதைப் பொருட்கள் காரணமாக ஃபிரெண்ட்ஸ் தொடரில் நடித்த மூன்று ஆண்டுகள் அவருக்கு நினைவில் இல்லை என்று கூறினார்.

FRIENDS புகழ் மேத்யூ பெர்ரி காலமானார்: உலகையே சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பட மூலாதாரம், REUTERS

கடந்த ஆண்டு அளித்த பேட்டியில், அவர் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை என்று கூறினார்.

"ஆனால் நான் அதைப் பார்க்கத் தொடங்கப் போகிறேன் என்று நினைக்கிறேன். இந்தத் தொடர் வெவ்வேறு தலைமுறைகளின் இதயங்களைத் தொட்டுள்ளது என்பது ஒரு நம்ப முடியாத விஷயம்," என்று பெர்ரி தெரிவித்தார்.

ஃபிரெண்ட்ஸ் தொடரில் ஜேனிஸ் கதாபாத்திரத்தில் நடித்த மேகி வீலர், பெர்ரியின் இணை நட்சத்திரங்களில், அவருக்கு பொதுவில் அஞ்சலி செலுத்திய முதல் நபர். பெர்ரி தனது மிகவும் குறுகிய வாழ்நாளில் பலருக்கு கொண்டு வந்த மகிழ்ச்சி நீடிக்கும் என்று வீலர் கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)