ஷி யென் 6: இலங்கையில் சீன கப்பல் செய்யும் ஆய்வு என்ன? இந்தியா எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், AP
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தந்துள்ள சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6, தனது ஆய்வு நடவடிக்கைகளை கொழும்பு கடற்பரப்பில் ஆரம்பித்துள்ளது.
இந்த கப்பல் நேற்றைய தினம் முதல் இரண்டு தினங்களுக்கு ஆராய்ச்சிகளை நடத்தி வருவதாக நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த கடல் பிராந்தியத்தில் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா) மற்றும் கடற்படை ஆகியவற்றின் கண்காணிப்புடன் இந்த ஆய்வு நடவடிக்கைகளை சீன விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வளி மண்டலத்திற்கும், கடலுக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளை ஆராய்வதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், கடல் நீரோட்டம் தொடர்பிலான ஆய்வுகளும் நடத்தப்படுவதற்கான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சீன கப்பலின் இலங்கை வருகை
சீன சமுத்திர ஆராய்ச்சி கப்பல் கடந்த 25ம் தேதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்பரப்பில் ஆய்வுகளை நடத்துவதற்கு சீன விஞ்ஞானிகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த கப்பல் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் கொழும்பு கடற்பரப்பில் ஆய்வுகளை நடத்தி வருகின்றது.

சீன கப்பல் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு
இலங்கைக்கு ஷி யென் 6 கப்பல் வருகைத் தரவுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்தியா தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.
தென் இந்தியாவிலுள்ள மிக முக்கிய இடங்களை இலங்கைக்கு வருகைத் தரும் இந்த கப்பலினால் ஆய்வு செய்ய முடியும் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே இந்தியா இந்த கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷி யென் 6 கப்பல் கடந்த 25ம் தேதி நாட்டை வந்தடைந்துள்ளது.
நாட்டை வந்தடைந்த கப்பல் ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே, இலங்கை அதிகாரிகளின் கண்காணிப்பில் ஆய்வுகளை நடத்த இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்பிரகாரம், குறித்த கப்பல் தற்போது ஆராய்ச்சிகளை நடத்தி வருவதாக நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் தெரிவித்தார்.

கப்பலில் எவ்வாறான ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன?
கொழும்பை அண்மித்த கடற்பரப்பின் 9 இடங்களிலிருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்திலுள்ள நீர் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் குறிப்பிட்டார்.
''குறிப்பிட்ட 9 இடங்களில் நாங்கள் ஆய்வுகளை நடத்தினோம். நீர் மாதிரிகளை எடுத்தோம். இன்னும் ஒரு இடத்தில் மாத்திரம் ஆய்வு செய்யவுள்ளோம். மொத்தமாக 9 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. கொழும்பை அண்மித்த பகுதிகளிலேயே ஆய்வுகளை நடத்தினோம். 2000 மீட்டர் ஆழம் வரை ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
கப்பல் மேல் தளத்தில் இருந்து, நீர்மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கான உபகரணங்களை பயன்படுத்தி, நீர் மாதிரிகளை பெற்றுக்கொண்டோம். விரும்பிய வெவ்வேறு இடங்களிலிருந்து நீர்மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 500 மீட்டர், 1000 மீட்டர் மற்றும் 2000 மீட்டர் என நீர் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
எங்களுடைய ஆய்வின் நோக்கம் நீரோட்டங்களை பற்றி ஆராய்வது. கரையோர நீரோட்டங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் நன்மைகள் தொடர்பில் ஆராய்கின்றோம். கடல் நீரோட்டம் செல்கின்ற பாதைகளில் தான் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன." என கணபதி பிள்ளை அருளானந்தன் தெரிவித்தார்.

இந்த ஆய்வு நடவடிக்கையானது, எந்தவிதத்திலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என அவர் குறிப்பிடுகின்றார்.
''கடல் நீர் என்பது, ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு அடித்து செல்லப்படுகிறது. அத்துடன், நீரின் மாதிரிகளை பெற்றுக்கொள்வதனால், எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. அது எந்த வகையிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது. இந்த கப்பலில் நீர் மாதிரிகள் மாத்திரமே எடுக்கப்படுகின்றன." என அவர் பதிலளித்தார்.
சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலின் ஆய்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் நிறைவடையவுள்ளன. கப்பலிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் பின்னரான காலத்திலேயே ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












