ஹிப்பிகள்: ‘தம் மாரோ தம்’ என உலகம் சுற்றிய இவர்கள் என்ன ஆனார்கள்?

ஹிப்பி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, உலகின் ஏற்றத்தாழ்வுகள், செல்வம் ஆகியவற்றின் மீது ஹிப்பிகள் விரக்கியில் இருந்தனர்.
    • எழுதியவர், முஸ்தஃபா வக்கார்
    • பதவி, செய்தியாளர், ஆய்வாளர்

ஹிப்பிகள் என்ற இந்த சொல் 1950களில் தொடங்கி 1970கள் வரை மிகவும் பிரபலமாக இருந்தது. உலகின் ஏற்றத்தாழ்வுகள், செல்வம் ஆகியவற்றால் விரக்தியடைந்த இளைஞர்கள் ஹிப்பிகளாக மாறி, தங்களுக்கான சொந்த உலகத்தைக் கண்டுபிடிக்க நாடோடிகளாக சுற்றித் திரிந்தனர்.

அந்த நேரத்தில், ஹிப்பிகள் உலகளாவிய இயக்கமாக இருந்தது. கஞ்சாவை புகைப்பது அவர்களின் சுதந்திர வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகப் பார்க்கப்பட்டது. அதனால்தான் 1971இல் வெளியான பாலிவுட் படமான ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் இடம்பெற்றிருந்த ‘தம் மாரோ தம்’ பாடல் நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கியது. இந்தப் பாடலில் ஜீனத் அமன் நடித்திருந்தார்.

இதேபோல், பாகிஸ்தானில் உள்ள குகையில் கையில் சிகரெட்டுடன் 'தம் தமா தம் மஸ்த் பிகே ஜரா தேகோ' என்ற பாடலில் ஷப்னம் நடித்திருந்தார். இந்தப் பாடல் 1974ஆம் ஆண்டு வெளியான பாகிஸ்தானிய திரைப்படமான 'மிஸ் ஹிப்பி'யில் இடம் பெற்றிருந்தது. தம் மாரோ தம் என்ற ஹிந்தி பாடலை ஆஷா போஸ்லேயும், பாகிஸ்தானி பாடலை நீரா நூரும் பாடியிருந்தனர்.

இரண்டு பாடல்களும் குகைகளில் படமாக்கப்பட்டிருந்தன. இந்தப் பாடல்களில் இடம்பெற்றிருந்த இளைஞர்கள் அனைவரும் தங்களின் உடை, பாவனைகளில் சுதந்திரமாக இருந்தனர். காரணம் அவர்கள் அனைவரும் ஹிப்பிகள்.

ஹிப்பி

பட மூலாதாரம், RICHARD GREGORY IN KABUL IN 1974 (PRIVATE COLLECTION)

படக்குறிப்பு, காபூலில் உள்ள நூலகம் ஒன்றில் ரிச்சர்ட் கிரிகோரி (1974)

பொருள்முதல்வாதத்திற்கு எதிரான வாழ்க்கை முறையை விரும்பிய 1960களின் இளைஞர்களை அமெரிக்க ஊடகங்கள் பீட்னிக்ஸ் என்று குறிப்பிட்டன.

பீட்னிக்கள் 1950கள் மற்றும் 1960களின் தொடக்க கலாசாரங்களை நிராகரித்துவிட்டு தங்களை இலக்கியங்கள், கவிதைகள், இசை, ஓவியம் ஆகியவை மூலமாக வெளிப்படுத்தத் தொடங்கினர்.

வியட்நாம் போரை எதிர்த்து இந்த இளைஞர்கள் அனைவரும் கஞ்சா புகைப்பது, பாலியல் சுதந்திரமாக இருப்பது, முடி வெட்டாமல் திரிவது என வாழத் தொடங்கினர்.

கஞ்சாவுக்கான பயணமா?

ஹிப்பிகள் 1965 முதல் 1980 வரை, ஐரோப்பாவிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் (குளிர்காலத்தில் கோவா) வரை போதைப் பொருளுக்காகப் பயணம் செய்தனர், பிரிட்டனில் இது ஹிப்பி பாதை என்று அழைக்கப்பட்டது.

எனவே, அமெரிக்க ஊடகங்கள் இதை கஞ்சா பயணம் என்று வர்ணித்தன. இருப்பினும், 1967 வாக்கில், பீட்னிக் என்பதற்கு மாற்றாக ஹிப்பி என்ற சொலை பயன்படுத்தத் தொடங்கினர்.

பீட்டில்ஸ்(Beatles) 1968இல் இசைக்குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ததைத் தொடர்ந்து, மேற்கு ஐரோப்பாவிலிருந்து ஏராளமான இளைஞர்கள் உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று பயணப்படத் தொடங்கினர்.

ஹிப்பிகள் தங்கள் பயண நாட்களில் எவ்வளவு பணத்தை எடுத்துச் செல்வது என்பதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. 1974இல் பிரிட்டனில், 25 பவுண்டுகள் வரை அனுமதிக்கப்பட்டது. இது தவிர, ஒவ்வொரு பயணியும் வங்கியில் கமிஷன் செலுத்தி பயணிகள் காசோலைகளை வாங்க வேண்டியிருந்தது. பலர் அமெரிக்க டாலர்கள் கடத்தலிலும் ஈடுபடத் தொடங்கினர்.

ஹிப்பிகள் தங்களை ஹிப்பிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதைவிட ‘அதீ தீவிர பிரியர்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்பினர்.

கஞ்சா என்பது ஹிப்பி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. ஆடை, நடத்தை போன்றவை குறித்துக் கவலைப்படாமல் அமைதியான, உறுதியான சிந்தனையில் ஹிப்பி இளைஞர்கள் இருந்தனர்.

எழுத்தாளரும் பயணி விரும்பியுமான ஃபரூக் சோஹைல் கோயிண்டி ஹிப்பிகளுடன் பல்வேறு நாடுகளுக்கு சுற்றித் திரிந்துள்ளார். ஹிப்பிகளை குறித்து அவர், “செல்வம் மற்றும் முதலீட்டு சமூகத்தின் வாழ்க்கை முறைக்கு எதிரான இவர்கள், சென்ற இடமெல்லாம் முத்திரை பதித்துள்ளனர்.

உரம், ரசாயனங்கள் கலந்த செயற்கை உணவுகளை உண்பதை பாவமாகக் கருதினர். எப்போதாவது குளிப்பார்கள். சிறிய ஆடைகளை அணிவார்கள். முடி வெட்டுவதும் தவறாகக் கருதப்பட்டது,” என்று எழுதியுள்ளார்.

மேலும், “அவர்களின் இயக்கம் விசித்திரமானது. தலைவர் கிடையாது, அலுவலகங்கள் கிடையாது, செயலாளர்கள் கிடையாது, , ரகசிய கொள்கைகள் கிடையாது, அதிகாரிகள் கிடையாது, உறுப்பினர்கள் கிடையாது.

இது முற்றிலும் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற இயக்கம். உலகின் முன்னணி நாடுகள் தங்கள் வளங்களின் மூலமும் பிரசாரத்தின் மூலமும் உலக அரசியலும் கலாசாரத்திலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை பனிப்போர் காலத்தில் தோன்றிய இந்த இயக்கம் ஏற்படுத்தியது,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஹிப்பி
படக்குறிப்பு, இந்தியாவில் பீட்டில்ஸ் இசைக்குழுவினர்

சில ஹிப்பிகள் ஆப்கானிஸ்தானில் பயணத்தை நிறுத்தியது ஏன்?

ரிச்சர்ட் கிரிகோரியும் ஓர் இளைஞனாக ஹிப்பிகளுடன் சேர்ந்தார். ஐரோப்பாவின் அனைத்து சாலைகளும் சந்திக்கும் இஸ்தான்புல்லில் ஹிப்பிகளின் பயணம் தொடங்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இஸ்தான்புல்லில் குல்ஹானே, தெஹ்ரானில் அமீர் கபீர், காபூலில் முஸ்தஃபா, பெஷாவரில் ராம்போ, லாகூரில் உள்ள ஆசியா ஹோட்டல், டெல்லியில் கிரவுன், பாம்பேயில் ரெக்ஸ் & ஸ்டிஃபிள்ஸ் ஆகியவை ஹிப்பி பயணத்தில் பிரபலமான ஹோட்டல்கள். இந்த ஹோட்டல்களில் தங்குவது செலவு குறைவானது என்பதோடு சிறப்பானதுகூட என்று குறிப்பிடுகிறார் கிரிகோரி.

“கந்தகாரில் நியூடூரிஸ்டு, காபூலில் பீஸ், நேபாளத்தின் போக்ராவில் ஒயிட் ஹௌஸ், ஸ்ரீநகரில் படகுகள் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்பட்டன. கோவாவில் வாடகைக்கு வீடுகள், பெஷாவர் மற்றும் லாகூரில் நவீன சொகுசு விடுதிகள் ஆகியவை ஹிப்பிகளால் பயன்படுத்தப்பட்டதும் எனக்கு நினைவிருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

மேலும், “நான் இஸ்தான்புல் வழியாகப் பயணித்தபோது, அங்குள்ள குல்ஹேன் ஹோட்டல் போலீஸ் சோதனைகளுக்குப் பிரபலமானது என்பதை அறிந்தேன். அதேநேரம், வேறு பல தங்கும் இடங்கள் உள்ளன என்பதை அறிந்து அவற்றில் சிலவற்றை நான் பயன்படுத்தினேன்,” என்கிறார் கிரிகோரி.

கடந்த 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானஹ்மெட்டில் உள்ள லாலே உணவகம் புட்டிங் கடை என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

இஸ்தான்புல் வழியாக காத்மாண்டு செல்பவர்களுக்கும் பேருந்துகளில் செல்பவர்கள் சாப்பிடுவதற்கான மலிவான விலையுடன் கூடிய ஹோட்டல்களுக்கும் சிறந்த இடங்களாக ப்ளூ மசூதி மற்றும் ஹாகியா சோபியா அருகே உள்ள பகுதிகள் இருந்தன.

இஸ்தான்புல்லில் பல இடங்கள் உள்ளன, ஆனால் அவை ஐரோப்பாவிலும் உள்ளன. நீங்கள் அவற்றை எல்லாம் மறந்துவிட்டு செல்லும் வரை ஹிப்பிகளின் பாதையில் உங்கள் சாகசம் தொடங்காது என்றும் கிரிகோரி கூறுகிறார்.

சிலர் மத்திய கிழக்கில் கஞ்சாவை அதிகம் உற்பத்தி செய்யும் லெபனானுக்கு செல்வார்கள். மற்றபடி ஷாவின் ஆட்சியில் மதச் சார்பற்ற நாடாக இருந்த துருக்கியில் இருந்து இரான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு செல்வது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில், சில ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் ஹிப்பிகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்டன.

ஹிப்பி

பட மூலாதாரம், FACEBOOK/US CONSULATE GENERAL KARACH

படக்குறிப்பு, அப்போது வெளிநாட்டினர் பாகிஸ்தான் வருவதற்குப் பயப்படவில்லை. அங்கு தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று அவர்கள் நம்பினர்.

ஹிப்பிகளின் முக்கிய தளமான பாகிஸ்தான்

ஹிப்பிகள் ஆப்கானிஸ்தானை கடந்த பிறகு பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டனர். பாகிஸ்தானுக்குள் நுழைந்த பிறகு அவர்கள் வடக்கே ஸ்வாட் மற்றும் சித்ராலை நோக்கிப் பயணித்தனர்.

ஹிப்பிகளின் முக்கிய தளமாக பாகிஸ்தான் மாறிய பிறகு பெஷாவர், ஸ்வாட், லாகூர் மற்றும் கராச்சி ஆகியவை முக்கியமான பகுதிகளாக மாறியதாக எழுத்தாளர் நதீம் ஃபரூக் பராச்சா கூறுகிறார்.

“ஹிப்பிகள் கைபர் கணவாய் வழியாக ராவல்பிண்டிக்கு வருவார்கள். அங்கிருந்து பேருந்தில் லாகூர் சென்றடைவது வழக்கம். பல ஹிப்பிகள் கராச்சியின் கடற்கரைகளுக்குச் செல்வார்கள். லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள சூஃபி கோவில்கள் மீது அவர்களுக்கு நாட்டம் இருந்தது.

நடுத்தர வர்க்க இளைஞர்களும் அதிகளவில் கோவில்களுக்குச் சென்றனர். குறிப்பாக, பாரம்பரிய சூஃபி இசை மற்றும் கவ்வாலி நிகழ்த்தப்படும் வியாழன் இரவுகளில் அதிகளவில் கோவில்களுக்குச் சென்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், “பாகிஸ்தானில் இருந்த இளைஞர்கள் மத்தியிலும் ஹிப்பிகளின் ஆடைகள் பிரபலமடைந்தன. 60களின் பிற்பகுதியில் குறைவாக முடி வைத்திருந்த இளைஞர்கள் 70களின் முற்பகுதியில் முடியை நீளமாக வளர்க்கத் தொடங்கினர். பெண்களுடைய சட்டைகளின் நீளம் குறையத் தொடங்கியது,” என்று ஃபரூக் எழுதியுள்ளார்.

ஹிப்பி

பட மூலாதாரம், Getty Images

அப்போது வெளிநாட்டினர் பாகிஸ்தான் வருவதற்குப் பயப்படவில்லை. அங்கு தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று அவர்கள் நம்பினர்.

“லாகூரில் உள்ள கன்டோன்மென்ட்டில் என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் நான்கு நாட்களாக ஒரு ஹிப்பி கிடப்பதை நான் கவனித்தேன். ஐந்தாவது நாள் நான் அவரிடம் சென்றபோது, அவர் மிகவும் பசியாக இருந்தார். அந்த இளம் ஹிப்பி யூகோஸ்லாவியாவை சேர்ந்தவர்.

அவர் என்னுடன் நான்கு நாட்கள் தங்கினார். அவர் சாப்பிட்டு, குடித்துவிட்டு என்னுடன் தூங்கினார், நான் அவரை குளித்து, துணி துவைக்க வற்புறுத்தினேன். பின்னர், அவர் எனது சிறந்த நண்பரானார், உலகம் நிறைய மாறிவிட்டது, ஆனால், எங்கள் நட்பில் எந்த மாற்றமும் இல்லை,” என்று ஃபரூக் நினைவு கூர்ந்தார்.

மலிவு விலை ஹோட்டல்கள் ஹிப்பிகளை தங்க வைக்க போட்டிப் போட்டன. அந்த நேரத்தில் பெஷாவர், லாகூர் மற்றும் கராச்சியில் சுற்றுலாத் தொழில் செழிப்பாக இருந்தது.

பெஷாவரில் உள்ள ராம்போ விருந்தினர் மாளிகை ஹிப்பிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமென்றும், பெரும்பாலான வெளிநாட்டவர்கள் லாகூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தி ஆசியா ஹோட்டலில் தங்கியதாகவும் கிரிகோரி கூறுகிறார்.

பேருந்துகள் இல்லாததால் சித்ராலுக்கு வெகு சிலரே வருகை தந்தனர். ஆனால் அங்கு ஹைதர் அலிஷாவால் 1968 முதல் நடத்தப்பட்டு வந்த மவுண்டன் இன் என்ற ஹோட்டல் இருந்தது.

ஹிப்பி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் மதுவைவிட லஸ்ஸி மீது அதிக ஈர்ப்பு

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான ஹிப்பிகள் போதைப் பொருள் விரும்பிகளாக இருந்தனர். அவர்கள் நேராக காஷ்மீர் செல்வது வழக்கம். அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு இடம் ஹிமாச்சலில் உள்ள குலு-மணாலி. அங்கு கஞ்சா பயிரிடப்பட்டது.

குளிர்காலத்தில் பெரும்பாலான ஹிப்பிகள் கோவாவுக்கு செல்வார்கள், அங்கு அவர்களுக்கு எப்போதும் கஞ்சா கிடைக்கும்.

“பீடி மிகவும் மலிவானது. நான் அதைத்தான் அதிகம் புகைத்தேன். நடந்து செல்ல முடியாத இடங்களுக்கு சைக்கிள், டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றில் சென்றேன்,” என்று ரிச்சர்ட் கிரிகோரி கூறினார்.

ஒரு சில ஹிப்பிகள் இந்தியாவின் கோவில்களை படுத்துறங்கவும் அங்கு கிடைக்கும் அன்னதானத்தை உணவாகவும் பயன்படுத்திக்கொண்டனர்.

ஹிப்பிகள் இந்தியாவின் தோட்டங்களில் தூங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தினர். டெல்லியின் பஹர்கஞ்சில் உள்ள விகாஸில் கிரிகோரி தங்கினார். பிரிட்டிஷ் கிதார் கலைஞரும் கவிஞருமான வில்கோ ஜான்சன் 1970இல் தங்கியிருந்த டெல்லியின் கிரவுன் ஹோட்டலை பற்றியும் கேள்விப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பம்பாய் மிகவும் செலவு மிகுந்த நகரம் என்றும் விக்டோரியா ரயில் முனையத்தில் தூங்கியதாகவும் வில்கோ கூறுகிறார். பம்பாய் மிஸ்டன் சாலையின் தீப்தி ஹவுஸ் ஹிப்பிகளுக்கு மிகவும் பிடித்த இடம்.

“ஒரு சைவ உணவு உண்பவராக, இந்தியா ஓர் அற்புதமான இடம். பாம்பே சர்ச்கேட்டில் உள்ள உணவகம் சிறந்த தோசை மற்றும் சாப்பாட்டை வழங்குகிறது. ஆனாலும், கலாங்குட்டில் உள்ள பெல் பூரி கடையும் எனக்கு மிகவும் பிடித்தது,” என்கிறார் கிரிக்கோரி.

மேலும், “பொதுவாக இரவு உணவாக காய்கறிகளுடன் சப்பாத்தி அல்லது பூரியை சாப்பிடுவேன். பக்கோடா, சமோசா, கச்சோரி போன்றவற்றையும் சாப்பிடுவேன். லட்டு, ஹல்வா, பர்ஃபி, குலோப்ஜாமுன் போன்றவற்றை எனக்குப் பிடிக்கும். லஸ்ஸியை விரும்பி குடிப்பேன். இந்தியாவில் நான் மது அருந்தியதே இல்லை.

கோவா பயணத்தின்போது பேல்பூரி, தோசை, சாதம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிட்டேன். குல்ஃபி, ரோஸ் மில்க், ஃபலுடா போன்றவற்றுடன் பம்பாய் வீதிகளில் கிடைக்கும் கரும்பு சாற்றையும் விரும்பி குடித்தேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிப்பி

பட மூலாதாரம், Getty Images

கான்பூர் ரயில் நிலையம் அருகே ஒரு தேநீர் கடை இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், “உலகில் பல்வேறு வகையான தேநீர்கள் கிடைக்கின்றன. ஆனால், பால் கலக்காத தேநீர் எனக்கு மிகவும் விரும்பமானது. ரயில் நிலையத்திற்கு முன்பு தலைப்பாகை அணிந்திருந்த முதியவர் ஒருவர் என்னை நோக்கி சலாம் அடித்தார்.

நாங்கள் அங்கே புகை பிடித்தபடி அமர்ந்திருந்தோம். பிரிட்டிஷால் பெனாரஸ் என்று அழைக்கப்படும் வாரணாசியில் நாங்கள் சில நாட்கள் இருந்தோம்,” என்று கூறினார்.

வாரணாசியில் அரசுக்கு சொந்தமான கஞ்சா கடை ஒன்று இருந்ததைத் தெரிந்துகொண்டதாகவும் அங்கு சட்டப்பூர்வமாக கஞ்சாவை வாங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த நாளே அரசு கஞ்சா கடை இருப்பது தெரிய வந்தது. அங்கு நீங்கள் சட்டப்பூர்வமாக மரிஜுவானா வாங்கலாம். சில சிறப்பு ஏற்பாடுகளும் இருக்கும்.

“மொழி தெரியாமலேயே உள்ளூர் மனிதர்களைத் தொடர்புகொண்டேன்”

ஹிப்பிகளின் அற்புதமான பயணம் காத்மாண்டுவில் முடிந்தது. இதற்குக் காரணம் திபெத் மற்றும் யார்கண்ட் பாதையில் செல்ல அனுமதி கிடையாது. பர்மா வழியாகச் செல்லும் பாதையும் மூடப்பட்டது. எனவே, ஒருவர் விமானம் மூலம் பாங்காக் செல்ல வேண்டும் அல்லது வீட்டிற்கே திரும்பிச் செல்ல வேண்டும்.

காத்மாண்டு மிகவும் அழகான நகரம். இங்குள்ள பெரும்பாலான கட்டடங்கள் மரத்தால் செய்யப்பட்டவை. கஃபே தி குளோப் காத்மாண்டுவில் பீட்னிக்களுக்கான நிரந்தர வசிப்பிடமாக மாறியிருந்தது. ஆனால் 1969இல் நிலைமை முற்றிலும் மாறியது.

ஃப்ரீக் தெருவில் உள்ள ஓரியண்டல் லாட்ஜ்தான் முதல் ஹோட்டலாக இருந்தது. ஆனால் பின்னர் பல கட்டடங்கள் இதற்கு மாற்றாக அமைந்தன என நேபாள நிபுணர் மார்க் லிச்சி தனது ஃபார் அவுட் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

“ஃப்ரீக் தெருவின் அசல் பெயர் 'ஜோச்சன் டோல்'. இந்தத் தெருவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் பெரும்பாலும் ஹிப்பிகளால் நிரம்பியிருந்தன. "1973 வரை கஞ்சா இங்கு சட்டப்பூர்வமாக இருந்தது. உலகின் சிறந்த கஞ்சாவை இங்கு பெறுவது கடினம் அல்ல.

பயணிகளுடன் நேரத்தை செலவிடுவதைவிட உள்ளூர் மக்களுடனே அதிக நேரத்தை ஹிப்பிகள் செலவிட்டனர். சொகுசு ஹோட்டல்களில் தங்குவது வசதியானதாக இருந்தாலும்கூட அவர்கள் அதை விரும்பவில்லை,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக கிரிகோரி கூறும்போது, “வாய் திறந்து பேசாமல், வெறும் சைகைகள் மூலம் தகவல்களைத் தெரிவிக்க கற்றுக்கொண்டேன். ஆங்கிலம் பேசத் தெரியாத நேபாளத்தில் இருந்து வந்த திபெத்திய அகதிகளுடன் என்னால் நன்றாகப் பேச முடிந்தது. எனது வாழ்க்கையின் சிறந்த காலகட்டத்தை நான் அனுபவித்தேன்,” என்கிறார்.

ஹிப்பி
படக்குறிப்பு, ஜான் பட்

ஜான் பட் போன்ற ஹிப்பிகள் எங்கிருந்து வந்தார்கள்?

பிரெஞ்சு சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் 1986ஆம் ஆண்டு கோவாவில் கைது செய்யப்பட்டார்.

காத்மாண்டுவில் இரண்டு சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதற்காக ஷோப்ராஜ் 1975 ஆம் ஆண்டில், நேபாள சிறையில் 19 ஆண்டுகளைக் கழித்தார். இந்தியாவில் மற்ற சுற்றுலாப் பயணிகளைக் கொன்றது தவிர, 1970இல் ஒரு பிரெஞ்சு சுற்றுலாப் பயணிக்கு விஷம் கொடுக்க முயன்றதற்காக 20 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார்.

அவர் 1972 மற்றும் 1982க்கு இடையில் 20க்கும் மேற்பட்ட கொலைகளுடன் தொடர்புடையவர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா- தாய்லாந்து இடையே ஹிப்பி பயணங்களை மேற்கொண்டவர்கள்.

ஆப்கானிஸ்தானில் ஆரோக்கியமாக இருப்பது கடினம் என்றும் ஹிப்பிகள்கூட அங்குள்ள கலாசாரத்தைக் கண்டு திகைத்தனர் என்றும் கிரிகோரி குறிப்பிடுகிறார்.

“சிலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர். சிலருக்கு பணம் தீர்ந்து விட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் உயிர் பிழைத்தனர்.”

ஹிப்பிகள் பெரும்பாலும் மற்றவர்கள் தங்களைப் பின்பற்றுவதை ஊக்குவித்தனர். சில ஹிப்பிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான வழிகளைத் தேடி இந்தியாவில் நிரந்தரமாகக் குடியேறினர்.

ஆராய்ச்சியாளரும் பிபிசி பத்திரிக்கையாளருமான ஜான் முகமது பட்டின் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஜான் மைக்கேல் பட் என்ற பெயரில், அவர் 60களில் ஹிப்பி இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் பாகிஸ்தானில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர் இந்தியாவில் சமயக் கல்வி பயின்றார். அவர் தனது நினைவுக் குறிப்புகளுடன் 'A Talib's Tale: The Life and Times of a Pashtoon Englishman' என்ற புத்தகத்தை எழுதினார்.

தனித்துவமான பஸ்தூன் வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் பலர் இந்த புத்தகத்தைப் பாராட்டியுள்ளனர்.

ஹிப்பி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சார்லஸ் சோப்ராஜ்

ஹிப்பி பயணம் எப்படி முடிவுக்கு வந்தது?

ரஷ்யா 1979இல், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது மேற்கத்திய பயணிகளுக்கு அதன் எல்லைகளை மூடியது. இதனால் ஹிப்பி பயணம் முடிவுக்கு வந்தது.

இரானில் 1979ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியப் புரட்சி காரணமாக தரைவழிப் பாதைகளை உடனடியாக மூடவில்லை என்றாலும் அந்த வழியாகப் பேருந்துகளை இயக்க பேருந்து நிறுவனங்கள் தயாராக இல்லை.

இராக் 1980ஆம் ஆண்டில் இரான் மீது படையெடுத்தபோது இந்த சேவைகள் அனைத்தும் மூடப்பட்டன. பலுசிஸ்தானுக்கு தெற்குப் பாதையைத் தேர்ந்தெடுப்பது வசதியாக இல்லை. லெபனான் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்தது. காஷ்மீரில் பதற்றம் அதிகரித்தது. நேபாளமும் அமைதியை இழந்தது.

இந்த சூழ்நிலைகள் ஹிப்பிகளின் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன. விமானத்தில் பயணிப்பது செலவு குறைவானதாக மாறியதால் கோவா ஹிப்பிகளின் விருப்ப இடமாக மாறியது. இதனால் ஹிப்பி பயணம் வான்வழியாகத் தொடர்ந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிப்பி தம்பதியினர் நண்பர்களானதாகக் குறிப்பிடும் கோயிண்டி, “இந்த இத்தாலிய ஜோடியை இஸ்தான்புல்லில் உள்ள ஹாகியா சோபியா அருகே உள்ள புறநகர்ப் பகுதியில் நான் பார்த்தேன். அந்தத் தம்பதி தாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஹிப்பிகளாக இருந்ததாகக் கூறினர்."

"கையில் காசு இல்லாமல் உலகத்தை சுற்றுவோம். பயணத்தில் நல்ல நண்பர்கள் ஆனோம். ஒரு நாள் ஹரே ராம ஹரேகிருஷ்ணா பாடலை பாடிக்கொண்டிருந்தபோது 'தமா தம் மஸ்த் கலந்தர்' பாடலைக் கேட்டோம். அந்த பாடலால் ஈர்க்கப்பட்டு முஸ்லிம் ஆனோம்.

இப்போதும் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் எங்கள் சொந்த நாடான இத்தாலிக்கு செல்வோம். இந்த மொத்த உலகமும் எங்களுடையது என்று அவர்கள் தெரிவித்தனர்,” என்று குறிப்பிடுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)