ஜூனியர் பாலையா: தமிழ் சினிமாவில் இவரது தனித்துவம் என்ன?

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜூனியர் பாலையா, தனித்துவம் மிக்க குணச்சித்திர பாத்திரங்களுக்கும் நகைச்சுவைப் பாத்திரங்களுக்கும் நீண்ட காலம் நினைவுகூரப்படுவார்.
பிரியதர்ஷன் இயக்கிய கோபுர வாசலிலே திரைப்படத்தில், கதாநாயகன் கார்த்திக்கின் மூன்று நண்பர்களில் ஒருவராக வருவார் ஜூனியர் பாலையா. கூர்ந்து கவனித்தால், இந்த மூன்று நண்பர்களில் மற்ற இருவரான நாசருக்கும் சார்லிக்கும்தான் கூடுதல் வசனங்கள் இருக்கும். இருந்த போதும், கிடைத்த வாய்ப்புகளில் தனக்கே உரிய வசன உச்சரிப்பால் கவனிக்க வைத்திருப்பார் ஜூனியர் பாலையா.
கோபுர வாசலில் படம் வெளிவருவதற்கு முன்பே, 1989ல் வெளிவந்த கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி உள்ளிட்ட இசைக் குழுவினரின் ஒரு பகுதியாக வரும் ஜூனியர் பாலையா, அட்டகாசம் செய்திருப்பார். இந்தப் படத்தில் கவுண்டமணி - செந்தில் - கோவை சரளா கூட்டணியின் நகைச்சுவைதான் பிரதானமாக இருக்கும் என்றாலும், கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருப்பார் ஜூனியர் பாலையா.
1975-ல் கிடைத்த முதல் வாய்ப்பு
1940களில் இருந்து 70களின் துவக்கம் வரை தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய டி.எஸ். பாலையாவுக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர். அதில் மூன்று பேர் சினிமா துறையில் ஈடுபட்டனர். அதில் மூத்தவர் ஜூனியர் பாலையா. இவர் மூன்றாவது மகன்.
1953ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சென்னையில் பிறந்தார் இவர். ரகு என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. ரகுவை திரைப்படத்தில் அறிமுகப்படுத்த டி.எஸ். பாலையா ரொம்பமே ஆசைப்பட்டார். இதற்காக எம்.ஆர். ராதாவை முக்கிய பாத்திரத்தில் வைத்து 'சுட்டான், சுட்டேன்' என்ற படத்தை துவங்கினார் டி.எஸ். பாலையா. படப்பிடிப்பு துவங்கி மூன்றே நாட்களில் பாலையா இறந்து போனார். படமும் அப்படியே நின்று போனது. இந்தப் படத்தில் டி.எஸ். பாலையாவுடன் கூடவே வரும் பாத்திரமாக ரகுவின் பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு 1975ஆம் ஆண்டில்தான் அடுத்த வாய்ப்புக் கிடைத்தது. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் ஜூனியர் பாலையா என்ற பெயருடன் அறிமுகமானார் ரகு.

இந்தப் படத்தில் டைட்டில் கார்டுகள் போடப்படும்போது, சிவகுமார், கமல்ஹாசன் பெயர்களுக்கு அடுத்த இடத்தில் இவர் பெயர் இடம்பெற்றது. படம் நெடுக டி.எஸ். பாலையாவைப் போன்றே பேசிக் கொண்டிருப்பார். இது ஒரு கட்டத்தில் பெரும் எரிச்சலையே ஏற்படுத்தும். ஆனால், அவர் பாலையாவின் மகன் என்ற அடையாளத்தில் திரைப்பட ரசிகர்கள் மனதில் பதிய வைக்க வெகுவாக உதவியது.
இதற்குப் பிறகு வாழ்வே மாயம் உள்ளிட்ட பல பெரிய திரைப்படங்களில் நடித்தாலும் அடுத்தடுத்து வந்த கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே ஆகிய இரு திரைப்படங்கள் வெளியான பிறகுதான் தமிழ் ரசிகர்கள் அவரைத் தனியாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
இதற்குப் பிறகு பாக்யராஜ் தனது ராசுக்குட்டி, சுந்தரகாண்டம், வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தார். இப்படியாக 2007வரை தொடர்ந்த நடித்துவந்தவர் திடீரென காணாமல் போனார்.
திரைத்துறையில் பெரிதாக 'ப்ரேக்' ஏதும் கிடைக்காத நிலையில், ஆன்மீகத்தின் பக்கம் இவரது கவனம் திரும்பியது. மத பிரச்சாரகராக மாறி, அதில் நிம்மதியைத் தேடிவந்தார் ஜூனியர் பாலையா.

2012-ல் இரண்டாவது இன்னிங்ஸ்
பிறகு, 2012ல் எம்.அன்பழகனின் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை திரைப்படத்தில் மீண்டும் ஒரு பிரதானமான பாத்திரம் ஜூனியர் பாலையாவுக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் தலைமை ஆசிரியர் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கினார் ஜூனியர் பாலையா.
இதற்குப் பிறகு கும்கி, தனி ஒருவன், புலி, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்தார். இதில் நேர் கொண்ட பார்வை படத்தில் அவருடைய பாத்திரம் வெகுவாகக் கவனிக்கப்பட்டது.
சித்தி, சின்னபாப்பா, பெரிய பாப்பா ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார் ஜூனியர் பாலையா.
இவருடைய சகோதரி மனோசித்ராவும் திரைப்படங்களில் நடித்தார். ரகுவரனுக்கு ஜோடியாக ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தில் நடித்த இவர், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துவந்தார்.
ஜூனியர் பாலையாவின் மற்றொரு சகோதரரான சாய்பாபாவும் திரைப்படத் துறையில் ஆர்வம் செலுத்தினார். சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

பட மூலாதாரம், Facebook
நகைச்சுவை, குணச்சித்திரம் - இரண்டிலும் கைதேர்ந்தவர்
டி.எஸ். பாலையா, திரைப்படத் துறையில் இருந்த காலத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தியவர். திரையில் தோன்றும்போது அச்சத்தையும் ஒரு சிறிய நகைச்சுவை உணர்வையும் ஏற்படுத்தக் கூடியவர். ஆனால், ஜூனியர் பாலையா ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவை நடிகராகவே அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால், கவுண்டமணியும் செந்திலும் ஆதிக்கம் செலுத்திய அந்த காலகட்டத்தில் இவர் நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர பாத்திரங்களின் பக்கம் தள்ளப்பட்டார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமுள்ள, புன்னகை பூக்க வைக்கும் மென்மையான பாத்திரங்களுக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார் ஜூனியர் பாலையா.
ஜூனியர் பாலையா மனைவி பெயர் சூசன்னா. இந்த தம்பதிக்கு முரளி என்ற மகனும், நிவேதிதா என்ற மகளும் உண்டு. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த ஜூனியர் பாலையா, நவம்பர் 2ஆம் தேதி அதிகாலையில் காலமானார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












