மோதி அரசின் கொள்கையால் அரபு நாடுகளில் பணிபுரியும் 90 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி இந்தி

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியபோது, மோதி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை பரவலாகப் பாராட்டப்பட்டது. இந்தியா தனது நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்தது.

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கூட மோதி அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி, அது இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறின. இந்த விவகாரத்தில் அரசுடன் இருப்பதாக ராகுல் காந்தியும் கூறியிருந்தார்.

யுக்ரேன்-ரஷ்யா போரில், உலக தெற்கின் குரலாக தன்னைக் காட்டிக் கொள்ள இந்தியா தீவிர முயற்சியில் ஈடுபட்டதுடன், புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுவதில் வெற்றியும் பெற்றது.

ஆனால் இப்போது ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மீது பல கேள்விகள் எழுந்துள்ளன.

யுக்ரேன்-ரஷ்யா போரில் இந்தியா எடுத்த நிலைப்பாடு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் இந்தியா கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானது என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

இரட்டை நிலைப்பாடா?

யுக்ரேன்-ரஷ்யா போரில் மேற்கு நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியாக நின்றதாகவும் ஆனால் இஸ்ரேல் விஷயத்தில் வெளிப்படையாக மேற்குலகின் பக்கம் நின்றதாகவும் கூறப்படுகிறது.

பலர் இதை இந்தியாவின் இரட்டை நிலைப்பாடாக பார்க்கிறார்கள்.

ஆனால், இந்தக் கேள்விகளை நிராகரித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் மெத்தனம் காட்ட முடியாது என்று கூறியுள்ளார். இஸ்ரேலில் அக்டோபர் 7-ஆம் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்கு எதிராக உறுதியாக நிற்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த கேள்வி

காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தவும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் போர் நிறுத்த வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது.

ஐ.நா. பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பாமல் இந்தியா புறக்கணித்தது. யுக்ரேன்-ரஷ்யா போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்புகளையும் இந்தியா புறக்கணித்தது.

ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும், எந்த அழுத்தத்துக்கும் இந்தியா அப்போது அடிபணியவில்லை.

பாகிஸ்தானில் கூட இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை பாராட்டப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாகப் பாராட்டியிருந்தார்.

ஆனால் இம்முறை இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையிலான நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு சமநிலையான ஒன்றாக பார்க்கப்படவில்லை. ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரில் இந்தியாவின் நடுநிலைமைக்கு ஆதரவாக பல உறுதியான வாதங்கள் இருந்தன.

பாதுகாப்பு உபகரணங்களுக்காக இந்தியா ரஷ்யாவைச் சார்ந்து இருக்கிறது. சோவியத் காலத்தில் இருந்தே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் ரஷ்யா உடன்பட்டுவருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா மலிவாக எண்ணெய் வாங்குகிறது.

இவை அனைத்திற்கும் மத்தியில்கூட, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம், இது போருக்கான நேரம் அல்ல என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக, அதன் தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட பலமடங்கு பாலத்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இது இன்னும் தொடர்கிறது.

இத்தகைய நேரத்தில், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவு ஐ.நா. வாக்களிக்காமல் இருப்பதற்கான சரியான வாதம் இந்தியாவிடம் இல்லை என்று கூறப்படுகிறது. ஐ.நா. தீர்மானத்தில் ஹமாஸ் தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று இந்தியா வாதிட்டது. ஹமாஸ் தாக்குதலைக் குறிப்பதோடு அதைக் கண்டித்தும் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, இந்தியா, மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'காஸாவில் நடந்த மனிதாபிமானப் பேரிடருக்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்பது முக்கியம்' என்கின்றனர் நிபுணர்கள்

அரபு நாடுகள் நேர்மையானவையா?

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த டி.எஸ்.திருமூர்த்தி, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

“இஸ்ரேல்-பாலத்தீனப் பிரச்னைக்குத் தீர்வாக ‘இரு தேசக் கொள்கை’யை இந்தியா எப்போதும் கூறி வந்துள்ளது. இஸ்ரேலுக்குள் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை கொள்வது இயற்கையானது. இஸ்ரேலுடன் அரபு நாடுகள் சுமூகமான உறவைக் கொண்டிருந்த போது, இந்தியாவும் இந்த நிலைப்பட்டைப் புறக்கணிக்கவில்லை. I2U2 குழு (இந்தியா, இஸ்ரேல், யு.ஏ.இ மற்றும் அமெரிக்கா) இதனை உறுதிப்படுத்துகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பது மட்டுமல்ல, காஸாவில் நடந்த மனிதாபிமானப் பேரிடருக்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்பது முக்கியம்,” என்று அதில் கூறியிருந்தார்.

திருமூர்த்தி மேலும், "இஸ்ரேல்-பாலத்தீன நெருக்கடியில் மேற்குலகு பாசாங்குத்தனம் மற்றும் இரட்டை நிலைப்பாடுகளுக்காக விமர்சிக்கப்படலாம். ஆனால் அரபு நாடுகள் இந்த விஷயத்தில் அப்பாவிகளா? பாலத்தீனர்களை ஓரங்கட்டுவதற்கு அரபு நாடுகள் பொறுப்பல்லவா? இஸ்ரேலுடனான உறவைச் சீராக்கும் பந்தயத்தில் அரபு நாடுகள் பாலத்தீனர்களின் பிரச்னை பற்றி பேசும் போது, இஸ்ரேல் இப்போது பாலத்தீனத்தின் எந்தப் பகுதியையும் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் இதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறது,” என்று கூறியிருக்கிறார்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, இந்தியா, மோதி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த முன்மொழிவு வாக்கெடுப்பில் இருந்து மொத்தம் 45 நாடுகள் விலகியிருந்தன. இந்த பிரேரணைக்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன

இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை?

சர்வதேச விவகார நிபுணர் நிருபமா சுப்ரமணியம், “இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதி, வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகி இருப்பதற்காக முன்வைத்த காரணம், இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஏன் வாக்களித்திருக்க வேண்டும் என்பதைத்தான் அதிகமாகப் பேசியது,” என்றிருக்கிறார்.

ஐ.நா.வில் யோஜனா படேல் வாசித்த இந்தியாவின் அறிக்கை, "காஸாவில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டது கவலையளிக்கிறது. இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்," என்று கூறியிருந்தார்.

காஸாவில் சிக்கியுள்ள மக்களைச் சென்றடைய மனிதாபிமான உதவிகளை இந்தியா வரவேற்கிறது. இந்தியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது. காஸாவில் நடந்து வரும் போர் மனிதாபிமான நெருக்கடியை அதிகரிக்கும். இஸ்ரேல்-பாலத்தீனப் பிரச்சனைக்கு ‘இரு-நாடு’ தீர்வை இந்தியா முன்வைக்கிறது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த முன்மொழிவு வாக்கெடுப்பில் இருந்து மொத்தம் 45 நாடுகள் விலகியிருந்தன. இந்த பிரேரணைக்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.

வாக்களிப்பில் இருந்து விலகிய பெரும்பாலான நாடுகள் மேற்கத்திய நாடுகள். ஆசியாவில் இந்தியாவும் ஜப்பானும் வாக்களிப்பதில் இருந்து விலகிய முக்கியமான நாடுகள். சீனாவும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நடத்திய 'பயங்கரவாதத் தாக்குதல்' பற்றி தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை என வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 45 நாடுகள் தெரிவித்துள்ளன. ஹமாஸ் தாக்குதல் பற்றிய குறிப்பை உள்ளடக்கிய இந்தத் தீர்மானத்தில் கனடா ஒரு திருத்தம் கொண்டு வந்திருந்தது. இந்தியா அதை ஆதரித்தது, ஆனால் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, இந்தியா, மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'இந்தியாவுக்குள் இருக்கும் மக்களின் உணர்வு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது பா.ஜ.க.வுக்குத் தெரியும்,' என்கின்றனர் நிபுணர்கள்

இந்தியா உலகளாவிய தெற்கின் குரலா?

தனது அறிக்கையில் பயங்கரவாதத்தை விமர்சித்திருந்த இந்தியா, பயங்கரவாதத்திற்கு எல்லை, தேசம் மற்றும் இனம் இல்லை என்று கூறியிருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்தாலும், ஹமாஸின் பெயரைச் குறிப்பிடவில்லை.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மேற்கு ஆசிய ஆய்வு மையத்தில் பேராசிரியராக இருந்த ஏ.கே. பாஷா, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியா காட்டிய நிலைப்பாடு மோதி அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என்கிறார்.

"யுக்ரேன்-ரஷ்யா போரில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையுடன் உலகளாவிய தெற்கின் குரலாக மாறுவதற்கான இந்தியாவின் ஒருங்கிணைந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர்.

மேலும் “காஸாவில் ஒவ்வொரு நாளும் பாலத்தீனக் குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிவு செய்யப்பட்டபோது, இந்தியா வாக்களிக்காமல் இருந்தது. உலகளாவிய தெற்கின் குரல் என்று இந்தியா எப்படி சொல்லிக்கொள்ள முடியும்? இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் மோதி அரசின் நிலைப்பாடு, இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக அமெரிக்காவின் அடியாட்களைப் போன்றது,” என்று காட்டமாக விமர்சிக்கிறார் அவர்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, இந்தியா, மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துகொண்டு அரேபியர்களையும் இந்தியாவால் திருப்திபடுத்த முடியாது,' என்கின்றனர் நிபுணர்கள்

அரபு நாடுகளின் கோபம் இந்தியாவின் மீது திரும்புமா?

பேராசிரியர் பாஷா மேலும், “அக்டோபர் 7-ஆம் தேதியின் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று பிரதமர் மோதி கூறினார். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று அவர் கூறினார். ஆனால் ஹமாஸ் பற்றிக் குறிப்பிடவில்லை. பாலத்தீனர்களின் உரிமைகள் பற்றிப் பேசவில்லை. ஐந்து நாட்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை வந்தபோது, அது ‘இரு நாடு’ தீர்வு பற்றி பேசியது. இந்தியா காஸாவிற்கு மனிதாபிமான நிவாரணப் பொருட்களை அனுப்பியபோது, அது உலகம் முழுவதும் பறை சாற்றியது. ஆனால் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா.வில் போர் நிறுத்த முன்மொழிவு வந்தபோது, அது வாக்களிப்பதில் இருந்து வெளியேறியது, என்கிறார்.

மோதி அரசின் இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் உள்ள காரணம் என்ன?

இதற்கு பதிலளித்த பேராசிரியர் பாஷா, ‘தேர்தல் வெற்றி’ என்கிறார்.

“இந்தியாவுக்குள் இருக்கும் மக்களின் உணர்வு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது பா.ஜ.க.வுக்குத் தெரியும். வெளிப்படையாக இந்த பொது உணர்வு மத அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோதி அரசு இந்தியாவின் நலன்களையும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் பணயம் வைத்துள்ளதை நான் உணர்கிறேன்,” என்கிறார்.

மேலும், "உலகளாவிய தெற்கின் குரலாக மாற மோதி அரசின் முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவைக் கொடுத்துள்ளது. வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவின் நலன்களும் நீண்ட காலத்திற்கு மோசமாக பாதிக்கப்படும். நெதன்யாகு இராணுவ நடவடிக்கை எடுக்கும் விதத்தால் இது நீண்ட காலம் நீடிக்கும். அரபு நாடுகள் நீண்ட நேரம் வெறும் பார்வையாளர்களாக இருக்க மாட்டார்கள். எரிசக்தி விநியோகத்தை நிறுத்துவது குறித்து அவர்கள் முடிவெடுக்கலாம். இது நடந்தால், இந்தியா மோசமாக பாதிக்கப்படும்,” என்கிறார் அவர்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, இந்தியா, மோதி

பட மூலாதாரம், EPA

அரபு நாடுகளில் பணிபுரியும் 90 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பா?

கத்தாரில் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இஸ்ரேல் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டுடன் தொடர்புடையது என்றும் எதிர்காலத்தில் அரபு நாடுகளில் பணிபுரியும் 90 லட்சம் இந்தியர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றும் பேராசிரியர் பாஷா கூறுகிறார்.

ரஷ்ய எண்ணெயால் சாமானிய இந்தியர்கள் பயனடைகிறார்கள், எனவே இறக்குமதி நிறுத்தப்படாது என்று இந்தியா வாதிட்டது. ஆனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துகொண்டு அரேபியர்களையும் இந்தியாவால் திருப்திபடுத்த முடியாது, என்கிறார் பாஷா.

“அரேபியர்களுடன் பதற்றம் அதிகரித்தால், சாமானிய இந்தியர்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்,” என்கிறார் அவர்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த தீர்மானத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாததனால் அது முக்கியமில்லை என்று நிருபமா சுப்ரமணியம் எழுதியுள்ளார்.

மேலும், “யார் எந்தப் பக்கம் என்ற விஷயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் தொடர்பான தீர்மானம் முக்கியமானது. குறுகிய நிலத்தில் வாழும் லட்சக்கணக்கான ஆதரவற்ற மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இந்தியா எந்தப் பக்கம் உள்ளது என்பது தெரிய வந்தது,” என்றிருக்கிறார்.

“காஸாவில் போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் வாக்களித்தது. ஐரோப்பாவிலேயே பிரான்ஸில்தான் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, பிரான்சில் அதிக எண்ணிக்கையிலான யூதர்கள் உள்ளனர். ஐரோப்பாவிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகையை பிரான்ஸ் கொண்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தனது நண்பராகக் கருதுகிறார். இருந்தும் பிரான்ஸ், மற்ற மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது,” என்றிருக்கிறார் அவர்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, இந்தியா, மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் வாக்களித்தது

இந்தியாவின் சவால்கள் அதிகரித்துள்ளனவா?

ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் மேற்கு ஆசிய விவகாரங்கள் நிபுணரான பேராசிரியர் அஷ்வினி மஹாபத்ரா, மத்திய கிழக்கில் என்ன நடந்தாலும் இந்தியாவின் சவால்கள் அதிகரித்துள்ளன என்று கூறுகிறார்.

“கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களுக்கும் இஸ்ரேல் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகளிடையே அமைதியின்மையை அதிகரிக்கும், இது இந்தியாவுக்கு ஒரு மிகப்ப்ரும் சவால்,” என்கிறார்.

மேலும் பேராசிரியர் மகாபத்ரா கூறும்போது, “இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியாவின் நிலைப்பாடு தவறில்லை என்று நான் நினைக்கிறேன். ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதலையும் இந்தத் தீர்மானம் விமர்சிக்க வேண்டும் என்பது இந்தியாவின் வாதமாக இருந்தது. இந்தியாவின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது. பயங்கரவாதத்தைப் புறக்கணிப்பதன் மூலம் இந்தியா உலகளாவிய தெற்கு பற்றி பேச முடியாது,” என்றார்.

தி வில்சன் சென்டரின் தெற்காசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் கூகல்மன், காஸாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாக இந்தியா கருதுகிறது என்று கருதுகிறார்.

"ஐ.நா.வில் போர்நிறுத்த தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து இந்தியா புறக்கணித்திருப்பது, காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கிறது என்பதற்கான அறிகுறியாகும்," என்று கூகல்மன் எழுதியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் போர் நிறுத்தம் செய்ய முடியாது என இந்தியா நம்புகிறது. பாலத்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா ஆதரிக்கிறது ஆனால் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை எதிர்க்கவில்லை, என்றிருக்கிறார் அவர்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, இந்தியா, மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்சின் முன்னாள் பிரதமர் டொமினிக் டி வீபாங்

மேற்குலகிலிருந்து ஒரு விமர்சனக் குரல்

பிரான்சின் முன்னாள் பிரதமர் டொமினிக் டி வீபாங், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் மேற்குலகையும் விமர்சித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், “யுக்ரேனிலும், காஸாவிலும் மேற்குலகின் இரட்டை வேடம்தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமீப வாரங்களில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு நான் பயணம் செய்தபோது, மேற்குலகின் இரட்டை வேடம் குறித்து மிகுந்த கோபம் இருப்பதை உணர்ந்தேன். யுக்ரேனில் என்ன நடந்தாலும் மேற்குலகம் மனிதாபிமானத்தைப் பற்றி பேசுகிறது. ஆனால் காஸாவில் இஸ்ரேல் என்ன செய்கிறது என்பதில் பாசாங்குத்தனத்தை காட்டுகிறது என்று மக்கள் வெளிப்படையாகக் கூறுகிறார்கள். மேற்கின் நிலைப்பாடு தொடர்பாக உலகளாவிய தெற்கில் நிறைய அவநம்பிக்கை உள்ளது,” என்றார்.

இதுகுறித்து பிரான்ஸ் முன்னாள் பிரதமர் மேலும் கூறுகையில், ‘‘ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியபோது, அதற்கு எதிராகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தோம். ஐ.நா.வின் தீர்மானங்களை ரஷ்யா மீறியபோது, நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்தோம். ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக ஐ.நா.வின் தீர்மானங்களை இஸ்ரேல் பின்பற்றவில்லை, அதற்கு எதிராக எந்த தடையும் விதிக்கப்படவில்லை. வரலாற்று நாடகத்திற்கு மேற்குலகம் இப்போது கண்களைத் திறக்க வேண்டும்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)