கோலி, ரோஹித், புஜாரா - இந்திய அணியின் மூன்று முக்கிய தூண்களுக்கு மாற்று தேடும் நேரம் வந்துவிட்டதா?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தோல்வி குறித்து விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான விராத் கோலி, ரோஹித் ஷர்மா, சேட்டேஸ்வர் புஜாரா ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்த மூவரும் பேட்டிங்கில் சோபிக்கத் தவறியது, இறுதிப் போட்டியில் இந்தியா வலுவிழக்க முக்கியக் காரணமாக இருந்தது. இந்த மூவருக்கும் மாற்று தேட வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் சத்தேஸ்வர் புஜாரா ஆகிய மூவரில், சத்தேஸ்வர் இதில் புஜாராவின் ஆட்டம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.

இதற்கு முக்கிய காரணம் புஜாராவிற்கு கவுண்டி கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் இருக்கிறது. அதில் அவர் அதிக ரன்களை குவித்திருக்கிறார். இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் அவர் அதிகமாக விளையாடிருப்பது இதில் முக்கியபங்காக கருதப்படுகிறது.

ஆனால் புஜாராவும் ஏமாற்றமளிக்க துவங்கியிருக்கிறார்.

2022ஆம் ஆண்டு சிட்டகாங்கில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில், இரண்டு இன்னிங்ஸ்களில் 90 மற்றும் 102 ரன்கள் குவித்ததைத் தவிர்த்துப் பார்த்தால், கடைசியாக 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 77 ரன்கள் குவித்ததே அவரின் அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

2021- 2023 இடைப்பட்ட காலத்தில் புஜாரா, 17 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்த 17 போட்டிகளில் மொத்தம் 928 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இது சராசரியாக ஒரு போட்டிக்கு 32 ரன்கள் என்ற கணக்கின் வீதம் வருகிறது.

இந்த ஒட்டுமொத்த போட்டிகளில் அவர் ஒரே ஒருமுறைதான் சதம் அடித்தார். இந்திய அணியின் நம்பர் 3 பேட்ஸ் மேன் என்று கருதப்படும் ஆட்டக்காரர் இப்படியான ஒரு நிலையில் இருப்பது வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

புஜாரா இல்லையென்றால் வேறு யார்?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சத்தேஸ்வர் புஜாரா

நம்பர் 3 ஆக விளையாடுவதற்கு சத்தேஸ்வர் புஜாராவிற்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணி, வேறு ஒரு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், யாருடைய பெயர்கள் எல்லாம் உங்களுடைய நினைவுக்கு வருகிறது?

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடந்த தொடரின் போது, ​​ஹனுமா விஹாரி இந்த நிலையில் மூன்று இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் அடித்தார்.

ஆனால் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் புஜாரா மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு, ஹனுமா விஹாரி அணியில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார்.

ஹனுமா விஹாரியை தவிர்த்து பார்த்தால், அவரை தவிர வேறு யாரும் 3ஆம் இடத்தில் விளையாடுவதற்கான தகுதியில் இல்லை.

ஆனால் இந்தியாவின் பிரச்னை இங்கே நம்பர் 3 மட்டுமல்ல. அதற்கு மேலாக, இங்கே பேட்டிங் வரிசையிலும் பிரச்னைகள் இருக்கின்றன.

பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பவரான விராட் கோலி, இந்த தசாப்தத்தின் தவிர்க்க முடியாத தலைசிறந்த வீரராக இருக்கிறார்.

கடந்த தசாப்தத்தை திரும்பி பார்க்கும்போது, விராட் கோலி போன்று ஒரு சில வீரர்களே சிறப்பாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் உலக நாடுகளில் உள்ள பந்து வீச்சாளர்களையெல்லாம் மிரள வைத்த விராட் கோலி, தற்போது அவருடைய சிறந்த வடிவத்தின் நிழலாக மட்டுமே பார்க்கப்படுகிறார்.

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கோலி மீண்டும் பளிச்சிடத் தொடங்கியிருக்கிறார். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் அவர் ஃபார்முக்கு வர வேண்டும்.

உண்மையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் தேவை இந்திய அணிக்கு இருக்கிறது.

அடுத்த மாதம், 2023-25 ​​உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா மேற்கிந்திய தீவுகளில் இருந்து தொடங்குகிறது. இந்த நேரத்தில், அணியை எல்லா பிரச்னைகளிலிருந்தும் மீட்டெடுக்கும் திறனைக் கொண்டிருந்த அந்த பழைய கோலிதான் இந்தியாவுக்கு இப்போது தேவை.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (2021-23), விராட் கோலி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32.13 என்ற சராசரியில் 932 ரன்கள் எடுத்தார். இதில் அவர் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்திருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அகமதாபாத் போட்டியில் கோலி இந்த சதத்தை அடித்தார். ஆனால் இந்த காலகட்டத்தில் கோலியின் சராசரி 25.25 ஆக குறைந்துள்ளது.

கோலிக்கு மாற்று இருக்கிறதா?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, விராட் கோலி

அணியின் நான்காவது இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஒரு நல்ல தேர்வாக இருப்பார். ஆனால் அவர் தற்போது காயமடைந்துள்ளதால் ஓய்வில் இருக்கிறார். ஆனால் எதிர்காலத்தில் நான்காம் இடத்திற்கு அவர் நல்ல தேர்வாக இருப்பார். இருப்பினும் அவர் தன்னுடைய ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

ஷார்ட் பிட்ச் பந்துகள் மீதான வெறுப்பையும் ஸ்ரேயாஸ் சமாளிக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவரது உடலை நேரடியாக குறிவைத்து வரும் ஷார்ட் பிட்ச் பந்துகளால் , அவர் அடிக்கடி சிரமப்படுவதைக் காணலாம்.

அதேபோல் சர்பராஸ் கான் மற்றொரு வாய்ப்பாக இருக்கிறார்.

கடந்த உள்நாட்டு சீசனில் சர்பராஸ் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் உயர்தர வேகப்பந்து வீச்சுக்கு முன்னால் அவர் இன்னும் சோதிக்கப்படவில்லை.

அதிக வேகம் கொண்ட பந்துகளில், சர்பராஸ் அசௌகரியமாக இருப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் இந்திய ஏ அணிக்காக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற சர்பராஸ் கானால், ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித் ஷர்மாவுக்கு மாற்று யார்?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா இந்தியாவுக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் நாட்டின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என்று பட்டியலிடும் போதெல்லாம், அவரது பெயர் கண்டிப்பாக அதில் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், ரோஹித் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதில் இரண்டு சதங்கள் உட்பட, 42.11 என்ற சராசரியில் 758 ரன்கள் அவர் எடுத்திருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு மண்ணிலும் அவரது ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. அவரது சராசரி இந்தியாவில் 36.88 ஆகவும், வெளிநாடுகளில் 52.57 ஆகவும் இருந்தது.

ஆனால் தற்போது ரோஹித் சர்மாவுக்கு 36 வயதாகிறது. 2025 வரை அவரால் விளையாட முடியுமா என்பதுதான் நம்மிடையே இருக்கும் மிகப்பெரும் கேள்வி.

ஷுப்மான் கில் ஒரு நல்ல தொடக்க வீரராக காணப்படுகிறார், ஆனால் அவருக்கு ஒரு நல்ல பார்ட்னர் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மயங்க் அகர்வால் ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும், 2022 இல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பெங்களூர் டெஸ்டுக்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவேயில்லை.

இதுதவிர அபிமன்யு ஈஸ்வரனும் இருக்கிறார். அவர் வலுவான தொடக்க ஆட்டக்காரராக இருந்தாலும், அவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் போட்டியிட வேண்டியிருக்கலாம்.

ஆனால் இத்தகைய போட்டிகள் அனைத்துமே இந்திய அணிக்கு நன்மையையே பயக்கும்.

அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வரவிருக்கிறது. அதன் பிறகு 2025ல் மீண்டும் ஒருமுறை இங்கிலாந்து இந்தியாவில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுற்றில் வெற்றிபெற இந்த சுற்றுகள் அனைத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.

இந்திய அணியின் மூன்று முக்கிய தூணாக விளங்கும் விராட், ரோஹித் ஷர்மா மற்றும் புஜாரா ஆகியவர்களை நீக்கிவிட்டு, மாற்று வீரர்களை தேர்வு செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்துதான் ஆக வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதைப் பொறுத்துதான் அனைத்து மாற்றங்களும் ஏற்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: