சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புள்ளி விவரங்கள் சாதகமாக இல்லை; பலவீனங்கள் தென்படுகின்றன - இவற்றைத் தாண்டி குஜராத் அணியை தோற்கடிக்க சென்னைக்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?
சென்னை அணி வெற்றி பெற என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன? எந்தெந்த குஜராத் வீரர்கள் சென்னைக்கு முட்டுக்கட்டையாக இருக்கப் போகிறார்கள்?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது 4 முறை சாம்பியன்பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
வரும் 24ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். குவாலிஃபயர் சுற்றில் தோற்கும் அணி 2வது தகுதிச்சுற்றில் விளையாடத் தகுதிபெறும்.
எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, 2வது தகுதிச்சுற்றில், குவாலிஃபயரில் தோற்கும் அணியுடன் விளையாடும். 2வது தகுதிச்சுற்று, இறுதி ஆட்டம் ஆகியவை ஆமதாபாத்தில் நடக்கின்றன.
சிஎஸ்கே ‘லைட்’
ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய அதே நுணுக்கங்களைப் பின்பற்றியும், அதைப்போலவே குஜராத் டைட்டன்ஸ் அணியும் செயல்பட்டு வருவதால், ‘சிஎஸ்கே-லைட்’ என்றே குஜராத் டைட்டன்ஸ் அணியை அழைக்கலாம்.
சிஎஸ்கே நிர்வாகத்தைப் போன்று குஜராத் அணி நிர்வாகமும் எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை என்று கூறப்படுவதுண்டு.. பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, கேரி கிரிஸ்டன், விக்ரம் சோலங்கி மட்டுமே சிஎஸ்கே வழியைப் பின்பற்றி அணியை வழி நடத்துகிறார்கள்.
சீனியர் வீரர்கள் சரியாகச் செயல்படாவிட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது, ஜூனியர் வீரர்களை தக்கவைப்பது, அன் கேப்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பது, வீரர்களிடம் தார்மீக நம்பிக்கையை ஊட்டுவது ஆகியவை அணிக்கு கூடுதல் ஊக்கத்தை தரும். இதை இரு அணிகளும் ஒரே மாதிரியாகவே செய்கின்றன.

பட மூலாதாரம், BCCI/IPL
ஒரே மாதிரி அணுகுமுறை
ஹர்திக் பாண்டியா, சீனியர் வீரரான விஜய் சங்கரையும், ஜோஷ் லிட்டில், நூர் அகமதுவைக் கையாளும் விதத்தையும், சிஎஸ்கே கேப்டன் தோனி, மூத்த வீரர் ரஹானே, துஷார் தேஷ் பாண்டே, பத்திரணா ஆகியோரைக் கையாள்வதையும் உதாரணமாகக் கொள்ளலாம்.
இதனால்தான் தமிழக வீரர் விஜய் சங்கர் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அருமையாக ஆடி வருகிறார். ஒரு காலத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக இருந்த சங்கர், அவரின் தலைமையின் கீழ் விளையாடுகிறார்.
ரஹானேவிடம் பெரிய ஹிட் அடிக்கும் திறமை இருக்கிறதா என யாருக்கும் தெரியாது. அதை வெளிக்கொண்டு வந்து அவருக்கு மீண்டும் இந்திய அணிக்குள் நுழையஒரு வாய்ப்பு அளித்தது சிஎஸ்கே அணிதான். பென் ஸ்டோக்ஸ்கிற்கு ஏற்பட்ட காயத்தால் அணிக்குள் உள்ளே வந்த ரஹானேவுக்கு அணியில் கிடைத்த இடம், நடத்தும் விதம் அவரை சிறப்பாகச் செயல்பட வைத்தது.
ஆர்சிபி அணியில் இருந்தவரை ஷிவம் துபேயின் பேட்டிங் நிலையற்ற தன்மையாக இருந்தநிலையில் அவர் சிஎஸ்கேவுக்கு வந்தபின் அவரின் சிக்ஸர் அடிக்கும் திறமை எதிரணிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்று வீரர்களை இரு அணிகளும் கையாளும் விஷயத்தில் வேறுபாடு இருந்தாலும் வீரர்களை ஊக்கப்படுத்தி வெற்றி பெறுவதில் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஜூனியர் சிஎஸ்கேவா?
ஆதலால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தனது ஜூனியர் அல்லது தனது மாதிரி அணியான குஜராத்துடன் மோத உள்ளது என்றே கூறலாம்.
இதைக் கூறும்போதே, சிஎஸ்கேஅணிக்கு குஜராத் டைட்டன்ஸ் எவ்வளவு சவாலாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும். இரு அணிகளும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் சிறப்பாகச் செயல்படுகின்றன.
இரு அணிகளிலும் மிரட்டல் ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், நடுவரிசையில் பெரிய ஹிட் அடிக்கும் பேட்ஸ்மேன்கள், பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள், நடுப்பகுதி ஓவர்களில் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளர்கள், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என ரகரகமாய் வீரர்களை வைத்துள்ளனர்.
சுப்மான் கில்லுக்கு இந்த ஐபிஎல், கனவு சீசனாக மாறியுள்ளது. மிரட்டல் ஃபார்மில் இருக்கும் சுப்மான் கில் தனி ஒருவனாக இருந்து ஆர்சிபி அணியை மண்ணைக் கவ்வ வைத்து, தொடர்ந்து 2ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
சுப்மான் கில்லின் பேட்டிங்கைக் கட்டுப்படுத்தும் வகையில் தோனி என்ன புதிய உத்தியை போட்டியில் வைத்திருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
வரலாறு குஜராத்துக்கு சாதகம்
இந்த சீசனில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவில்லை. முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது குஜராத் அணிக்கு சற்று வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்.
ஆனால், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கையில், இதுவரை 3 ஆட்டங்களில் குஜராத்துடன் சிஎஸ்கே அணி மோதியிருந்தாலும் ஒருபோட்டியில்கூட சிஎஸ்கே அணி வென்றதில்லை என்ற மோசமான தகவல் இருக்கிறது. இந்த சீசனில் கூட மார்ச் 31ம்தேதி அகமதாபாத்தில் குஜராத் அணியுடன் சிஎஸ்கே அணி மோதி தோல்வி அடைந்தது.
இந்த வரலாற்றை இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி மாற்றி அமைக்குமா, 10-வது முறையாக ஐபிஎல் பைனலில் இடம் பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
தோனியின் கேப்டன்ஸி மாடல்
தோனியிடம் இருந்து ஜெர்ஸியை வாங்கி பெயரை, நிறத்தை மாற்றி அணிந்து கொண்டதுபோலவே ஹர்திக் பாண்டியா, நெஹ்ராவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.. இந்த சீசனில் சிஎஸ்கே அணி 9 முறை அணியின் ப்ளேயிங் லெவனை மாற்றாமல் களமிறங்கியுள்ளது. அதற்கு அடுத்தார்போல் குஜராத் அணி 4 முறை ப்ளேயிங் லெவனை மாற்றாமல் களமிறங்கியுள்ளது.
அணியில் அடிக்கடி வீரர்களை மாற்றுவதை தோனி எவ்வாறு தவிர்ப்பாரோ அதேபோன்று, குஜராத் அணியும் வீரர்களை மாற்றுவதில் அதிகமான நம்பிக்கை இல்லாத அணியாகும். இரு போட்டிகளில் வீரர்கள் சொதப்பினாலும்கூட அணியில் மாற்றம் பெரிதும் வரவிரும்பாத அணியாக குஜராத் இருக்கிறது.
அதேபோல மதிப்பின் அடிப்படையில் வீரர்களை சிஎஸ்கே அணி களமிறக்குவதில்லை. வீரர்களின் திறமை அடிப்படையில்தான் முடிவு செய்யும். ரூ.10 கோடிக்கு கிருஷ்ணப்பா கவுதமை வாங்கிவிட்டு இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
அதேபோல குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.6 கோடி கொடுத்து ஏலத்தில் ஷிவம் மாவியை விலைக்கு வாங்கி இதுவரை அவரைப் பயன்படுத்தாமல் மோகித் சர்மாவை களமிறக்குகிறது. இதற்கு காரணம், சூழலுக்கு ஏற்றாற்போல் மோகித் சர்மா பந்துவீச்சு பொருந்துவதைப் போல் மாவி பந்துவீச்சு அமையவில்லை. இருஅணிகளுமே சூழலுக்கு ஏற்ற வீரர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று கருதலாம்.
இதில் முக்கியமாக இரு அணிகளின் கொள்கைகளும் ஒரேமாதிரியாக இருக்கின்றன.. நீண்டகால வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்பதால், இரு அணிகளும் வாக்குறுதி அளிக்கப்பதில்லை. உடனடியாக செயல்படுத்துவது, வீரர்களின் திறமை அறிந்து அந்தந்த இடங்களில் மட்டும் களமிறக்குகின்றன.
இதுபோல் சிஎஸ்கே-வுக்கு இணையாக, மாதிரியாக குஜராத் டைட்டன்ஸ்அணி இருப்பதால், இன்றைய ஆட்டம் மிக அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பட மூலாதாரம், BCCI/IPL
ஆடுகளம் எப்படி?
சேப்பாக்கம் ஆடுகளம் இந்த சீசனில் இரு விதங்களில் இருந்தது. ஒரு ஆடுகளம் குறைவான ஸ்கோர் செய்யும் விதத்திலும், சுழற்பந்துவீச்சுக்கும், மிதவேகப்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் விதத்திலும் உள்ளது. மற்றொரு ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், நல்ல ஸ்கோர் செய்யக்கூடிய ஆடுகளமாகவும் இருக்கிறது. இரு ஆடுகளங்களிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் 7 போட்டிகளில் டாஸ்வென்று முதலில் பேட் செய்த அணிதான் வென்றுள்ளது, ஒரு போட்டியில் மட்டுமே சேஸிங் அணி வென்றுள்ளது. சென்னை மைதானத்தில் மட்டும் சிஎஸ்கே அணி இந்த சீசனில் 3 தோல்விகளைச் சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் 74 ஆட்டங்கள் நடந்துள்ளன. அதில் 44 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிதான் வென்றுள்ளது. சேஸிங் செய்த அணி 30 முறை வென்றுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி 63 முறை மோதி, அதில் 44 முறை வென்றுள்ளது, 18 முறை தோற்றுள்ளது. இதில் 27முறை சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து வென்றுள்ளது, 17 முறை சேஸிங் செய்து வென்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சராசரியாக 150 முதல் 160 ரன்கள் வரை சேர்க்கலாம். அதிகபட்சமாக, 200 ரன்கள் வரைகூட அடிக்க முடியும்.
சேப்பாக்கம் ஆடுகளத்தில் பந்துகள் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும் என்பதால், முதல்முறையாக ஆடும் குஜராத் அணிக்கு இந்த ஆடுகளம் சற்று சவாலாகவே இருக்கும். குறிப்பாக பவர்ப்ளேயில் பத்திரனா மற்றும் தீபக் சாஹர் ஓவர்களை சமாளிப்பது குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாகவே இருக்கும்.
சிஎஸ்கே அணியில் இலங்கையைச் சேர்ந்த தீக்சனா, பத்திரனா ஆகியோர் இருப்பதைப் புரிந்து கொண்டு இலங்கை கேப்டன் தசுன் சனகாவை வாங்கி, அவரை குஜராத் டைட்டன்ஸ் களமிறக்குகிறது. ஆல்ரவுண்டரான சனகா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படுவார்.

பட மூலாதாரம், BCCI/IPL
பேட்டிங் வலிமை
குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளில் பேட்டிங் வலிமை சமமாகவே இருக்கிறது. சிஎஸ்கே அணியில் கெய்க்வாட், டேவிட் கான்வே இருவரும் பல போட்டிகளில் நல்ல தொடக்கத்தை அளித்து வலுவான ஃபார்மில் உள்ளனர்.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் 100 ரன்ளுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் கான்வே இந்த சீசனில் மட்டும் 8 அரை சதங்கள் அடித்து 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். இருவரும் குஜராத் அணிக்கு பெரிய சவாலாக இருப்பார்கள்.
அதேநேரம், அனுபவ வீரர் ஷமி பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் பந்துவீச்சை கான்வே, கெய்க்வாட் இருவரும் சமாளித்து ஆட வேண்டியிருக்கிறது. கான்வே இதுவரை 3 முறை ஷமி பந்துவீச்சைச் சந்தித்து அதில் 2 முறை ஆட்டமிழந்துள்ளார். ஷமி பந்துவீச்சுக்கு எதிராக கெய்க்வாட் ஸ்ட்ரைக்ரேட் 70 மட்டுமே இருப்பதும் கவலைக்குரியது.
சிஎஸ்கே அணியைப் போலவே குஜராத் அணியிலும் தொடக்க வீரர்கள் சுப்மான் கில், சாஹா வலுவாக உள்ளனர். அதிலும் கில் தொடர்ந்து இரு சதங்களை அடித்து வலுவாக உள்ளார். சென்னையில் ஆட்டம் நடப்பதால் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். நடுப்பகுதியில் ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், மில்லர், திவேட்டியா, விஜய் சங்கர், சனகா ஆகியோர் ஃபார்மில் இருப்பது பெரிய பலமாகும். வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் இவர்கள் தங்களின் அணிக்காகப் பங்களிப்பு செய்துள்ளனர். ஆதலால் குஜராத் அணியில் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங் வலுவாக இருக்கிறது. அதிலும் மும்பை அணிக்கு எதிராக ரஷித் கான் அடித்த ஷாட்களை யாரும் மறந்திருக்க முடியாது.
சிஎஸ்கே அணியில் நடுவரிசையில் களமிறங்க ரஹானே, மொயின் அலி, ஜடேஜா, ராயுடு என வலிமையான பேட்டிங் வரிசை இருக்கிறது. இருப்பினும் இந்த ரஹானே, ராயுடு, ஜடேஜா, மொயின் அலி ஆகிய வீரர்களின் பேட்டிங்கிலும் நிலைத்தன்மை இல்லை.
ரஹானே சில போட்டிகளில் மட்டும் அதிரடியாக ஆடினார் அதன்பின் விளையாடவில்லை. ராயுடு, மொயின்அலி இதுவரை பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், மேம்போக்காகப் பார்த்தால் வலுவான பேட்டிங் வரிசை இருப்பதாகத் தெரியும்.
ஆனால், பேட்டிங்கில் போதிய ஆழமில்லை. கடந்த 14 போட்டிகளிலும் நடுவரிசையில் இருந்து பெரிய அளவு பங்களிப்பு கிடைத்ததாக ஆதாரங்கள் இல்லை. பெரும்பாலான ஸ்கோர்களையும், வெற்றியையும் தொடக்க வீரர்களும், 4வது வரிசை வீரர்களுமே உறுதி செய்துவிட்டனர். ஆதலால், நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு பெரிய வேலையில்லை. ஆனால், இந்த ஆட்டத்தில் நடுவரிசை சிறப்பாகச் செயல்படுவது அவசியமாகும்.

பட மூலாதாரம், BCCI/IPL
டெத் ஓவர்களில் பிராவோவின் இடத்தை நிரப்புவது யார்?
டெத் ஓவர்கள், அணிக்கு நெருக்கடியான நேரங்களில் பந்துவீச வேண்டுமென்றால், பிராவோவிடம்தான் தோனி பந்தை வழங்குவார். ஆனால், பிராவோ தற்போது அணியில் இல்லாத நிலையில் டெத் ஓவர்கள் வீசுவது யார் என்ற குழப்பம் நிலவுகிறது. டெத் ஓவர்களை வீசும்போது களத்தில் இருக்கும் வீரர்களுக்கு ஏற்ப பிராவோ மைதானத்துக்குள் வந்து ஆலோசனைகளை வழங்கிவிட்டு செல்கிறார்.
ஆனால் குவாலிஃபயர் போன்ற ஆட்டங்களில் டெத் ஓவர்களை சிறிது தவறாக வீசினாலும், ஆட்டம் கையைவிட்டு சென்றுவிடும். சிஎஸ்கே அணியில் தீபக் சாஹரைத் தவிர தேஷ் பாண்டே, பத்திரணா, முகேஷ் ஆகியோருக்கு போதிய அனுபவம் இல்லை. ஹைபிரஷர் கொண்ட இதுபோன்ற ஆட்டங்களில் டெத் ஓவர்களை எவ்வாறு கையாள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, மோகித் சர்மா, ஜோஷ்வா லிட்டில், அல்சாரி ஜோஸப் என டெத் ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்ட பந்துவீச்சாளர்கள், அனுபவமிக்கவர்கள் உள்ளனர்.
“முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை”
சுழற்பந்துவீச்சில் இரு அணிகளும் வலிமையாக இருப்பதாகத் தெரிந்தாலும், முழுநேர, தொழில்முறை சுழற்பந்துவீச்சாளர்கள் என எடுத்துக்கொண்டால் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மட்டுமே ரஷித் கான், நூர் அகமது உள்ளனர்.
சிஎஸ்கே அணியில் தீக்சனா தவிர, ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் பகுதிநேர பந்துவீச்சாளர்களைத் தவிர தொழில்முறை பந்துவீச்சாளர்கள் இல்லை. சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒருவேளை ஒத்துழைக்கும் பட்சத்தில், சிஎஸ்கே அணியைவிட குஜராத் அணியே கைஓங்கி இருக்கும். தமிழக வீரரும் இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான சாய் கிஷோரையும், சாய் சுதர்ஷனையும் குஜராத் அணி களமிறக்கும் எனத் தெரிகிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஹர்திக் பாண்டியா பந்துவீசுவாரா?
ஹர்திக் பாண்டியா கடந்த 3 போட்டிகளாக பந்துவீசவில்லை. கடைசியாக லக்னெள போட்டிக்கு எதிராகப் பந்துவீசினால் அதிலும் முழுமையாக 4 ஓவர்களையும் வீசவில்லை. ஆர்சிபி அணிக்கு எதிராகவும் ஹர்திக் பந்துவீசவில்லை. யாஷ் தயால், மோகித் சர்மா மட்டும்தான் பந்துவீசினர். ஆதலால் இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பந்துவீசினால் அந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கும். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அல்லது, சுழற்பந்துவீச்சாளரைச் சேர்க்க இயலும்.
நடுங்க வைக்கும் ரஷித் கான், நூர் அகமது சுழல்
ரஷித் கான், நூர் அகமது இருவரும் நடுப்பகுதி ஓவர்களில், பவர்ப்ளே ஓவர்கள் முடிந்து பந்து வீசும்போது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். ரஷித் கான் இதுவரை 24 விக்கெட்டுகளையும், நூர் அகமது 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். சேப்பாக்கம் போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இருவரின் பந்துவீச்சு சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்னமாக இருக்கும். சிஎஸ்கேவின் ரன்ரேட்டை நடுப்பகுதி ஓவர்களில் இழுத்துப் பிடிக்கும் விதத்தில் இருவரின் பந்துவீச்சு அமையும் என்பதால், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், BCCI/IPL
உள்ளூர் மைதானம் சாதகம்
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை சொந்த மைதானம், பலமுறை விளையாடிய மைதானம் என்பதால் வீரர்களுக்கு ஆடுகளம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு சிஎஸ்கே அணிக்கு முக்கியமான பலமாக இருக்கும். ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக சென்னையில் விளையாடுகிறது. தமிழக வீரர்களே இல்லாத சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்துவரும் நிலையில், விஜய் சங்கர், சாய் கிஷோர், சாய் சுதர்ஷன் போன்ற தமிழக வீரர்களை தாங்கிவரும் குஜராத் அணிக்கும் ரசிகர்களிடம் ஆதரவு இருக்கும் என நம்பலாம்.
சிஎஸ்கே அணி விவரம் (உத்தேச அணி)
டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், மகேஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரணா
குஜராத் டைட்டன்ஸ் அணி விவரம் (உத்தேச அணி)
சுப்மான் கில், விருதிமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், தசுன் சனகா, ராகுல் திவேட்டியா, ரஷித் கான், யாஷ் தயால்அல்லது சாய் கிஷோர், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












