தோனியின் அணியை மிரட்டப் போகும் 'இடது கை ரஷித் கான்'

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இவருக்கு 3 வயது இருக்கும்போதுதான் இந்தியாவில் ஐபிஎல் தொடரே தொடங்கப்பட்டது. ஆனால், இன்று அதே ஐபிஎல் தொடரில் கோலி, ரோஹித் போன்ற பெரிய ஜாம்பவான்களுக்கே தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சால் தண்ணி காட்டுகிறார் என்றால் நம்பமுடிகிறதா?

அது வேறுயாருமல்ல… இந்த ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் இடது கை சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுதான்.

ஆப்கன் சூழல்...

ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, ஃபரூக்கி, நவீன் உல்ஹக், குர்பாஸ் அகமது, நஜிபுல்லா ஜாத்ரன், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், பசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் வரிசையில் தற்போது புதிதாக வந்துள்ளவர் நூர் அகமது.

நிலையற்ற அரசியல் சூழல், பயங்கரவாதம், வறுமை, ஏழ்மை, எந்த நேரம் எங்கு குண்டு வெடிக்கும் என்றை நிலையிலான பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்து சர்வதேச அளவில் கோலோச்சி வருவது பாராட்டுக்குரியது.

அதிலும் ஐபிஎல் தொடர் என்பது பெரும்பாலான ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு 2வது தாய்வீடாக இருக்கும் அளவுக்கு அதிக அளவில் ஆப்கான் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் மட்டுமல்லாமல் பிக் பாஷ் லீக், கரிபியன் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களாதேஷ் லீக் எனப் பல்வேறு டி20 லீக் போட்டிகளிலும் ஆப்கன் வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

கவனம் ஈர்த்த ரஷித் கான் 2.0

அந்த வகையில் இந்த ஐபிஎல் சீசனில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இடதுகை ரிஸ்ட் பவுலர் நூர் அகமது.

தன்னுடைய ஆதர்ச நாயகர்களாக ரஷித் கான், கோலி, டீ வில்லியர்ஸ் உள்ளிட்ட பல வீரர்களை மனதில் நினைத்து கிரிக்கெட் பழகிய நூர் அகமது, அதே ஜாம்பவான்களுடன், ஜாம்பவான்களுக்கு எதிராக பந்துவீசுவதை நினைத்துப் பார்க்கையில் கனவில் இருப்பது போன்று இருக்கிறது என்று பரவசப்பட்டார்.

ஐபிஎல் தொடரைப் பார்த்து கிரிக்கெட் பழகிய நூர் அகமதுக்கு 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தபோது அது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருந்தது. ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்ட நூர் அகமதுவுக்கு கடந்த சீசனில் ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இம்பாக்ட் ப்ளேயராக அணியில் நூர் அகமது களமிறக்கப்பட்டார். ஆப்கானிஸ்தானில் ரஷித் கான் பந்துவீச்சைப் பார்த்துப் பழகிய நூர் அகமதுவுக்கு ரஷித் கானுடன் சேர்ந்து ஒரே அணியில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது.

தனது முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி நூர் அகமது அசத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன்பின் லக்னெள அணியை 135 ரன்களை சேஸிங் செய்யவிடாமல் நூர் அகமது, ரஷித் கான் இருவரும் தங்களின் பந்துவீச்சால் கட்டிப்போட்டனர்.

இந்தப் போட்டியில் நூர் அகமதுவின் பந்துவீச்சைப் பார்த்து பிரமித்த பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா ப்ளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பளிக்கக் கூறினார். இதனால் அல்சாரி ஜோஸப் பெஞ்சில் அமர வைக்கப்படவே நூர் அகமது தொடர்ந்து களமாடினார்.

இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய நூர் அகமது இதுவரை 288 ரன்கள் கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஓவருக்கு சராசரியாக 7.96 ரன்கள் கொடுக்கிறார். ஐபிஎல் தொடரில் 19 வயதில் அறிமுகமாகி இதுபோல குறைவாக எக்கானமி வைத்திருப்பது உண்மையில் பிரமிப்புக்குரிய விஷயம்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

பெரிய குடும்பம்

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில், லகான் மாவட்டத்தில் 2005ஆம் ஆண்டு, ஜனவரி 3ஆம் தேதி பிறந்தவர் நூர் அகமது.

நூர் அகமதுவுடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள், 3 சகோதரர்கள். இதில் 8-வது குழந்தையாகப் பிறந்தவர்தான் நூர் அகமது. நூர் அகமது தந்தை முகமது அமீர், இரும்புக்கடையும், ஆட்டமொபைல் உதிரி பாகங்கள் கடையும் நடத்தி வருகிறார்.

நூர் அகமது சிறுவயதிலேயே நன்றாகப் படிக்கும் திறமை படைத்தவர் என்பதால், நூர் அகமதுவை தன்னுடனேயே வைத்துக்கொள்ள அவரின் தந்தை விரும்பினார், கிரிக்கெட் விளையாட அனுமதிக்கவில்லை.

ஆனால், நூர் அகமதுவின் சகோதரர்தான் தந்தையிடம் எடுத்துக்கூறி அவரை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

சகோதரர்தான் காரணம்

இது குறித்து நூர் அகமது ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “நான் தொழில்முறையாக கிரிக்கெட் விளையாட வந்தபோது 10ஆம் வகுப்பில் பள்ளியில் நான்தான் முதலிடம் பெற்றிருந்தேன். என்னுடைய கல்வி குறித்து கவலைப்பட்ட தந்தை, கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது, உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியாது என்று சந்தேகப்பட்டார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பலரும் என் தந்தையைப் பார்த்துப் பேசி, நான் கிரிக்கெட் விளையாடப் போகக்கூடாது, படிப்பதற்கு பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால், என் தந்தையிடம் பேசி என்னை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்து வந்தவர் என் சகோதரர் முகமதுதான்.

நான் கிரிக்கெட் விளையாட என் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கும் போதெல்லாம் அவரை சமாதானப்படுத்தியது என் சகோதரர்தான். அவருக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும். ஐபிஎல் தொடரில் இடம் பெற்று முதல் விக்கெட்டை நான் கைப்பற்றியபோது என் தந்தை மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

போட்டி முடிந்த பிறகு என் தந்தையிடமும், குடும்பத்தாரிடமும் பேசியபோது, அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் கண்ணீர் விட்டனர்,” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

14 வயதிலேயே கிரிக்கெட் களம்

நூர் அகமதுவுக்கு 14 வயது இருக்கும்போதே, காபூல் மண்டலத்தில் 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் நடந்த அகமது ஷா அப்தைல் முதல்தரப் போட்டியில் அறிமுகமானார்.

அதே ஆண்டு அக்டோபரில் நடந்த பகீஸா டி20 கிரிக்கெட் லீக்கில், அய்னாக் நைட்ஸ் அணியில் நூர் அகமது அறிமுகமாகினார்.

நூர் அகமதுவின் பந்துவீச்சைப் பார்த்த ஆப்கன் கிரிக்கெட் நிர்வாகிகள், 2020ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமதுவை சேர்த்தனர்.

உலக லீக் அணிகள்

2020இல் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் செயின்ட் லூசியா அணியிலும், அதன்பின் ஆஸ்திரேலியாவில் நடந்த, பிக் பாஷ் லீக்கில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியிலும் நூர் அகமது இடம் பெற்றார்.

2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியிலும் நூர் அகமது விளையாடினார்.

சிஎஸ்கேவும்-நூர் அகமதுவும்

சிஎஸ்கே அணியுடனும் இணைந்து நூர் அகமது பணியாற்றியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தி.

2021ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி வந்த நேரத்தில், சிஎஸ்கே அணி வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து இருவரைத் தேர்வு செய்து அழைத்தது.

அதில் ஆப்கனின் வேகப்பந்துவீச்சாளர் ஃபரூக்கி மற்றும் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது இருவரும் அடக்கம்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

திருப்புமுனை தருணம்

நூர் அகமது வாழ்க்கையில் 2018ஆம் ஆண்டில்தான் திருப்புமுனையான சம்பவம் நிகழ்ந்தது. காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் இளம் வீரர்களுக்கான ஓபன் செலக்ஸன் நடந்தது. அப்போது, ஆப்கன் முன்னாள் வீரரும், 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்கான தேர்வுக் குழுத் தலைவரான ரயீஸ் அகமதுசாய், நூர் அகமது திறமையைக் கண்டறிந்தார்.

நூர் அகமது பந்துவீச்சு முறையும், பந்தை ஸ்பின் செய்யும் விதம், வேகம் ஆகிவையும் எதிர்காலத்தில் தேசிய அணிக்கு மிகப்பெரிய சக்தியாக மாறுவார் எனக் கணித்து அவரை அணிக்குள் கொண்டு வந்தார்.

அது குறித்து ரயீஸ் அகமதுசாய் கூறுகையில், “இடது கை மணிக்கட்டில் பல்வேறு விதங்களில் பந்துவீசக் கூடிய, வித்தியாசமான ஸ்டைலில் பந்துவீசும் நூர் அகமதுவை பார்த்தேன். அவரை உடனடியாக அணிக்குள் கொண்டுவரத் திட்டமிட்டேன்.

அவரின் பந்துவீச்சு முறையும், நம்பிக்கையுடன் அவர் பந்துவீசுவதும் என்னை ஈர்த்தன. 125 இளைஞர்கள் தேர்வுக்கு வந்திருந்ததில், 75 பேரை முதல் கட்டமாகவும், பின்னர் 40 பேராகக் குறைத்து இறுதியாக 15 வீரர்களில் ஒருவராக நூர் அகமது இருந்தார். உடல் தகுதித்தேர்வு, கிரிக்கெட் அடிப்படையிலான தேர்வில் நூர் அகமது தேர்ச்சி பெற்றார்” எனத் தெரிவித்தார்.

14 வயதிலேயே ஐபிஎல் முயற்சி

நூர் அகமது தனக்கு 14 வயதாக இருந்தபோதே 2019ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் என்ற செய்தி சற்றே பிரமிப்பூட்டுகிறது.

ஆனால், அந்த ஆண்டு அவரை ஏலத்தில் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத நூர் அகமது, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஐபிஎல் ஏலத்தில் தன்னுடைய பெயரைப் பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்

2019ஆம் ஆண்டு இந்தியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் நடந்தது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நூர் அகமதுவின் பந்துவீச்சைப் பார்த்து இந்திய நிர்வாகிகள் பிரமித்துப் போயினர்.

இதில் அதிர்ஷ்டவசமாக இந்திய அணி வென்றாலும் நூர் அகமதுவின் பந்துவீச்சு வெகுவாகக் கவனிக்கப்பட்டது. நூர் அகமது 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

அந்த முக்கிய விக்கெட்டுகளில் துருவ் ஜூரேல்(ராஜஸ்தான் ராயல்ஸ்), திலக் வர்மா(மும்பை இந்தியன்ஸ்) ஆகியோருடைய விக்கெட்டுகள் குறிப்பிடத்தக்கவை.

அப்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அகமதுசாயிடம், நூர் அகமதுவின் பந்துவீச்சு குறித்து இந்திய அணிக்கு அப்போது பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பெருமையாகப் பேசியுள்ளார் என்று அகமது சாய் தெரிவித்துள்ளார்.

பிக் பாஷ் லீக்கில் அறிமுகம்

2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக்கில் நூர் அகமது மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியில் அறிமுகமாகினார்.

ஐபிஎல் போன்று பிக் பாஷ் டி20 லீக் தொடரும் புகழ்பெற்றது. பெரிய ஹிட்டர்கள், ஜாம்பவான்கள் பங்கேற்கும் தொடரில் இடம்பெற்ற நூர் அகமது முதல்முறையாக இதுபோன்ற பெரிய தளத்தில் பந்துவீசினார்.

நூர் அகமது பங்கேற்ற முதல் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி, பெர்த் அணியிடம் தோற்றது. இருப்பினும், நூர் அகமதுவுக்கு முதல் விக்கெட்டாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன் அமைந்தார்.

அதன்பின் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்ட நூர் அகமதுவுக்கு கடந்த சீசனில் ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அணியில் களமிறங்கிய நூர் அகமது முதல் விக்கெட்டை கைப்பற்றிய போது, அவரின் சகோதரர் வீட்டுக் கதவை உடைத்துள்ளார்.

கதவை உடைத்த சகோதரர்

அந்தச் சம்பவம் குறித்து நூர் அகமது சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஐபிஎல் தொடரில் நான் இடம் பெற்று, முதல் ஆட்டத்தில் பந்துவீசியபோது என்னுடைய குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிலும் நான் சாம்ஸன் விக்கெட்டை வீழ்த்தியபோது, என் சகோதரர் மகிழ்ச்சிப்பூரிப்பில் கதவைக் கைகளால் குத்தி, அந்தக் கதவையே உடைத்துவிட்டார். என் சகோதரரிடம் ஏன் கதவை உடைத்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர், 'என் மகிழ்ச்சியையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை' என்றார்.

முதல் போட்டியில் களமிறங்கியபோது எனக்கு அழுத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் ரசித்துக்கொண்டே பந்துவீசியது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. ஐபிஎல் மிகப்பெரிய கிரிக்கெட் தளம் என்பது தெரியும்.

அதிகமாக ரசித்து விளையாடும்போது நான் அதிக வெற்றிகளைப் பெறுவேன். டாப் பிளேயர்ஸுக்கு எதிராகப் பந்துவீசி அவர்களை ஆட்டமிழக்கச்ச செய்ய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

குஜராத் அணியில் நூர் இடம் பெறக் காரணமானவர் யார்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் நூர் அகமது இடம் பெறக் காரணமானவர் அந்த அணியின் துணைப் பயிற்சியாளர் ஆஷிஸ் கபூர்தான். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான ஆஷிஸ் கபூர், இந்திய ஜூனியர் அணி தேர்வுக்குழுத் தலைவராக 2018 முதல் 2021 வரை இருந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் அணி ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வந்திருந்தபோதுதான் நூர் அகமதுவின் திறமையைக் கண்டறிந்தார். அப்போது நூர் அகமதுவுக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. 5 போட்டிகளில் பங்கேற்ற நூர் அகமது 15 விக்கெட்டுகளை கைப்பற்றியதைப் பார்த்து கபூர் மிரண்டுவிட்டார்.

ஐபிஎல் தொடருக்குள் நூர் அகமது பெயர் வந்தவுடன் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கவும், மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கவும் ஆஷிஸ் கபூர் முயன்றுள்ளார். ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணும், மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜாகீர் கானும் நூர் அகமது குறித்த ஆஷிஸ் கபூர் பேச்சைச் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன்பின் குஜராத் டைட்டன்ஸ் அணியில் துணைப் பயிற்சியாளராக ஆஷிஸ் கபூர் சேர்ந்த பின்புதான் 2022 ஐபிஎல் ஏலத்தில் நூர் அகமதுவை ஆஷிஸ் கபூர் தேர்வு செய்து விலைக்கு வாங்கச் செய்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

நெஹ்ராவிடம் கெஞ்சினேன்

அந்தச் சம்பவம் குறித்து ஆஷிஸ் கபூர் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஐபிஎல் ஏலத்தில் நூர் அகமது பெயர் வந்தபோது, ஆஷிஸ் நெஹ்ராவிடம் நீங்கள் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள், நான் ஒரே ஒரு வீரரை மட்டும் தேர்வு செய்ய அனுமதியுங்கள் எனக் கேட்டேன். அது நூர் அகமதுதான்.

பலருக்கும் நூர் அகமதுவை பற்றித் தெரிந்திருக்காது. உண்மையில் நூர் அகமது என்பவர் இடதுகை ரஷித்கான் என்றாலும் மிகையல்ல. ரஷித் கான், நூர் அகமது இருவரும் ஒரே அணியில் இருந்து விளையாடினால் எதிரணி மோசமான பாதிப்புக்கு உள்ளாகும்.

கடந்த சீசனில் நூர் அகமதுவுக்கு ஒரு வாய்ப்புகூட இல்லை. அவருடன் இணைந்து தீவிரமாகப் பல்வேறு பயிற்சிகளை நுணுக்கமாக அளித்தேன். அவரின் பந்துவீச்சில் துல்லியத்தன்மையை மெருகேற்றுதல், லென்த்தை மாற்றாமல் வீசுதல், பந்துவீச்சில் சற்று வேகத்தை அதிகப்படுத்துதல் எனப் பல்வேறு மாற்றங்களைச் செய்தேன்.

ஆனாலும் நூர் அகமதுவுக்கு வாய்ப்பளிக்க நெஹ்ரா தயங்கினார். ஒரு அணியில் 5 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொள்ள முடியாது, நடுப்பகுதி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த இரு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை என்பதை வலியுறுத்தினேன்.

உனக்கான ஸ்டைலில் பந்துவீசு

அதன் பின்புதான் நூர் அகமதுவை தயார் செய்தேன். நூர் அகமதுவை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இருந்தே எனக்கு நன்கு தெரியும்.

அவரின் பந்துவீச்சு துணிச்சலானது, இந்திய அணிக்கு எதிராக அனாயசமாகப் பந்துவீசி திணறவிட்டார், கடைசிவரை போராட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடக் கூடியவர் என்பதால் அவரை அணியில் சேர்க்க முயன்றேன்.

ரஷித்கான், "என்னைப் போல் நீங்கள் பந்துவீச முடியாது. நீங்கள் உங்களைப் போன்று, உங்களுக்குரிய ஸ்டைலில் பந்துவீசுங்கள். உங்களின் பந்துவீச்சு முறை வேறு, என்னுடைய பந்துவீச்சு முறை வேறு என்று நூர் அகமதுவிடம் கூறினேன். இதை உணர்ந்தபோது, நூர் அகமதுவின் பந்துவீச்சில் தெளிவு காணப்பட்டது” எனத் தெரிவித்தார்.

வறுமையான, ஏழ்மை சூழ்ந்த ஆப்கானிஸ்தானில் இளைஞர்களுக்கு முறையான கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அகாடெமி போதுமான அளவில் இல்லை. இருப்பினும் அங்கிருந்து வந்த ஓர் இளைஞர் சர்வதேச வீரர்களை மிரட்டும் அளவுக்கு சுழற்பந்துவீச்சில் சாதிப்பது எப்படி என்பது வியப்பாக இருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

பயிற்சி எடுத்தது எப்படி

சுழற்பந்துவீச்சு பயிற்சி எவ்வாறு எடுத்தேன், எப்படி கற்றுக்கொண்டேன் என்பது பற்றி நூர் அகமது ஆங்கில இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.

நூர் அகமது கூறுகையில் “ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டு. டிவியில் கிரிக்கெட் போட்டி நடந்தாலே அமர்ந்து பார்க்கத் தொடங்கிவிடுவோம். என்றாவது ஒருநாள் தாய்நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று விரும்பினேன். என் சகோதரர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். உள்ளூர் கிரிக்கெட் அகாடெமியில் நான் விளையாடுவதைப் பார்த்து என் சகோதரர்தான் என்னை ஊக்கப்படுத்தினார்.

நான் என் சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் கிரிக்கெட் ஆடும்போது சுழற்பந்துவீச்சில் ரிஸ்ட் ஸ்பின்னை அதிகமாக வீசுவேன். என் பந்துவீச்சை சமாளித்து விளையாட சிரமப்பட்டார்கள். டிவியில் ரஷித் கான் பந்துவீச்சையும், பிற ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சையும் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்.

மற்றவர்கள் பந்துவீசுவதைவிட நான் வீசும் பந்து அதிகமாக சுழல்வதைக் கண்டு என்னுடைய வலிமையைத் தெரிந்துகொண்டேன். அதில் கவனம் செலுத்தினேன், என் குடும்பத்தாரும் கிரிக்கெட் அகாடெமிக்கு பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பெரும்பாலும் கூக்ளி முறையில்தான் வீசுவேன். ஆனால், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவதில் சிரமம் இருந்தது. உலகக் கோப்பை போட்டிக்காகப் பயிற்சி எடுத்தபோதுதான் இடதுகை, வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எவ்வாறு பந்து வீசுவது என்பதைத் தெரிந்துகொண்டேன்” என தெரிவித்தார்.

பேட்டிங் செய்வது கடினம்

ரிஸ்ட் ஸ்பின்னர் நூர் அகமது தனது பந்துவீச்சில் லெக் பிரேக், கூக்ளி, ஸ்லைடர் ஆகியவற்றை அடிக்கடி வீசும் தன்மை கொண்டவர். இந்த ஒவ்வொரு முறையையும் வெவ்வேறு வேகத்தில் வீசுவதால், பேட்ஸ்மேன்கள் எளிதில் நூர் அகமது பந்தைச் சந்தித்து ஆடுவது கடினம்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் அகமதுசாய் கூறுகையில் “வழக்கமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள், லெக் ஸ்பின்னர்கள் 100 கி.மீ வேகத்துக்குள் பந்துவீசுவார்கள். ஆனால், நூர் அகமதுவின் ரிஸ்ட் ஸ்பின் 120 கி.மீ வேகத்தில் சிறிய டர்னுடன் பேட்ஸ்மேனை நோக்கி வரும்.

அப்போது அதைக் கணித்து ஆடுவது கடினமாக இருக்கும். பந்து பிட்ச் ஆனவுடன் எவ்வாறு ஆடலாம் என பேட்ஸ்மேன்கள் யோசிக்கும் நேரத்துக்குள் பேட்ஸ்மேனை நோக்கி பந்து சென்றுவிடும் என்பதால், ஷாட்களை ஆடுவது கடினமாக இருக்கும். அதிலும் நூர் அகமது துல்லியமான லென்த்தில் பந்துவீசினால் பேட்ஸ்மேன்கள் ஆடுவது மிகக் கடினமாக இருக்கும்,” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

என்ன சொல்கிறார் ரஷித் கான்

நூர் அகமது ஐபிஎல் தொடரில் விளையாடுவது அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல மற்றொருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. அது வேறுயாருமல்ல ரஷித் கான்தான்.

ரஷித் கான் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “இளம் வயது நூர் அகமது அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்புகிறார். ரம்ஜான் நேரத்தில் அதிகாலை 1 மணிக்கு உடற்பயிற்சிக் கூடத்தில் இருப்பேன். அப்போது என்னிடம் வந்து பந்துவீசி பயிற்சி எடுக்கலாம் வாருங்கள் என்று அழைப்பார் நானும் பயிற்சி அளிப்பேன் என்னுடன் சேர்ந்து பந்துவீசுவார்.

இப்போது நூர் அகமதுவுக்கு வாய்ப்பு கிடைத்து சிறப்பாக ஆடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நூர் அகமது வளர்ச்சி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

அறிமுக ஆட்டத்தில் நூர் அகமதுவுக்கு தொப்பியை வழங்கி நான்தான் வரவேற்றேன். இதுபோன்ற மிகப்பெரிய தளத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒவ்வொரு வீரரின் கனவு. உன்னுடைய கடினமாக உழைப்பு, தீர்க்கம் உன்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என்றேன்,” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் கிடைத்த அனுபவம் நூர் அகமதுவுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டித்தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமது இடம் பெற்றாலும் வியப்பேதும் இல்லை.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ், இலங்கையில் டி20 லீக்கில் கல்லே கிளாடியேட்டர்ஸ், பாகிஸ்தானில் காராச்சி கிங்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ், காபூல் டி20, ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி ஆகியவற்றிலும் நூர் அகமது விளையாடி வருகிறார்.

சர்வதேச டி20, ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே நூர் அகமது ஆடியுள்ளார். மற்றவகையில் பல்வேறு டி20 லீக்கில் மொத்தம் 60 போட்டிகளில் விளையாடிய நூர் அகமது 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: