மும்பையை ப்ளே ஆஃப் அனுப்பிய குஜராத்; ஆர்சிபி செய்த மோசமான தவறுகள்

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆர்சிபி அணியை நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 10வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
ஆர்சிபியின் வெற்றியைக் காணக் காத்திருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து அரங்கை நிசப்தமாக்கினார் சுப்மன் கில்.
நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி அணியைவிடக் குறைவாக, மைனஸில் இருந்தபோதிலும் 16 புள்ளிகள் பெற்றதால், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.
சன்ரைசர்ஸ் அணியை வென்றபோதிலும் மும்பை இந்தியன்ஸும், மும்பை ரசிகர்களும் அந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியாமல் இருந்தனர். ஆனால், குஜராத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் கொண்டாட்டம் தொடங்கியது.
இனிமேல், எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா ஆகியோருக்கு இடையிலான ஆட்டமாக ப்ளே ஆஃப் சுற்று இருக்கப் போகிறது.
மழை காரணமாக பெங்களூரு சின்னசாமி அரங்கில் ஆர்சிபி-குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டம் நடக்குமா, நடக்காதா எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு கிங் கோலியின் ஆர்ப்பரிப்பான 2வது சதம் விருந்தாக அமைந்தது.
பெங்களூருவை மௌனமாக்கிய இளவரசர்
ஆனால், கோலிக்கு பதிலடியாக குஜராத்தின் “இளவரசர்” சுப்மன் கில் அடித்த சதம் ஆர்சிபியை தோல்வியின் பாதையில் இழுத்துச் சென்றது. இதைச் செய்ததன் மூலம், அரங்கில் இருந்த 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பெங்களூருவையும் கில் மௌனமாக்கினார்.
ஆர்சிபி அணியின் ஒவ்வொரு விக்கெட் வீழ்ச்சிக்கும் ஏகோபித்த ஆதரவைத் தந்து, ஊக்கப்படுத்திய ரசிகர்கள் மத்தியில், தோல்வி அடைந்துவுடன், அரங்கத்தில் இனம்புரியாத அமைதி சூழ்ந்தது.
குஜராத் டைட்டன்ஸ் வெற்றியை குஜராத் அணியினர் மட்டுமே கொண்டாடிக்கொண்டிருந்த தனித்துவமான காட்சி மட்டும் அரங்கேறியது. ஆர்சிபி ரசிகர்கள் சோகத்துடன் அரங்கிலிருந்து வெளியேறினர்.
ஆர்சிபி 6-ஆவது இடம்
லீக் சுற்றுகளின் முடிவில், குஜராத் அணி 14 போட்டிகளில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. சிஎஸ்கே அணி 17 புள்ளிகளையும், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 17 புள்ளிகளையும், மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளையும் பெற்றன. மும்பை அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.044 ஆகவே இருந்தது.
இதில் ஆர்சிபி அணி 14 புள்ளிகள் பெற்றாலும் தோல்வியால் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. நிகர ரன்ரேட்டும் பிளஸ் 0.135 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 0.148 ரன்ரேட்டில் 5ஆவது இடத்தைப் பிடித்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
சென்னையில் தகுதிச்சுற்று ஆட்டங்கள்
சென்னையில் தகுதிச்சுற்று ஆட்டமும், குவாலிஃபயர் ஆட்டமும் நடக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை(23ஆம்தேதி) நடக்கும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
வரும் 24ஆம் தேதி சென்னையில் நடக்கும் எலிமினினேட்டர் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.
கில், விஜய் சங்கர் சாகசம்
மழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கினாலும், 20 ஓவர்கள் நடந்தது. முதலில் பேட் செய்த ஆர்பிசி கோலியின் ஆர்ப்பரிப்பான சதத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது.
198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் அற்புதமான சதத்தால் 5 பந்துகள் மீதிம் இருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
52 பந்துகளில் 102 ரன்கள்(8சிக்ஸர்,5பவுண்டரி) அடித்த சுப்மான் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். 35 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த தமிழக வீரர் விஜய் சங்கர் ஆட்டம் ஆகியவை குஜராத் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றின.

பட மூலாதாரம், BCCI/IPL
123 ரன்கள் சேர்த்த இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இருவரையும் தொடக்கத்திலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பிரிக்கத் தவறியதற்கான விலையை கடைசியில் கொடுத்தனர்.
சுப்மன் கில், விஜய் சங்கர் இருவரும் களத்தில் நங்கூரமிட்ட பிறகு, ஆர்சிபி பந்துவீச்சை வெளுத்துக்கட்டினர். சிராஜ், பர்னல், வைஷாக், பிரேஸ்வெல், சர்மா பந்துவீச்சை பறக்கவிட்டனர்.
பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு ஆடுகளத்தில், ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கை ஓங்குவதற்கு சிறிதுகூட வாய்ப்பு தராமல் கில், சங்கர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஐபிஎல் சீசனில் சுப்மன் கில் 680 ரன்களுடன் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கேவின் கான்வே 585 ரன்களுடன் உள்ளனர்.
முதலிடத்தில் டூப்ளெஸ்ஸி 730 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை வைத்திருந்தாலும், போட்டித்தொடரின் முடிவில் ஆரஞ்சு தொப்பியை வாங்க கில்லுக்கு அதிக வாய்ப்புள்ளது.
கோலியின் சாதனைகள்
தோல்வி அடைந்தாலும், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி கிங் கோலி என்பதை நிரூபித்துவிட்டுத்தான் களத்திலிருந்து வெளியேறினார்.
விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயிலின் 6 சதத்தை முறியடித்து 7வது சதத்தை கோலி பதிவு செய்தார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஆர்சிபி அணியின் “கேஜிஎஃப்” என அழைக்கப்படும் கேப்டன் டூப்ளெஸ்ஸி 730 ரன்கள், விராட் கோலி 639 ரன்கள், மேக்ஸ்வெல் 400 ரன்கள் எடுத்தனர்.
ஆர்சிபியின் நம்பிக்கை பந்துவீச்சாளர் சிராஜ் இந்த சீசனில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சதம் அடித்தவர்களில் 2020இல் ஷிகர் தவண், 2022இல் ஜாஸ் பட்லர் வரிசையில் 2023இல் விராட் கோலியும் இணைந்தார்.
கோலியின் சதமும், கில் சதமும் ஒன்றா?
விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 2வது சதத்தை 60 பந்துகளில் அடித்தார். அவரின் கணக்கில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கின.
ஆனால் கோலி எடுத்துக்கொண்ட பந்துகளைவிட 8 பந்துகள் குறைவாக சுப்மன் கில் 52 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் சதம் அடித்தாலும், கில் சதம் அடித்த சூழல் வேறு, கோலி சதம் அடித்த சூழல் வேறு.
ஒருபுறம் விக்கெட் வீழ்ச்சி, அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கொண்டு செல்ல பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும், விக்கெட்டை பறிகொடுத்துவிடக்கூடாது எனப் பல்வேறு நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சுமந்து கோலி சதம் அடித்தார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
சுப்மன் கில் அடித்த சதம் ரிலாக்ஸாக அடிக்கப்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்டது. இந்த ஆட்டத்தில் தோற்றாலும் கவலையில்லை, வென்றாலும் சாதிக்கப்போவதில்லை என்ற சுதந்திரமான மனதுடன் கில் விளையாடினார் என்று பெங்களூரு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.
கோலியின் ஆட்டம் “ஆல்டைம் கிரேட்” என்றுகூறி ரசிகர்கள் அவரது சதத்தை ரசிக்கின்றனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
கோலி-டூப்ளெஸ்ஸி மெகா கூட்டணி
டாஸில் தோற்ற ஆர்சிபி முதலில் பேட் செய்தது. விராட் கோலி, டூப்ளெஸ்ஸி கூட்டணி ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினர். ஷமி வீசிய 3ஆவது ஓவரில் டூப்ளெஸ்ஸி 4 பவுண்டரிகளை விளாசி 16 ரன்கள் சேர்த்தார்.
பதிலடியாக விராட் கோலியும், யாஷ் தயால் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி 17 ரன்கள் குவித்தார். பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 62 ரன்கள் சேர்த்தது.
இருவரின் அதிரடியைப் பார்த்த ஹர்திக் பாண்டியா 5வது ஓவரிலேயே ரஷித் கான், நூர் அகமதுவை பந்துவீச அழைத்தார். அதற்குப் பலன் கிடைக்கும் விதமாக நூர் அகமது வீசிய 8வது ஓவரில் டூப்ளெஸ்ஸி 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்த சீசனில் டூப்ளெஸ்ஸி, கோலி ஜோடி மட்டும் 939 ரன்கள் சேர்த்தனர். 2016இல் கோலி, டீவில்லியர்ஸ் ஜோடியும் இதே ரன்களைத்தான் குவித்தது.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர், பவுண்டரி என சிறிய கேமியோ ஆடிவிட்டு 11 ரன்னில் ரஷித் கான் பந்தில் போல்டாகி வெளியேறினார். நான்காவதாகக் களமிறங்கிய லாம்ரோர் ரன் ஏதும் எடுக்காமல் நூர் அகமது பந்தில் விக்கெட் கீப்பர் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பிரேஸ்வெல், கோலியுடன் சேர்ந்தார். பிரேஸ்வெல் ஸ்ட்ரைக்கை கோலியிடம் வழங்க கோலி ஆட்டத்தைக் கையில் எடுத்தார். அதிரடியாகவும் பொறுப்பாகவும் ஆடிய கோலி, 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிரேஸ்வெல் 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு கோலி, பிரேஸ்வெல் 47 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
தினேஷ் கார்த்திக்கின் டக்அவுட் சாதனை
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் 17வதுமுறையாக தினேஷ் கார்த்திக் டக்அவுட் ஆகி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் ரோஹித் சர்மா 16 முறை டக்அவுட் ஆகியிருந்தார், அதை டிகே முறியடித்துவிட்டார். இந்த சீசன் முழுவதும் தினேஷ் கார்த்திக்கின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது. 133 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தடுமாறியது.
பின்வரிசையில் பெரிய ஹிட் அடிக்க பேட்ஸ்மேன்கள் இல்லாத சூழலில் கோலி மட்டும் களத்தில் பெரிய ஹிட்டராக இருந்தார். அடுத்து வந்த அனுஜ் ராவத், கோலியுடன் சேர்ந்து ஒத்துழைத்து பேட் செய்தார்.
விராட் கோலி அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். ரன் ரேட்டை குறைக்கும் வகையில் ரஷித் கான், நூர் அகமது பந்துவீச்சு, ஆர்சிபி பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.
இத்தனை சவால்களையும் கடந்து கோலி, 25 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்து ஐபிஎல் தொடரில் 2வது சதத்தை நிறைவு செய்தார். அரைசதம் அடிக்க 35 பந்துகள் எடுத்துக்கொண்ட கோலி, அடுத்த 50 ரன்களை 25 பந்துகளில் எட்டினார். கோலி 101 ரன்களுடனும், ராவத் 23 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
10 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் சேர்த்திருந்த ஆர்சிபி, கோலியின் ஆட்டத்தால், அடுத்த 10 ஓவர்களில் 104 ரன்கள் சேர்த்தது. அதிலும் கடைசி 3 ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் குவிக்கப்பட்டது.
ஆர்சிபி செய்த தவறுகள்
ஆர்சிபி அணி அடித்த 197 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர், சேஸிங் செய்ய சவாலான ஸ்கோர். ஆனால், இந்த ரன்களை டிஃபெண்ட் செய்ய முடியாமல் இருந்தது பந்துவீச்சாளர்களின் தோல்விதான். பர்னர், வைஷாக் இருவரும் ரன்களை வாரிக்கொடுத்தனர்.
ஹர்ஷல் படேல் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினார். இதுபோன்ற முக்கிய ஆட்டத்தில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருப்பது அவசியம்.
ஹசரங்காவை ஏன் இந்த ஆட்டத்தில் களமிறக்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. விக்கெட் டேக்கரான ஹசரங்கா இருந்திருந்தால், நிச்சயம் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கும்.
அதேபோல பேட்டிங்கிலும் நடுவரிசையின் சுமை முழுவதும் கேஜிஎஃப் மீது மட்டுமே சீசன் முழுவதும் இருந்தது. மேக்ஸ்வெல், கோலி, டூப்ளெஸ்ஸி மூவரில் யாரேனும் சிறப்பாகச் செயல்பட்டால்தான் நல்ல ஸ்கோர் கிடைத்தது.
பலவீனமான நடுவரிசை, ஃபினிஷர்கள் இல்லாதது, முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது ஆகியவை ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லத் தடையாக இருந்தன.
“நடுவரிசையில் பேட்ஸ்மேன்கள் இல்லை”
தோல்விக்குப்பின் ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில் “உண்மையில் வேதனையாக இருக்கிறது. இன்று நாங்கள் வலிமையான அணியுடன் மோதினோம், கில்லின் ஆட்டம் பிரமாதம். 195 முதல் 200 ரன்கள் நல்ல ஸ்கோர்தான். சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும்.
பேட்டிங்கில் டாப்-4 நன்றாக செயல்பட்டனர், பங்களிப்பு செய்தனர். இந்த சீசன் முழுவதும் சில இடங்களில் மட்டும் ரன்களை விட்டுவிட்டோம்.
குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் பல்வேறு தவறுகள் நடந்தன. நல்ல நடுவரிசை பேட்டிங் எங்களுக்குத் தேவை. கடந்த சீசனில் டிகே இருந்தார், இந்த சீசனில் இல்லை” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
நீடித்திருந்த கில், விஜய் சங்கர்
198 ரன்கள் இலக்கைத் துரத்தி சுப்மன் கில், சாஹா களமிறங்கினர். சாஹாவின் (12 ரன்கள்) விக்கெட்டை தொடக்கத்திலேயே சிராஜ் கைப்பற்றினார். அதன்பின் விஜய் சங்கர் களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். இருவரின் நிதானமான ஆட்டம், நங்கூரம் பாய்ச்சியபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்கள்.
விஜய் சங்கர் ஆட்டம் நேற்று மிகச் சிறப்பாக இருந்தபோதிலும், அவருக்கு ஏராளமான நல்வாய்ப்புகள் கிடைத்தன. அவரது ஷாட்களில் தெரிந்தது. சங்கர் அடித்த பல ஷாட்கள் பேட்டின் முனையில் பட்டு கேட்ச் ஆகாமல் பவுண்டரி நோக்கிச் சென்றன. இருவரும் சேர்ந்து பவர்ப்ளேவில் 51 ரன்கள் சேர்த்தனர்.
ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பையும் வழங்காத வகையில் விஜய் சங்கர், கில் ஆட்டம் இருந்தது. எந்தவித தவறான ஷாட்களையும் ஆடவில்லை, சுழற்பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆடி கால்காப்பிலும் வாங்கவில்லை. இதனால் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர்.
சுப்மன் கில் 29 பந்துகளிலும், விஜய் சங்கர் 34 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். அதிலும் விஜய் சங்கர் அரைசதத்தை வைஷாக் வீசிய 15வது ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி நிறைவு செய்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அடுத்து வந்த சனகா(0), மில்லர்(6) ஆட்டமிழந்தது ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்தாலும், தூணாக நின்று ஆடிய கில்லை ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தபோதிலும் கில் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
தனி ஒருவன் கில்
18 பந்துகளில் 34 ரன்கள் குஜராத் வெற்றிக்குத் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய 18வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசி 15 ரன்களை கில் சேர்த்தார்.
ஹர்சல் படேல் வீசிய 19வது ஓவரிலும் சிக்ஸர் உள்ளிட்ட 11 ரன்களை கில் சேர்த்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. பர்னல் இரண்டு வைட் பந்துகளை வீசிய நிலையில், கில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். கில் 52 பந்துகளில் 104 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஸ்பெஷலாக விளையாடுங்கள் எனக் கேட்டதில்லை
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “எங்களின் வெற்றியைத் தொடரவே விரும்பினோம், லீக் சுற்றில் உயர்வாகவே முடிக்க எண்ணிணோம்.
ஒரு பந்துவீச்சாளராக , கில் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பை வழங்கவே இல்லை. கில் பேட்டிங்கை பார்த்து மற்ற பேட்ஸ்மேன்களும் நம்பிக்கை பெற்றனர்.
197 ரன்களை சேஸிங் செய்ய முடியும் என்று நம்பினோம். பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். விராட் கோலியின் ஆட்டம் ஸ்பெஷலாக இருந்தது.
வீரர்களிடம் சிறப்பாகச் செயல்படுங்கள் என்று கேட்டதில்லை. இந்த ஆண்டு சவாலாக இருக்கிறது, அனைத்து வெற்றிகளுக்கும் வீரர்களே உரித்தானவர்கள்,” எனத் தெரிவித்தார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












