விமர்சனங்கள் எழுந்ததால் முஸ்லிம் இளைஞருடனான மகளின் திருமணத்தை ஒத்தி வைத்த பாஜக தலைவர்

பட மூலாதாரம், RAJESH DOBRIYAL
- எழுதியவர், ராஜேஷ் டொபரியால்
- பதவி, பிபிசி ஹிந்தி சேவைக்காக
உத்தரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞருடனான தனது மகளின் திருமணத்தை ஒரு பாஜக இந்துத் தலைவர் ஒத்தி வைத்துள்ளது விவாதப் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பௌரி நகராட்சித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான யஷ்பால் பெனாம் என்பவரின் மகளின் திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டதையடுத்து அது பெருமளவில் பரவி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை, திருமண நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாக பெனாம் அறிவித்தார்.
யஷ்பால் பெனாமின் மகள் அமேதியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞருடன் திருமணம் செய்து கொள்கிறார். இரு வீட்டாரின் சம்மதத்துடன், மே 25, 26, 27 ஆகிய தேதிகளில் பௌரியில் திருமண நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன.
‘இப்போதைக்குத் திருமணத்துக்கான சூழல் இல்லை’ என்று காரணம் கூறி பெனாம் இந்த நிகழ்வை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
‘21 ஆம் நூற்றாண்டு இளைஞர்கள் சுயமாக முடிவெடுக்கலாம்’
மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. அது, பௌரி நகராட்சித் தலைவரான யஷ்பால் பெனாமின் மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ்.
மோனிகாவுக்கும் அமேதியில் வசிக்கும் மோனிஸ் கானுக்கும் நடக்கும் திருமண விழாவையடுத்து வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அது. மணமகளின் தாய் உஷா ராவத் மற்றும் தந்தை யஷ்பால் பெனாம் ஆகியோர் அழைப்பதாக அந்த அழைப்பிதழ் இருந்தது.
இந்த அழைப்பிதழ் வைரலானதையடுத்து, யஷ்பால் பெனாம் தனது மகளை முஸ்லிம் இளைஞருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ட்ரோல் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து யஷ்பால் பெனாம் முன் வந்து, இது 21 ஆம் நூற்றாண்டு என்றும், குழந்தைகள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கலாம் என்றும் கூறினார்.
மேலும் மகளின் மகிழ்ச்சியை மனதில் வைத்துக் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் ட்ரோலிங் மட்டுமல்லாமல், அவருக்கு அச்சுறுத்தல்களும் வரத் தொடங்கின, எதிர்ப்புகளும் எழுந்தன.

பட மூலாதாரம், Getty Images
இந்துத்துவ அமைப்பின் அதிகாரி ஒருவருடன் பெனாமின் தொலைபேசி உரையாடலும் வைரலானது. அதில் இந்துத்துவ அமைப்பின் நிர்வாகிகள், இந்தத் திருமணத்தைச் செய்து வைக்க வேண்டாம் என்று மிரட்டியிருக்கின்றனர்.
பத்ரிநாத் யாத்திரை சென்ற ஹரியானாவின் பஜ்ரங் தள் தொண்டர்கள், சனிக்கிழமை பௌரி சென்று, மாவட்ட ஆட்சியரிடம் இந்தத் திருமணத்துக்கு எதிராக மனு கொடுத்தனர்.இந்த திருமணத்திற்கு பஜ்ரங் தள் அமைப்பு எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தியது.
ஆனால், பாஜக மாநிலத் தலைவர் மகேந்திர பட் இதைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் மேலும் இது பெனாமின் தனிப்பட்ட விஷயம் என்றும் கூறிக் கை விரித்துவிட்டார்.
‘திருமணத்திற்கு ஏற்ற சூழல் இல்லை’
தன் மகளின் விருப்பத்தை மதிப்பதாகவும் 21 ஆம் நூற்றாண்டின் இளைஞர்களின் உரிமை குறித்தும் பேசிய பெனாம், சனிக்கிழமை மாலைக்குள் தன் நிலையை மாற்றிக்கொண்டார்.
உள்ளூர்த் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், “தற்போது உருவாகியுள்ள சூழலையடுத்து, 27, 26, 27 ஆகிய தேதிகளில் இந்தத் திருமண நிகழ்ச்சிகளை நடத்தப் போவதில்லை என எனது குடும்பத்தினரும், நலம் விரும்பிகளும் முடிவு செய்துள்ளோம்.
மாப்பிள்ளை வீட்டாரும் இங்கு வருவார்கள். அவர்கள் மனதில் இயல்பாகவே ஒரு அச்சம் இருக்கும். காவல்துறையின் பாதுகாப்பில் இந்தத் திருமணம் நடந்தால் அது சரியாக இருக்காது. அதனால் சுமுகமான சூழல் உருவாகாததால், இந்தத் திருமண நிகழ்ச்சியை இப்போது நடத்த வேண்டாம் என எங்கள் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளோம்.” என்றார்.
"மக்கள் கருத்து பல விதமாக இருக்கிறது. எனவே எனக்கு யார் மீதும் புகார் இல்லை. ஆனால் திருமணம் நடைபெறுவதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லை. அச்சுறுத்தல்கள் வழங்கப்படும் விதம், முட்டாள்தனமாக இருக்கிறது. பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். எனது விருந்தினருக்கோ அல்லது எனது பகுதி மக்களுக்கோ இடையே எந்தத் தவறான செய்தியையும் சொல்லும் எந்தச் செயலையும் நான் விரும்பவில்லை.
இனி என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம், இந்த முடிவை எடுத்த குடும்பத்தினர் மீண்டும் அமர்ந்து, அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வார்கள்” என்றார்.
அரசியலில் தாக்கம்
பௌரி அரசியலில் யஷ்பால் பெனாமுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. 2018ல் மூன்றாவது முறையாக பௌரி நகராட்சியின் தலைவரான அவர், நான்காவது முறையாகவும் இந்தப் பதவியைப் பெற வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இவர் ஒருமுறை பௌரி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இருப்பினும், இந்த சர்ச்சை அவரது அரசியலைப் பாதிக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், FACEBOOK/YASHPAL BAENAM
பௌரியின் உள்ளூர் பத்திரிகையாளர் டாக்டர் வி.பி. பலோடி கூறுகையில், "பெனாமின் இந்த நடவடிக்கையால் சுமார் 3500 முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவரது கைக்கு வந்திருக்கும். இந்து வாக்காளர்கள் கோபமாக இருந்தாலும், பாஜக சீட்டு இவருக்குக் கிடைத்தால், கட்சியின் பெயருக்காக இந்து வாக்குகள் கிடைக்கும். அவருடைய வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும்.” என்று விவரிக்கிறார்.
பௌரியில் பதற்றம் இல்லை என்றும் பலோடி கூறுகிறார். ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தெரியும் ஆரவாரம் உண்மையில் களத்தில் இல்லை என்பது அவரது கருத்து.
இந்நிலையில் இந்த விவகாரம் இவ்வளவு பூதாகாரமாக ஆகும் என்று யஷ்பால் பெனாம் யூகித்திருக்க முடியாது என்கிறார் பத்திரிக்கையாளர் அஜய் ராவத். இந்த சர்ச்சை பெனாம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கருதுகின்றார். "முஸ்லிம் வாக்கு வங்கியை யஷ்பால் பெனாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், அவர் பாஜகவில் சேர்ந்ததில் இருந்து, முஸ்லிம் வாக்கு வங்கி அவரிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்கியது, எனவே அதை மீட்க எண்ணம் கொண்ட பெனாம், இந்தத் திருமணத்தை ஒரு மெகா ஷோவாக மாற்ற நினைத்தார்” என்கிறார் அவர்.
இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் குடும்ப காரணங்களுக்காகவே பெனாம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சமூக வலைதளங்களிலும் விவாதம் நடந்து வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












