சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்களின் இப்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், IMRAN QURESHI/BBC
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி மாதத்தில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்து வரலாறு படைத்தனர். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஐயப்பன் கோவிலில் வழிபடும் தைரியம் அவர்களுக்கு கிடைத்தது.
சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்ற பல நூற்றாண்டுகால பாரம்பரியத்தை மீறி, பிந்து அம்மிணியும் கனகதுர்காவும் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.
சுவாமி ஐயப்பன் 'நித்திய பிரம்மச்சாரி'யாகக் கருதப்படுவதே இந்த மரபுக்குக் காரணம். அதனால்தான் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் கோயிலில் அவரை தரிசிக்க முடியாது. அந்த நேரத்தில் பிந்துவுக்கு 40 வயது. கனகதுர்கா அவரைவிட ஒரு வயது இளையவர்.
அன்றைய தினம் செங்குத்தான மலையிலிருந்து சபரிமலை கோயிலுக்குச் செல்லும் வழியெங்கும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டிருந்தனர். பழங்கால பாரம்பரியம் உடைவதை நிறுத்த அவர்கள் அங்கே கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் 50 வயதுக்கு மேற்பட்ட பல பெண்களையும் சுற்றி வளைத்து நிறுத்தி அவர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாகக் கேள்விகள் கேட்டனர்.
இதையடுத்து போலீசார் தலையிட்டு கோவிலில் அமைந்துள்ள சன்னிதானத்திற்குச் செல்ல பெண்களை அனுமதித்தனர். அப்போது, இரண்டு பெண்களும் அமைதியாகக் கூட்டத்தைக் கடந்து சென்றனர்.
பிந்துவும் கனகதுர்காவும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, மத நம்பிக்கை விஷயங்களில் செயல்படுத்த முடியுமா என்று சோதிக்கத் துணிந்தனர். அந்த சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எந்த அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பிபிசி பிந்துவிடம் கேட்டபோது மிகவும் ஏமாற்றமளிக்கும் பதிலை அவர் அளித்தார்.
”நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் எதுவும் மாறவில்லை. மக்கள் மேலும் பழைமைவாதிகளாக மாறியிருப்பதாகத் தெரிகிறது. இடதுசாரிகள் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசுகூட அடிப்படைவாதிகளுடன் கைகோர்த்துவிட்டனர்,” என்றார் அவர்.
இருப்பினும், சிபிஎம் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஏ.பேபி இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். "உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தபோது, அதற்கு முந்தைய எல்லா தீர்ப்புகளும் ரத்தாகிவிட்டன," என்று பிபிசியிடம் கூறினார்.
மறுபுறம் கனகதுர்கா, "பெண்கள் மீதான சமூகத்தின் சிந்தனை சிறிதும் மாறவில்லை," என்று கூறினார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு என்ன நிலைமை?

பட மூலாதாரம், ANI
சபரிமலை கோவில் அருகே பணியில் இருந்த போலீசாருக்கு வழங்கப்பட்ட கையேடு திரும்பப் பெறப்பட்ட இடது முன்னணி அரசின் உத்தரவை பிந்து குறிப்பிடுகிறார்.
வயது வித்தியாசம் இன்றி பெண்கள் அனைவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்த கையேட்டில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவுறுத்தல்கள் 2018 அக்டோபர் 28ஆம் தேதியன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமைந்தவை.
உச்ச நீதிமன்றம், மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுப்பது அரசியலமைப்பின் 25வது பிரிவுக்கு எதிரானது என்று 4:1 பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தது. பாரம்பரிய நம்பிக்கையைவிட ஒரு நபர் தனது மதத்தை வழிபடுவதற்கான அடிப்படை உரிமைக்கு நீதிமன்றம் முன்னுரிமை அளித்தது.
பிந்துவும் கனகதுர்காவும் கோவிலுக்குள் நுழைந்தது வீடியோ பதிவு மூலம் மக்களுக்குத் தெரிய வந்ததை அடுத்து, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களைத் தொடங்கின. இதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, பிந்துவும் கனகதுர்காவும் போலீஸ் கண்காணிப்பில் 'பாதுகாப்பான இடத்தில்' வைக்கப்பட்டனர்.
2019க்கு பின்னர் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சபரிமலை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வந்தது இதுவே முதல் முறை. திருவிதாங்கூர் தேவசுவம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில், ஒரு நாளைக்கு 90,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டது.
சபரிமலை கோவிலில் நடப்பு வழிபாட்டு காலம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் கோவிலுக்கு 350 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது என்று வாரியம் தெரிவித்துள்ளது. அந்த நேரத்திலும் 480 ஊழியர்கள் காணிக்கை பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.
இரண்டு பெண்களும் கோயிலுக்குள் நுழைந்த பிறகு என்ன நடந்தது?

பட மூலாதாரம், KERALA TOURISM
“சங் பரிவார் ஆர்வலர்கள் தாக்கப் போவதாக மிரட்டினர். இதற்கு அஞ்சி யாரும் கோவிலுக்குச் செல்ல தயாராக இல்லை. இம்முறையும் அவர்கள் பெருமளவில் அங்கு கூடியிருந்தனர்,” என்று பிந்து கூறினார்.
ஆசிரியையும் பெண்கள் உரிமை ஆர்வலருமான திவ்யா திவாகர், “பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தயாராக இல்லை. பிந்துவும் கனகதுர்காவும் குறிவைக்கப்பட்ட பிறகு, மற்ற பெண்கள் அங்கு செல்ல பயப்படுகிறார்கள் என்பதே உண்மை,” என்று கூறினார்.
அந்த ஆண்டு, பிந்து மற்றும் கனகதுர்காவுடன், திவ்யாவும் மற்றொரு பெண்ணும் கோவிலுக்குச் செல்வதாக இருந்தனர். ஆனால் உடன் வந்த பெண்ணுக்கு மாதவிடாய் வந்ததால் அவர் பின்வாங்க வேண்டியதாயிற்று.
“அந்த இருவரும் கோவிலுக்குப் போவதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நினைத்தோம். தேவையில்லாமல் சர்ச்சையை எழுப்பி என்ன பயன்?,” என்று திவ்யா குறிப்பிட்டார்.
“எங்களுக்கு ஆதரவு தருவதாகச் சொன்ன அமைப்புகளும் போராட்டத்தைக் கண்டு பின்வாங்கிவிட்டன. எங்கள் இயக்கம் முழுவதும் ஸ்தம்பித்து விட்டது,” என்று பிந்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. பிந்துவும் கனகதுர்காவும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Reuters
பிந்து குறைந்தது மூன்று முறை தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் சங்பரிவார் உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிந்து மீதான முதல் தாக்குதல் 2019 நவம்பர் 26 அன்று வலதுசாரி இந்துத்துவ அமைப்பின் செயல்பாட்டாளர்களால் நடத்தப்பட்டது.
"கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நான் இருந்தபோது, அவர்கள் என் மீது மிளகாய் பொடியை வீசினர். பின்னர் என் முகத்தில் ரசாயனத்தை ஊற்றினர்," என்று இந்தச் சம்பவம் குறித்து பிந்து தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பிந்து குற்றம் சாட்டினார். “சங்பரிவாரை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியவருக்கு மரியாதை செய்தனர். அவர் ஹீரோவாகிவிட்டார்,” என்றார் அவர்.
2021 டிசம்பரில் ஒரு ஆட்டோரிக்ஷா அவர் மீது மோதியது. பிந்துவின் பற்களில் பலத்த காயம் ஏற்பட்டு உதடுகளில் தையல் போட வேண்டியதாயிற்று. “இருட்டில் ஆட்டோ ஓட்டுனரை அடையாளம் காண முடியவில்லை. ஆனால், நான் அவருடைய ஆட்டோ எண்ணை குறித்து வைத்திருந்தேன். அப்படியிருந்தும் போலீசார் யாரையும் கைது செய்யவில்லை,” என்று பிந்து கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது வழக்கறிஞரை சந்தித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது கோழிக்கோடு கடற்கரையில் பிந்துவை ஒரு நபர் தாக்கினார்.
2018இல் பிந்துவுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் திடீரென வாபஸ் பெறப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கேரள அரசுக்கு கடிதம் எழுதினார். மீண்டும் பிந்துவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் பிந்துவுக்கு போலீஸ் பாதுகாப்பு திரும்ப அளிக்கப்படவில்லை.
இந்தத் தாக்குதல்கள் தொடர்வது ஏன்?

பட மூலாதாரம், Reuters
"நான் ஒரு தலித் என்பதால் குறிவைக்கப்படுகிறேன். வேறு எந்தக் காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் பிந்து.
தான் பெரும் சிக்கலில் இருப்பதாக பிந்து கூறுகிறார். “என் மீதான தாக்குதல் சம்பவங்களை விசாரிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. நான் புகார் கொடுத்தாலும்கூட சட்டப்படி உண்மையான புகார்தாரர் அரசுதான். நான் சட்டக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக இருக்கிறேன். எனக்கு அந்த வேலை முக்கியம். அதை என்னால் இழக்க முடியாது. என் வீட்டை நடத்த எனக்கு இந்த வேலை தேவை. இந்நிலையில் என் வழக்கிற்காக ஓடமுடியாத நிலை உள்ளது,” என்றார் பிந்து.
“எனக்கு எங்கு செல்வதற்கும் சுதந்திரம் இல்லை. எனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் போலீஸாரிடம் எனது அன்றைய தினத்தின் அட்டவணையைச் சொல்ல வேண்டும். எதையும் மாற்ற முடியாது. கூண்டில் அடைக்கப்பட்ட பறவையாகிவிட்டேன். இப்போது கேரளாவில் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது,” என்று அவர் கூறினார்.
பிற சமூகப் பிரச்னைகளில் முன்பு பிந்துவுடன் இணைந்து பணியாற்றிய அமைப்புகளும் இப்போது அவரிடமிருந்து விலகிக் கொண்டன. “சங் பரிவார் தொண்டர்கள் உங்களைத் தாக்கும்போது, நீங்கள் மற்றவர்களிடமிருந்து சில உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் அவர்களும் இப்போது என்னிடமிருந்து விலகிவிட்டனர்,” என்று பிந்து குறிப்பிட்டார்.
கனகதுர்காவின் குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் உள்ளன. சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா பத்து நாட்கள் போலீஸ் பாதுகாப்பில் இருந்துவிட்டு வீடு திரும்பியபோது, அவரது மாமியாரால் தாக்கப்பட்டார். மாமியார் தாக்கியதால் தலை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
கனகதுர்காவை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பியதும் கணவர் வீட்டிற்குள் நுழைய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கனகதுர்கா நீதிமன்ற கதவைத் தட்டினார். கனகதுர்கா வீட்டிற்குச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் கனகதுர்கா தன் வீட்டை அடைந்தபோது வீடு காலியாக இருந்தது. அவரது கணவர், தனது தாய் மற்றும் 12 வயது இரட்டைக் குழந்தைகளுடன் தனியாக வாழச் சென்றுவிட்டார்.
இவ்வளவு நடந்த பிறகும் கனகதுர்கா தன் கணவருடன் வாழத் தயாராக இருந்தார். ஆனால் தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2019 நவம்பரில் பிபிசிக்கு அளித்த பேட்டியின்போது கனகதுர்கா மனம் உடைந்தார். அவரது குழந்தைகளைப் பற்றி விசாரித்தபோது, கேமரா முன்னிலையில் அழ ஆரம்பித்தார். அவர்கள் இல்லாமல் வாழ்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று கூறினார்.
கனகதுர்கா அரசு துறையில் பணிபுரிகிறார். குழந்தைகள் தாயைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குழந்தைகளை வளர்க்கும் உரிமை இன்னும் அவருக்குக் கிடைக்கவில்லை.
"நான் மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் என் பதிபருவ மகன்களை உணர்ச்சிரீதியாகக் காயப்படுத்த நான் விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.
சமீபத்தில் கனகதுர்கா தன்னைப் போன்ற உரிமை ஆர்வலரை மணந்தார்.
வழக்கின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, அதை மறுபரிசீலனை செய்யக் கோரி பல அமைப்புகள் மனு தாக்கல் செய்தன. 2020 நவம்பரில் உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தை ஒன்பது நீதிபதிகள் கொண்ட பிரிவுக்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தை 3:2 என்ற பெரும்பான்மையுடன் நிராகரித்தது.
இந்த வழக்கின் தீர்ப்பால், தர்காக்கள் மற்றும் மசூதிகளில் முஸ்லிம் பெண்களின் நுழைவுப் பிரச்னை மீது தாக்கம் ஏற்படும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கருதியது. பார்சி அல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பார்சி பெண், பவித்திரமான ’அக்னி கோவிலுக்குள்’ நுழைவது மீதும் இதன் தாக்கம் ஏற்படும்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு தாவூதி போஹ்ரா முஸ்லிம் பிரிவினர் கடைபிடிக்கும் ’பெண்களின் பிறப்புறுப்பு சிதைவு’ விஷயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் கருதியது.
“இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகள் ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அந்த அமர்வு புதிதாக அமைக்கப்பட வேண்டும்,” என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பத்மநாபம் பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த இடதுசாரி முன்னணி அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), பெண்களின் ஆதரவைப் பெற பாரம்பரிய நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவை பாஜக வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












