சுக்குநூறாக சிதறி விழப்போகும் விண்வெளி நிலையம் - அடுத்த ஏற்பாடு என்ன?

சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, மனிதகுல வரலாற்றில் பெரும் செலவு செய்து கட்டப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை கடலுக்குள் விழச் செய்ய சிலர் விரும்புகின்றனர்
    • எழுதியவர், ஜொனாதன் ஒ' கேலகன்
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

பத்துக்கும் மேற்பட்ட உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியிலிருந்து சுமார் 420 கிமீ உயரத்தில் வளிமண்டலத்துக்கு வெளியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தின் ஆயுட்காலம் வரும் 2031ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. அதன் பின் விண்வெளித் திட்டங்களில் இருள் சூழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில், இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றாக வேறு என்ன ஏற்பாடு செய்வது?

விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டம் கடந்த 1998ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஜர்யா (Zarya) என்ற விண்கலத்தை விண்வெளிக்கு ஏவியதில் இருந்து தொடங்கியது.

இந்த ஜர்யா என்ற விண்கலம்தான் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக முதன்முதலில் அனுப்பி வைக்கப்பட்டது. பனிப்போர் காலத்தில் மிகப்பெரும் எதிரிகளாக விளங்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள், பிற நாடுகளுடன் இணைந்து விண்வெளியில் உருவாக்கிய இந்த ஆராய்ச்சி மையம், பூமிக்கு வெளியில் மனிதன் மேற்கொண்ட மிகப்பெரும் கட்டுமானமாக இதுவரை இருந்து வருகிறது.

"சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உண்மையாகவே பிரமிப்பூட்டும் வகையில் மிகப்பெரிய கட்டுமானமாக அமைந்தது," என்கிறார் அமெரிக்க விமானப் படையின் ஒரு கல்வி நிலையத்தைச் சேர்ந்த வெண்டி வைட்மேன் காப்.

"பனிப்போருக்குப் பின் ரஷ்யா உண்மையிலுமே ஒரு முழு ஒத்துழைப்பை அளித்திருந்தது. ரஷ்ய விண்வெளித்துறை ஒரு கடினமான நிலையில் இருந்தபோது, அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தந்தது," என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இதன் விளைவாக 400 டன் எடையுடன், இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களின் அளவில் 150 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம், பூமியை சுமார் 29,000 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது.

நவம்பர் 2000ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்ட பின் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் அங்கு தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் 2031ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி நிலையத்தில் உள்ல இயந்திரங்களின் ஆயுட்காலம் முடிந்துவிடும். அதன் பின்னர் இந்த ஆராய்ச்சி நிலையத்தை வளிமண்டலத்துக்கு இழுத்து, அதைச் சுக்குநூறாக உடைத்து கடலில் விழும்படி செய்யப்படும்.

ஐஎஸ்எஸ்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ரஷ்யாவின் ஜர்யா என்ற உபகரணம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 1998இல் தொடங்கின

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சார்பிலும் உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா தரப்பில் இதுவரை ஆயிரக்கணக்கான அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், விண்வெளியில் விவசாயம் செய்வதில் தொடங்கி, பார்க்கின்சன், அல்சைமர் நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகள் வரை இடம்பெற்றுள்ளன.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டது "ஓர் அற்புதமான அனுபவம்," என்கிறார் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சென்று ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஃப்ரான்க் டி வின் என்ற விஞ்ஞானி.

அவர் 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு இரண்டு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

"மனித குலத்தை மேலும் ஒருபடி முன்னோக்கி அழைத்துச் செல்லும் விதமாக, அந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கிப் பணியாற்றியது, வாழ்க்கையில் எளிதில் கிடைத்திடாத ஓர் அரிய அனுபவமாக இருந்தது," என்கிறார் அவர்.

ஆனால், அந்த விண்வெளி நிலையம் வெற்றிகரமாக அமைந்தது என்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டார்கள் என நாம் கருத முடியாது.

"அந்த விண்வெளி நிலையத்திற்கு மனிதர்கள் சென்று வருவது மிகுந்த செலவு பிடிக்கும் பயணமாக இருந்தது. வெறும் அறிவியலுக்காக மட்டும் அந்த அளவுக்கு செலவு செய்வது பொருத்தமற்றது," என்கிறார் பிரிட்டனின் மூத்த விண்வெளி விஞ்ஞானியான மார்ட்டின் ரீஸ்.

மேலும், இதற்கு மாற்றாக, தற்போதைய செவ்வாய் கோள் ஆராய்ச்சி மற்றும் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கித் திட்டங்களைப் போல், உலக நாடுகள் ரோபோக்களின் செயல் திறன்களை அதிகரித்து, அவற்றின் மூலம் இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவர் பரிந்துரைக்கிறார்.

ஐஎஸ்எஸ்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் நாசா செலவிடும் தொகையை ஆர்டெமிஸ் போன்ற திட்டங்களுக்குச் செலவு செய்யலாம்.

"மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது பெரும் செலவு பிடிக்கும் செயலாக இருக்கிறது," என்கிறார். மேலும், "எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது சாகச விரும்பிகளும் பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே மேற்கொள்ளும் பணியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்," என்கிறார் அவர்.

இருப்பினும், ஆராய்ச்சிகள் என்பதைக் கடந்து, மனிதன் விண்ணையும் ஆள முடியும் என்பதை நிரூபிக்கும் திட்டமாக இது இருப்பதாகவும் சிலர் வாதிடுகின்றனர். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்ணில் ஏவப்பட்டதற்கு முன்பு, ரஷ்யாவின் மிர் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க பெரும் பொருட்செலவில் நீண்ட காலம் உழைக்க வேண்டியிருந்தது.

ஆனால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது. "மனிதன் விண்வெளிப் பயணம் மேற்கொள்வது குறித்த நமது மனநிலையையே அது மாற்றியது," என்கிறார் அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் லாரா ஃபோர்க்ஜிக்.

"ஆனால் இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நாம் கைவிட்டுவிடக்கூடாது. அது அழிக்கப்படும் நாள் ஒரு சோகம் நிறைந்த நாளாகவே இருக்கும்," என்கிறார் ஃப்ரான்க் டி வின்.

எது எப்படி இருந்தாலும், இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனைவருக்குள்ளும் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தியதை நாம் மறுக்கமுடியாது. அண்மையில் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு கடினமான சவாலை அளித்தது.

இருப்பினும், தற்போதைய நிலைவரை இந்த ஒற்றுமை நீடித்து வந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு கொடுக்காது எனக் கருதப்படுகிறது.

"இதற்குப் பின் இதுபோன்ற திட்டங்களில் ரஷ்யாவின் பங்களிப்பு இருக்காது," என்கிறார் அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த கேத்தி லெவிஸ். "யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை ஏற்க முடியாது என்ற நிலையில், அவர்கள் தனியாக இதுபோன்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்," என்கிறார் அவர்.

சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச விண்வெளி மையத்திற்கு மாற்றான ஒரு திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும்?

இத போன்ற திட்டங்களில் எதிர்காலத்தில் வணிகரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாம் நம்பலாம். ஏற்கெனவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுபோன்ற பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் வழங்கியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிலான ஒப்பந்தங்களை இந்தத் திட்டங்களுக்காக நாசா நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் விண்வெளி சுற்றுலாக்கள், சிறிய அளவிலான சோதனைக் கூடங்களை விண்வெளியில் அமைத்தல் என பூமிக்கு வெளியில் மனிதனின் இருப்பு உறுதி செய்யப்படும்.

இந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஏக்ஸியாம் ஸ்பேஸ், கட்டண முறையில் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேலும் பல உபகரணங்களை 2025ஆம் ஆண்டு பொருத்த அந்த நிறுவனம் முயன்று வருகிறது. இந்த உபகரணங்கள் பின்னர் அந்த விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, கட்டண முறையில் மனிதர்கள் செல்லும்போது அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

ஆனால் இந்த முயற்சியும் சரியானது என எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் எனக் கருத முடியாது. "இத போன்ற தொழில்ரீதியான நடவடிக்கைகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை," என்கிறார் அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹார்வர்டை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஜொனாதன் மெக்டோவெல். "லாபகரமான ஒரு விண்வெளி நிலையத்தை நடத்த முடியும் என்பதை நான் ஏற்கவில்லை," என்கிறார் அவர்.

இருப்பினும், நாசாவும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் மற்ற பங்குதாரர்களும், மேலும் பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். "இந்தத் திட்டத்தில் பங்குபெறும் அனைவரிடமும் நாங்கள் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம்," என ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றும் ஜோசப் அஸ்க்பாச்சர் கூறுகிறார்.

"சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் காலாவதியான பின்பு புதிய பணிகளைத் தொடங்குவது குறித்துப் பல்வேறு வழிகளைச் சிந்தித்து வருகிறோம்," என்கிறார் அவர்.

ஏற்கெனவே ஓர் ஆண்டுக்கு 300 கோடி டாலர் செலவு செய்து வரும் நாசாவை பொறுத்தளவில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செயலிழந்த பின்னர், இந்தத் தொகையைக் கொண்டு நிலவுக்கு விஞ்ஞானிகளை மீண்டும் அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.

நிலவுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்து ஏற்கெனவே ஆர்டெமிஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி நாசா செயல்படுத்தி வருகிறது. 1972ஆம் ஆண்டு அப்போலோ 17 மூலம் மனிதன் நிலவுக்குச் சென்று வந்த பிறகு முதன்முதலாக, 2024இல் நான்கு பேரை அங்கு அனுப்பி, 2025ஆம் ஆண்டு அவர்கள் திரும்பி வரும் வகையிலான ஒரு திட்டம் தான் அது.

ஆனால், "இத்திட்டம் செலவு மிகுந்தது," என்கிறார் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் ஜான் க்லெய்ன். மேலும், "ஆர்டெமிஸ் திட்டத்தைக் கைவிட தற்போது யோசிக்கப்பட்டு வருகிறது," என்றும் தெரிவிக்கிறார் அவர்.

சர்வதேச நாடுகளின் உதவியுடன், லூனார் கேட்வே என்ற பெயரில் நிலவுக்கு அருகே ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கவும் நாசா திட்டமிட்டு வருகிறது.

இந்தத் தசாப்தத்தின் இறுதியில் இதற்கான பணிகள் தொடங்கும். தற்போதைய சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைப் போல் அவ்வளவு பெரிதாக அது இருக்காது. ஆனால் எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளுக்கு இந்த நிலையம் மிகுந்த பயன்களை அளிக்கும்.

இறுதியாக, தற்போதைய சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் முழுமையாக அழிக்கப்படாது என்றே தோன்றுகிறது. இந்த நிலையத்தை முழுமையாக அழிப்பது வீண் என்றும், இதிலுள்ள பல உபகரணங்களை மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சில நிறுவனங்கள் கருதுகின்றன.

ஆனால் இதுபோன்ற யோசனைகளை ஏற்பதாக நாசா இதுவரை எதையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், வரும் ஆண்டுகளில் நாசாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

"என்னிடம் பேசிய விண்வெளி ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் யாரும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை முழுமையாக அழித்துவிடுவதை ஏற்கவில்லை," என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த சிஸ்லூனார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேரி கால்னன்.

சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருக்கி, அதிலிருந்து கிடைக்கும் உலோகங்களை மீண்டும் பயன்படுத்தலாம் என்றும், இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உபகரணங்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அமெரிக்க அரசிடம் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வேண்டுகோளை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டதாகவும் கேரி கால்னன் கூறுகிறார்.

"இந்த யோசனையை வெள்ளை மாளிகை விரும்பியது," என்கிறார் அவர். "அமெரிக்காவின் தற்போதைய ஆட்சியாளர்களின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளுக்கு ஏற்ற வகையிலேயே இந்த வேண்டுகோள்கள் இருக்கின்றன."

இந்த ஆராய்ச்சி நிலையத்தை நொறுக்கி கடலில் விழ வைக்கலாமா அல்லது மீண்டும் பயன்படுத்த முயற்சி செய்யலாமா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் இந்த சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் வரும் 2031இல் முடிவுக்கு வரும் என்பதே உண்மை.

அது இருக்கும் இடத்தில் வேறு பல சிறிய ஆராய்ச்சி நிலையங்கள் இருந்து அண்டவெளியில் மனிதனின் இருப்பை உறுதி செய்யும் முயற்சிகள் தொடரும். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை முடித்துக்கொள்ளும் என்பது மற்றுமோர் அற்புதமான திட்டத்தின் தொடக்கமாகவே அமையும்.

"அரசியல்ரீதியாக மனிதர்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், இது போன்ற முயற்சிகளில் மனிதர்கள் ஒற்றுமையாகச் செயல்படமுடியும்," என்ற செய்தியை இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விட்டுச் செல்லும்," என்கிறார் லெவிஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: