ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாவதன் பின்னணி

தமிழக ஆளுநர் ரவி - துணை வேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம், TN DIPR

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துகொண்ட மாநாடு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று (05.06.2023) ஒரு நாள் நடைபெற்றது.

உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பது என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் பாடில், பல்கலைக்கழக மானிய குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பிற மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாநில அரசு சார்பில் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

கடந்த ஆண்டு இதே போல் நீலகிரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக துணை வேந்தர்களை அழைத்து நடத்திய மாநாடு விவாதப் பொருளானது.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிக விவாதங்களை எழுப்பிய விஷயங்களுள் உயர்கல்வித் துறையும் ஒன்று.

பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரை வேந்தராக மாற்றும் சட்ட மசோதா ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. மாநில கல்விக் கொள்கை வகுக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்திப் பேசி வருகிறார்.

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் சென்னையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கலந்துரையாடினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களைப் பொருத்தவரை மாநில கல்விக் கொள்கைதான் கல்விக் கொள்கை என நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம்.

நம்மைப் போல மாநிலக் கல்வி கொள்கை இருக்க வேண்டும் என்று பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவாக கர்நாடகத்தில் என்ன நடந்தது எனப் பார்த்தோம். எல்லா மாநிலங்களும் மாநில கல்விக் கொள்கை என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதலமைச்சர் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதைவிட மாநில பட்டியலில் இருப்பதுதான் சரி எனக் கூறியுள்ளார். ஆளுநர் தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் சில விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்.

இதை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். மாநில கல்விக் கொள்கை என்பது நிச்சயமாக விரைவில் அறிவிக்கப்பட்டு அந்த அடிப்படையில்தான் கல்வித் துறை செயல்படும்," என்றார்.

தமிழக ஆளுநர் ரவி - துணை வேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம், Raj Bhavan

துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், “துணை வேந்தர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. அரசின் கொள்கைகளை துணை வேந்தர்களிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

இந்தக் கேள்வியை அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் சொல்ல முடியாது. அவரவர் விருப்பப்பட்டால் செல்லலாம் என ஏற்கெனவே கூறிவிட்டோம். அவர்களுக்கும் எதிர்காலம் உள்ளது, அவர்கள் அதையெல்லாம் யோசித்துத்தான் செயல்பாடுவார்கள்.

என்னைப் பொருத்தவரை மாநில கல்விக் கொள்கையைச் செயல்படுத்த ஆளுநர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறோம்.

மாநில அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என நம்புகிறோம். துணை வேந்தர்கள் கலந்து கொள்வது அல்லது கலந்து கொள்ளாமல் இருப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்,” என்று கூறியிருந்தார்.

புதிய கல்வி கொள்கைக்கான மாநாடா?

இன்று தொடங்கிய மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டில், “இந்த மாநாடு இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றியது.

முதலாவது உயர்கல்வி படிப்புகளின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பது பற்றியது, அது மிகவும் முக்கியமான ஒன்று. இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு நிலைகளில் திறம்பட செயல்படுத்துவது பற்றியது,” என்றார்.

ஆளுநர் என்ன பேசினார்?

மாநாட்டில் உரை நிகழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்த மாநாடு மிகவும் முக்கியமானது. நம் இளைஞர்களுக்கு எவ்வாறு சரியான கல்வியை வழங்கப்போகிறோம் என்பதை இன்று விவாதிக்க உள்ளோம்.

நம்முடைய உயர்கல்வி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு யுகத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்கிற கேள்வியை நாம் கேட்க வேண்டும். காமராஜர் போன்றவர்கள் கல்விக்கு மிகப்பெரிய ஊக்கம் கொடுத்தார்கள்.

அடுத்தடுத்த அரசாங்கங்கள் தங்களின் கொள்கைகள் மூலம் கல்வியை அதிக அளவிலான மக்கள் அணுகக்கூடிய ஒன்றாக மாற்றினார்கள். இது நம்முடைய பொருளாதாரம், சேவைகளுக்கு ஊக்கம் அளித்தது.

இதனால் தமிழ்நாடு நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக இருந்தது. அந்த நிலையை நாம் கொஞ்ச காலத்திற்கு வைத்திருந்தோம். ஆனால் இன்றைய நிலை என்ன?

முன்னணியில் இருந்த நம்முடைய மாநிலம் தற்போது முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. பலவற்றில் நாம் கீழே வந்துள்ளோம். நம்முடைய உயர்கல்வி சேரும் விகிதம் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. ஆனால் அடிப்படை கல்வியின் வளர்ச்சி மட்டுமே இன்றைய காலகட்டத்தின் தேவைகளை எதிர்கொள்ளப் போதாது.

தமிழக ஆளுநர் ரவி - துணை வேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம், Raj Bhavan

நம்முடைய இளைஞர்களுக்கு பட்டங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. நான் தொழிற்துறையினர் உடன் உரையாடும்போது வேலைக்குத் தகுந்த பொறியாளர்கள் கிடைப்பதில்லை என என்னிடம் தெரிவித்தனர். இன்றைய நிலையில் பொறியியல் பட்டதாரிகளைவிட பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது.

இன்று நாம் பல மாநிலங்களைவிட ஓரளவு பரவலாக உள்ளோம். ஆனால் பல விஷயங்களில் நாம் தொடர்ந்து சரிந்து வருகிறோம். நம் இளைஞர்களுக்கு காலத்திற்குத் தேவையான கல்வி கிடைக்கவில்லை என்றால் அவர்களின் வளர்ச்சி மட்டுமல்லாது மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தின் தேவைகளை உள்ளடக்கியுள்ளது தேசிய கல்விக் கொள்கை. இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான திறன்களை வழங்க தேசிய கல்வி கொள்கை வழிவகை செய்கிறது.

லக்னௌ பல்கலைக்கழக துணை வேந்தர் அலோக் குமாருக்கு தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதில் நிறைய அனுபவம் உள்ளது. அதற்கு அவர் அரசாங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்டவை. பல்கலைக்கழகங்கள் மாநில அரசு துறைகள் போன்றவை கிடையாது.

இன்று நமக்கு மிக முக்கியமான பிரச்னை உள்ளது. அது மொழி பற்றியது. மாணவர்கள் மட்டுமல்ல பல தொழில்முனைவோர்களிடம் மொழி பிரச்னை உள்ளது.

நம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு செல்லாமல் கலை அறிவியல் படிப்புகளுக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு ஆங்கில மொழியில் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. ஆங்கிலம் ஓர் அந்நிய மொழியே. நமக்கு தாய் மொழி மிகவும் சௌகரியமாக உள்ளது.

தமிழக ஆளுநர் ரவி - துணை வேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம், Raj Bhavan

பிரதமர் எதிர்காலத்திற்கான பார்வையை உருவாக்கும்போது தாய் மொழியில் கற்பது திறன்களை வளர்க்கிறது என்பதை உணர்ந்தார்.

அடிப்படை பள்ளிக் கல்வி மட்டுமில்லாமல் உயர்கல்வி வரை தாய் மொழியில் கற்பது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை தாய்மொழியில் வழங்கினால் மொழி பிரச்னையால் கலை அறிவியல் பாடம் பக்கம் செல்லும் மாணவர்கள் பொறியியல் பாடங்களைத் தேர்வு செய்வார்கள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடப் புத்தகங்களை தமிழில் கொண்டு வருவது நம்முடைய கடமை. ஆங்கிலத்தில் படித்தால்தான் சிறந்து விளங்க முடியும் என்கிற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும்.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஆங்கிலம் இல்லை. இந்த அடிமை மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும்.

நம் பல்கலைக்கழகங்கள் தனித் தீவுகளைப் போல் செயல்படுகின்றன என கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கூறியிருந்தேன். பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்கள் அவ்வாறு தனித்துச் செயல்படுகின்றன. அது சரியான அணுகுமுறை கிடையாது. நாம் அனுபவங்களை, அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

ஆளுநரின் அதிகாரம் என்ன?

ஆளுநரின் பேச்சு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், “ஆளுநர்கள்தான் சட்டப்படி பல்கலைக்கழகங்களின் வேந்தர், உயர்கல்வித் துறை அமைச்சர் இணைவேந்தர். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர்கள் இருப்பார்கள். ஆளுநர் துணைவேந்தர்களைத் தனியாக அழைத்து மாநாடு நடத்தும் நிகழ்வுகள் இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்ததாகத் தெரியவில்லை.

ஆளுநர்தான் துணைவேந்தர்களை நியமிப்பார். அதுபோக துணைவேந்தர்களின் விடுமுறைகளுக்கு ஒப்புதல் வழங்குவது உட்பட சில நிர்வாக கடமைகள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் முக்கியமான முடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை.

ஆனால் கொள்கை சார்ந்த முடிவுகளில் ஆளுநருக்கு இடமில்லை. அதற்கென தனி உயர்மட்டக் குழு ஒன்று உள்ளது. அதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர்தான் தலைவர். பல்கலைக்கழகங்கள் தற்போதும் மாநிலப் பட்டியலில்தான் உள்ளன. அதற்கான கல்விக் கொள்கையை மாநில அரசுதான் தீர்மானிக்க முடியும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஆளுநர் மாநில அரசை தவிர்த்துவிட்டு தன்னிச்சையாக தனி அரசு போலச் செயல்பட்டு வருகிறார். துணைவேந்தர்களுக்கு இது சிக்கலான ஓர் இடம். அவர்கள் ஆளுநருக்கும் கட்டுப்பட வேண்டும், மாநில அரசுக்கும் கட்டுப்பட வேண்டும். இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியில் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.

ஆளுநருக்கு துணைவேந்தர்களை அழைப்பதற்கு என சட்டத்தில் தனி அதிகாரமும் இல்லை. அதே நேரம் அவ்வாறு செய்வதைத் தடை செய்வதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை. மாநில அரசு மாநில கல்விக் கொள்கையை வகுத்து வருகையில் ஆளுநர் தேசிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து முன்னிறுத்துவது சிக்கலான ஒரு நிலையைத்தான் உருவாக்கும்,” என்றார்.

தமிழக ஆளுநர் ரவி - துணை வேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம், FACEBOOK/NARAYANAN THIRUPATHY

படக்குறிப்பு, நாராயணன் திருப்பதி - பாஜக மாநில துணை தலைவர்

ஊழலை கட்டுப்படுத்தியதால் ஆளுநரை எதிர்க்கின்றனர் - பாஜக

இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஆளுநர் என்பவர் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வேந்தர் என்கிற முறையில் அவர் தன்னுடைய கடமையைச் செய்கிறார். இதில் அரசியல் எங்கு வருகிறது. ஆளுநர் சட்ட திட்டங்கள், விதிகளை மீறினார் என்றால் அதைக் கூறுங்கள். மரபு எனக் கூறி எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் ஆளுநர் செயல்படுகிறார்.

எந்த மாநிலத்திலும் பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் மாநில அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை. மாநில அரசு வேந்தரின் பணியில் தலையிடக்கூடாது. கல்விக் கொள்கை என்பது கொள்கை தானே தவிர சட்டம் அல்ல.

தேசிய கல்விக் கொள்கை என்பது ஒரு வழிகாட்டுதல்தான். அது என்ன சொல்லித் தர வேண்டும் எனக் கூறவில்லை. எப்படி சொல்லித் தர வேண்டும் என்றுதான் கூறுகிறது.

ஆளுநர் ஊழலை கட்டுப்படுத்தியுள்ளார். எத்தனை முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறைக்குச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் பார்த்துள்ளோம். ஆளுநர் ஊழலை கட்டுப்படுத்தியதால் அவருக்கு எதிராக ஏதாவது பேச வேண்டும் என எதிர்க்கக்கூடாது,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: