ஒடிஷா விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை; அரசியல் காரணம் உள்ளதா?

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

ஒடிஷாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து நேரிட்டு 3 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் அங்கே மரண ஓலம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதாக ஒடிஷா அரசு தெரிவித்துள்ளது.

சிக்னல்களை ஒழுங்குபடுத்தும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றமே விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ள நிலையில், அது சதிச் செயலாக இருக்குமோ எனற சந்தேகமும் எழுப்பப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோதிக்கு 11 கேள்விகள் அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளார்.

முக்கியமாக, ஒடிஷா ரயில் விபத்து தொடர்பான அரசின் அணுகுமுறை 2016ல் நிகழ்ந்த கான்பூர் ரயில் விபத்தையொட்டிய சம்பவங்களை நினைவுப்படுத்துவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

‘கடந்த 2016இல் கான்பூரில் ரயில் கவிழ்ந்த விபத்தில் 150 பேர் உயிரிழந்ததைத் தற்போதும் மறக்க முடியாது. அப்போது ரயில்வே அமைச்சர் என்.ஐ.ஏ விசாரணையைக் கோரினார்.

அதே நேரத்தில் நீங்கள் 2017ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் விபத்தின் பின்னணியில் சதித்திட்டம் இருப்பதாகக் கூறினீர்கள். கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், 2018இல் என்.ஐ.ஏ, வழக்கு விசாரணையை நிறுத்தியதோடு குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யவில்லை. இப்போது மீண்டும் வேறு அமைப்பு மூலம் விசாரணை நடத்துவது என்பது 2016ஐ நியாபகப்படுத்துகிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் விபத்து தேர்தல் ஆதாயமாக மாற்றப்படுகிறதா?

மல்லிகார்ஜுன கார்கேவின் விமர்சனம் தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசும்போது, கான்பூர் ரயில் விபத்தை தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியது போன்று இந்த விபத்தையும் தேர்தல் ஆதாயமாக மாற்ற பாஜக முயற்சிப்பதுப் போன்று தனக்கு தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘கான்பூர் ரயில் விபத்தை சதித்திட்டம் என்றும் தீவிரவாதம் என்றும் தேர்தலுக்கு முன்பாக பொது மேடைகளில் பிரதமர் நரேந்திர மோதி எப்படி பேசிக் கொண்டிருந்தாரோ அதே மாதிரிதான் இந்த விவகாரமும் கையாளப்படும் என்று கருதுகிறேன்," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், ‘சிபிஐ-இன் தலைவர் நியமனம்தான் இதற்கான ஐயத்தை ஏற்படுத்துகிறது. சிபிஐ எப்படி சூரையாடப்பட்டது, எப்படி இரவோடு இரவாக ஒரு தலைவரை மாற்றி வேறு சிபிஐ தலைவர் நியமிக்கப்பட்டார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட் என்பவர் கர்நாடக டிஜிபியாக இருந்தவர்," என்று கூறுகிறார்.

ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, ஆர்.கே.ராதாகிருஷ்ணன்- மூத்த ஊடகவியலாளர்

ரயில் விபத்தை வைத்து அரசியல்

மேற்கொண்டு பேசியவர், "காங்கிரஸ் அதிகாரத்துக்கு வருகின்ற தருணத்தில் சிபிஐ இயக்குநராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் அவரை டிஜிபி பதவியில் இருந்து நீக்கியிருப்பார்கள்.

அதற்குள்ளாகவே உள்துறை அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை வருகிறது. பிரவீன் சூட் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி இருக்கிறது, சீனியாரிட்டி தேவை.

ஆனால் ஒரு தகுதியும் இல்லாத நபர் அந்த பதவியில் உட்கார வைக்கப்பட்டது ஏன்? தங்களுக்குத் தேவையான சூழ்நிலைகளில் உதவுவதற்குதானே இவ்வாறு செய்துள்ளனர்!

எனவே, 2017இல் எப்படி கான்பூர் ரயில் விபத்தை வைத்து அரசியல் செய்தார்களோ, அதேபோல் இந்த ரயில் விபத்தையும் வைத்து அரசியல் செய்வார்கள்," என்று தெரிவித்தார்.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

ரயில்வே துறையின் நிர்வாக மேலாண்மையில் குறைபாடா?

ரயில்வே அமைச்சகத்தின் நிர்வாக மேலாண்மையில் குறைபாடு இருப்பதும் இந்த விபத்துக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது தொடர்பாக ராதாகிருஷ்ணன் பேசும்போது, "எல்லா துறைகளிலும் ஒரு சில அதிகாரிகள் இருப்பார்கள். எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் வளைந்து கொடுக்க மாட்டார்கள். அப்படி ஒருவர்கூட ரயில்வே துறையில் இல்லை என்பதற்கு சான்றாகதான் தற்போது இருக்கிறது.

ரயில்வே வாரியம் என்பதே கைப்பாவையாக இருக்கிறது. அதிகாரிகளும் கைப்பாவையாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்களோ அதைக் கேட்டு நிறைவேற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் இப்படியே இருக்கிறார்கள். தங்களுக்குக் கீழே உள்ள பணியாளர்களுக்கு இவர்கள் அதிகம் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

ஒருநாளைக்கு 15 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்றும் ஊழியர்கள்கூட இருக்கிறார்கள். ஆனால் மேலே உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகள் சொல்வதை மட்டுமே செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ரயில்வேயின் இன்றைய அவல நிலைக்கு இவர்களே காரணம்," என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே எழுப்பிய கேள்விகள்

மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்தில் எழுப்பியுள்ள பிற கேள்விகள்,

  • இந்திய ரயில்வேயில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1990களில் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் ரயில்வேயில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 12 லட்சமாகக் குறைக்கப்பட்டு விட்டது. கடந்த 9 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான காலியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை?
  • ஆட்கள் பற்றாக்குறை காரணமாக லோகோ பைலட்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதாக ரயில்வே வாரியமே சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் லோகோ பைலட்களின் பங்கு முக்கியமானது. அவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை அளிப்பது விபத்துகளுக்கு முக்கியக் காரணம். அவர்களின் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?
  • சிக்னல் அமைப்பைச் சரி செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு தென்மேற்கு மண்டல ரயில்வே தலைமை மேலாளர் கடந்த பிப்ரவரி மாதத்தில் எச்சரித்திருந்தார். இந்த முக்கியமான எச்சரிக்கையை எதற்காக எப்படி ரயில்வே அமைச்சகம் புறக்கணித்தது?
  • ரயில்வே பாதுகாப்புப் பணிகளுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது கூறப்பட்ட நிலையில் பாதையைப் புதுப்பிக்கும் பணிக்குத் தேவையான நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை?
ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மல்லிகார்ஜுன கார்கே- காங்கிரஸ் தலைவர்
  • ரயில்வே பட்ஜெட்டை 2017-18இல் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தது ஏன்? தனியார் மயமாக்கலை ஊக்கப்படுத்துவதற்காக ரயில்வேயின் சுயாட்சியைக் குறைக்கும் பொருட்டு இது செய்யப்பட்டதா?
  • ரயில்கள் மோதிக்கொள்வதைத் தடுப்பதற்கான ரக்‌ஷா கவச் என்ற முந்தைய அரசின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன்? உங்கள் அரசு இந்தத் திட்டத்திற்கு கவச் என்று பெயர் மாற்றம் செய்து, உங்களுடைய திட்டம் போல் இதைக் கூறி வருகிறீர்கள். எனினும், தற்போதுவரை ஏன் வெறும் 4 சதவீத தடங்களில் மட்டுமே கவச் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது?
  • விபத்துக்கான மூல காரணத்த்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று ரயில்வே அமைச்சர் கூறியதாகக் கூறப்படும் நிலையில், சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளை விசாரிக்கத்தான் சிபிஐயே தவிர ரயில் விபத்துகள் தொடர்பாக விசாரிப்பதற்கு அல்ல. சிபிஐ அல்லது எந்த விசாரணை அமைப்புகளாலும் அரசியல், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளைச் சரி செய்ய முடியாது.

ஆகிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான ரயில்வே அமைச்சரின் அனைத்து வெற்று வாக்குறுதிகளும் அம்பலப்பட்டு விட்டன என்றும் பயணிகளிடையே இந்த பாதுகாப்பு சீரழிவு தொடர்பாக கவலை எழுந்துள்ளது என்றும் கூறியுள்ள அவர், உடனடியாக ரயில் தடங்களில் அடிப்படையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் மீண்டும் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: