"பொருளாதார வளர்ச்சி பெருமைப்படும் வகையிலா இருக்கிறது?": பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் கேள்வி

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா அடையும் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இதற்கிடையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன். அவரது பேட்டியிலிருந்து...
கடந்த சில மாதங்களாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது விலைவாசி உயரும் விகிதம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அப்படியென்றால் விலைவாசி குறைய ஆரம்பித்துவிட்டதா?
ரிசர்வ் வங்கி விலைவாசி உயர்வு விகிதத்திற்கு என ஓர் உச்ச வரம்பு வைத்திருக்கிறது. நான்கு சதவீதம் என்பதுதான் அந்த வரம்பு. ரகுராம்ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோதும் அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தபோதும் ஒரு விஷயத்தை முடிவுசெய்தார்கள். அதாவது விலைவாசி உயர்வு விகிதம் நான்கு சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். அதிலிருந்து 2 சதவீதம் உயரலாம் அல்லது குறையலாம். இந்த வரம்பைத் தாண்டினால், ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி எச்சரிக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கால்வாசி மாதங்களில் அது ஆறு சதவீதத்திற்கு மேல் இருந்தது. ரிசர்வ் வங்கி கடிதம் ஏதும் எழுதவில்லை. கடந்த மாதம்தான் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதம் நாடாளுமன்றத்திற்கு எழுதப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் அந்தக் கடிதம் தாக்கல் செய்யப்பட வேணடும். ஆனால், அப்படி தாக்கல் செய்யப்படவில்லை. விலைவாசி உயர்வைக் காட்டும் புள்ளிவிவரங்கள் குறைவாக இருக்கிறதென்றால், அதை ஏன் வெளிப்படையாகக் காட்டவில்லை?
அக்டோபர் முதல் மார்ச் வரை வட இந்தியாவில் அறுவடைக் காலம். தானியங்கள் சந்தைக்கு வரும். ஆகவே அந்த காலகட்டத்தில் பொருட்களின் விலை குறையும். ஆனால், போன வருடம் விலை உயர்ந்தது. அதனால், இந்த வருடம் higher base effect இருந்தது. அதாவது, அடிப்படை விலையே அதிகமாகவே இருந்தது. இதனால், இப்போது விலை குறையும்போது, விலைவாசிப் புள்ளிகளும் குறைகின்றன. இதனால், போன மாதமே விலைவாசி உயர்வு குறைவாக இருந்தது. இந்த மாசமும் இருக்கிறது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் அப்படித்தான் இருக்கும்.
விலைவாசி உயர்வு சதவீதம் குறைவாக இருப்பதற்குக் காரணம், ஏற்கனவே அடிப்படை விலைஉயர்வு விகிதம் அதிகமாக இருப்பதால்தான். அடுத்த சில மாதங்களில் இந்த விளைவு இல்லாமல் போனதும், மறுபடி விலைவாசி புள்ளிகள் அதிகரிக்கும்.
விலைவாசி உயர்வைச் சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. சமீபத்திலும் .35 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வியூகம் சரியா?
மிக காலதாமதமாக இதை செய்கிறார்கள். இதுதான் சரியான வியூகம். இதை ஒன்றரை வருடத்திற்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். செய்திருந்தால் விலை வாசி இந்த அளவுக்கு ஏறியிருக்காது.
அமெரிக்காவில் நான்கு முறை .75 அளவுக்கும் ஒரு முறை .25 அளவுக்கும் ஒருதடவை .5 அளவுக்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் வட்டிவிகிதம் 0-.25 என்ற அளவிலிருந்து 3.5 - 3.75 அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. விரைவிலேயே இன்னும் ஒரு .5 சதவீதம் அதிகரித்து 4.25 - 4.5 சதவீதமாக உயர்த்தப்போகிறார்கள். நாம் அந்த அளவுக்கு உயர்த்தவில்லை. நாம் உயர்த்தாத காரணத்தால்தான் விலைவாசி இந்த அளவில் இருக்கிறது.
ஏன் உயர்த்தவில்லை என்றால், இந்த ஆட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்கள் நிறையக் கடன் வாங்கியுள்ளனர். வட்டி விகிதத்தை உயர்த்தினால், அவர்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கும். அதனால் தான் வட்டி விகிதத்தை அதிகரிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், மூதலீடுகள், வீடு விற்பனை போன்றவை பாதிக்கப்படாதா? ஒட்டுமொத்த சந்தையும் அதனால் பாதிக்கப்படாதா?
கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடும் விற்கவில்லை. யாரும் முதலீடுகளையும் செய்யவில்லை. கொரோனாவுக்குப் பிறகு, சிறு, குறு தொழில்துறையினர் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். கடன் வாங்கவே ஆளில்லை. அதனால், முதலீடு குறையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனியார் முதலீடு தொடர்ந்து குறைவாகவே இருந்துவருகிறது. கடந்த ஆண்டுதான் சற்று உயர்ந்தது. தனியார் முதலீடு உயர வேண்டுமென்றால் மக்களிடம் வாங்கும் திறன் வேண்டும்.
மக்களின் வாங்கும் திறன் உயராமல் முதலீடு செய்து பயனில்லை. கடந்த முறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதம் அதிகரித்தது. இதனை ஆராய்ந்து பார்த்தால், உற்பத்தி துறையில் நான்கு சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்திருக்கிறது. மக்களின் நுகர்வு உயர்ந்திருக்கிறது.
இது எப்படி நடந்தது? மத்திய தர வர்க்கத்தினரும் மேல்தட்டு வர்க்கத்தினரும் அதிக நுகர்வில் ஈடுபட்டனர். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அதிகம் நுகரப்பட்டன. உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை வாங்க ஆளில்லை. ஆகவே, பணம் மத்திய தர வர்க்கத்தினரிடமும் மேல்தட்டு வர்க்கத்தினரிடமும்தான் புழங்குகிறது.
இருசக்கர வாகனங்கள் விற்பனையாவதில்லை. கார்களிலும், பத்து லட்ச ரூபாய்க்கு அதிகமான விலையுள்ள கார்கள்தான் விற்பனையாகின்றன. இதுபோன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடிந்தவர்களே, இப்போது நுகர்வில் ஈடுபடுகிறார்கள். இதைத்தான் K வடிவ மீட்சி என்கிறோம்.
இப்போது நாம் கவலைப்பட வேண்டியது விலைவாசியைக் குறைப்பதுபற்றித்தான். இதற்கு வட்டி விகிதம் உயர வேண்டும்.
வட்டி விகிதம் உயர்வதால், மக்கள் வங்கிகளில் பணத்தைச் சேமிப்பது அதிகரிக்குமா?
கண்டிப்பாக அதிகரிக்கும். ஏனென்றால், மக்கள் இப்போது பங்குச் சந்தையில்தான் முதலீடுசெய்கிறார்கள். ஏனென்றால் வைப்பு நிதிக்கான வட்டி 5 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டு விட்டது. இது விலைவாசி உயர்வு விகிதத்தைவிடக் குறைவு. இது இழப்புதான். ஆகவே தான் மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் போட்டுவைக்காமல், பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். ஆறரை, ஏழு சதவீத வட்டி இருந்தால் மக்கள் வங்கிகளில்தான் பணத்தை முதலீடுசெய்வார்கள்? ஆகவே, வட்டி விகிதம் உயர்ந்தால் மக்களின் சேமிப்பு கண்டிப்பாக அதிகரிக்கும்.
சர்வதேச அளவில் பெட்ரோலியத்தின் விலை உயரும்போதும், உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையாதது ஏன்? இதன் லாபம் யாருக்குச் செல்கிறது?
பெட்ரோலின் விலையில் தலையிடப்போவதில்லை, சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தால், இங்கேயும் விலை உயரும், சர்வதேச சந்தையில் விலை குறைந்தால், இங்கேயும் விலை குறையும் என்றார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. தொடர்ந்து விலை அதிகரித்தது. இந்த நிலையில், மூன்று இடைத்தேர்தல்களில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். அப்போதிலிருந்து விலை ஏற்றுவதை நிறுத்திவிட்டார்கள்.
இதற்கிடையில் ரூபாயின் விலை சரிய ஆரம்பித்தது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. அவர்களுக்கு அரசு பணத்தைக் கொடுத்து வருகிறது. இப்போது பெட்ரோலியத்தின் விலை சரிந்துவிட்டது. 120 டாலரிலிருந்து 72 டாலருக்கு வந்துவிட்டது. ஆனால், இந்த ஆறு மாத இழப்பைச் சரிசெய்வதற்காக விலையை இறக்காமல் வைத்திருக்கிறார்கள். இப்போதைய சூழலில் பெட்ரோலின் விலையை லிட்டர் 80 ரூபாய்க்கு விற்கலாம். எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாய் அளவுக்குக் குறைக்கலாம்.
சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிவரத்தின்படி, தொழிற்துறை உற்பத்தியின் அளவு, 4 சதவீதம் அளவுக்குக் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும்?
ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவீதம் என்கிறார்கள். Gross value addition என்பதுதான் மிக முக்கியமான எண். அது தற்போது 5.7ஆக இருக்கிறது. அதனோடு ஜிஎஸ்டி வரி வசூலை சேர்த்து, மானியங்களைக் கழிக்க வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி.
உற்பத்தி பெரிதாக அதிகரிக்கவில்லை. 5.6 - 5.7 சதவீதம் என்ற அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனால், ஜிடிபி வளர்ச்சி விதிகம் அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணம், வரி வசூல் அதிகரித்திருப்பதுதான். மேலும், மானியங்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கிறது.
மானியங்கள் என்பவை, சமூகத்தின் கீழ் நிலையில் உள்ள பிரிவினருக்குத்தான் வழங்கப்படுகின்றன. அதை நிறுத்திவிட்டாலோ, குறைத்தாலோ அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இதனால், நுகர்வு பாதிக்கப்படும். நுகர்வு குறைந்தால், உற்பத்தி குறையும்.
அப்படியானால், ஜிஎஸ்டி வரி வசூல் எப்படி உயர்ந்தது? இதற்கு இரு காரணங்கள், விலைவாசி உயர்ந்தால் ஜிஎஸ்டி வசூலும் அதிகரிக்கும். இரண்டாவதாக, இறக்குமதி அதிகரித்ததால், அதன் மீது கிடைத்த ஐஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருக்கிறது. அந்த வரி 25 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. வசதியானவர்களே இறக்குமதி பொருட்களை நுகர முடியும். அதுதான் நடந்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து, பெருமிதப்படாமல் நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைப்படுவதாக நிதியமைச்சர் சொல்கிறார்? உண்மையான நிலவரம் என்ன? உண்மையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்பட்சத்தில் பெருமிதம்தானேபட வேண்டும்?
இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது? ஜிடிபி எப்படி உயர்ந்தது என்பதை விளக்கினேன். இதற்கு நடுவில் மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. வேலையில்லாதோர் விகிதம் 43 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதி சரிந்திருக்கிறது. இறக்குமதி உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மாதங்களில் 22 மாதங்களில் விலைவாசி உயர்வு 6 சதவீதத்திற்கு மேல் இருந்திருக்கிறது. தொழில்துறை உற்பத்தி குறைந்திருக்கிறது.
பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட பிரதமர், இதுதான் Tech decade என்று குறிப்பிட்டார். ஆனால், அதற்குப் பிறகு எல்லா புது நிறுவனங்களும் ஆட்குறைப்பைத் துவங்கியிருக்கின்றன. பைஜூஸ், ஓலா, ஸ்விக்கி, ஊபர் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பை அறிவித்திருக்கின்றன. பல புது நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
வாராக்கடன் 10 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தள்ளுபடி செய்தாலும், வசூலிக்கும் முயற்சிகளை நிறுத்த மாட்டோம் என்கிறார் நிதியமைச்சர். ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறார்கள்? 10 சதவீதம் அளவுக்கு, அதாவது வெறும் ஒரு லட்சம் கோடிதான் வசூலித்திருக்கிறார்கள். இதில் என்ன பெருமைப்பட என்ன இருக்கிறது?
அப்படியானால், வளர்ச்சியைக் காட்டும் புள்ளிவிவரங்கள் தவறானவையா?
5.7 சதவீதம்தான் உண்மையான வளர்ச்சி. மறைமுக வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களுக்கான பல உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏன் படிப்பில் கை வைக்கிறீர்கள்? சிலர் மட்டும் படித்தால் போதும் என நினைக்கிறார்கள்.
அப்படியானால், பொருளாதார மீட்சிக்கு என்ன வழி? எவ்வளவு காலமாகும்?
அமெரிக்கா பாதிக்கப்பட்டால், நாம் அதிகம் பாதிக்கப்படுவோம். அமெரிக்கா அதிகம் பாதிக்கப்படவிருக்கிறது. ஆகவே நாம், அதைவிட அதிகம் பாதிக்கப்படுவோம். இதிலிருந்து மீள இரண்டு வருடங்களுக்கு மேலாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













