தொழில் தொடங்குவது எப்படி? தமிழ்நாட்டில் என்னென்ன அரசு உதவிகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
புதுவிதமான தொழில்களைத் தொடங்கி வளர்வதற்கான வரலாற்றுத் தருணங்கள் யுகங்களுக்கு ஒருமுறையே தோன்றுகிறது.
தொழில்புரட்சி அப்படி ஒரு வாய்ப்பை ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கியது.
இந்திய விடுதலை அப்படி ஒரு வாய்ப்பை இந்தியாவில் தொழில்முனைவோருக்கு வழங்கியது. இதைப் பயன்படுத்திக் கொண்டு டாட்டா, பிர்லா போன்ற இந்திய பெரும் தொழிற்குழுமங்கள் வளர்ந்தன. 1990களில் தாராளமாயமாக்கம், உலகமயமாக்கம் தொடங்கியபோது அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு இன்ஃபோசிஸ், எச்.சி.எல். போன்ற இந்திய நிறுவனங்கள் பெரிய சக்திகளாக உருவெடுத்தன.
அதிவேக இணையம், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம் போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தொழில்துறையில் மீண்டும் ஒரு புது யுகத்தின் நுழைவாயிலுக்கு நம்மை இட்டுச் செல்வதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். புதுமையான வணிக வடிவங்களை, தொழில்நுட்ப பலன்களைப் பயன்படுத்திக்கொண்டு தொடங்கப்படும் இத்தகைய தொழில்களையே ஸ்டார்ட் அப் என்கிறார்கள் தற்போது. இந்த ஸ்டார்ட் அப் என்ற சொல் மிகப் புதியது அல்ல என்றபோதும், அந்தச் சொல் தற்போது நவீன வகை தொழில்நிறுவனங்களைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் புது தொழில் யுகம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தொழில் தொடங்குவது, அதாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்குவது எப்படி? இதில் என்ன சவால்கள் உள்ளன? தமிழ்நாடு அரசு இந்தப் புதுவகை தொழில்களை ஊக்குவிக்க என்ன திட்டங்களை வைத்துள்ளது?
தமிழ்நாட்டில் புதுவகை தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்குத் தேவையான புறச்சூழல்களை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டுத் தொழில்முனைவோருக்கு உதவி செய்யும் வகையிலும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் அண்ட் இன்னொவேஷன் மிஷன் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. ஸ்டார்ட் அப் என்றால் என்ன? இத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக மாற்றுவதில் உள்ள சவால்கள் என்ன? இந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உதவிகள் என்னென்ன என்று இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதனிடம் பேசியது பிபிசி தமிழ்.
இந்த அதி நவீன தொழில்நுட்ப யுகத்துக்கே உரிய நவீன தொழில்களை industry 4.0 (4ம் தலைமுறை தொழில்கள்) என்று அழைக்கிறார் அவர்.
ஸ்டார்ட் அப் என்றால் என்ன?
- நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபோது அதை வைத்து தொடங்கப்பட்ட தொழில்கள் முதல் தலைமுறை தொழில்கள், அல்லது இன்டஸ்ட்ரி 1.0.
- டீசல் எஞ்சின், மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள், கார்கள் போன்றவை உருவாக்கப்பட்ட பிறகான காலம் இரண்டாம் தலைமுறை தொழில்களின் காலம் அல்லது இன்டஸ்ட்ரி 2.0
- செல்பேசி, இணையம் போன்றவை உருவான பிறகான காலம் மூன்றாம் தலைமுறை தொழில்களின் காலம் அல்லது இன்டஸ்ட்ரி 3.0
- செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (மிகை மெய்மை), வர்ச்சுவல் ரியாலிட்டி (மெய் நிகர்மை), தானியங்கி மொழி பெயர்ப்பு, நெட்வொர்க் ஆஃப் திங்ஸ் (பொருள்களின் வலையமைப்பு), புவிசார் இடக்குறிப்பு போன்ற தொழில்நுட்பங்களின் பலன்களை ஒருங்கிணைத்தோ, அல்லது புதுமையான வணிக யோசனைகளை அடிப்படையாக வைத்தோ வடிவமைக்கப்படும் வணிக நிறுவனங்களே நான்காம் தலைமுறை தொழில்கள் அல்லது இன்டஸ்ட்ரி 4.0
இந்த 4ம் தலைமுறை தொழில்நிறுவனங்களைத் தொடங்குவது அறிவுசார் நடவடிக்கையாக உள்ளது. இத்தகைய தொழில்களுக்கான நிறுவனங்கள் புதுவகை வடிவமைப்பைக் கோருகின்றன. இத்தகைய நிறுவனங்களே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களே இனி எதிர்காலம்.
ஆனால், இத்தகைய நிறுவனங்களைத் தொடங்குவதற்கு அதி நவீன ஆராய்ச்சிகள் தேவை என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள, எளிதாகக் கிடைக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டே வெற்றிகரமான தொழில் நிறுவனங்களைத் தொடங்கிவிட முடியும். சில நேரங்களில் சில தொழில்களுக்கு தொழில்நுட்பமே கூட தேவைப்படுவதில்லை. ஆனால், அவற்றின் வணிகத் திட்டம் தொழில்நுட்பம் சாராத ஆனால், புதுமையான வணிக யோசனைகளைக் கொண்டிருக்கும் என்கிறார் சிவராஜா ராமநாதன்.
சுருக்கமாக, நவீன தொழில்நுட்பம் வழங்கும் வசதிகளை ஒருங்கிணைத்து, ஏற்கெனவே சமூகத்தில் நிலவும் ஒரு தேவைக்கு புதுமையான தீர்வை வழங்குகிற, அல்லது இருக்கிற தீர்வுகளை மேம்படுத்தும் தொழில்களே ‘ஸ்டார்ட் அப்’ என்று அழைக்கப்படுகின்றன என்கிறார் அவர்.
4ம் தலைமுறை தொழில்களுக்கு எடுத்துக்காட்டுகள்
இத்தகைய 4ம் தலைமுறை தொழில்கள் எப்படி எல்லா நேரத்திலும் அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகள அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் சிவராஜா.
ஸ்வீட் ஸ்டால் என்று அழைக்கப்படும் பலகாரக் கடைகள் எல்லா ஊரிலும் உள்ளவைதான். ஆனால், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றிய சிலர் ஆன்லைனில் நேட்டிவ் ஸ்பெஷல் டாட் காம் என்ற ஓர் இணைய தளத்தை உருவாக்கி இதை சர்வதேச வணிகமாக மாற்றினார்கள். திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற புகழ்பெற்ற பாரம்பரிய இனிப்புகளை இந்த இணையதளம் மூலம் இவர்கள் சந்தைப்படுத்தினார்கள்.
அவர்கள் செய்தது என்னவென்றால், அந்தந்த ஊரில் அந்த பலகாரங்களைச் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து வந்து பிரசர்வேடிவ் ஏதும் பயன்படுத்தாமல் அவை மேலும் சில நாள்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான வழிகளைக் கண்டறிந்தது, சில நாள்களில் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அவற்றைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது, மொபைல் பேமென்ட், புவி சார் இடக்குறியீடு போன்ற சந்தையில் கிடைக்கும் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு இகாமர்ஸ் இணையதளத்தை வடிவமைத்தது ஆகியவைதான். இது தவிர, சேதாரம் 2 சதவீதத்துக்கு மேல் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள ஒரு புரொக்ராமை வடிவமைத்தார்கள் இதுதான் அவர்களின் தொழில்வெற்றிக்கான ரகசியம்.
இவற்றை ஒருங்கிணைத்து ஒரு தொழில்நிறுவனமாகக் கட்டமைப்பது கணிசமான மதிப்பை அளிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கணினிகள், கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த நிறுவனத்தின் நிதி மூலதனம் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் 20- 30 லட்சம் ரூபாயைத் தாண்டாது. ஆனால், அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 45 கோடி. இது வெறும் பேப்பர் வேல்யூவேஷன்தான். ஆனால், இதற்கான காரணம் அவர்கள் ஒருங்கிணைத்து உருவாக்கிய வணிக நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதுதான். கடந்த தீபாவளிக்கு மட்டும் 5-6 டன் திருநெல்வேலி அல்வாவை உலகம் முழுவதும் இவர்கள் அனுப்பியிருக்கிறார்கள். இதில் இனிப்புகள் தயாரிப்பது முதல் மொபைல் பேமெண்ட் வரை எதுவுமே சந்தையில் கிடைக்காத புதுமையான தொழில்நுட்பம் அல்ல. ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கிய தொழில் வடிவமைப்புதான் புதுமையானது. இதுதான் அந்த நிறுவனத்துக்கு மதிப்பை அளிக்கிறது என்கிறார் சிவராஜா.
அதைப் போல வேறொரு எடுத்துக்காட்டையும் அவர் தருகிறார். திருச்சியில் இருந்து செயல்படும் ஹேப்பி ஹென்ஸ் என்ற நிறுவனம், குறிப்பிட்ட வகை தானியங்கள், தழைகள் ஆகியவற்றை இணைத்து, தீவனம் அளித்து நாட்டுக்கோழிகளை வளர்க்கிறார்கள். இப்படி வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் இடும் முட்டைகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதாக அறிவியல் ரீதியாக விளக்குகிறார்கள். இதில் எந்த தொழில்நுட்பமும் இல்லை. ஆனால், ஒயிட் லக்ஹார்ன் முட்டைகளுக்கு மாற்றாக, தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன என்ற கோட்பாடுதான் இவர்கள் வணிகத்துக்கான அடிப்படை. இதில் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. ஆனால், புதுமையான வணிக யோசனைகளை முன்வைத்துள்ள இந்த நிறுவனமும் இத்தகைய ஸ்டார்ட் அப் என்ற வரையறைக்குள் வரும் என்கிறார் ராமநாதன்.
காஃபிடே என்ற நவநாகரிக காபி கடை கம்பெனியும் இத்தகைய ஒரு முயற்சிதான் என்கிறார் சிவராஜா. அருந்துகிற காபிக்கு மட்டும் நாம் அந்தக் கடைக்குச் செலுத்துவதில்லை. அந்த காபியின் விலையில், அங்கு அமர்ந்து பேசுவதற்கான வசதிக்கும் சேர்த்துதான் பணம் செலுத்துகிறோம். ஒரு வணிகத் திட்டம் பற்றிப் பேசுவதற்கோ, தோழியிடம் பேசுவதற்கோ அந்தக் கடைக்குச் செல்கிறவர்கள் அதற்கு அவர்கள் அளிக்கும் இடத்துக்கும் நேரத்துக்கும் சேர்த்தே பணம் செலுத்துகிறார்கள். இப்படி காபியையும் சந்திப்புக்கான சூழலையும் இணைத்து ஒரு வணிக நிறுவனத்தை யோசித்ததுகூட புதுமையான வணிகத் திட்டம்தான் என்கிறார் சிவராஜா.
ஏற்கெனவே நம் இடத்துக்கு டெலிவரி தரும் நிறுவனங்கள் இருக்கும்போது, ஒரு நிறுவனம் 10 நிமிடத்தில் டெலிவெரி செய்வதாக கூறுகிறது. இது ஏற்கெனவே இருக்கும் சேவையை மெருகூட்டித் தரும் வணிக யோசனைக்கான எடுத்துக்காட்டு என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு என்ன உதவி செய்கிறது?
மேலே விவாதித்தபடி தொழில் நிறுவனங்களின் தன்மை மாறிவருகிறது. இந்த மாறுகிற நிலைமை குறித்து தொழில் சமூகத்துக்கும் தொழில் முனைவோராக வரக்கூடிய இளைஞர்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கும் வேலையை தமிழ்நாடு ஸ்டார்ட் அப் இனிஷியேட்டிவ் செய்கிறது. 20-30 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய பணம் இருப்பவர்கள், நல்ல குடும்ப பின்புலம் உள்ளவர்கள்தான் தொழில் தொடங்க முடியும்.
ஆனால், இப்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வென்ச்சர் முதலீட்டு நிறுவனங்கள், ஏஞ்சல் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை இருக்கின்றன. தொழில் முனைவோருக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லும் இன்குபேஷன் சென்டர்கள் என்று அழைக்கப்படும் அடைகாப்பு மையங்கள் கல்லூரிகளிலும் வெளியிலும் உள்ளன.
பெரிய அளவு பணம் இல்லாவிட்டாலும்கூட செயல்படுத்தக்கூடிய வணிக யோசனையும் ஊக்கமும் இருந்தால் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கிவிட முடியும்.
இந்த அடைகாப்பு மையங்களை வலுப்படுத்துவது, அவற்றின் திறனை மேம்படுத்துவது போன்ற பணிகளை தமிழ்நாடு ஸ்டார்ட் அப் இனிஷியேட்டிவ் முன்னெடுக்கிறது. தற்போது சென்னை ஐஐடி, வேலூர் விஐடி, கோவை பிஎஸ்ஜி போன்ற கல்லூரிகள் அடைகாப்பு மையங்களை நடத்தி தொழில் முனைவுகளை வளர்த்தெடுக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திலும் இத்தகைய அமைப்பை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது.
மென்டார் நெட்வொர்க் எனப்படும் வழிகாட்டுநர் வலைப்பின்னல் ஒன்றும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Sivaraja Ramanathan
தொழில் தொடங்க மானியம், முதலீடு
“இப்படி முன்னெடுக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொடக்க நிலையில் உதவி செய்வதற்காக தமிழ்நாடு அரசு 10 லட்சம் வரையிலும், சில வகை நிறுவனங்களுக்கு 50 லட்சம் வரையிலும் மானியம் வழங்குகிறது.
இது தவிர, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசே பங்கு மூலதனம் அளிக்கவுள்ளது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு வென்ச்சர் முதலீட்டு நிறுவனங்களின் சேவைகளை ஒருங்கிணைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அளிப்பதற்காக டேன் ஃபன்ட் என்ற தளத்தைத் தொடக்குகிறோம். வென்ச்சர் முதலீட்டு நிறுவனங்கள் என்பவை புதுமையான யோசனையோடு வணிகம் செய்ய முன்வரும் தொடக்க நிலை நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டு நிறுவனங்கள்.
புதுமையான தொழில் முயற்சிகளில் முதலீடு செய்ய விரும்பும் தனிப்பட்ட செல்வந்தர்களை ஏஞ்சல் இன்வெஸ்டர்கள் என்று அழைக்கிறோம். உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களில் தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தயாராக இருப்பவர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஏஞ்சல்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம் இதெல்லாம் முதலீட்டுத் துறையில் நாங்கள் எடுத்துள்ள முன் முயற்சிகள்” என்கிறார் சிவராஜா.
அத்துடன் அரசுக்கு சமூக நீதி நோக்கங்கள் இருப்பதால் எஸ்.சி.எஸ்.டி. பிரிவில் இருந்து தொழில் தொடங்க முன்வந்தால் அவர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு தனி நிதியும் தமிழ்நாடு அரசிடம் உள்ளது என்கிறார் அவர்.
பிராண்டிங் உதவி
மரபாக தமிழர்களின் ஒரு பலவீனம் என்பது தாங்கள் செய்யும் விஷயங்களுக்கு பிராண்டிங் செய்வதும், அதைச் சந்தைப்படுத்துவதும்தான். இதை மேம்படுத்துவதற்காக பிராண்ட் லேப்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஏற்கெனவே வெற்றிகரமாக பிராண்டுகளை உருவாக்கி, சந்தைப்படுத்தியவர்களின் அனுபவங்களை புதிய தொழில்முனைவோருக்கு அளிக்கிறோம்.
குறிப்பிட்ட பல துறைகளில் அனுபவம் மிக்கவர்களின் தரவுகளை ஒரு தளத்தில் தொகுத்து அவற்றை தொழில்முனைவோரின் பயன்பாட்டுக்கு அளிக்கிறோம். அதில் உள்ள பொருத்தமான வல்லுநர்களின் பிராண்டிங் வழிகாட்டுதல்களை அவர்கள் பெறலாம். அவர்கள் இந்த முயற்சியை மேற்கொள்வதற்குத் தேவையான உதவிகளை எங்கள் அலுவலகம் தொடர்ந்து வழங்கி, அதில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும்.
இது போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை, பொருள்களை அரசுத் துறைக்கு ஏதேனும் அளிக்க முடியும் என்றால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை, உதவிகளை அந்தத் துறைகளோடு இணைந்து ஒருங்கிணைத்து தரும் வேலையை தமிழ்நாடு ஸ்டார்ட் அப் இனிஷியேட்டிவ் செய்யும்.
“தற்போது இத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் துறைகளுக்கு 50 லட்சம் வரையிலான சேவைகளை, பொருள்களை டென்டர் இல்லாமலே வழங்க முடியும். இது தவிர, பிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இத்தகைய சேவைகளை, பண்டங்களை விற்பதற்கு உதவி செய்கிறோம். தவிர, பிற நாடுகளின் தூதரகங்களுடன் தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்.
இப்படி தொழில் தொடங்குவதற்கான முழு வட்டத்தையும் ஒருங்கிணைக்கிறோம்” என்கிறார் அவர்.
இடர்ப்பாடுகள் என்ன?
ஸ்டார்ட் அப் எனப்படும் புதுவகை தொழில் நிறுவனங்களில் தோல்விக்கான இடர்ப்பாடுகள் அதிகம் இருக்கும். 10 நிறுவனங்கள் தொடங்கினால் அவற்றில் 8 கூட தோற்றுப்போக வாய்ப்புகள் இருக்கும். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம்தான். வென்ச்சர் முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இதையெல்லாம் தெரிந்துதான் இந்த ரிஸ்கை எடுத்து முதலீடு செய்ய முன்வருவார்கள்.
இத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதுவிதமான சிக்கல்களுக்கு, புதுவிதமான தீர்வுகளை முன்வைப்பதால் அவை எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை முன்கூட்டி கணிப்பது கடினம். ஆனால், அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி போன்ற இடங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்வி சதவீதம் ஒப்பீட்டு அளவில் குறைவு.
காரணம், அங்கே எல்லா விதமான தேவையான அறிவு வளங்களும் கிடைக்கின்றன. எல்லா விதமான தொழில் தொடர்புகளும், கலந்து பேசுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பெங்களூரு போன்ற நகரங்களில் தினமும் இப்படி ஏதாவது ஒரு தொழில் சார்ந்த சந்திப்புகள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடக்கின்றன.
சென்னையில் இத்தகைய சூழல் குறைவாக இருக்கும். மதுரை , திருநெல்வேலி போன்ற நகரங்களில் இருக்கவே இருக்காது. சென்னை ஐஐடியில் இப்படிப்பட்ட தொழிற்சூழல், அறிவு வளங்கள் கிடைக்கின்றன. உயிரித் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்துப் பார்க்க சென்னையில் TICEL என்ற நிறுவனம் உள்ளது. ஆனால், எத்தனை பேரால் ஐஐடி போன்ற இடங்களில் இருக்கும் அந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்?
ஐஐடி போன்ற இடங்களில் கிடைக்கும் நேர்மறையான தொழில் வழிகாட்டு சூழலை தமிழ்நாடு முழுவதும் உருவாக்குவதே தமிழ்நாடு ஸ்டார்ட் அப் இனிஷியேட்டிவின் பணி என்றார் சிவராஜா.
தடைகள் எங்கே இருக்கின்றன?

பட மூலாதாரம், Getty Images
ஒரு புதுமையான வெற்றிகரமான தொழில் யோசனை இருந்துவிட்டால், பணம் இல்லாத காரணத்தால் அவை தோற்பதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு அதாவது ரிஸ்க் எடுத்து தொழில் செய்யும் மனநிலை குறைவு. தொழில் தொடங்கும் யோசனையை இளைஞர்கள் முன்வைத்தால் அதற்கு குடும்பத்தின் ஆதரவு கிடைப்பதும் இங்கே குறைவு. காரணம், தற்காப்பு மனநிலைதான்.
இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு வெல்லும் தொழில்களைக் காட்டிலும் பாதுகாப்பான வேலைக்குப் போகும் வழியைத்தான் இங்கே நாடுகிறார்கள். பணிந்து வேலை செய்யும் மன நிலையே இங்கு அதிகம். இதைத்தாண்டி தொழில் தொடங்கி ஒரு தோல்வி வந்துவிட்டால் மீண்டும் முயல்வதில்லை. அத்துடன் முயற்சியைக் கைவிடும் நிலைதான் உள்ளது. இவையெல்லாம்தான் தொழில் பண்பாடு வளர்வதற்கு தமிழ்நாட்டில் தடையாக உள்ள காரணிகள் என்கிறார் சிவராசா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












