விலைவாசி: இந்த பொருட்களின் விலை 10 வருடங்களுக்கு முன்பு என்ன? - விரிவான ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கின்றன. தற்போதைய சூழலில், அந்த விலையை திரும்பிப் பார்க்கும்போது கடந்த காலம் என்பது, வெகு தூரத்தில் இருந்ததைப் போலத் தோன்றுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கடந்த காலத்தில் என்ன விலைக்கு விற்றன, நினைவிருக்கிறதா?
நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களின் விலையும் தேவை, உற்பத்தி, உள்ளீட்டுப் பொருட்களின் விலை, டாலரின் மதிப்பு, தங்கத்தின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து உயரும்.
இந்த விலை உயர்வு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்த விலை உயர்வை நுகர்வோர் எளிதில் உணர்வதில்லை. ஆனால், மாதாந்திர அளவில் ஏற்படும் திடீர் விலை உயர்வுகள் நுகர்வோரைக் கடுமையாக பாதிக்கின்றன.
குறிப்பாக, தனியார் துறையில் கீழ் நிலையில் பணியாற்றுபவர்கள் இந்த விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். இந்தியாவில் கோவிட் - 19 தாக்குதலுக்குப் பிந்தைய மாதங்களில் இந்த விலை உயர்வு, தாங்க முடியாத எல்லைக்கு மக்களைத் தள்ளியிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக அதாவது 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொருட்கள் என்ன விலைக்கு விற்றன என்று திரும்பிப் பார்த்தால், பல பொருட்களின் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடும்.

அரிசி முதல் எண்ணெய் வரை எவ்வளவு உயர்ந்திருக்கிறது?
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையில் ஒரு கிலோ சன்னரக அரிசி 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ அரிசி 58 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரிசியின் விலையைப் பொறுத்தவரை பத்தாண்டுகளில் அப்படியே இரு மடங்காகியிருக்கிறது.
2012ல் ஒரு கிலோ கோதுமை 24 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், தற்போது கோதுமையின் விலை ஒரு கிலோ 39 ரூபாய். கோதுமையும் விலை உயர்ந்துள்ளது என்றாலும், அரிசியின் விலை உயர்வோடு ஒப்பிட்டால், விலை உயர்வு பாதியளவுக்கே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பருப்புகளில் துவரம் பருப்பைப் பொறுத்தவரை பத்தாண்டுகளில் விலை கிட்டத்தட்ட இரு மடங்கை நெருங்குகிறது. கிலோ சுமார் 78 ரூபாய் என்ற அளவில் விற்ற துவரம் பருப்பு தற்போது 116 முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
உளுந்தம் பருப்பின் விலையும் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சுமார் 68 முதல் 70 ரூபாய்க்கு விற்ற உளுந்தம் பருப்பு, தற்போது 122 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. 76 ரூபாய்க்கு விற்ற பாசிப்பருப்பு 105 முதல் 110 ரூபாய் வரை விற்பனையாகிறது.

பட மூலாதாரம், Getty Images
சர்க்கரையின் விலையில் மட்டும் பெரிதாக மாற்றமில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலவே, இப்போதும் 36 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலான விலையிலேயே இப்போதும் விற்பனையாகிறது.
பாலைப் பொறுத்தவரை, பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு லிட்டர் 27 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஆனால் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலை 40 முதல் 48 ரூபாய் வரை விற்பனையாகிறது. தனியார் பாலின் விலை இதிலிருந்து ஐந்து முதல் எட்டு ரூபாய் வரை அதிகம்.
தமிழ்நாட்டில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கடலை எண்ணெயின் விலை பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு லிட்டர் 142 ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் 180லிருந்து 190 ரூபாய் வரை விற்பனையாகிறது.
சூரியகாந்தி எண்ணையைப் பொறுத்தவரை, ஒரு லிட்டர் 90 ரூபாய்க்கு விற்பனையான எண்ணெய் தற்போது, 170லிருந்து 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. பாமாயில்கூட லிட்டர் 70 ரூபாயிலிருந்து 125 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
தேயிலையைப் பொறுத்தவரை ஒரு கிலோ 260 ரூபாய் என்ற அளவில் இருந்து 310 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அதீதமான விலை உயர்வைக் கண்டிருப்பது வாகன எரிபொருள்தான். 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் 60 காசு என்ற அளவிலும் ஒரு லிட்டர் டீசல் 40 ரூபாய் 91 காசு என்ற விலையிலும் தில்லியில் விற்பனையானது. ஆனால், தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 96.72 என்ற விலையிலும் டீசல் ஒரு லிட்டர் 89.62 என்ற விலையிலும் விற்பனையாகிறது. (சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது).
அதேபோல, சமையல் எரிவாயுவின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2012ஆம் ஆண்டில் 922 ரூபாயாக இருந்தது.
மத்திய அரசின் மானியத்திற்குப் பிறகு, நுகர்வோருக்கு ஒரு சிலிண்டர் சுமார் 410 ரூபாய்க்குக் கிடைத்தது. ஆனால், 2014க்குப் பிறகு மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சிலிண்டரின் விலை 1,018 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
தங்கத்தின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு கிராம் சுமார் 3,100 ரூபாய் என்ற அளவுக்கு விற்ற தங்கம் தற்போது, 4,610 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஒரு கிராமிற்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம்?
கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்திருக்கும் இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம்? இந்தியப் பொருளாதாரத்தில் பணத்தின் அளவு அதிகரித்திருப்பதுதான் மிக முக்கியமான காரணம் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவரான ஜோதி சிவஞானம்.

பட மூலாதாரம், Getty Images
"எப்போதுமே பொருளாதாரத்தில் பணத்தின் சப்ளை அதிகமானால் விலை அதிகரிக்கும். இந்தியப் பொருளாதாரத்தில் பணம் அதிகரிக்க பல காரணங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டி விகிதத்தைக் குறைத்து வந்தது. இதன் மூலம் கடன் எளிதில் கிடைத்து, வளர்ச்சி அதிகரிக்கும் எனக் கருதினார்கள். ஆனால், வளர்ச்சி அதிகரிக்காமல் சந்தையில் பணம் அதிகரித்து, பணவீக்கம் ஏற்பட்டது.
தவிர, சந்தையில் பணம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு தொடர்ந்து கடன் வாங்கி செலவழித்துவருகிறது. இதன் காரணமாகவும் பணப் புழக்கம் அதிகமாக இருந்தது. பணப் புழக்கம் அதிகரித்ததால், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டினர் அதிலிருந்து வெளியேறும்போது, தங்களது முதலீட்டை டாலர்களாக எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். இதனால், டாலரின் மதிப்பு உயர்ந்து பணத்தின் மதிப்பு குறைந்தது.
இதெல்லாம் விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம். மற்றொரு முக்கியமான காரணம் பெட்ரோலியப் பொருட்களின் மீது போடப்பட்ட அதீதமான வரி. எப்போதுமே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால், மற்ற எல்லாப் பொருட்களின் விலையும் உயரும். கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்தது, விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம்" என்கிறார் ஜோதி சிவஞானம்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்துவரும் வேறு சில கவனிக்க வேண்டிய அம்சங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஆத்மநிர்பர் திட்டத்திற்காக உற்பத்திக்குத் தேவையான பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.
இதனால், தேவையான பொருட்கள் கிடைக்காமல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மற்றொரு பக்கம், தேவை குறைந்ததால் உற்பத்தி குறைந்தது. ஆகவே, பணப் புழக்கம் ஒரு பக்கம் அதிகமாக இருக்க, மற்றொரு பக்கம் மக்களின் கையில் இருக்கும் பணம் குறைவாக இருக்கிறது.
பொதுவாக விலைவாசி உயர்வு 4 சதவீதம் இருக்கலாம். ஆனால், தற்போது இது 6-7 சதவீதமாக இருக்கிறது. உணவுப் பொருட்களின் விலையைப் பொருத்தவரை, விலை உயர்வு சதவீதம் இரு இலக்கத்தைத் தொட்டுவிட்டது. மேலும், தற்போது ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் கிட்டத்தட்ட 15க்கு வந்துவிட்டது. வரும் காலத்தில் சில்லரை விற்பனை விலையும் அதிகரிக்கும் என்று அர்த்தம்" என எச்சரிக்கிறார் ஜோதி சிவஞானம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













