கோவை நிதி மோசடி: ஆசையைத் தூண்டி மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? பணம் திரும்பக் கிடைக்குமா?

பணம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவையில் செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்ய முன்வரலாம் என கோவை மாநகர காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இவை எந்தெந்த நிறுவனங்கள்? இவை எப்படி மோசடியில் ஈடுபட்டன? இதுபோன்ற மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி?

கோவையில் இராமநாதபுரத்தில் இயங்கி வந்த கிரீன் கிரெஸ்ட், சாய்பாபா காலனியில் இயங்கி வந்த டிரீம்ஸ் மேக்கர் குளோபல் லிமிடெட், காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த ஏரோ டிரேடிங், சரவணம்பட்டியில் செயல்பட்டு வந்த வின் வெல்த், குறிச்சியில் செயல்பட்டு வந்த கொங்குநாடு அன்னை சிட்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட அனைவருமே புகார் அளிக்கவில்லை. அதனால் தான் அடுத்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் எனப் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார குற்றிப்பிரிவு ஆய்வாளர் காந்திமதி, "இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதான வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிகள் அனைத்தும் 2019, 2020-ம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதால் தான் மீண்டும் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்." என்றார்.

நிறுவனங்கள் மோசடி செய்தது எப்படி?

"இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரே செயல்முறையை தான் கையாள்கின்றன. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.20,000 வட்டி கிடைக்கும். ஒவ்வொரு திட்டம் முடிவுறுகின்றபோது முதலீடு செய்த அசல் தொகை முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும் என்கின்றனர். இந்த நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்களுக்கு முதலீட்டு தொகைக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். இதை நம்பி தான் மக்கள் முதலீடு செய்கின்றனர். ஒரு லட்சத்தில் தொடங்கி பல லட்சங்கள் வரை பாதிக்கப்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் பதிவாகியுள்ளது.

தனியார் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்பவர்களிடம் நம்பகத்தன்மையை பெற வேண்டும் என்பதற்காக முதல் 2, 3 மாதங்களுக்கு வட்டியை முறையாக கொடுத்துவிடுகின்றனர். அதன் பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி வட்டி வழங்குவதை நிறுத்திவிடுகின்றனர். நிதி மோசடி புகாருக்கு உள்ளாகின்ற பெரும்பாலான நிறுவனங்களுக்கு இதே வழிமுறையை தான் கையாள்கின்றன.

இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது தற்போது வரை சுமார் 60 புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம். மக்களும் ஏமாந்துவிட்டோம் என தயக்கம் இல்லாமல் புகார்களைப் பதிவு செய்ய வேண்டும்" என்றார் காந்திமதி.

"மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்"

இது போன்ற மோசடிகள் நடக்காமல் தடுப்பதற்கு மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் பாலகுமாரன் பிபிசி தமிழிடம் கூறினார்.

"முதலீடு, நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டவை, சில நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதவை. மக்கள் தான் முதலீடு செய்வதற்கு முன்பாக நிறுவனங்களின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். ஒரே மாதிரியான புகார்கள் தான் பெரும்பாலான நிதி மோசடி நிறுவனங்கள் மீது வருகின்றன. மக்களின் அறியாமையை, ஆசையை தான் இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன." என்று அவர் கூறினார்.

பணம்

பட மூலாதாரம், Getty Images

"குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்கால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்புவிடுத்துள்ளோம். குற்றம் நிகழ்ந்த பிறகு வருத்தப்படுவதைவிட குற்றம் நிகழ்வதற்கு முன்பாகவே மக்கள் தங்களின் பணத்தை விழிப்புடன் முதலீடு செய்ய வேண்டும். காவல்துறை சார்பில் வாரம்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம், விழிப்புணர்வு தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறோம். அதையும் மீறி தான் நிதி மோசடிகள் அரங்கேறுகின்றன. மக்கள் தான் கவனமுடன் இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"25% மேல் லாபம் சாத்தியமில்லை"

முதலீடு துறையில் அனுபவம் பெற்ற நிதி ஆலோசகர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், `சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனத்தைப் போல தான் ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும். அதை அடிப்படையாக வைத்து தான் இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசை மக்களிடம் உள்ளது. அந்த ஆசை தான் மோசடி செய்பவர்களின் முதலீடு." என்று தெரிவித்தார்.

"பங்குச் சந்தை உட்பட எந்தவொரு சட்டப்பூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட நிதி, முதலீடு திட்டங்களின் மூலம் அதிகபட்சம் 25% வரை தான் லாபம் பார்க்க முடியும். அதற்கு மேல் லாபம் தருவதாக கூறும் எந்தவொரு திட்டமும் மோசடியானது தான்." என்று கிருஷ்ண மூர்த்தி கூறினார்.

"நிதி சேவை நிறுவனம் தொடங்க ரிசர்வ் வங்கி மற்றும் செபி பல்வேறு விதிகளை வைத்துள்ளது. அதன்படி அனைத்து நிறுவனங்களும் நிதி மற்றும் வைப்பு சேவைகளை தொடங்க முடியாது. வேறு தொழில் செய்வதாக பதிவு செய்து கொண்டு தான் முதலீடு திட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவைகளுக்கான (banking and financial services license) உரிமம் இருக்காது. முறையான உரிமம் பெற்று செயல்படும் நிறுவனங்கள் செய்திதாள்கள், தொலைக்காட்சி எனப் பெரிய விளம்பரம் செய்வார்கள், சிறிய அளவில் இயங்க மாட்டார்கள்.

பணம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இந்த மோசடி நிறுவனங்கள் எல்லாம் உள்ளுர் அளவில் இயங்குபவை. செய்திதாள்களில் கூட விளம்பரம் செய்ய மாட்டார்கள். முதலீட்டாளர்கள் மத்தியில் வாய்மொழியாக வரும் வார்த்தை மூலமாக தான் இந்த திட்டத்தில் மக்கள் இணைகிறார்கள். முதலில் ஒரு லட்சம் முதலீடு செய்து வட்டி கிடைத்ததும் அவர்களே மீண்டும் பல லட்சங்களை முதலீடு செய்கின்றனர். தங்களுக்கு தெரிந்தவர்களையும் முதலீடு செய்ய அழைக்கின்றனர்.

ஒவ்வொரு ஊரிலும் இதுபோல பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் இலக்கு குறிப்பிட்ட ஒரு ஊர், பகுதி தான். அதை குறிவைத்து தான் இத்தகைய மோசடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. படிக்காதவர்கள், நடுத்தர குடும்ப மக்கள் தான் ஏமாறுகிறார்கள் என நினைப்பதும் தவறு. படித்த நண்பர்கள் பலருமே இத்தகைய மோசடி திட்டங்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன்.

பணம்

பட மூலாதாரம், Getty Images

இத்தகைய மோசடி வழக்குகளில் அரசோ, காவல்துறையோ செய்யக்கூடியவை மிகவும் குறைவு தான். குற்றம் பதிவானால் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியும். முதலிடத்தில் குற்றம் நடைபெறாமல் இருப்பது மக்கள் கையில் தான் உள்ளது. நிதி மோசடி செய்பவர்கள் தங்களின் வடிவத்தை காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் தொழில் மூலமோ அல்லது வேலையிலோ பணத்தை சம்பாதிப்பதில் செய்யும் உழைப்பில் சிறிய பங்கை கூட அதை சரியாக முதலீடு செய்வதில் காட்டுவதில்லை. சரியான முதலீடு பற்றிய விழிப்புணர்வு இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. முதலீடு செய்பவர்கள் தான் அதை கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

காணொளிக் குறிப்பு, டீக்கடை நடத்துபவரின் மகள் இன்று டி.எஸ்.பி – சாதித்த பவானியாவின் வெற்றிக் கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: