‘த்ரில்’ வெற்றியால் ப்ளே ஆஃப்பில் லக்னெள: குர்னாலுக்கு மரண பயம் காட்டிய ரிங்கு சிங்

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் 3வது அணியாக இடம் பெற்றது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. தொடர்ந்து 2வது ஆண்டாக லக்னெள அணி ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இணையாக 17 புள்ளிகளை லக்னெள எடுத்திருந்தாலும், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கேவை எட்டுவது கடினம் என்பதால் 3வது இடத்தையே பிடித்தது.
வரும் 24ஆம் தேதி சென்னையில் நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 4வது இடம் பெறும் அணியுடன் லக்னெள மோதும்.
லக்னெள அணி ஒரு கட்டத்தில் 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் நிகோலஸ் பூரன் அணியை மீட்டெடுத்து 30 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணி வெற்றிக்கு கடைசி இரு ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிங்கு சிங் 39 ரன்கள் வரை சேர்த்து போராடித் தோற்றார். இரண்டு அற்புதமான “கம்பேக்” நேற்றைய ஆட்டத்தில் நடந்தபோதும், வெற்றியாளர் ஒருவராகத்தான் இருந்தார்கள்.
ரிங்கு சிங் காட்டிய பயம்
கொல்கத்தா பேட்ஸ்மேன் ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை, லக்னெளவின் ப்ளே ஆஃப் உறுதியாகுமா என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் கடைசிப் பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் அற்புதமான சிக்ஸர் விளாச ஒரு ரன்னில் லக்னெள அணி த்ரில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 68வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.
177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக லக்னெள வீரர் நிகோலஸ் பூரன் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஆட்டத்தின் உண்மையான ஹீரோ ரிங்கு சிங் தான். இந்திய அணிக்கு அருமையான ஃபினிஷராக ரிங்கு சிங் இந்த ஐபிஎல் சீசனில் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
கடைசி இரண்டு ஓவர்கள்
கடைசி இரண்டு ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டன.
நவீன் உல் ஹக் வீசிய 19வது ஓவரை ரிங்கு சிங் எதிர் கொண்டார். முதல் பந்தில் ஷார்ட் தேர்ட் திசையில் பவுண்டரி அடித்த ரிங்கு சிங், 2வது பந்தில் டீப் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரியும், டீப் தேர்டு பகுதியில் 3வது பவுண்டரியையும் அடித்து ரிங்கு ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 4வது பந்தில் 2 ரன்கள் எடுத்த ரிங்கு, 5வது பந்தில் சிக்ஸர் விளாசி 20 ரன்களை குவித்தார்.
கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி கட்ட நெருக்கடியையும் ரிங்கு சிங் அனாசயமாகக் கையாண்டார். கடைசி ஓவரை யாஷ் தாக்கூர் வீச, முதல் பந்தை அரோரா எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை ரிங்கு எதிர்கொண்டார்.
தாக்கூர் வைடாக வீசவே ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தை பவுன்சராக வீசிய தாக்கூர், 3வது பந்தை டாட் பாலாக வீசினார். 4வது பந்தை மீண்டும் வைடாக வீசி, அதன்பின் வீசிய பந்தில் ரிங்கு ஒரு சிக்ஸர் விளாசினார். 5வது பந்தில் லாங் ஆனில் பவுண்டரி விளாசிய ரிங்கு, கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாச ஒரு ரன்னில் கொல்கத்தா தோல்வி அடைந்தது.
அமர்க்களப்படுத்திய ரிங்கு சிங் 27 பந்துகளில் அரைசதம் அடித்து, 33 பந்துகளில் 63 ரன்களுடன்(6பவுண்டரி, 4சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
நவீனை வெறுப்பேற்றிய ரசிகர்கள்
லக்னெள பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய களத்துக்குள் வந்தபோதும் சரி, அவர் பந்துவீச வந்தபோதும் சரி அரங்கில் இருந்த ரசிகர்கள் “கோலி, கோலி” எனக் கோஷமிட்டு அவரை வெறுப்பேற்றினர்.
இந்த ஆட்டத்துக்கும் விராட் கோலிக்கும் ஆர்சிபி அணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இருப்பினும் கோலியுடன், நவீன் உல் ஹக் மோதியதையடுத்து, அவரை நேற்று போட்டி முழுவதும் "கோலி... கோலி..." என்று கோஷமிட்டு ரசிகர்கள் வெறுப்பேற்றினர்.
கடைசி இடத்துக்கு 3 அணிகள் போட்டி
இந்த வெற்றியின் மூலம் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 17 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு இணையாக 17 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் லக்னெள பின்தங்கியுள்ளது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் 0.652 ஆக இருக்கும் நிலையில் லக்னெள அணியின் ரன்ரேட் 0.284 ஆகவே இருக்கிறது.
அடுத்ததாக ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்திற்காக ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி தங்களின் கடைசி ஆட்டத்தில் வென்று 16 புள்ளிகளுடன் இருந்தால், நிகர ரன்ரேட்டில் ஏதாவது ஒரு அணி ப்ளே ஆஃப்பில் விளையாடும். அந்த வகையில் மும்பையைவிட ஆர்சிபி அணி நிகர ரன்ரேட்டில் சிறப்பாக இருக்கிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
மும்பை, ஆர்சிபி அணிகள் தங்களின் கடைசி லீக்கில் தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். இதில் ஏதாவது ஒரு அணி வென்று, மற்றொரு அணி தோற்றாலும் ராஜஸ்தான் வெளியேறிவிடும்.
ஆர்சிபி அணியைவிட ரன்ரேட்டில் சிறப்பான இடத்தில் இருக்க, சன்ரைசர்ஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெல்ல வேண்டியது அவசியம்.
ஒருவேளை மும்பை அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வென்றால்கூட, கடைசி லீக்கில் ஆர்சிபிதான் விளையாடுகிறது. எவ்வளவு ரன்கள் சேர்த்தால், எத்தனை ரன்கள் சேர்த்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம் என்ற தெளிவான நிலை ஆர்சிபிக்கு கிடைத்துவிடும் நிலையில் ஆர்சிபிக்குதான் நிலைமை சாதகமாக இருக்கிறது.
ஒருவேளை குஜராத் டைட்டன்ஸ் அணயிடம் ஆர்சிபி தோற்றால், மும்பை அணி சாதாரணமாக ஒரு வெற்றியுடன் ப்ளே ஆஃப்பில் இடம் பெறும். ஒருவேளை மும்பை அணியும், ஆர்சிபி அணியும் தோற்கும்பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும்.
எப்படியென்றால், ஆர்சிபி முதலில் பேட் செய்து 180 ரன்கள் சேர்த்து, அதை டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் அல்லது அதற்கு முன்பாக சேஸிங் செய்தால், அல்லது டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீசினால், ஆர்சிபி அணியை 174 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.
இவ்வாறு நடந்தால், ராஜஸ்தான் ராயலஸ் அணியின் ரன் ரேட் ஆர்சிபியைவிட அதிகமாக இருந்து, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும்

பட மூலாதாரம், BCCI/IPL
நம்பிக்கையை இழக்கவில்லை
லக்னெள கேப்டன் குர்னல் பாண்டியா கூறுகையில் “ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது மிக்க மகிழ்ச்சி, நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
கொல்கத்தா அணி 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தபோதுகூட, ஏதாவது ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றும் என நம்பினோம்.
சுழற்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை வழி நடத்தினர். ரிங்குவுக்கு இது சிறப்பான ஆட்டம், ரிங்கு களத்தில் இருக்கும்வரை ஆட்டத்தை லேசாக எடுக்க முடியாது.
டெத் ஓவர்களில் பந்துவீசியது அதிக அழுத்தத்தை அளித்தது. மோசின் கானுக்கு பதிலாக யாஷ் தாக்கூரை பந்துவீசச் செய்தது எனது துணிச்சலான முடிவு” எனத் தெரிவித்தார்
லக்னெள பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
சிஎஸ்கே அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றதால், சிஎஸ்கே அணியைவிட ரன்ரேட்டில் அதிகமாக முடிப்பது லக்னெளவுக்கு சிக்கலாகவே இருந்தது. கொல்கத்தா அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் சிஎஸ்கே அணியைவிட ரன்ரேட்டில் உயர்வாக இருக்க முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால், 11வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்திருந்தபோது லக்னெள அணியின் நம்பிக்கை உடைந்திருக்கும். ஆனால், நிகோலஸ் பூரன் களமிறங்கி அணியை மீட்டெடுத்து 30 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து கை கொடுத்தார்.
லக்னெள அணியில் மேயர்ஸுக்கு பதிலாக கரன் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் ராணாவின் பந்துவீச்சில் 3வது ஓவரிலேயே கரன் சர்மா ஆட்டமிழந்தார். அடுந்து வந்த மன்கட், டீகாக்குடன் சேர்ந்து சிறிய கேமியோ ஆடி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் லக்னெள ஒரு விக்கெட்இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்திருந்தது.
அரோரா பந்துவீச்சில் மன்கட்(26) ரன்னிலும், அதே ஓவரில் ஸ்டாய்னிஷ் டக்அவுட்டிலும் வெளியேறினர். 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து லக்னெள தடுமாறியது.
கேப்டன் குர்னல் பாண்டியாவும் நிலைக்காமல் 9 ரன்னில் நரேன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். வருண் சக்கரவர்த்தி சுழலில் டீகாக் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னெள தடுமாறியது. 55 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த லக்னௌ, அடுத்த 18 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.
6வது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரன், பதோனி ஜோடி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பதோனி நிதானமாக ஆட, பூரன் தன்னுடைய வழக்கமான சரவெடியைத் தொடங்கினார்.
வருண் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பூரன் விளாசித் தள்ளினார். சுயாஷ் ஓவரிலும் ஒரு சிக்ஸர், பவுண்டரி என பூரன் வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடிய பூரன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பதோனி 25 ரன்களில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். நிகோலஸ் பூரன் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணியின் கைகளே 12வது ஓவர்வரை ஓங்கி இருந்தது. 5 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னெள அணியை தங்கள் கட்டுப்பாட்டில் கொல்கத்தா வைத்திருந்தனர்.
ஆனால், அதன்பின் தொடர்ந்து ஆட்டத்தை எடுத்துச் செல்ல கொல்கத்தா தவறியதும், பூரன், பதோனி ஜோடியை நிலைக்கவிட்டதும் பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த ஜோடியை விரைவாகப் பிரித்திருந்தால், லக்னெள அணியை இன்னும் 30 முதல் 40 ரன்கள் குறைவாகச் சுருட்டியிருக்க முடியும்.

பட மூலாதாரம், BCCI/IPL
ரிங்குவின் போராட்டம்
கொல்கத்தா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி மட்டுமல்ல, நிகர ரன்ரேட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அதிகமாக உயர்த்தவேண்டிய கட்டாயத்திலும் களமிறங்கியது. அந்த வகையில் 8.5 ஓவர்களில் 177 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத இலக்குடன் போராடியது.
ஜேஸன் ராய், வெங்கடேஷ் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். வெங்கடேஷ் முதல் இரு ஓவர்களில் 30 ரன்களை சேர்த்தார். குர்னால் வீசிய ஓவரில் ராய் 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் கிருஷ்ணப்பா கௌதம் வீசிய ஓவரில் வெங்கடேஷ் 24 ரன்னில் பிஸ்னாயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளேவில் கொல்கத்தா ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றியை எளிதாகப் பெறும் நோக்கில் நகர்ந்தது.
ஆனால், 78 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 30 ரன்களை சேர்ப்பதற்குள் திடீரென 3 விக்கெட்டுகளை இழந்தது. ராணா(8), குர்பாஸ்(10), ஜேஸன் ராய்(45) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் கொல்கத்தா தடுமாற்றத்துக்குச் சென்றது.

பட மூலாதாரம், BCCI/IPL
அதன்பின் நம்பிக்கை நாயகன் ரிங்கு சிங் களமிறங்கினார். ரிங்குவுக்கு பக்கபலமாக ஆட எந்த பேட்ஸ்மேனும் இல்லை. ஆந்த்ரே ரஸல் வந்த வேத்தில் ஒரு சிக்ஸர் அடித்து 7 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் வெளியேறினார். சர்துல் தாக்கூர் 3 ரன்னில் கேட்ச் பிடிக்கப்பட்டும், நரேன் ஒரு ரன்னில் ரன்அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர். யாஷ் தாக்கூர் வீசிய 18வது ஓவரில் இருவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டன. ரிங்கு சிங் களத்தில் இருந்து நவீன் உல் ஹக் பந்துவீச்சை எதிர்கொண்டார். ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களை விளாசி, 27 பந்துகளில் ரிங்கு சிங் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டன. இருப்பினும் மனம் தளராத ரிங்கு சிங், தாக்கூர் ஓவரை எதிர்கொண்டார்.
கடும் அழுத்தத்தில் பந்துவீசிய தாக்கூர் இரண்டு வைடு பந்துகளை வீசினார். ரிங்கு சிங் கிடைத்த வாய்ப்பில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என விளாசியும் 20 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ரிங்கு சிங் 67 ரன்களுடன் இறுதிவரை போராடியும் தோல்வியில் முடிந்தது.
பேச வார்த்தைகள் இல்லை
கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில், “இந்த முடிவு எங்களுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும் ஏராளமான நேர்மறையான அம்சங்கள் இருந்தன.
அடுத்த சீசனில் இன்னும் சிறந்த அணியாக வருவோம் என நம்புகிறேன். ஆட்டத்தை ஃபினிஷ் செய்யும் திறமை இருந்தும் என்னால் முடிவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
ரிங்குவின் ஆட்டத்தையும் அர்ப்பணிப்பையும் பேச எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்தச் சூழலில் ரிங்கு சிங் பேட் செய்த விதம் அவரால் எதையும் செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தியது,” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












