ப்ளே ஆஃப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: தனி ஒருவனாக போராடிய வார்னர்: லக்னெள நிலைமை என்ன?

ப்ளே ஆஃப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 தொடரில் 12வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. லக்னெள அணியின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில்தான் ப்ளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கேவுக்கு எந்த இடம் என்பது முடிவாகும்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆட்டம் என்பதால் ரசிகர்கள் ஆவலோடு பார்த்தனர். ஆனால் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கால், ஆட்டம் ஒருதரப்பாக முடிந்து, ஸ்வாரஸ்யமில்லாமல் செய்துவிட்டது.

“கம்பேக்” கொடுத்த சிஎஸ்கே

கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம், கடந்த சீசனில் மோசமான விளையாட்டு, கேப்டன்சியில் மாற்றம் என அனைத்து விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி, தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

கடினமான தருணங்களில் இருந்து “கம்பேக்” கொடுப்பதை சிஎஸ்கே அணி வழக்கமாக வைத்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 7-வது இடத்தில் சிஎஸ்கே முடித்தது, 2021ம் ஆண்டில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 2022ல் 9-வது இடத்தை சிஎஸ்கே பிடித்தது. இதுவரை 14 சீசன்களில் விளையாடிய சிஎஸ்கே அணி 12 முறை ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 5 முறை 2வது இடத்தைப் பிடித்துள்ளது. 2009ல் 4வது இடத்தையும், 2014-ல் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆனால், 2023ம் ஆண்டில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெற்றுள்ளது. கோப்பையை வெல்லுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எங்கு சென்றாலும் “யெல்லோ ரசிகர்கள்”

ப்ளே ஆஃப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்த சீசனில் எந்த நகரில் சென்று சிஎஸ்கே அணி விளையாடினாலும் அங்கு சிஎஸ்கே ரசிகர்கள் ஆதரவு அதிகரித்தே காணப்படுகிறது. டெல்லியில் வந்து இன்று சிஎஸ்கே ஆடியபோதிலும் அரங்கு முழுவதும் சிஎஸ்கே ரசிகர்களே நிரம்பி இருந்தனர். சிஎஸ்கே விளையாடும் அனைத்து ஆட்டத்தையும், ரசிகர்கள் சேப்பாக்கமாக மாற்றிவிடுகிறார்கள்.

டெல்லியில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 67-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. 224 ரன்களைத் துரத்திய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்து 77 ரன்களில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் அமைத்துக் கொடுத்த வலுவான ஸ்கோரும், நெருக்கடி தரும் பந்துவீச்சும் முக்கியக் காரணமாகும். பேட்டிங்கில், கெய்க்வாட்(79), கான்வே(87) ஆகியோர் அடித்த குறிப்பிடத்தகுந்த ரன்கள் சிஎஸ்கே அணி பெரிய ஸ்கோரை எட்ட முயன்றது. 79 ரன்கள் விளாசிய கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது வென்றார்.

பந்துவீச்சில் தீபக் சஹர் 3 விக்கெட்டுகளையும், பத்திரன, தீக்சனா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெல்லி அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் சீசன் தொடங்கியது முதல் கடைசி வரை கேப்டன் டேவிட் வார்னர் மட்டுமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் 7-வது முறையாக 500 ரன்களுக்கு மேல் வார்னர் குவித்துள்ளார் விராட் கோலி 6 முறை சேர்த்துள்ளார்.

ப்ளே ஆஃப்பில் சிஎஸ்கே

டெல்லி அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றதன் மூலம், சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் 2வது இடம் கிடைக்குமா அல்லது 3வது இடமா என்பது லக்னெளவின் வெற்றியைப் பொறுத்து அமையும்.

லக்னெளவுக்கும் கொல்கத்தாவுக்கும் இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னெள அணி, 200ரன்கள் அடித்து, கொல்கத்தா அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், 160 அல்லது 180 ரன்கள் அடித்தால் 97 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வெல்ல வேண்டும். இதுபோன்ற மிகப்பெரிய வெற்றியை லக்னெள அணி பெற்றால்தான், சிஎஸ்கே அணியைவிட நிகர ரன்ரேட்டில் உயர்ந்து ப்ளே ஆஃப்பில் 2வது இடத்தைப் பிடிக்க முடியும்.

தற்போது சிஎஸ்கே அணி 17 புள்ளிகளுடன், 0.652 என பிளசில் ரன்ரேட்டை வைத்திருக்கிறது. லக்னெள அணி தற்போது 15 புள்ளிகளுடன், 0.304 என பிளசில் வைத்துள்ளது.

ஒருவேளை லக்னெள அணி கடைசி லீக்கில் தோற்றால், சிஎஸ்கே ப்ளே ஆஃப்பில் 2வது இடத்துக்கு முன்னேறும். ஆனால் லக்னெளவுக்கு 3வது அல்லது 4வது இடமா என்பது ஆர்சிபி அணியின் ஆட்டம் முடிந்தபின்புதான் தெரியவரும். அதுவரை லக்னெள அணி காத்திருக்க வேண்டும்.

ஒருவேளை ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்களின் கடைசி லீக்கில் வென்று 16 புள்ளிகள் பெற்றால், ப்ளே ஆஃப்பில் லக்னெளவுக்கு இடம் கிடைக்காது. மும்பை அல்லது ஆர்சிபி தோற்றால், மட்டுமே லக்னெள கடைசி லீக்கில் தோற்றாலும் இடம் கிடைக்கும். இல்லாவிட்டால் இடம் கிடைக்காது.

ஒருவேளை லக்னெள அணி கடைசி லீக்கில் கொல்கத்தாவை சாதாரண ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் சிஎஸ்கே ப்ளே ஆஃப்பில் 2வது இடத்தையும், லக்னெள அணி 3வது இடத்தையும் பிடிக்கும். மும்பை, ஆர்சிபி அணிகளில் யார் 4வது இடத்தைப் பிடிப்பார்கள் என்பதுதான் பரபரப்பாகும்.

தனி ஒருவனாக வார்னர்

ப்ளே ஆஃப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images

224 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்கை துரத்தி டெல்லி கேபிடல்ஸ் அணி புறப்பட்டது. ஆனால், அணியில் கேப்டன் வார்னரைத் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் குறிப்பிடத்தகுந்த அளவு ரன்கள் சேர்க்கவில்லை. இந்தப் போட்டியில் மட்டுமல்ல பெரும்பாலான ஆட்டங்களில் டேவிட் வார்னர் மட்டுமே தனிஒருவராக களத்தில் இருந்து ரன்களைச் சேர்த்துள்ளார்.

இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்துள்ள வார்னர், 58 பந்துகளைச் சந்தித்து 86 ரன்களில்(7பவுண்டரி, 6 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். வார்னர் தவிர்த்து யாஷ் துல்(13) அக்ஸர் படேல்(15) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னோடு பெவிலியின் திரும்பினர்.

கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா(5), பில் சால்ட்(3), கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரூஸோ(0), அமன் ஹக்கிம்(7), லலித் யாதவ்(6), குல்தீப் யாதவ்(0) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணி பவர்ப்ளேயில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தபோதே, அந்த அணி சேஸிங் செய்வதற்கான மனஉறுதியையும், திறனையும் இழந்துவிட்டது. அதன்பின் வந்த பேட்ஸ்மேன்களும் சேஸிங் சாத்தியமில்லை என்பதுபோல் விரைவாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 131 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 15 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியில் பிடியில் சிக்கியது.

கடைசி ஓவரை வீசிய தீக்சனா 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டுக்கு முயன்றார் ஆனால், நடக்கவில்லை.

சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் பந்துவீச்சை வார்னர் பிரித்து எடுத்துவிட்டார். ஜடேஜாவின் கடைசி ஓவரில் மட்டும் வார்னர் 23 ரன்களை வாரிக் குவித்தார். 4 ஓவர்கள் வீசிய ஜடேஜா 50 ரன்களை வாரி வழங்கி, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜாவைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓரளவு கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.

நல்ல பார்னர்ஷிப் அமையவில்லை

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் “ நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டோம் ஆனால், பேட்டிங்கில் விக்கெட்டுகளை சீராக இழந்துவிட்டோம். ஸ்திரமான பார்ட்னர்ஷிப் இரண்டு அமைந்திருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி இருப்போம். இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகவே பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன் தரம்சலாவில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அடுத்த ஆண்டு மீண்டும் ஒன்றுகூடி வலுவாக திரும்பி வருவோம்” எனத் தெரிவித்தார்

1000-வது சிக்ஸர்

ப்ளே ஆஃப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆடுகளத்தைப் பார்த்தவுடன் சிஎஸ்கே கேப்டன் தோனி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றார். அதற்கு ஏற்றார்போல் தொடக்கத்திலேயே வார்னர், சுழற்பந்துவீச்சாளர்களைப் பந்துவீசச் செய்தார். ஆனால் கான்வே, கெய்க்வாட், டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கினர்.

லலித் யாதவ் பந்தில் இறங்கிவந்து ஸ்ட்ரைட்டில் ஒரு சிக்ஸரை கான்வே விளாசி, இந்த சீசனின் 1000வது சிக்ஸரைப் பதிவு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சும், சுழற்பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவு எடுக்கவில்லை. டெல்லி பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் கான்வேயும், ருத்துராஜும் விளாசியதால் 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது சிஎஸ்கே அணி.

அக்ஸர் படேல் வீசிய 10-வது ஓவரில் கெய்க்வாட் இரு சிக்ஸர்களை விளாசி 37 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அது மட்டுமல்லாமல் குல்தீப் யாதவ் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களையும் கெய்க்வாட் விளாசி அதிர்ச்சி அளித்தார். கான்வே-கெய்க்வாட் இந்த சீசனில் தொடக்க ஜோடியாக 20 இன்னிங்ஸில் ஆடி 1000 ரன்களை எட்டினர். கான்வே 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கெய்க்வாட் 79 ரன்கள்(50பந்துகள், 3 பவுண்டரி, 7சிக்ஸர்) சேர்த்தநிலையில் சக்காரியா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல்விக்கெட்டுக்கு கான்வே, கெய்க்வாட் ஜோடி 141 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ஷிவம் துபே சிறிய கேமியோ ஆடி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். துபே ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் நார்ஜே பந்துவீச்சில் கான்வே 87 ரன்களில்(52பந்துகள் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார்.

வழக்கத்துக்கு மாறாக தோனி 4வது வீரராகக் களமிறங்கி ரசிகர்களை இன்பஅதிர்ச்சியளித்தார். தோனி களமிறங்கியவுடன் வழக்கம் போல் ரசிகர்கள் தோனி, தோனி என கோஷமிட்டும், விசிலடித்தும் தங்களின் வரவேற்பை வெளிப்படுத்தினர்.

ஜடேஜா, தோனியும் களத்தில் இருந்தபோதும் பெரும்பாலான பந்துகளை ஜடேஜாவே சந்தித்தார். தோனி 4 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்தார். ஜடேஜா 12 பந்துகளில் 3பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 20 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வார்னரும் ஜடேஜாவின் வாள்வீச்சும்

ப்ளே ஆஃப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images

டேவிட் வார்னர் தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்து 2வது ரன்னை எடுக்க முயன்றார். அப்போது பந்தை பீல்டிங் செய்த ரஹானே ரன் அவுட் செய்யும் முயற்சியில் ஸ்டெம்பை நோக்கி வீசி எறிந்தார். பந்து ஸ்டெம்பில் படாமல் தொலைவில் ஜடேஜாவிடம் சென்றது.

இதைப் பார்த்த வார்னர், ரன் ஓடுவது போல் சைகை செய்து, ஓட முயன்றார். ஆனால், ஜடேஜாவும் ரன்அவுட் செய்வது போன்று சைகை செய்தார். அப்போது திடீரென வார்னர் தனது பேட்டால் ஜடேஜாவின் வாள்வீச்சு போன்று பேட்டை சுழ்றிக்காட்டியவுடன் ஜடேஜாவும், வார்னரும் களத்தில் ரசித்துச் சிரித்தனர். எதிரணிகளாக இருந்தபோதிலும், களத்தில் நட்புடன், பரஸ்பரத்துடன் இரு வீரர்கள் நடந்து கொண்டது வளரும் வீரர்களுக்கு உத்வேமாக இருக்கும்.

சிறப்பு முயற்சி ஏதும் இல்லை

சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் “ நாங்கள் ப்ளே ஆப் சென்றதற்கு சிறப்பான முயற்சி ஏதும் செய்யவில்லை. சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்து, அவர்களுக்கு சிறந்த இடத்தை வழங்கினோம். அவர்கள் வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் வலுவில்லாத பகுதியில்கூட அவர்கள் திறமையை வளர்க்க வேண்டும். அணிக்காக எது நல்லதோ அதைச் செய்தால் அதுநிச்சயம் பலன் அளிக்கும்.

சிஎஸ்கே நிர்வாகம், ஊழியர்கள் எங்களுக்கு பக்கபலமாக இருந்தார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதை தொடர்ந்து செய்யுங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என எங்களுக்கு ஊக்கம் அளித்தனர். வீரர்களும் இதில் முக்கியம். டெத்ஓவர்களில் நம்பிக்கையை ஏற்படுத்தி பந்துவீசச் செய்வது முக்கியமானது. துஷார் தேஷ்பாண்டேவை டெத் ஓவர்களை பந்துவீசச் செய்யும் அளவுக்கு உயர்த்தினோம். நம்பிக்கையோடு இருந்தால், அதிகமாக செயல்படுத்தலாம். இதற்கு பின் ஏராளமானோர் உழைப்பு இருக்கிறது. பத்திரனாவின் பந்துவீச்சு இயல்பாகவே டெத் ஓவர்களுக்கு ஏற்றார்போல் இருந்தது, இது எங்களுக்கு பெரிய சுமையைக் குறைத்தது” எனத் தெரிவி்த்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: