கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா முன்னிருக்கும் 3 முக்கிய சவால்கள் - சமாளித்து சாதிப்பாரா?

கர்நாடகா அரசியல், சித்தராமையா, காங்கிரஸ்

பட மூலாதாரம், Twitter/siddaramaiah

    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்

கர்நாடகா சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. கடந்த முறை போல் இல்லாமல் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய சித்தராமையா அரசு என்ன செய்யவேண்டும்?

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பரப்புரையின்போது காங்கிரஸ் கட்சி முன்வைத்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளே இந்த ஒப்புதலை வழங்கியிருக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அரசுக்கு முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன?

அறிவிக்கப்பட்ட ’5 முக்கிய வாக்குறுதிகளை’ நிறைவேற்ற தேவைப்படும் 50 ஆயிரம் கோடி செலவீனத்தைச் சமாளிக்க சித்தராமையா அரசு என்ன செய்யப் போகிறது?

சித்தராமையா தவிர 9 பேருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்கள் ஒதுக்குவதில் என்ன சிக்கல் உள்ளது?

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் வெற்றியைத் தக்கவைக்க சித்தராமையா அரசு என்ன செய்யவுள்ளது?

அறிவிப்புகளான ’வாக்குறுதிகள்’

கர்நாடகா அரசியல், சித்தராமையா, காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

கர்நாடக அமைச்சரவையின் முதல் அமைச்சரவை கூட்டம், பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நேற்று மாலை நடந்தது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கர்நாடக சட்டபேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது.

இதையடுத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்கள் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக முதலமைச்சரான சித்தராமையா அறிவித்தார்.

முதல் நாளே கர்நாடக அரசு அறிவித்த 5 அறிவிப்புகள்

  • அன்ன பாக்கிய திட்டம் - இதன்மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி
  • க்ருஹா லக்‌ஷ்மி - குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை
  • க்ருஹா ஜோதி - மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்
  • உச்சிதா ப்ரயானா - அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்
  • யுவ நிதி - 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களில் டிகிரி படிப்பை முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் 2 ஆண்டுகளுக்கும், டிப்ளோமா படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டம்

இன்று காலை பதவியேற்புக்கு முன்பாக கர்நாடக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ISN பிரசாத் மற்றும் நிதித்துறை செயலாளர் ஜாஃபர் ஆகியோருடன் சித்தராமையா ஆலோசனை செய்தார்.

அதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டுள்ளார். இதை நிறைவேற்ற ஆண்டுதோறும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவீனமாக ஒதுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

"மக்கள் நலத்திட்டங்களில் செய்யவும் செலவு ஒரு முதலீடு"

கர்நாடகா அரசியல், சித்தராமையா, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், இதேபோன்ற மக்கள் நலத்திட்டங்களை இதற்கு முன்பு வெற்றிகரமாகச் செயல்படுத்திய அனுபவம் சித்தராமையாவுக்கு இருப்பதாகக் கூறினார்.

”கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளே பல திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். இதற்காக 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பாதிப்பு உருவாகும். ஆனால் ஏற்கெனவே 13 முறை கர்நாடகாவின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தவர் என்ற அடிப்படையில் சித்தராமையா இந்த நிதிச் சிக்கலை சமாளிப்பார் என்று நம்புகிறேன்,” என்று மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தெரிவித்தார்.

மக்கள் நலத்திட்டங்களில் செய்யும் செலவு, நீண்டகால முதலீடு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

"தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம், கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாட்டில் செய்யப்பட்ட முதலீடு.

வெளியிலிருந்து பார்க்கும் நபர்களுக்கு இது செலவாகத் தெரியும். ஆனால் நெருங்கி வந்து பார்த்தால் மட்டுமே அது நீண்டகால முதலீடு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கர்நாடக அரசு செய்திருப்பதும் இதுபோன்ற முதலீடுதான்,” என்று அவர் தெரிவித்தார்.

கூடுதல் நிதிச்சுமை குறித்து பதிலளித்த சித்தராமையா, ”மாநிலத்தின் கடன் சுமை அதிகரிக்காமல், இந்தத் திட்டங்களுக்குத் தேவையான 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கமுடியும் என்று நான் நம்புகிறேன். கூடுதல் நிதிச்சுமை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

கர்நாடகா அரசியல், சித்தராமையா, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

5 ஆண்டு நிலையான ஆட்சி

கர்நாடகாவில் 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் என எந்தக் கட்சியும் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இந்நிலையில் பாஜகவின் எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமைகோரி, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால், 6 நாட்கள் மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, குமாராசாமிக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கியது. இதையடுத்து குமாரசாமி கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்று கொண்டார்.

ஆனால் அவரது அரசாங்கத்தால் 5 ஆண்டுகள் முழுமையாக கர்நாடகாவில் ஆட்சி செய்ய முடியவில்லை. ஓராண்டு மட்டுமே அவர் பதவி வகித்த நிலையில், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் குமாரசாமி தோற்கடிப்பட்டு ஆட்சியை இழந்தார்.

இப்போது தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்திருந்தாலும், முதல்வராக 5 ஆண்டுகள் நீடிப்பது சித்தராமையாவுக்கு சற்று சவாலான பணி என்கிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்.

”மக்களவை தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவில் பல அறிவிப்புகளை சித்தராமையா அரசு முதல் நாளே வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பெறும் வெற்றியின் மூலம் மட்டுமே அவரால் தொடர்ந்து முதல்வர் நாற்காலியில் நீடிக்க முடியும். கட்சிக்குள்ளேயே அவருக்குக் கடுமையான போட்டியளிக்க பல தலைவர்கள் உள்ளனர்,” என்று ஷ்யாம் தெரிவித்தார்.

கடந்த முறை போலவே ஏதாவது செய்து ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவும் முயற்சி செய்யும் என்பதால் சித்தராமையாவின் அரசு சற்று கூடுதல் கவனத்துடன் ஒவ்வொரு பிரச்னையையும் அணுக வேண்டும் என்று பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் விஜய் குரோவர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் யாருக்கு இடம்?

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா முன்னால் இருக்கும் அடுத்த சவால் தனது அமைச்சரவை சகாக்களைத் தேர்வு செய்வது.

பல்வேறு சமூகத்தினர் வசிக்கும் கர்நாடகாவில் தனது கட்சியினரை திருப்தி செய்யும் வகையில், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் 34 அமைச்சர்களைத் தேர்வு செய்வது அவருக்குப் பாதி வெற்றியைத் தரும் என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

ஏற்கெனவே துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உட்பட 9 பேரை அமைச்சர்களாக்கி இருக்கும் நிலையில், எஞ்சிய நபர்களைத் தேர்வு செய்வது சற்று கடினமான பணியாக இருக்கக்கூடும் என்கிறார் பத்திரிகையாளர் விஜய் குரோவர்.

கர்நாடகா அரசியல், சித்தராமையா, காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 39 பேர், வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 21 பேர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 22 பேர், பழங்குடியினர் சமூகத்திலிருந்து 15 பேர், குருபா சமூகத்தில் இருந்து 8 பேர், இஸ்லாமியர்கள் 9 பேர் உள்ளனர்.

இந்த சமூகத்தினர் அனைவரும் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கருதுகின்றனர். அதேபோல கடந்த முறை துணை முதலமைச்சராக இருந்த ஜி. பரமேஸ்வருக்கு இம்முறை துணை முதல்வர் பதவி வழங்கப்படாததால், தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதேபோல கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமாரும் தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் நல்ல துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இத்தனை பேரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைச்சரவையிலும், அமைச்சரவைக்கு வெளியிலும் காங்கிரஸ் கட்சியினருக்கு பதவிகளை வழங்குவதுதான் சித்தராமையா முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால்.

இதைச் சரியாக செய்யாவிட்டால், அதிருப்தியில் இருக்கும் நபர்களை வளைக்க பாஜக முயலும். இது ஆட்சிக்கு பாதிப்பாகக்கூட அமையும். ஆனால் பெரும்பான்மை பலம் இருப்பதால் இது அவ்வளவு சீக்கிரம் நடக்காது என நான் கருதுகிறேன் என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: