அமித்ஷா பேச்சுக்கு வங்கதேச இடைக்கால அரசு எதிர்ப்பு - ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
ஜார்கண்டில் வங்கதேசத்தினர் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேச வெளியுறவு அமைச்சகம் செப்டம்பர் 23 ஆம் தேதி இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டது. "வங்கதேச குடிமக்கள் குறித்து ஜார்கண்டில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய துரதிர்ஷ்டவசமான கருத்துகளுக்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்," என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
வங்கதேச வெளியுறவு அமைச்சகம் டாக்காவில் உள்ள இந்திய தூதரை அழைத்து இது தொடர்பாக எதிர்ப்புக் கடிதமும் கொடுத்தது.
ஷாவின் கருத்துக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஆட்சேபம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் தீவிர கோபத்தை வெளிப்படுத்தியது.
இதுபோன்ற 'ஆட்சேபத்திற்குரிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத' அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு தன் தலைவர்களை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமித் ஷா என்ன சொன்னார்?
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 20-ம் தேதி ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “ஒருமுறை ஜார்க்கண்ட் அரசை மாற்றுங்கள். ஜார்கண்டில் இருந்து ரோஹிங்கியா மற்றும் வங்கதேச ஊடுருவல்காரர்களை தேடிப் பிடித்து வெளியே அனுப்பும் பணியை பாரதிய ஜனதா செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அவர்கள் நமது நாகரிகத்தை அழிக்கிறார்கள். நம் வளங்களை அபகரிக்கிறார்கள்,” என்று கூறினார்.
“நம் மகள்களுக்கு வெவ்வேறு வழிகளில் போலி திருமணங்கள் செய்யப்படுகின்றன. நமது வேலை வாய்ப்பையும் பறிக்க முயல்கின்றனர். ஜார்கண்டிற்குள் ஊடுருவல்காரர்களுக்கு இடமில்லை. பா.ஜ.க அரசால் மட்டுமே இதைச் செய்ய முடியும்,” என்றார் அவர்.
“ஜார்கண்டில் இதுபோன்ற ஊடுருவல் தொடர்ந்தால் இன்னும் 25-30 ஆண்டுகளில் ஊடுருவல்காரர்கள் இங்கு பெரும்பான்மையாக ஆகிவிடுவார்கள்,” என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
"அண்டை நாடுகளின் குடிமக்களுக்கு எதிராக பொறுப்பான பதவிகளை வகிக்கும் நபர்கள் தெரிவிக்கும் இத்தகைய கருத்துகள் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் உணர்வை பலவீனப்படுத்துகின்றன" என்று ஷாவின் அறிக்கை குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம், கருத்து தெரிவித்தது.
வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் இந்த கருத்து விவேகமற்றது என இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் கன்வல் சிபல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி கடந்த மூன்று நாட்களாக அமெரிக்காவில் இருந்தார். வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸும் அமெரிக்காவில் இருக்கிறார். ஆனால் இருவருக்கும் இடையே சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.
பிரதமர் மோதி பல உலக தலைவர்களை சந்தித்த போதிலும் முகமது யூனுஸை அவர் சந்திக்கவில்லை. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. எனினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகர் தவுஹித் ஹுசைனை சந்தித்திருந்தார்.
முகமது யூனுஸை சந்திக்க பிரதமர் மோதி மறுத்துவிட்டார், இது வங்கதேச மக்களை அவமதிக்கும் செயல் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் ஃபாஸித் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு என்ன நடக்கிறது?
சமீப காலமாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவில் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் அதிகாரத்தை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது.
இதன் பிறகு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. கலிதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) செல்வாக்கும் ஒப்பீட்டளவில் அதிகரிக்கத் தொடங்கியது.
ஷேக் ஹசீனா இந்தியாவின் தீவிர ஆதரவாளராகவே அந்நாட்டில் பார்க்கப்படுகிறார். ஆனால் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் நிலைப்பாடு இந்தியாவுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் சமீபத்தில் வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரணய் வர்மா பிஎன்பி கட்சித் தலைவர்களை சந்தித்தார். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு இந்திய தூதாண்மை மட்டத்தில் அக்கட்சி தலைவர்களுடன் நடந்த முதல் சந்திப்பு இதுவாகும்.
”பிஎன்பி கட்சியுடனான உறவுகளில் இந்தியா நேர்மறையான அணுகுமுறையை விரும்புகிறது. இந்திய அரசியல் கட்சிகளுடன் பிஎன்பியின் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று இந்தியா கருதுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பெரிய அரசியல் மறுசீரமைப்பின் பின்னணியில் வங்கதேசத்துடனான உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக இந்தியா கூறியது,”என்று பிஎன்பி தலைவர் ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், இந்திய அதிகாரிகளை சந்தித்த பிறகு கூறியிருந்தார்.
செப்டம்பர் தொடக்கத்தில் பல இந்திய அதிகாரிகள் வங்கதேச இடைக்கால அரசின் உறுப்பினர்களை சந்தித்தனர்.
தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்ற செய்தியை இந்த சந்திப்புகள் மூலம் இந்தியா தெரிவிக்க முயன்றது.
2024-ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிஎன்பி கட்சி பலமுறை இந்தியாவை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் இந்தியா பதிலளிக்கவில்லை என்றும் சில காலத்திற்கு முன்பு ஆலம் கிர் கூறியிருந்தார்.
இந்த தேர்தல்களை பிஎன்பி புறக்கணித்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன.
நாட்டில் கூடிய விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பிஎன்பி சமீபத்தில் இடைக்கால அரசிடம் கூறியிருந்தது. நாட்டில் தேர்தல் நடத்துவது குறித்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி முகமது யூனுஸ் பேசியிருந்தார். ஆனால் இதற்கான தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
வங்கதேசத்தில் தேர்தல் நடக்கும் போது, பிஎன்பியின் பங்கு முக்கியமானதாக இருக்கக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு, இந்தியா பிஎன்பி உடனான தொடர்புகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால் அமித்ஷாவின் அறிக்கையால் இருநாட்டு உறவுகளை சீராக்கும் முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
சமீபத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இந்திய அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரே காரணம் என சில அமைப்புகள் குற்றம்சாட்டின. இந்திய அரசு அத்தகைய கூற்றுகளை நிராகரித்தது.

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசம் பற்றிய ஷாவின் முந்தைய கருத்துகள்
அமித் ஷாவின் அறிக்கைக்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவிப்பது இது முதல் முறையல்ல.
2019-ஆம் ஆண்டில் கூட சிஏஏ அதாவது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் அமித் ஷா வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை நடப்பதாக குற்றம்சாட்டி பேசியிருந்தார். இதற்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
"இந்துக்கள் மீதான அடக்குமுறை பற்றி அவர்கள் கூறுவது தேவையற்றது மற்றும் பொய்யானது. உலகத்தில் வங்கதேசம் போன்ற மத நல்லிணக்கம் நிலவும் நாடுகள் மிகக் குறைவு,” என்று அப்போதைய வங்கதேச வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ.கே.அப்துல் மோமேன் கூறியிருந்தார்.
இந்தியாவின் என்ஆர்சி மற்றும் புதிய குடியுரிமைச் சட்டம் குறித்த விஷயங்களை பிஎன்பி கட்சியும் எழுப்பி வருகிறது.
பிஎன்பி தலைவர் மிர்ஸா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் 2019 டிசம்பரில், "இந்திய மாநிலமான அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
“இங்கு நிலைமை மிகவும் நன்றாக இருக்கிறது என்பதால்தான் இந்தியாவில் இருந்து மக்கள் வங்கதேசத்திற்கு வருகிறார்கள். நமது பொருளாதாரத்தின் நிலை வலுவாக உள்ளது. இங்கு வருபவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இங்கு இலவச உணவு கிடைக்கிறது,” என்று 2019 டிசம்பரில், டாக்டர். ஏ.கே. அப்துல் மோமேன் தெரிவித்திருந்தார்.
இந்தியர்கள் வங்கதேசத்திற்குள் வருகிறார்களா? என்று பின்பு அவரிடம் கேட்கப்பட்டது.
"வங்கதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். இந்தியாவை விட எங்கள் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. இந்தியர்களுக்கு அங்கு வேலை கிடைப்பதில்லை. அதனால்தான் அவர்கள் வங்கதேசத்திற்கு வருகிறார்கள். வங்கதேசத்தில் இலவச உணவு கிடைக்கும் என்று சில இடைத்தரகர்கள் இந்திய ஏழைகளிடம் சொல்கிறார்கள்,” என்று அவர் பதில் அளித்தார்.
"இந்தியாவில் வங்கதேச குடிமக்கள் யாரேனும் சட்டவிரோதமாக வசிக்கிறார்கள் என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்வோம் என்று நான் இந்தியாவிடம் கூறியுள்ளேன்" என்று மோமேன் தெரிவித்தார்.
பிரதமர் மோதி 2021 மார்ச் மாதம் வங்கதேசம் செல்லவிருந்த நேரத்திலும் அங்குள்ள முஸ்லிம் மற்றும் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அந்த பயணத்தை எதிர்த்தனர்.
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் குறித்து பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
சில இந்து அமைப்புகள் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களை வங்கதேச ஊடுருவல்காரர்கள் என்று கூறி தாக்குவதையும் காணமுடிகிறது. இது போன்ற சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

பட மூலாதாரம், ANI
வங்கதேசம் மற்றும் ஊடுருவல்
வங்கதேசத்தில் இருந்து மக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவது நீண்ட காலமாக உள்ள பிரச்சனை.
1971-ஆம் ஆண்டில் வங்கதேசம் உருவாகும் வரை அகதிகள் இந்தியாவுக்கு தொடர்ந்து வந்தனர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, “தலைக்கு மேல் வெள்ளம் போகிறது.. எல்லா மதங்களைச் சேர்ந்த அகதிகளும் திரும்பிச்செல்ல வேண்டும். இந்த அகதிகளை நாங்கள் எங்கள் மக்களுடன் இணைக்க மாட்டோம்,” என்று கூறியிருந்தார்.
தற்போதும் கூட வங்கதேசத்தவரின் ஊடுருவல் தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து அறிக்கைகளை அளித்து வருகின்றனர்.
இதில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பெயரும் உள்ளது.
செப்டம்பர் 22 ஆம் தேதியன்று சர்மா சமூக ஊடகங்களில், "அசாம் போலீசார் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து இரண்டு வங்கதேச ஊடுருவல்காரர்களை பிடித்து வங்கதேசத்திற்கு அனுப்பினர்" என்று எழுதியிருந்தார்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணுமாறு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடி என்று மோதி அரசு 2016-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
2004 இல் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சம் என்று அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2015 மற்றும் 2019 க்கு இடையில் சுமார் 15 ஆயிரம் வங்கதேச மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசின் தரவுகள் கூறுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கதேசத்திலிருந்து அதிகபட்ச ஊடுருவல்கள் மேற்கு வங்கத்தில் இருந்ததாக 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
2017ஆம் ஆண்டு இந்திய-வங்கதேச எல்லையில் 1,175 பேர் பிடிபட்டனர். 2018 இல் 1,118 பேரும், 2019 இல் 1,351 பேரும் பிடிபட்டுள்ளனர்.
அசாமில் 1988-ஆம் ஆண்டு முதல் வசிக்கும் ஒரு வங்கதேச இந்துவுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை, ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டது. வடகிழக்கில் வசிக்கும் ஒருவர் சிஏஏ வின் கீழ் இந்திய குடியுரிமை பெற்றது இதுவே முதல் முறை.
2024 மே 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிஏஏவின் கீழ் 14 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
2024 மே மாதம் சிஏஏ வின் கீழ் 300 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மையின இந்துக்கள், சீக்கியர், பார்சி, சமணர் மற்றும் பெளத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான வழிவகைகள் சிஏஏ சட்டத்தில் உள்ளன.
டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் சிஏஏ வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












