யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ.க-வில் அதிருப்தி ஏன்? என்ன நடக்கிறது உத்தரபிரதேசத்தில்?

பட மூலாதாரம், X/YOGI
- எழுதியவர், விகாஸ் திரிவேதி
- பதவி, பிபிசி செய்தியாளர்
2021-ஆம் ஆண்டு இறுதியில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் தொடங்கவிருந்தது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் நிலவின.
பின்னர் 2021-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி இரண்டு புகைப்படங்கள் வெளிவந்தன. ஒன்றில் யோகியிடம் பிரதமர் மோதி ஏதோ பேசுவதுபோல காணப்பட்டார். இரண்டாவது புகைப்படத்தில் மோதி யோகியின் தோளில் கையை வைத்தபடி கேமராவுக்கு முதுகைக்காட்டியபடி இருப்பதை பார்க்கமுடிகிறது.
யோகி ஆதித்யநாத்தின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து இந்தப் படங்கள் பகிரப்பட்டு அதில், "நாங்கள் ஒரு உறுதிமொழியுடன், எங்கள் உடலையும் மனதையும் அர்பணித்து புறப்பட்டுள்ளோம். ஒரு சூரியன் உதயமாக வேண்டும், வானத்தில் உயரே பறக்க வேண்டும்,” என்று எழுதப்பட்டிருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் யோகி மீண்டும் உத்தரப் பிரதேச முதல்வராகவும் தற்போது மோதி மூன்றாவது முறையாக பிரதமராகவும் உள்ளார்கள். ஆனால் மோதி, யோகி ஆகியோரின் புகைப்படங்களுடன் பகிரப்பட்ட, 'ஒரு சூரியன் உதயமாக வேண்டும், வானத்தில் உயரே பறக்க வேண்டும்,' என்ற வாசகம் கவிஞரின் கற்பனையாகவே இருந்துவிட்டது.
2017-ஆம் ஆண்டு உ.பி சட்டப்பேரவைத்தேர்தலில் 312 இடங்களை வென்ற பா.ஜ.கவுக்கு 2022-ஆம் ஆண்டு தேர்தலில் 255 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 2019-ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 62 இடங்களை வென்ற பா.ஜ.க, 2024-இல் 33 இடங்களையே வெல்ல முடிந்தது.
பா.ஜ.க-வின் இந்த அரசியல் சரிவில், யோகி ஆதித்யநாத் மற்றும் கேசவ் பிரசாத் மெளரியாவின் சமீபத்திய அறிக்கைகள் சறுக்கலை மேலும் அதிகரித்துள்ளன. 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மோதி, அமித்ஷா தலைமையிலான பா.ஜ.க-வுக்கு யோகி ஆதித்யநாத் பலமா அல்லது பலவீனமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யோகி ஆதித்யநாத்தின் முன் உள்ள சவால்கள் என்ன அல்லது அவரே யாருக்காவது சவாலாக இருக்கிறாரா?

பட மூலாதாரம், X/YOGI
யோகி: எதிர்ப்பிலிருந்து பா.ஜ.க-வின் நட்சத்திரப் பிரச்சாரகர் வரை
நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவுக்குப் பிறகு கடந்த தேர்தல்களில் பல மாநிலங்களில் பிரச்சாரம் செய்தவர் யோகி ஆதித்யநாத். பா.ஜ.க-வின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலின் முன்னணியில் யோகி ஆதித்யநாத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஆனால் பா.ஜ.க-வில் யோகி உருவாக்கிய இந்த இடம் ஒரு கிளர்ச்சியுடன் தொடங்கியது. சில வருடங்கள் பின்னோக்கிச் செல்வோம். கருப்பு கண்ணாடி மற்றும் இறுக்கமான ஆடைகளுடன், அஜய் சிங் பிஷ்ட், அதாவது யோகி ஆதித்யநாத்தின் கல்லூரி நாட்கள்.
"அஜய் சிங் பிஷ்ட்டின் சகோதரியின் கணவர், அவர் ஒரு இடதுசாரிக் கட்சியின் மாணவர் பிரிவில் சேரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அஜய் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷதில் (ஏ.பி.வி.பி) சேர்ந்தார். கடுமையாக உழைத்தபோதும் ஏபிவிபி அஜய்யை வேட்பாளராக்காத போது எதிர்ப்பின் முதல் தீப்பொறி தோன்றியது,” என்று 'யோகி ஆதித்யநாத்' என்ற தங்கள் புத்தகத்தில் ஷரத் பிரதானும், அதுல் சந்திராவும் எழுதியுள்ளனர்.
யோகி என்கிற அஜய் பிஷ்ட், ஏ.பி.வி.பி-க்கு எதிராக சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் அரசியலில் யோகி ஆதித்யநாத்தின் முதல் மற்றும் ஒரே தோல்வி இதுவாகும். 26 வயதில் முதல் முறையாக எம்.பி ஆனதில் இருந்து 2வது முறையாக உ.பி.யின் முதல்வராக ஆகியிருப்பது வரை யோகி ஆதித்யநாத் ஒரு தேர்தலிலும் தோற்றதில்லை.

பட மூலாதாரம், Getty Images
யோகியும் மோதலும்
கட்சிக்குள் யோகியின் பேச்சுக்கு செவிசாய்க்கப்படவில்லை என்றால் அதன் விளைவை தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது. யோகி பாஜகவில் இருக்கும்போதே கட்சித் தலைவர்களுடன் மோதி வருகிறார். கட்சித்தலைமையின் முன் தன் ஆட்களின் பட்டியலை வைத்து டிக்கெட் கேட்பார். பலமுறை யோகி பா.ஜ.க-வுக்கு எதிராக கிளர்ச்சி வேட்பாளர்களை நிறுத்தியதுடன் பிரச்சாரமும் செய்தார். ஆனால் காலப்போக்கில் யோகியின் போக்கு தன்மையானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
யோகிக்கும், பா.ஜ.க-வின் பெரிய தலைவர்களுக்கும் இடையேயான இந்த 'மோதல்', மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை அரசல் புரசலாக வெளிவருகிறது.
2024-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி நடந்த தேர்தல் பேரணியில், "என்னிடம் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றால் உத்தரப் பிரதேச முதல்வரை இரண்டு மாதங்களுக்குள் மாற்றுவார்கள். யோகி ஆதித்யநாத்தின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். அவரையும் அகற்றிவிடுவார்கள்,” என்று கேஜ்ரிவால் கூறினார்.
இருப்பினும் உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் வரை மாற்றம் ஏதும் நடக்கும் என்று சொல்ல முடியாது, ஏனென்றால் பா.ஜ.க இவ்வளவு பெரிய ஆபத்தை இப்போது விலைக்கு வாங்காது என்று பல நிபுணர்கள் பிபிசி-யிடம் தெரிவித்தனர்.
ஆனால் உத்தரப் பிரதேசம் முதல் டெல்லி வரை, யோகியின் எம்.எல்.ஏ-க்கள், தலைவர்கள் மற்றும் கூட்டாளிகள் அவருக்கு எதிராக ஏன் காணப்படுகிறார்கள்?

பட மூலாதாரம், ANI
யோகியின் ஆட்களே அவர்மீது கோபத்தில் இருப்பது ஏன்?
முன்னதாக பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் (சோனேலால்) தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சருமான அனுப்ரியா படேலும், யோகி ஆதித்யநாத் மீது தனது புகாரை பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விஷயத்தில் அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று அனுப்ரியா யோகிக்கு கடிதம் எழுதியிருந்தார். யோகி ஆதித்யநாத்தின் அரசியலில் புல்டோசருக்கு தனி இடம் உண்டு. தேர்தல் பிரசாரத்தின் போது யோகியின் பேரணிகளில் பல இடங்களில் புல்டோசர்கள் நிறுத்தப்பட்டன.
"மாஃபியாவுக்கு எதிராக புல்டோசர்களைப் பயன்படுத்த வேண்டும். இதை வீடற்ற ஏழை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் அந்த மக்கள் ஒன்றிணைந்து தேர்தலில் நம்மை தோற்கடிப்பார்கள்,” என்று சஞ்சய் நிஷாத் ஜூலை 16-ஆம் தேதி கூறினார்.
டெல்லியில் இருந்து சிக்னல்கள் வராமல் இதெல்லாம் சாத்தியமில்லை என்றும் யோகிக்கு எதிராக களம் தயாராகி வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்களுக்கு யோகி மீது இருக்கும் அதிருப்தி
யோகி அரசில் அமைச்சர்-தலைவர் மற்றும் அதிகாரிகள் இடையேயான சண்டையை ஒரு சம்பவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. யோகி அரசின் அமைச்சர் ஒருவர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நகரத்தின் மேயர் அமைச்சரிடம், “ஆன்லைனில் இணைந்துள்ள அதிகாரிகள் தங்கள் கேமராக்களை கூட ஆன் செய்யவில்லை. இத்தனை ஒழுங்கீனமா,” என்று கூறினார்.
"நீங்கள் உங்கள் வேலையைச் சொல்லுங்கள். வேலை முடிந்துவிடும். அதிகாரிகளை விட்டுவிடுங்கள்,” என்று அமைச்சர் பதில் அளித்தார்.
இது போல பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இதுபோன்ற பல தகவல்கள் வெளிவந்தன. அதிகாரிகளின் கையே ஓங்கி இருக்கிறது என்றும் கட்சியினர் துன்புறுத்தப்படுவதாகவும் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
இது உண்மையா? இதைப் புரிந்துகொள்ள, யோகி அரசின் இரண்டு எம்.எல்.ஏ-க்களுடன் பிபிசி பேசியது.
கிழக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், “கடந்த மக்களவைத் தேர்தலுக்கான டிக்கெட் விநியோகத்தின் போதே பா.ஜ.க-வில் கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன. வேட்பாளர்கள் குறித்து யோகி ஆதித்யநாத்துக்கும் மத்திய தலைமைக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட நீண்ட சமயம் பிடித்தது,” என்று குறிப்பிட்டார்.
பா.ஜ.க சார்பில் இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்ற மூத்த எம்.எல்.ஏ ஒருவர், உ.பி-யில், பா.ஜ.க தலைமைக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து பிபிசி-யிடம் பேசினார்.
“கடந்த 3-4 ஆண்டுகளில், பல எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது. நிர்வாகத்துறையினருக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பதே இதற்கு காரணம். உதாரணமாக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் கூட அதிகாரிகளை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. அப்போதும் கூட பொதுமக்களின் பணிகள் முடிவதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், FB/YOGIAADITYANATH
யோகி உண்மையில் அதிகாரிகளுக்கு அதிக இடம் கொடுத்துள்ளாரா?
"முந்தைய அரசுகளின் காலத்தில் எம்.எல்.ஏ அல்லது எம்.பி லக்னெளவில் புகார் அளிக்கும் ஆபத்து இருந்தது. இடமாற்றமும் விரைவாக நடந்தன. ஆனால் யோகி அரசில் அப்படி இல்லை,” என்று உத்தரப் பிரதேச அரசின் அதிகாரி ஒருவர் பிபிசி இந்தியிடம் கூறினார்.
"எம்.எல்.ஏ ஏதாவது இடையூறு ஏற்படுத்தினால் தன் பணியை தொடர பி.டி.ஓ-வுக்கு இப்போது உரிமை இருக்கிறது. புகார் அளித்தாலும் விஷயம் பெரிதாக இல்லாதவரை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதையெல்லாம் செய்து யோகி ஆதித்யநாத் சவால்களை எதிர்கொள்கிறார் என்றால், அவர் ஏன் இதைச் செய்கிறார்?
"வேலை முடிவதே யோகியின் முன்னுரிமை. அதிகாரிகள் நன்கு உழைக்கவேண்டும். செய்த பணி புள்ளிவிவரங்களில் வேண்டும், வேலை செய்யும் போது படங்களை அனுப்பவேண்டும், வீடியோ காலிங் செய்ய வேண்டும். ஆனால் வேலை செய்யுங்கள் அதன் விளைவு முடிவுகளில் தெரியவரும் என்பது அகிலேஷின் நிர்வாகமாக இருந்தது. வேலை செய்வது பொதுமக்களுக்கு தெரியவேண்டும் என்பது யோகியின் பாணி,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கான்பூரில் எட்டு போலீஸ்காரர்களைக் கொன்ற விகாஸ் துபேயின் 'என்கவுண்டராக' இருக்கட்டும், 2020-இல் ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மாவட்ட ஆட்சியரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையாகட்டும் அல்லது கும்பமேளாவின் போது உத்தரப் பிரதேச போலீஸ் ஹெலிகாப்டரில் இருந்து பூமழை பொழிந்த நிகழ்வாகட்டும், இதுபோன்ற பல சம்பவங்களிலிருந்து யோகிக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான உறவை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
"கடுமையான நிர்வாகியாக இருக்கும் ஒருவரைச் சுற்றி இந்த பிம்பம் உருவாகிறது. முன்னேற்றத்தை கொண்டு வருவது கடினம். அதிகாரி வேலை செய்யவில்லை என்றால் யார் செய்வார்கள்? முன்பு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போது அதிக காலம் ஒரே இடத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது. அதிகாரிகள் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு காலை 7.30 மணிக்கு யோகியிடம் இருந்து அழைப்பு வருகிறது,” என்று 'தி மாங்க் ஹூ டிரான்ஸ்ஃபார்ம்ட் உத்தர்பிரதேஷ்' புத்தகத்தின் ஆசிரியர் சாந்தனு குப்தா பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
யோகி 'மோதி மாடலை' பின்பற்றுகிறாரா?
ஜெய்சங்கர், ஆர்.கே.சிங், ஹர்தீப் பூரி, அஸ்வினி வைஷ்ணவ், அர்ஜுன் மேக்வால் போன்ற பலர், முதலில் மூத்த அதிகாரிகளாக இருந்து பின்னர் மோதி அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள். அதிகாரிகளை சார்ந்திருக்கும் மாடலை குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நரேந்திர மோதியும் பின்பற்றினார். குஜராத்தில் இருந்து பல அதிகாரிகளை மோதி டெல்லிக்கு அழைத்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் மோதியின் வழிமுறைகளை யோகி கடைப்பிடிக்கிறாரா?
''மோதி முதல்வர் ஆனபோது, அமைச்சர்களை நம்பி இருப்பதைக் காட்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அதிகாரிகள் மூலம் நிர்வாகத்தை நடத்துவது நல்லது என அவர் நினைத்தார். இந்த நிர்வாகத்துறையை மையமாகக் கொண்ட அரசியல் அமைப்பு அங்கிருந்து தொடங்கியது. இதற்கு முன் அரசியல் தொண்டர்கள் மையப்புள்ளியாக இருந்தனர்,” என்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியர் டாக்டர் பங்கஜ் குமார் கூறினார்.
ஆனால் இதுபோன்ற அமைப்பில் அதிகாரிகளுக்கும் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகிறதா?
அதற்கு பதிலளித்த டாக்டர் பங்கஜ் குமார், “அதிகாரிகள் கட்டுக்கடங்காதவர்களாக மாறுகிறார்கள். தொண்டர் ஓரங்கட்டப்படுகிறார். அதிகாரிகளின் ஊழல்கள் தடுக்கப்படவில்லை, ஆனால் தொண்டருக்கு சாப்பிட ஒரு ரொட்டி கூட கிடைக்கவில்லை என்பதே இந்தத் தேர்தலில் பாஜக தொண்டர்கள் வீட்டிலேயே முடங்கியதற்குக் காரணம். தொண்டர்களின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் சரியானவை. அதிகாரத்துவத்தை மையமாகக் கொண்ட மாதிரி இருக்கும்போது, அதில் தொண்டர் புறக்கணிக்கப்படுகிறார்,” என்று குறிப்பிட்டார்.
''லஞ்சம் அதிகரித்துள்ளதாக உள்ளே இருப்பவர்கள் கூறுகின்றனர். யோகி கவனிக்கிறார் எனவே தொகை அதிகமாகிவிட்டது என்று ஒவ்வொரு லஞ்சம் வாங்குபவரும் சொல்கிறார்கள்,” என்று இந்துஸ்தான் நாளிதழின் ஆசிரியராக இருந்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் நவீன் ஜோஷி கூறினார்.
தொழிண்டர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து இதே போன்ற கருத்துக்களை உத்தரப் பிரதேசத்தின் பல பா.ஜ.க தலைவர்கள் கூறியுள்ளனர். பின் மோதியும் ஷாவும் கடந்த காலத்தில் கடைப்பிடித்த நிலைப்பாட்டை ஏன் தொடரவில்லை?

பட மூலாதாரம், FB
யோகியை நீக்குவது பா.ஜ.க-வுக்கு சுலபமா?
கடந்த சில ஆண்டுகளில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களையும் இந்தப் பெயர்களையும் நினைவில் கொள்ளுங்கள்.
• மத்திய பிரதேசம்: சிவராஜ் சிங் செளஹான்
• ஹரியாணா: மனோகர் லால் கட்டர்
• உத்தராகண்ட்: திரிவேந்திர சிங் ராவத் மற்றும் தீரத் சிங் ராவத்
• குஜராத்: விஜய் ரூபானி
• திரிபுரா: பிப்லப் தேப்
தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ பாஜக, தனது பெரிய முகங்களை முதல்வர் நாற்காலியில் இருந்து அகற்றியுள்ளது. மற்ற கட்சிகளைப் போல் கட்சி உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் பா.ஜ.க தலைமை இருந்ததாகத் தெரியவில்லை. இதன் காரணமாக பெயர் தெரியாத தலைவர்களைக் கூட பா.ஜ.க முதல்வராக்க முடியும்.
ஆனால் உத்தரப் பிரதேச விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. இதற்கு என்ன காரணம்?
“யோகி ஆதித்யநாத் பா.ஜ.க-வின் நிர்பந்தமும் கூட, பலமும் கூட. யோகியை நீக்கினால் அவர் அமைதி காக்க மாட்டார், பாஜகவுக்குத் தான் கேடு செய்வார். மற்ற மாநிலங்களில் கூட மோதிக்கு அடுத்தபடியாக யாருக்காவது அதிக கிராக்கி இருக்கிறது என்றால் அது யோகிக்குத் தான். யோகி தான் 'அச்சமற்ற இந்து தலைவர்’ என்ற பிம்பத்தை மிக நன்றாக உருவாக்கியுள்ளார்,” என்று பேராசிரியர் டாக்டர் பங்கஜ் குமார் குறிப்பிட்டார்.
"இரண்டாவது காரணம் நாத் பிரிவு, இது நாடு முழுவதும் பரவியுள்ளது. யோகி அதன் மஹந்த் (தலைமை குரு). அதனால் கிடைக்கும் பயனை பா.ஜ.க புரிந்துகொண்டுள்ளது,” என்றார் அவர்.

பட மூலாதாரம், X/SHANTANUG_
நாத் பிரிவு, சாதி மற்றும் யோகி ஆதித்யநாத்
"இந்து தியாவே தேஹுரா, முஸல்மான் மசித்... ஜோகி தியாவே பரம் பத், ஜஹான் தேஹுரா நா மசித்."
யோகி ஆதித்யநாத் தலைமை குருவாக இருக்கும் கோரக்பூர் கோவிலுக்கு வெளியே இந்த வரி எழுதப்பட்டுள்ளது.
இதன் பொருள் – 'இந்துக்கள் கோவில்களிலும், முஸ்லிம்கள் மசூதிகளிலும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் யோகி பரமாத்மாவை தியானிக்கிறார், அவர் கோவில்களிலோ மசூதிகளிலோ அவரைத் தேடுவதில்லை.’
இந்த பிம்பத்தின் வேர்கள் நாத் பிரிவினருடனான யோகியின் உறவில் இருந்து தொடங்குகிறது. யோகி ஆதித்யநாத், நாத் பிரிவினரின் மிக முக்கியமான மடமான கோரக்நாத் கோவிலின் வாரிசாக தனது குரு மஹந்த் அவைத்யநாத்திடமிருந்து 1994-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீட்சை எடுத்தார். இந்த மடத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் மிக அதிகம்.
"மற்ற தலைவர்களுக்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், கோரக்மட் காரணமாக யோகிக்கு தனிப்பட்ட அடித்தளம் உள்ளது. முதல்வர் ஆன பிறகு யோகி தனது இந்து யுவ வாஹினியை அமைதிப்படுத்தினார். இப்போது அது மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத்தொடங்கியுள்ளது. யோகி தனது மனநிலையைக்காட்ட அதை பயன்படுத்தக்கூடும்,” என்று நவீன் ஜோஷி பிபிசி இந்தியிடம் கூறினார்.
"கோரக்நாத் மடத்தின் மஹந்தை நீக்குவது தவறான இந்துத்துவ சமிக்ஞையை அனுப்பும். அரசியலே இந்துத்துவமாக இருக்கும் போது நீங்கள் பெரிய மடத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். யோகியின் பிம்பமும் இந்துத்துவமயமானது,” என்று பா.ஜ.க-வுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
“யோகி வயதில் இளையவர். யோகிக்கு அரசியல் செல்வாக்கு மட்டுமின்றி மத செல்வாக்கும் உள்ளது. பா.ஜ.க-வே மற்ற மாநிலங்களில் யோகியை பயன்படுத்தியது. யோகி வரவேண்டும் என்று வட-கிழக்கில் இருந்தும் கோரிக்கை வந்தது. ஆனால் 2024 தேர்தல் முடிவுகளால் யோகி பலவீனமடைந்துள்ளார் என்பதும் உண்மைதான்,” என்று நவீன் ஜோஷி குறிப்பிட்டார்.
யோகி ஆதித்யநாத் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர். உத்தரப்பிரதேசம் தவிர, பிகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தாக்கூர்கள் மத்தியிலும் யோகியின் புகழ் கணிசமாக அதிகரித்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வட இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை ஓரளவு நன்றாக உள்ளது. பா.ஜ.க-வுக்கு இதை இழக்கும் பயம் உள்ளது. இந்தக் காரணங்களால் யோகியை அகற்றுவது எளிதல்ல.
மோதி, ஷா, மற்றும் பா.ஜ.க-வின் முன் உள்ள சவால்கள் என்ன?
யோகியின் புகழ் உயரும் வாய்ப்புகள் உள்ள நிலையில், கட்சியும் பலவீனமடையாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில், மோதி மற்றும் ஷா தலைமையிலான பா.ஜ.க-வின் முன் உள்ள சவால்கள் என்ன?
“மோதி, ஷா மற்றும் யோகி ஆகிய மூவருக்கும் இதே சவால் உள்ளது. பாஜக வலுவிழந்து வருவதுபோல காணப்படும் நேரம் இது. மக்களவை தேர்தலும் இதை தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கட்சி வலுவிழந்தால்,அதன் புகழும் குறையும்,” என்று பாஜக-வை உன்னிப்பாக கவனித்துவரும் வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
“யோகி ஆதித்யநாத், ஷாவிற்கு அதிக சவாலாக இருக்கிறார். மோதி இப்போது தனது வாரிசை தயார் செய்ய வேண்டும். அமித் ஷா நாடு முழுவதும் பெரிய அளவில் பிரபலமாக இல்லை. கூடவே சாதி அடிப்படையில் அவருக்கு அதிக ஆதரவு இல்லை என்பதும் உண்மைதான்,” என்று பேராசிரியர் பங்கஜ் குமார் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், ANI
ஆர்.எஸ்.எஸ்-உடன் தூரமும் நெருக்கமும்
மோதி சங்கத்திடமிருந்து ஒதுங்கிவிடுவார் என்று கடந்த ஆண்டுகளில் பலமுறை கூறப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நரேந்திர மோதி பத்தாண்டுகளில் முதல் முறையாக நாக்பூரில் இரவு தங்கினார்.
“அமித் ஷா மைனஸ் மோதி என்றால் அவருக்கென்று தனியான ஒளிவட்டம் இல்லை. ஆனால் யோகிக்கு அது உள்ளது,” என்று பேராசிரியர் பங்கஜ் குமார் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் பா.ஜ.க-வால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. 400-ஐ தாண்டுவோம் என்ற முழக்கத்துடன் பா.ஜ.க களம் இறங்கியிருந்த நிலையில் இந்த தேர்தல் முடிவு வந்துள்ளது.
“பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மோதி பலவீனமாகிவிட்டார். வியூகம் வகுத்தவர் ஷா என்பதால் அவரும் பலவீனமாகி விட்டார். உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்கள் வந்திருந்தால் யோகியும் பெரிய ஆளாக உருவெடுத்திருப்பார். பிரதமராக வேண்டும் அல்லது மோதிக்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே யோகியின் ஆசை. யோகியை தொடர்ந்து வளர அனுமதித்தால் அவர் எதிர்காலத்தில் சவாலாக மாறுவார்,” என்று மூத்த பத்திரிக்கையாளர் நவீன் ஜோஷி குறிப்பிட்டார்.
''விழுங்கவோ அல்லது துப்பவோ முடியாத இக்கட்டான நிலையில் மோதியும் ஷாவும் உள்ளனர். மோதி மற்றும் ஷாவின் கழுத்தில் சுருக்குக் கயிறு போல யோகி உள்ளார்,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பா.ஜ.க-வின் இக்கட்டான நிலை
நரேந்திர மோதியின் தலைமையில் பா.ஜ.க பல வரலாறுகளை படைத்துள்ளது. ஆனால் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அக்கட்சி தற்போது பல சவால்களை எதிர்கொள்கிறது.
“சமாஜ்வாதி கட்சி வலுவடைவது பா.ஜ.கவுக்கு சவாலாக உள்ளது. சந்திரசேகர் ஆசாதும் வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஜாதவ் வாக்குகளும் சந்திரசேகருக்குப் போகலாம். இரண்டாவதாக, ராகுல் காந்தியின் கிராஃப் திடீரென அதிகரித்துள்ளது. சன்சத் டிவியில் மக்கள் மோதியை விட 20 மடங்கு அதிகமாக ராகுலை பார்க்கின்றனர். கூகுள் தேடல் தரவுகளிலும் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்,” என்று பாரதிய ஜனதா கட்சி பற்றி செய்திகள் எழுதும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“பா.ஜ.கவுக்கு மேற்கு வங்கம் சறுக்கிவிட்டது. அசாம் கைநழுவுகிறது. உ.பி.யில் பிரச்னை உள்ளது. மகாராஷ்டிராவில் மக்களின் நாட்டம் உத்தவ் பக்கம் திரும்பியுள்ளது. கூடவே ஹரியாணாவில் காங்கிரஸ் தன் நிலையை வலுப்படுத்தும்,” என்றார் அவர்.
ஆனால் இந்தத் தேர்தலுக்கு முன் உ.பி.யில் பரவியுள்ள ஊகங்களால், அமைப்பும், அரசும் பலவீனமாகுமா?
“எல்லா இடங்களிலும் சில மோதல்கள் இருக்கும். தான் முதல்வர் ஆகலாம் என்று பா.ஜ.கவில் யாராவது நினைக்க முடியுமா? சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷைத் தவிர வேறு யாராலும் இதை சிந்திக்க முடியாது. வாய்ப்பு இருக்கும்போது லட்சியங்களும் இருக்கும். 2014இல் நரேந்திர மோதிக்கு எதுவுமே எளிதாகக் கிடைக்கவில்லை. முழுமையான உழைப்பு இருந்தது,” என்று யோகி ஆதித்யநாத் குறித்து புத்தகம் எழுதியுள்ள சாந்தனு குறிப்பிட்டார்.
யோகி vs கேசவ் பிரசாத் மெளரியா என்ற ஊகங்களுக்கு மத்தியில் பாஜக என்ன செய்யப்போகிறது?
"கேசவ் பிரசாத் மெளரியாவை இப்போது நீக்குவது எளிதல்ல. அவர் ஓபிசி. இப்போது மௌரியாவை நீக்கினால் பிற்படுத்தப்பட்டவர்களின் விரோதி என்று கட்சியை சொல்வார்கள். அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது. யோகி எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்,” என்று பாஜகவுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
“யோகி ஆதித்யநாத்தை விட பாஜகவுக்கு சவாலாக இருப்பது, முதல்வரை மாற்றும் துணிச்சலைத் திரட்ட முடியுமா என்பதுதான். உ.பி.யில் ஆட்சி மாற்றம் எதுவும் நடக்காது,” என்று மூத்த செய்தியாளர் சுமன் குப்தா பிபிசி இந்தி போட்காஸ்டில் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
யோகியின் முன் உள்ள சவால்கள் என்ன?
யோகி ஆதித்யநாத் கட்சி தொடர்பான சவால்களை மட்டுமே எதிர்கொள்கிறார் என்பது இல்லை.
யோகி ஆதித்யநாத்தின் பணி செய்யும் விதம், செய்தியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 'புல்டோசர் பாபா' என்ற பிம்பம் மற்றும் முஸ்லிம்கள் மீதான அவரது அணுகுமுறை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால் அவருக்கு ஆதரவானவர்களே அவர் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
”இரண்டு விஷயங்கள் யோகிக்கு தீங்கிழைத்தன. யோகி குற்றவாளிகளைக் கொன்றார் அல்லது சிறையில் அடைத்தார். அவர்களில் பலர் தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர். சட்டப்படி இவர்கள் குற்றவாளிகள் தான் என்றாலும் வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர். அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. அப்படி இருந்தும் புல்டோசர் பயன்படுத்தப்பட்டது. அது சேதம் விளைவித்தது,” என்று செய்தியாளர் நவீன் ஜோஷி கூறினார்.
”வெறும் கவர்ச்சிப்பேச்சு மட்டும் போதாது, இதை செய்து காட்டுங்கள். செய்ய முடியுமா முடியாதா என்று யோகி சொல்வார். கூட்டங்களில் யோகி இப்படித்தான் நடந்து கொள்வார். 2024க்கு பிறகு அவர் பலவீனமாகி விட்டதால் இந்த வெறுப்பு வெளிப்படுகிறது,” என்றார் அவர்.
மத்தியில் மோதியுடன் அமித் ஷா காணப்படுவது போல உத்தரப்பிரதேசத்தில் யோகியுடன் எந்த தலைவரும் காணப்படுவதில்லை.
“நரேந்திர மோதி அல்லது அமித் ஷாவைப் போல அல்லாமல் யோகி, பாரம்பரிய முறையில் கட்சியில் மேலே வரவில்லை. யோகி கட்சியில் முக்கிய பங்கும் வகித்ததில்லை. இதையெல்லாம் இப்போது யோகி செய்கிறார்,” என்று சாந்தனு குப்தா தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு லக்னெளவின் அக்பர் நகரில் வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டன. விதிமீறல் கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தது.
”யோகி அழுத்தத்தில் இருக்கிறார். இதை இரண்டு விஷயங்களில் இருந்து புரிந்துகொள்ள முடியும். பந்த் நகரில் வீடுகளை இடிக்கும் முடிவு வாபஸ் பெறப்பட்டது. ஆசிரியர்கள் மீது டிஜிட்டல் வருகையை திணிக்கும் முடிவு திரும்ப பெறப்பட்டது,” என்று நவீன் ஜோஷி கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
யோகியின் எதிர்காலம் என்ன?
இத்தகைய சவால்களுக்கு மத்தியில், யோகி ஆதித்யநாத்தின் அரசியல் பயணம் என்னவாக இருக்கும்?
“இத்தகைய பிரபலமான தலைவரை நீக்கி பாஜக தற்கொலை நடவடிக்கை எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. சில மாற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வளவு பெரிய கட்சி, மத்தியில் ஆட்சி இருக்கிறது, சில ஆசைகள் சமாளிக்கப்படும். கட்சி மூலமாக மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பதை யோகி புரிந்து கொண்டார். எனவே தன்மீது சில மாற்றங்களை அவர் கொண்டுவருவார்,” என்று சாந்தனு குப்தா குறிப்பிட்டார்.
உ.பி.யில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல் நடைபெறக்கூடும். 2022இல் இந்த 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஐந்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. அப்போது சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக்தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இப்போது அந்தக்கட்சி பா.ஜ.கவுடன் உள்ளது.
மூன்று இடங்களை பா.ஜ.க-வும், ஒரு இடத்தை நிஷாத் கட்சியும் கைப்பற்றின. இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகள் வருமாறு - ஃபூல்பூர், கடேஹாரி, கர்ஹால், மில்கிபூர், மீராபூர், காசியாபாத், மஜ்வான், சிசாமாவ், கெய்ர் மற்றும் குந்தர்கி.
”யோகியின் அரசியல் வருங்காலம் இந்த இடைத்தேர்தலை பொறுத்தே அமையும். யோகியை எப்படி நீக்குவது என்று அமித்ஷாவும் யோசித்து வருகிறார். அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அமித் ஷாவுக்கு நிர்வாக அதிகாரம் இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது செயல்பாடு இல்லை என்று மக்கள் கருதுகின்றனர்,” என்று பேராசிரியர் பங்கஜ் குமார் குறிப்பிட்டார்.‘

பட மூலாதாரம், ANI
அகிலேஷின் எழுச்சியால் அதிகரித்துள்ள சவால்
இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமஜ்வாதி கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
”இந்த இடைத்தேர்தலில் யோகி தனது நாற்காலியை காப்பாற்றிக்கொண்டால் அவர் சக்திவாய்ந்தவராக உருவெடுப்பார். சமாஜ்வாதியும் காங்கிரஸும் இந்தத் தேர்தல்களில் காட்டிய தாக்கத்தின் சூழலை அதுவரை பேண முடியுமா என்றால் அப்படி நடப்பது மிகவும் கடினம். ஒப்பீட்டளவில் யோகி பா.ஜ.க-வில் அதிக செல்வாக்கு பெறுவார். ஆதித்யநாத், மோதியை விட ஷாவுக்கு சவாலாக இருப்பார்,” என்று செய்தியாளர் நவீன் ஜோஷி கூறினார்.
“கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து யோகி இதுவரை வெளிப்படையாக எதையும் கூறியதில்லை. மௌரியா பேசுவது போல் யோகி பேசுவதில்லை. இந்த விஷயம் அவருக்கு சாதகமாக செல்கிறது,” என்றார் அவர்.
உ.பி மற்றும் பிகாரில் நடந்த தேர்தல்களின் போது, டெல்லியில் மோதி, உ.பி.யில் யோகி என்று வாக்காளர்கள் கூறிய பல வீடியோக்கள் வைரலானது.
“ஒரு வருடத்திற்கு முன்பு அடிமட்ட நிலையில் முதலில் மோதி, பிறகு யோகி என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மோதிக்கு தடங்கல் என்றால் யோகிக்கும் தடங்கல் வரும்,” என்று பல தேர்தல்களில் செய்திகளை வெளியிட்ட மூத்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
உ.பி.யில் பா.ஜ.க-விற்குள் தெளிவான பிளவு தெரிவதாக பாஜக-வுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு துணை முதல்வர்களும் யோகியுடன் இல்லை. கூட்டங்களிலும் கலந்து கொள்வதில்லை. யோகிக்கு பல எம்.எல்.ஏ-க்கள் மத்தியிலும் நல்ல இமேஜ் இல்லை. யோகி காரணமாக கட்சிக்கு ஏற்பட்டுள்ள நலிவு அவரை நீக்கினால் மேலும் அதிகமாகலாம்.

பட மூலாதாரம், Getty Images
உத்தரப்பிரதேசத்தில் நிலவும் பல கேள்விகள்
2002-ஆம் ஆண்டு வகுப்பு கலவரத்திற்குப் பிறகு, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நரேந்திர மோதியை அகற்ற விரும்பினார், ஆனால் லால் கிருஷ்ண அத்வானி இதை அனுமதிக்கவில்லை என்று மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா 2019 மே மாதத்தில் கூறினார்.
ஆண்டுகள் கடந்து 2013-இல் பிரதமர் பதவிக்கான போட்டியில் மோதியை விட அத்வானி பின்தங்கினார்.
பின்னர் 2014-இல் மோதி பிரதமரான போது அத்வானி ’வழிகாட்டல் குழுவுக்கு’ அனுப்பப்பட்டார்.
2017-இல் உத்தரப் பிரதேசத்தில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தபோது மனோஜ் சின்ஹா, கேசவ் பிரசாத் மெளரியா போன்ற பெயர்கள் அடிபட்டபோது, மோதி மற்றும் ஷா தலைமையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார்.
கடந்த சில ஆண்டுகளில் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் மோதிக்கு அடுத்தபடியாக யோகியை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலில் ஏற்கனவே நிகழ்ந்த ஒரு விஷயம் பெரும்பாலும் மீண்டும் அரங்கேறும் என்று சொல்வார்கள். இந்த சிறிய விஷயம் பல தலைவர்களின் கவலையை அதிகரிக்கக்கூடும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












