உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்ய திட்டமா? பாஜகவில் என்ன நடக்கிறது?

கேசவ் பிரசாத் மெளரியாவால் யோகி ஆதித்யநாத்துக்கு சவால் விட முடியுமா?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத் மற்றும் கேசவ் பிரசாத் மெளரியா

2024-ஆம் ஆண்டு, ஜூலை 14-ஆம் தேதி. லக்னெளவில் பா.ஜ.க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் உத்திரபிரதேச அரசின் இரண்டு உயர்மட்டத் தலைவர்கள் அம்மாநிலத்தில் பா.ஜ.க-வின் மோசமான தேர்தல் செயல்பாட்டிற்கு வெவ்வேறு காரணங்களைப் பட்டியலிட்டனர்.

உத்திரபிரதேசத்தில் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு அதீத தன்னம்பிக்கையே காரணம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மறுபுறம் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா, 'அரசை விட அமைப்பு பெரியது' என்று கூறினார்.

மாநிலத்தில் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு முதல்வரும், துணை முதல்வரும் வெவ்வேறு காரணங்களை கூறினர். ஆனால் கேசவ் பிரசாத் மெளரியாவின் அறிக்கை யோகி அரசுக்கு எதிரான கூற்றாகப் பார்க்கப்பட்டது.

உத்திரபிரதேசத்தில் யோகி அரசு, கட்சியை விட பெரியதாக ஆகிவிட்டது என்று கேசவ் பிரசாத் மெளரியா கூற விரும்பினார். மறுபுறம் மத்திய தலைமை அதீத தன்னம்பிக்கையுடன் இருந்ததாக யோகியின் அறிக்கை பொருள் கொள்ளப்பட்டது.

இருவரின் அறிக்கைகள் மற்றும் தனித்தனி சந்திப்புகளுக்குப் பிறகு, உத்திரபிரதேசத்தில் பா.ஜ.க குறித்து பல கேள்விகள் எழத் தொடங்கின.

இந்தக் கேள்விகளின் மையத்தில் உள்ளனர் கேசவ் பிரசாத் மெளரியாவும் மற்றும் யோகி ஆதித்யநாத்தும்.

யோகி எந்த தேர்தலிலும் தோற்றதில்லை. கேசவ் மெளரியாவால் ஒரு முறை மட்டுமே சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. கேசவ், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர். அதே நேரத்தில் யோகியின் அடையாளம் ஆர்.எஸ்.எஸ் நிழலில் இருந்து விலகி இந்துத்துவ அரசியலில் இருந்து வருகிறது.

1998-இல் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து யோகி ஆதித்யநாத் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 26 மட்டுமே.

கேசவ் பிரசாத் மெளரியாவால் யோகி ஆதித்யநாத்துக்கு சவால் விட முடியுமா? பா.ஜ.க-வுக்கு கேசவ் பிரசாத் மெளரியா முக்கியமா யோகி ஆதித்யநாத் முக்கியமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை என்ன நடந்தது?

உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் vs கேசவ் பிரசாத் மெளரியா பற்றி நிலவும் ஊகங்களைப் புரிந்து கொள்ள இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

• 2024 ஜூன் 4: மக்களவை தேர்தல் முடிவுகளில் உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவுக்கு 33 இடங்கள் கிடைத்தன. அதாவது 2019-ஆம் ஆண்டை விட 29 இடங்கள் குறைவு.

• ஜூன் முதல் ஜூலை வரை: உ.பி.யில் பல இடங்களில் நிர்வாகத்திற்கும் பா.ஜ.க தலைவர்களுக்கும் இடையே தகராறுகள் மற்றும் வாக்குவாதங்கள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

• 2024 ஜூலை 14: பா.ஜ.க செயற்குழுக் கூட்டம் லக்னெளவில் நடைபெற்றது.

• துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா 'அமைப்பு, மாநிலம் மற்றும் நாடு ஆகியவற்றின் தலைமைக்கு முன்னால் நான் சொல்கிறேன், அரசை விட அமைப்பு பெரியது' என்கிறார். 'அமைப்பை விட யாரும் பெரியவர்கள் இல்லை', என்கிறார்.

• 2024 ஜூலை16: கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் உ.பி. மாநிலத் தலைவர் பூபேந்திர செளத்ரி, டெல்லியில் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர்.

• 2024 ஜூலை 17: கேசவ் பிரசாத் மௌரியா மீண்டும் சமூக ஊடகங்களில் 'அரசை விட அமைப்பு பெரியது' என்கிறார். தொண்டர்களின் வலி என் வலி, அமைப்பை விட யாரும் பெரியவர்கள் இல்லை. தொண்டர்கள் நமது பெருமை.

• 2024 ஜூலை 17: உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளுநரை சந்தித்தார். புகைப்படங்களை பகிர்ந்த ஆளுனர் அலுவலகம் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறியது.

கேசவ் பிரசாத் மெளரியாவால் யோகி ஆதித்யநாத்துக்கு சவால் விட முடியுமா?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் யோகி ஆதித்யநாத் (இடது)

உ.பி, யோகி, மற்றும் ஊகங்கள்

கடந்த ஒன்றரை மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நடந்த இந்த சந்திப்புகள் மற்றும் அறிக்கைகளால் ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் நாற்காலி ஆட்டம் காண்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தக் கேள்வியை மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முதன்முதலில் பெரிய அளவில் எழுப்பினார்.

2024-ஆம் ஆண்டு, மே 11-ஆம் தேதி நடந்த தேர்தல் பேரணியில், "என்னிடம் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றால் உத்தரப்பிரதேச முதல்வரை இரண்டு மாதங்களுக்குள் மாற்றுவார்கள். யோகி ஆதித்யநாத்தின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். அவரையும் அகற்றிவிடுவார்கள்,” என்று கேஜ்ரிவால் கூறினார்.

இப்படிப்பட்டச் சூழ்நிலையில் நரேந்திர மோதி தலைமையில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. உ.பி-யில் பா.ஜ.க-வின் மோசமான செயல்பாடு காரணமாக இந்தக் கேள்வி மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.

மாநிலத்தில் கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்காததால் பா.ஜ.க தலைமை கடும் கோபத்தில் உள்ளது. இதற்காக சிலர் யோகி ஆதித்யநாத்தையும், சிலர் உயர் தலைமையையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கேசவ் பிரசாத் மெளரியாவின் சமீபத்திய அறிக்கை மற்றும் அவரது நடவடிக்கைகளை எதிர்கட்சித் தலைவர்கள் இதனுடன் இணைத்துப்பார்க்கின்றனர்.

அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் என்ன சொன்னார்?

உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஜூலை 17-ஆம் தேதி பா.ஜ.க அரசைக் கடுமையாகச் சாடினார்.

அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பா.ஜ.க-வில் நாற்காலி சண்டை சூடுபிடித்துள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியும் நிர்வாகமும் முடங்கிப்போயுள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.

“பா.ஜ.க மற்ற கட்சிகளில் செய்து வந்த உடைத்தாளும் அரசியலை இப்போது தன் கட்சிக்குள்ளேயே செய்கிறது. அதனால்தான் உட்கட்சிப் பூசல் என்ற புதைகுழியில் பா.ஜ.க சிக்கியுள்ளது. பா.ஜ.க-வில் மக்களைப் பற்றிச் சிந்திப்பவர்கள் யாரும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

அகிலேஷின் இந்த ட்வீட்டுக்கு கேசவ் பிரசாத் மெளரியா பதிலடி கொடுத்துள்ளார்.

"சமாஜ்வாதி கட்சியின் தைரியசாலி அகிலேஷ் யாதவ் அவர்களே, மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க-வின், வலுவான அமைப்பு மற்றும் அரசு உள்ளது. சமாஜ்வாதி கட்சி மக்களிடம் காட்டும் அன்பு ஒரு வெளி வேஷம். உத்திரபிரதேசத்தில் அக்கட்சியின் குண்டர் ஆட்சி மீண்டும் அமைவது சாத்தியமற்றது. பா.ஜ.க 2017 சட்டப்பேரவை தேர்தலில் சாதித்ததை 2027 தேர்தலில் மீண்டும் செய்துகாட்டும்," என்று அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் எழுதினார்.

ஜூலை 18-ஆம் தேதி காலை அகிலேஷ் யாதவ் மீண்டும் ஒரு ட்வீட் செய்தார்: "மழைக்காலச் சலுகை: 100 பேரை கொண்டு வாருங்கள், அரசை அமையுங்கள்!”

யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத், அனுப்ரியா படேல் மற்றும் அமித் ஷா (இடமிருந்து வலமாக)

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத், அனுப்ரியா படேல் மற்றும் அமித் ஷா (இடமிருந்து வலமாக)

யோகிக்கு நெருக்கமானவர்கள் தொடுக்கும் தாக்குதல்

யோகி வேலை செய்யும் விதம் குறித்து கேள்வி எழுப்பியவர்களில் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத்தும் ஒருவர்.

"மாஃபியாவுக்கு எதிராக புல்டோசர்களைப் பயன்படுத்த வேண்டும். இதை வீடற்ற ஏழை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் அந்த மக்கள் ஒன்றிணைந்து தேர்தலில் நம்மை தோற்கடிப்பார்கள்,” என்று சஞ்சய் நிஷாத் ஜூலை 16-ஆம் தேதி கூறினார்.

யோகி ஆதித்யநாத்தின் அரசியலில் புல்டோசருக்குத் தனி இடம் உண்டு. தேர்தல் பிரசாரத்தின் போது, யோகியின் பேரணிகளில் பல இடங்களில் புல்டோசர்கள் நிறுத்தப்பட்டன.

யோகி ஆட்சியில் பல இடங்களில் புல்டோசர் மூலம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

முன்னதாக பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் (சோனேலால்) தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அமைச்சருமான அனுப்ரியா படேலும் யோகி ஆதித்யநாத் மீது தனது புகாரை பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விஷயத்தில் அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று அனுப்ரியா யோகிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அனுப்பிரியாவின் இந்த கடிதத்திற்குப் பிறகு, யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக களம் தயாராகி வருவதாக சில நிபுணர்கள் கூறியிருந்தனர்.

அனுப்ரியா, சஞ்சய் நிஷாத் மற்றும் கேசவ் பிரசாத் மௌரியா ஆகிய மூவரும் ஓபிசி தலைவர்கள்.

இன்னொரு பக்கம் யோகி ஆதித்யநாத், 'உயர்' சாதிகளின் தலைவராகப் பார்க்கப்படுகிறார்.

கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் யோகி ஆதித்யநாத் (வலது)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் யோகி ஆதித்யநாத் (வலது)

யோகி vs கேசவ் பிரசாத் மெளரியா

யோகி மற்றும் கேசவ் இடையேயான அரசியல் இழுபறியாக வல்லுநர்கள் எதைப் பார்க்கிறார்களோ அது, புள்ளிவிவரங்களிலும், கடந்தகாலத்திலும் எப்படி இருந்தது என்பதே இப்போதைய கேள்வி.

இதைப் புரிந்துகொள்ள யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் அரசியலைப் புரிந்துகொள்வது அவசியம்.

2024 மக்களவைத்தேர்தலில் முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது உ.பி-யில் பா.ஜ.க சிறப்பாக செயல்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் யோகி ஆதித்யநாத் தனது கோட்டையான கோரக்பூரை சுற்றியுள்ள இடங்களை தக்க வைத்துக்கொள்வதில் வெற்றி பெற்றார்.

கோரக்பூர், மஹராஜ்கஞ்ச், தியோரியா, குஷிநகர் மற்றும் பான்ஸ்காவ் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

அதேசமயம் கௌஷாம்பி, பிரயாக்ராஜ், பிரதாப்கர் ஆகிய இடங்களில் பா.ஜ.க தோல்வியடைந்தது. இந்த மூன்று இடங்களிலும் கேசவ் பிரசாத் மெளரியாவின் செல்வாக்கு இருப்பதாக நம்பப்பட்டது.

பாஜகவின் ஓ.பி.சி முகமாக கேசவ் பிரசாத் மெளரியா முன்னிறுத்தப்பட்டு வருகிறார். ஆனால் இந்தத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை மெளரியாவால் கொண்டு வர முடியவில்லை.

யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் பிரதமர் நரேந்திர மோதி

பா.ஜ.க-வில் கேசவ் பிரசாத் மெளரியாவின் இடம்

உத்திரபிரதேசம் மற்றும் பா.ஜ.க-வில் கேசவ் பிரசாத் மெளரியாவின் அரசியல் இடத்தை இந்தச் சில ஆண்டுகளின் காலவரிசையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

கேசவ் பிரசாத் மெளரியா 2022-ஆம் ஆண்டு உ.பி சட்டப்பேரவைத் தேர்தலில் சிராத்து தொகுதியில் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கேசவ் பிரசாத் மெளரியாவுக்கு இடம் கிடைக்காது என்று நம்பப்பட்டது.

ஆனால் அப்படி நடக்கவில்லை. மாநிலத்தின் துணை முதல்வராக கேசவ் பிரசாத் மெளரியா நியமிக்கப்பட்டார். கேசவ் பிரசாத் மெளரியா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். அதே நேரத்தில் யோகி, அமித் ஷாவின் எதிரியாக சித்தரிக்கப்படுகிறார்.

கேசவ் பிரசாத் மெளரியா உத்தரப் பிரதேசத்தில் நான்கு முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால் 2012-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது.

2014-இல் கேசவ் பிரசாத் மெளரியா, ஃபூல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றார். இந்தத் தொகுதியில் பாஜக முதல்முறையாக வெற்றி பெற்றது.

ஃபூல்பூர் தொகுதியில் பா.ஜ.க பெற்ற இந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது என்றால் கேசவ் பிரசாத் மெளரியா பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2017 சட்டப்பேரவை தேர்தல் நடந்து பா.ஜ.க ஆட்சி அமைந்தது. அப்போது முதல்வர் பதவிக்கான போட்டியில் கேசவ் பிரசாத் மெளரியா இருந்தார். ஆனால் முதல்வர் பதவி யோகி ஆதித்யநாத்துக்கு சென்றது.

யோகி அரசு அமைந்த பிறகு கேசவ் பிரசாத் மெளரியா முதலில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். ஆனால் 2022-இல் அவரிடமிருந்து இந்தப்பதவி பறிக்கப்பட்டது. இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

முன்னதாக 2017-ஆம் ஆண்டு மாநில செயலகத்தின் இணைப்பு கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து வேறு இடத்திற்கு மாறுமாறு மெளரியாவிடம் கூறப்பட்டது. இந்த கட்டிடம் உத்தரப் பிரதேச அரசின் அதிகார மையம் என்று கருதப்படுகிறது.

பிரதமர் மோதியுடன் கேசவ் பிரசாத் மெளரியா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதமர் மோதியுடன் கேசவ் பிரசாத் மெளரியா

பா.ஜ.க-வுக்கு கேசவ் பிரசாத் மெளரியா ஏன் முக்கியம்?

கேசவ் பிரசாத் மௌரியா ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் உடன் இணைந்திருந்தார்.

அவர் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் மௌரிய முகம். யாதவர்கள் அல்லாத ஓ.பி.சி சமூகத்தை ஈர்க்கும் பா.ஜ.க-வின் செயல் உத்தியில் அவர் ஒரு பகுதியாக உள்ளார்.

தன்னுடைய சிறு வயதில் தேநீர் மற்றும் செய்தித்தாள்களை விற்பனை செய்ததாக கேசவ் பிரசாத் மெளரியா கூறுகிறார்.

பிரதமர் மோதியைப் போலவே கேசவ் பிரசாத் மெளரியாவின் ஓ.பி.சி அடையாளத்தையும் பா.ஜ.க முன்னிலைப்படுத்துகிறது.

கேசவ் மெளரியா பசு பாதுகாப்பு இயக்கத்திலும் மிகத் தீவிரமாக இருந்தார். கூடவே ராம ஜென்மபூமி இயக்கத்திலும் ஈடுபட்டார்.

பா.ஜ.க-விற்குள் கேசவ் மெளரியா பிராந்திய ஒருங்கிணைப்பாளராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவு மற்றும் கிசான் மோர்ச்சாவின் தலைவராகவும் இருந்தார்.

2017-இல் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் அவர் மாநில பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். யாதவர்கள் அல்லாத ஓபிசி வாக்காளர்களை ஈர்ப்பது, பா.ஜ.க தலைமையை மௌரியாவிடம் ஒப்படைத்ததன் பின்னணியில் இருந்தது.

கேசவ் பிரசாத் மௌரியாவின் சாதி உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ளது. இந்த சாதி வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. அதாவது மௌரியா, மோராவோ, குஷ்வாஹா, ஷக்யா, கோரி, காச்சி மற்றும் சைனி. உத்தரபிரதேசத்தின் மொத்த மக்கள்தொகையில் இவர்களின் பங்கு 8.5% ஆகும்.

 யோகி ஆதித்யநாத் மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத் மற்றும் நரேந்திர மோதி

மௌரியா மற்றும் யோகி பற்றி பா.ஜ.க என்ன நினைக்கிறது?

ஜே.பி நட்டா, பூபேந்திர செளத்ரி மற்றும் கேசவ் பிரசாத் மெளரியாவின் சமீபத்திய சந்திப்பை அடுத்து என்ன நடக்கும்?

யோகி ஆதித்யநாத்தின் வேலை செய்யும் விதத்தை உத்தரப் பிரதேசத்தின் தலைவர்கள் விமர்சித்ததாக இந்த சந்திப்பின்போது உடனிருந்த தலைவர் ஒருவர் கூறியதாக 'தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களை விட யோகி அதிகாரிகளையே அதிகம் சார்ந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.

"கட்சித் தலைமை இந்த தலைவர்களின் பேச்சைக் கேட்டது. 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதன் மீது அவர்களின் கவனத்தை திருப்பியது. இந்த தேர்தல்கள் ஆகஸ்டில் நடைபெற உள்ளதால், அதுவரை எந்த மாற்றமும் ஏற்படும் சாத்தியகூறு இல்லை,” என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் 'தி இந்து' நாளேட்டிடம் தெரிவித்தன.

யோகி ஆதித்யநாத்தின் அதீத தன்னம்பிக்கை கூற்றை கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலில் யோகிக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படலாம். அவர் என்ன செய்ய முடியும் என்பதை இதன் மூலம் பார்க்கலாம் என்று கட்சி கருதக்கூடும் என்றும் அந்த நாளிதழ் எழுதியுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ்

10 தொகுதிகளுக்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் 10 சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து இந்த 10 இடங்களில் 9 இடங்கள் காலியாகியுள்ளன.

சிசாமாவில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த இர்ஃபான் சோலங்கி கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் அந்த இடம் காலியானது.

இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சித்தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது.

2022-இல் இந்த 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஐந்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. அப்போது சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக்தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இப்போது அந்தக்கட்சி பா.ஜ.கவுடன் உள்ளது.

மூன்று இடங்களை பா.ஜ.க-வும், ஒரு இடத்தை நிஷாத் கட்சியும் கைப்பற்றின.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகள் வருமாறு - ஃபூல்பூர், கடேஹாரி, கர்ஹால், மில்கிபூர், மீராபூர், காசியாபாத், மஜ்வான், சிசாமாவ், கெய்ர் மற்றும் குந்தர்கி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)