இந்திய மாணவியின் மரணம் பற்றி 'ஜோக்' அடித்த அமெரிக்க காவலர் பணி நீக்கம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Gofundme
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் அமைந்திருக்கும் நார்த்-ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ஜானவி கண்டுலா (23) என்ற இந்தியாவைச் சேர்ந்த மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
காவல்துறை வாகனம் வேகமாக வந்து மோதியதில், 30 மீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சியாட்டில் காவல்துறையைச் சேர்ந்த டேனியல் ஆடரர், ஜானவி பற்றி இழிவாக பேசியது அவரின் 'பாடி கேமராவில்' பதிவாகியது, என்று சியாட்டில் காவல்துறை தெரிவித்தாக ‘சியாட்டில் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
"அவர் ஒரு சாதாரண நபர்... அவரின் உயிருக்கு பெரிய மதிப்பெல்லாம் இல்லை," என்று நகைச்சுவை தொணியில் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.
டேனியலின் நடத்தை காரணமாகவும், அவர் பேசிய மோசமான கருத்துகள் காரணமாகவும் அவரைப் பணியில் இருந்து நீக்கம் செய்து அறிவித்துள்ளது சியாட்டில் காவல்துறை.
டேனியல் ஆடரரின் அந்தக் கருத்து இழிவானதாகவும் இரக்கமற்றதாகவும் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளது சியாட்டில் காவல்துறை என 'தி சியாட்டில் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், வாட்ஸ்ஆப்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'பாடி கேமராவில்' பதிவான கருத்துகள்
23 வயதான ஜானவி கண்டுலா பல்கலைக்கழகத்திற்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, 119 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த காவல்துறை வாகனம் மோதியதில் உயிரிழந்தார். வாகனம் வேகமாக மோதியதில் அவர் 30 மீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தை விசாரிக்க வந்த டேனியல் ஆட்ரர், "ஜானவி ஒரு சாதாரண நபர்," என்று கூறிச் சிரித்தது மட்டுமின்றி அவருடைய இறப்புக்கு "ஒரு செக் எழுதிக் கொடுத்தால் போதும்" என்று கேலியாகப் பேசியிருக்கிறார்.
இந்த விபத்து குறித்து டேனியல் மற்றொரு காவல்துறை அதிகாரியிடம் பேசியது அவரின் 'பாடி கேமராவில்' பதிவாகியிருந்தது.
"அவர் (ஜானவி) இறந்துவிட்டார்," என்று கூறி டேனியல் சிரிப்பதும், பிறகு "வெறும் சாதாரண ஆள் தான். செக் மட்டும் எழுது," என்று கூறிவிட்டு மீண்டும் சிரிப்பதும் அந்த காட்சியில் பதிவாகியுள்ளது.
"26 வயது தான் இந்த பெண்ணுக்கு... 11,000 டாலர்கள் கிடைக்கும்... அவரின் உயிருக்கு மதிப்பு மிகவும் குறைவு தான்," என்றும் அவர் பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி மக்களின் விமர்சனத்திற்கு ஆளானார் டேனியல்.

பட மூலாதாரம், Getty Images
காவல்துறைக்கே கலங்கம் விளைவிக்கும் செயல் - விசாரணைக் குழு கருத்து
புதன்கிழமை (ஜூலை 17), சியாட்டில் காவல்துறையின் இடைக்கால தலைவர் சூ ரார், டேனியல் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை மின்னஞ்சல் மூலம் அறிவித்தார்.
டேனியலின் செயல்பாடு காவல்துறைக்கும், காவல் பணிக்கும் களங்கம் விளைவித்தது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
'மோசமான, இரக்கமற்றச் சிரிப்பு' அது என்று ரார் தன்னுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார். "இந்தச் சிரிப்பு ஜானவியின் குடும்பத்தினருக்கு ஏற்படுத்திய வலியை, டேனியலின் நீண்ட நாள் சேவையும், காவலர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மதிப்பும் ஒரு போதும் நீக்காது," என்று குறிப்பிட்டிருந்தார்.
"டேனியல் இந்தப் பணியில் நீடிக்க அனுமதிப்பது காவல்துறைக்கு மேலும் அவப்பெயரைத் தான் ஏற்படுத்தும். இந்தக் காரணத்திற்காக நான் அவரைப் பணியில் இருந்து நீக்குகிறேன்," என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
காவலர்களின் நடத்தை குறித்து விசாரணை நடத்தும் 'தி ஆஃபிஸ் ஆஃப் போலீஸ் அக்கவுண்டபிலிட்டி' (The Office of Police Accountability), டேனியலின் மோசமான நடத்தைக்காகவும், விசாரணை அறிக்கை தயாரிப்பதில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதன் காரணமாகவும் அவரைப் பணியில் இருந்து விலக்குமாறும் பரிந்துரை செய்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












