அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் கடுமையான சூழலில் சிக்கி உயிரிழப்பது ஏன்? கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
2024ஆம் தொடங்கி முதல் 100 நாட்களில் அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற சென்ற இந்தியர்களில் 11 பேர், வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகம், உணவகம், நடைபயிற்சிக்கு சென்ற இடம் என பல இடங்களில் இந்திய மாணவர்களின் இத்தகைய திடீர் மரணங்கள் நிகழ்ந்துள்ளது, அங்கு படிக்கச் சென்ற இந்தியர்கள் மத்தியிலும் அவர்களுடைய குடும்பத்தினரிடமும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக அதிகம் பேர் செல்லும் நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா, அடுத்தடுத்து நிகழும் இந்திய மாணவர்களின் மரணத்தை எப்படி பார்க்கிறது?
பல ஆயிரம் மைல் கடந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும் போது அந்த நாட்டின் கலாசாரம், பருவநிலை, சட்டத்திட்டம் ஆகியவற்றை அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை இந்த மரணங்கள் உணர்த்துவதாக அமைந்துள்ளது என்கின்றனர், அமெரிக்கவாழ் இந்தியர்கள்.
2024ல் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மரணம்
சம்பவம் 1 - ஜனவரி 15, 2024
இடம் - கனெக்டிகட்
மரணம் - ஒரே அறையில் தங்கி இருந்த தினேஷ் (22) மற்றும் நிகேஷ் (21) ஆகிய 2 இந்திய மாணவர்களும் உயிரிழந்தனர்.
காரணம் - ஹீட்டரில் இருந்து வெளியேறிய அதிக அளவு கார்பன் மோனாக்சைடு கசிந்து அந்த காற்றை சுவாசித்தது காரணமாக இருக்கலாம்.
சம்பவம் 2 - ஜனவரி 2024
இடம் - UIUC பல்கலைக்கழகம், இல்லினாய்ஸ்
மரணம் - பல்கலைக்கழக வளாகம் அருகே அகுல் தவான் (18) உயிரிழப்பு.
காரணம் - ஹைபோதெர்மியா என்ற அதீத குளிரின் பின்விளைவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ராகிங் காரணமாக கடும் குளிரில் நிறுத்தப்பட்டாரா? அல்லது தாமாக வழிதவறி சென்று கடுங்குளிரில் மாட்டிக் கொண்டாரா? என கண்டறியப்படவில்லை.
சம்பவம் 3 - ஜனவரி 22, 2024
மரணம் - வீடற்ற முதியவரால், பகுதி நேர பணி செய்யும் உணவகத்தில் வைத்து விவேக் சைனி (25) கொல்லப்பட்டார். தலையில் 50 க்கும் மேற்பட்ட முறை குத்திக் கொன்ற அப்படுகொலை வீடியோ வைரலானது. ஏற்கனவே அந்த முதியவருக்கு 2 முறை விவேக் உணவு கொடுத்ததாகவும் தகவல் உள்ளது.
சம்பவம் 4 - ஜனவரி 28, 2024
இடம் - Purdue பல்கலைக்கழகம், இண்டியானா
மரணம் - ஊபர் நிறுவன வாடகை கார் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வந்து இறங்கிய நீல் ஆச்சார்யா (19) மாயம். பின், சடலமாக மீட்கப்பட்டார்.
காரணம் - Asphyxia என்ற அதீத குளிர் மற்றும் எத்தனால் விஷத்தன்மை பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சம்பவம் 5 - பிப்ரவரி 1, 2024
இடம் - சின்சினாட்டி, ஒஹியோ
மரணம் - ஸ்ரேயாஸ் ரெட்டி பணிகர் (19) என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு.
சம்பவம் 6 - பிப்ரவரி 4, 2024
இடம் - சிகாகோ, இல்லினாய்ஸ்
மரணம் - சையது மசாஹிர் அலி சிகாகோவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பும் போது 3 வழிப்பறிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
சம்பவம் 7 - பிப்ரவரி 5, 2024
இடம் - Purdue பல்கலைக்கழகம், இண்டியானா
மரணம் - சமீர் கமத் (23) தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு.
சம்பவம் 8 - பிப்ரவரி 27, 2024
இடம் - செய்ன்ட் லூயிஸ், பாஸ்டன்
மரணம் - அமர்நாத் கோஷ் என்ற பி.ஹெச்.டி மாணவர் நடைபயிற்சிக்கு சென்றபோது தவறுதலாக வேறு பகுதிக்கு சென்று உள்ளூர் போதை பொருள் கும்பலைச் சேர்ந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவம் 9 - ஏப்ரல் 8 2024
இடம் - க்ளேவ்லேண்ட், ஒஹியோ
மரணம் - முகமது அப்துல் அராஃபத் (25), மார்ச் 7ஆம் தேதி காணாமல் போன நிலையில், மார்ச் 21ஆம் தேதி 1200 டாலர்கள் பிணையாக கேட்டு அவரது பெற்றோருக்கு அழைப்பு வந்தது. சில வாரங்களுக்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
(இங்கு பட்டியலிடப்படாத மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன)

அஜாக்கிரதை ஆபத்தானது
இந்த சம்பவங்களில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அதிக இந்திய மாணவர்கள் மரணம் அடைந்துள்ள நிலையில், அம்மாகாணத்தில் உள்ள அரோராவில் வசிக்கும் ராதா ரவிசங்கர் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் வழங்கி வந்தவரிடம் பிபிசி தமிழ் பேசியது.
அமெரிக்காவுக்கு வரும் இந்திய மாணவர்கள், செய்யக்கூடியவை சில தவறான செயல்களையும், எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்றும் ராதா நம்மிடம் விளக்கினார்.
"எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர். நான் பிறந்தது இந்தியாவில், ஆனால் என் மகள் இங்கு தான் பிறந்தாள். அவள் இங்கு குளிர் காலத்தில் சாதாரணமாக உடை அணிந்து செல்வார். ஆனால், என்னால் அதுமுடியாது. அதுபோல புதிதாக இங்கு வரும்போது கடும் குளிரில் செல்லும் வெளியே சென்றால் உடல் சூட்டை தக்க வைக்கக்கூடிய ஆடைகளை மாணவர்கள் அணிய அறிவுறுத்தப்படுவார்கள். கைகளை நன்கு மறைக்கும் வகையில் தரமான கிளவுஸ் அணியவேண்டும்."
"அமெரிக்காவின் பருவநிலை, வானிலையை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் இந்திய மாணவர்கள் செயல்பட வேண்டும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புதிதாக வரும் 18 முதல் 20 வயது மாணவர்கள் பலர், வானிலை குறித்து புரிதல் இல்லாமல் பல நேரங்களில் நடந்து கொள்வார்கள். அஜாக்கிரதையாக குளிருக்கு தகுந்த ஆடைகளை அணியாமல், அமெரிக்கர்களை பார்த்து இலகுவான ஆடைகளை அணிந்து வெளியே செல்லும் போது உடலில் சில சிக்கல் ஏற்படுகின்றன", என்றார் ராதா ரவிசங்கர்.
அதீத குளிரில் அதிகமான நேரம் வெளியே இருந்தால், ஹைபோதெர்மியா என்ற பிரச்னை ஏற்பட்டு உயிரிழப்பு கூட நேர்கிறது. புதிதாக அமெரிக்காவுக்கு வரும் இந்திய மாணவர்கள் யாரேனும் சரியான ஆடை அணியாமல் இருந்தால் நாங்கள் அவர்களை எங்கேயாவது பார்க்கும்போது, 'உங்களை முழுமையாக கவர் செய்து கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்துவோம், என்றார்.

'குழுவாக செல்லுதல் நல்லது'
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தங்கிப் பயிலும் போது என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள் அறிவுறுத்தப்படுகிறது என்று விளக்கினார், டெட்ராய்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் ரூபேஷ்.
"இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இங்கு பயில வரும் மாணவர்களுக்கு, முதல் 2-3 நாட்கள் ஓரியண்டேசன் பயிற்சி நடக்கும். எங்கு செல்ல வேண்டும்? எப்படி செல்ல வேண்டும்? பாதுகாப்பான நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து ஒரு சில கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தும். ஆனால் அந்த நிகழ்ச்சியை மாணவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தட்டி கழித்து விட்டால் அவர்களுக்கு அவசியமான சில அறிவுரைகள் அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது."
"சில கல்வி நிறுவனங்கள் கல்லூரி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே மாணவர்களை வரவழைத்து அங்கு உள்ள பருவநிலைக்கு மாணவர்கள் தகவமைத்து கொள்ள அறிவுறுத்துகிறது. அப்படி தாக்குப்பிடிக்க முடியாத மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய கல்விக் கொடுத்த கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி அளிக்கும் திட்டமும் சில கல்லூரிகளில் உள்ளது. அமெரிக்காவிற்கு படிக்க வரும் மாணவர்கள் இத்தகைய தகவலை முழுவதும் தெரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் ரூபேஷ்.
அமெரிக்காவுக்கு புதிதாக வரும் மாணவர்கள் முதல் ஒரு வருடம் வரை பல்கலைக்கழக விடுதியில் தங்குவது பாதுகாப்பானது என்கிறார் ரூபேஷ்.
"ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்களே ஷாப்பிங் அழைத்துச் செல்வதற்கு என அந்த கல்வி நிறுவனமே பேருந்துகளை பிக்கப் மற்றும் டிராப்-க்கு ஷட்டில் சர்வீஸ் ஆக பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்கும். ஆனால், எடுத்த எடுப்பிலேயே அமெரிக்காவை சுற்றிப் பார்ப்பதாக நினைத்து அவர்களாகவே தனியாக வாகனங்களை புக் செய்து சென்று விட்டு வருவார்கள். உடன் பயிலும் சக இந்திய மாணவர்களோடு அல்லாமல் தனியாக செல்லும் போது சிலர் சிக்கல்களின் மாட்டிக் கொள்கின்றனர்."
அமெரிக்காவுக்கு வந்து சில ஆண்டுகள் ஆகியும், இரவு நேரத்தில் வெளியே செல்வதை கவனத்துடன் தவிர்த்து விடுவேன் எனக் கூறும் ரூபேஷ், புதிதாக வரும் மாணவர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

போதை ஆசாமிகளால் ஆபத்து
அமெரிக்காவுக்கு புதிதாக வரும் மாணவர்கள் சில நேரங்கள் போதை ஆசாமிகளின் கையில் சிக்கி அது பெரிய பிரச்னையில் முடிகிறது. போதை பொருளின் தாக்கத்தில் இருக்கும் போது, இனவெறி கருத்துக்களுக்கும் இந்திய மாணவர்கள் உள்ளாகி பாதிப்புகளை அனுபவிக்கின்றனர். இத்தகைய விஷயங்களில் இருந்து இந்திய மாணவர்கள் விலகி இருக்கவேண்டும் என்று ரூபேஷ் தெரிவித்தார்.
பகுதி நேர வேலை - கவனம் தேவை
பொதுவாக அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவர்கள், கல்விக் கடனை திருப்பிச் செலுத்தவும், மாத செலவுக்காகவும் பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர்.
கல்வி நிறுவனங்களுக்கு சென்று வந்த பிறகு மட்டுமே இத்தகைய வேலைக்கு செல்ல முடியும் என்பதால், பணி முடிந்து திரும்பும் போது பல நேரங்களில் பின்னிரவு ஆகிவிடும். அதேபோல மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் 24 மணி நேரமும் இயங்கும் கடைகளில் வேலைக்கு சேரும் போது, நள்ளிரவில் சிலரால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க மக்கள் நடமாட்டம் பரவலாக இருக்கும் இடங்களில் வேலையை தேர்வு செய்யவேண்டும் என்று ராதா பிபிசியிடம் கூறினார்.
இதுதவிர இந்திய மாணவர்கள் படித்து முடித்த பிறகு, அமெரிக்காவிலேயே வேலையில் சேர்வதால் உள்ளூர்வாசிகளில் வேலைவாய்ப்பு பறிபோவதாக இந்தியர்கள் மீது ஒரு வெறுப்புணர்வு சில அமெரிக்கர்களுக்கு உள்ளது. இந்த வெறுப்புணர்வின் காரணமாக சில இடங்களில் இந்தியர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது என்று ரூபேஷ் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












