டிரம்ப் அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு அதிகரிப்பதால் இந்த நாடுகள் அஞ்சுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெஸ் பார்க்கர் மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்கள், பெர்லின், கீவ் நகரங்களில் இருந்து
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் அது ஐரோப்பாவில் என்ன விளைவை ஏற்படுத்தும்?
அமெரிக்காவில் அதிகார மாற்றம் ஏற்பட்டால் இந்த சவாலை எதிர்கொள்ள ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் வியூக வகுப்பாளர்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றனர்.
டொனால்ட் டிரம்ப் ஓஹியோவைச் சேர்ந்த செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தபோது, அதிபரான பிறகு டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த தெளிவான செய்தி ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டது.
யுக்ரேனில் ரஷ்ய தாக்குதல், பாதுகாப்பு கவலைகள் மற்றும் வர்த்தக விஷயங்கள் ஐரோப்பாவிற்கு முக்கியமானவை. இந்த விவகாரங்களில் டிரம்ப் அதிபரான பிறகு என்ன நடக்கும் என்பது ஐரோப்பாவின் முக்கிய கவலையாக உள்ளது.
ஜே.டி.வான்ஸ் யுக்ரேனுக்கு வழங்கப்படும் பொருளாதார உதவியை விமர்சிப்பதில் முன்னிலை வகிக்கிறார்.
கிழக்கு ஆசியாவை நோக்கி அமெரிக்கா "தன் கவனத்தை" செலுத்த வேண்டும் என்பதை ஐரோப்பா புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த ஆண்டு மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அவர் கூறினார்.
“அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையால் ஐரோப்பாவின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி அரசு அமைக்கப்பட்ட பிறகும் அந்த நாடு நேட்டோவில் தொடர்ந்து இருக்கும் என்று தான் நம்புவதாக ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கைத் தலைவருமான நில்ஸ் ஷ்மிட் பிபிசியிடம் கூறினார்.
ஜே.டி. வான்ஸ் "மிகவும் மாறுபட்ட நிலைப்பாட்டை’ மேற்கொண்டாலும், டொனால்ட் டிரம்ப் "கணிக்க முடியாதவராக" இருந்தாலும் இது நடக்கும் என்கிறார் அவர்.
எனினும், டிரம்ப் தலைமையிலான ஆட்சியின் போது புதிய "வர்த்தகப் போர்" தொடங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஐரோப்பா ஏன் பயப்படுகிறது?
டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகள் அதிபராக இருந்துள்ளார். எனவே யாரும் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்தார்.
"டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியும். துணை அதிபராக அவருடன் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமே இல்லை" என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை புயலுக்கு தயாராகும் படகுடன் அவர் ஒப்பிட்டார். அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், எதிர்காலத்தில் நிலைமை அவர்களுக்கு கடினமாகவே இருக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர் கூறினார்.
கடந்த இரண்டு வருடங்களாக போரில் சிக்கித் தவித்து வரும் யுக்ரேனுக்கு உதவும் மிகப்பெரிய நட்பு நாடு அமெரிக்கா.
"டிரம்ப் அதிபராக வருவதைப் பற்றி நான் பயப்படவில்லை. நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்." என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த வாரம் கூறியிருந்தார்.
பெரும்பாலான குடியரசுக் கட்சித் தலைவர்கள் யுக்ரேனையும் அதன் குடிமக்களையும் ஆதரிக்கிறார்கள் என்று தான் நம்புவதாகவும் ஸெலென்ஸ்கி கூறினார்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் பொதுவான நண்பர் ஆவார். போரிஸ் ஜான்சன் யுக்ரேனுக்கான பொருளாதார உதவியை ஆதரிக்கிறார்.

சமீபத்தில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஜான்சன் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் சமூக ஊடகமான X இல் "டிரம்ப்புடன் யுக்ரேன் பற்றி விவாதித்தேன். அந்த நாட்டை ஆதரிக்கவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வலுவான மற்றும் தீர்க்கமான முடிவுகளை அவர் எடுப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் இந்த உணர்வு உண்மையாக இருந்தாலும்கூட அது வான்ஸுக்கு பொருந்தும் என்பது கிடையாது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு வான்ஸ் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் "யுக்ரேனில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை" என்று கூறினார்.
யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டாலர் ராணுவ உதவியை தாமதப்படுத்தியதில் வான்ஸ் முக்கிய பங்கு வகித்தார்.
யுக்ரேன் விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாடு என்ன?
"நாம் முயற்சி செய்து அவர்களுக்குப் புரிய வைப்பது முக்கியம்," என்கிறார் கீவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான இன்ஸ்டிட்யூட் ஆஃப் வேர்ல்ட் பாலிசியின் நிர்வாக இயக்குநர் யெவ்ஹென் மஹ்தா.
"குடியரசுக்கட்சி அரசு இராக் போரில் ஈடுபட்டது. யுக்ரேனுக்கு வருமாறு டிரம்பை அழைக்கலாம். அங்கு என்ன நடக்கிறது மற்றும் அமெரிக்கா வழங்கிய பொருளாதார உதவிகள் அங்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவர் நேரடியாகப் பார்க்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பின் கணிக்க முடியாத அணுகுமுறை யுக்ரேனுக்கு ஒரு பிரச்னையாக மாறக்கூடும் என்று யெவ்ஹென் மஹ்தா குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் டிரம்ப் மற்றும் வான்ஸ் ஜோடியின் வலுவான ஆதரவாளர் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் ஆவார். ஓர்பன் சமீபத்தில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோரை சந்தித்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் டிரம்பை சந்தித்து பேசினார். ஓர்பனுக்கும், புதினுக்கும் இடையில் ஆழமான உறவு உள்ளது.
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் பதவிப் பிரமாணம் செய்யும் வரை காத்திருக்கப் போவதில்லை என்றும், விரைவில் ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த கோருவேன் என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஓர்பன் கூறியிருந்தார்.
இதற்கான விரிவான மற்றும் உறுதியான திட்டம் என்னிடம் உள்ளது என்று ஓர்பன் தனது கடிதத்தில் எழுதினார்.
இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் சமாதான உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸெலென்ஸ்கி இந்த வாரம் கூறியிருந்தார்.
சமீபத்தில் ஓர்பன், "சமாதானப்பணி” என்று அழைக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் ’ஐரோப்பிய கவுன்சிலை நிர்வகிக்கும் பொறுப்பை துஷ்பிரயோகம் செய்ததாக’ குற்றம் சாட்டப்பட்டது.
ஓர்பனின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஹங்கேரியில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஐரோப்பிய கமிஷன் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
6 மாதங்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலை நிர்வகிக்கும் பொறுப்பை, இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஹங்கேரி பெற்றது.
அதன் பின்னர் ஓர்பன் யுக்ரேன், ரஷ்யா, அஜர்பைஜான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அவர் அதை "சமாதான பணிக்கான" உலகப் பயணம் என்று அழைக்கிறார்.
வர்த்தகத்தின் எதிர்காலம் பற்றிய கவலை

டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்கா வரி விதித்தது.
ஆனால் அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜோ பைடன் நிர்வாகம் இந்த இறக்குமதி வரிகளை நிறுத்தி வைத்தது. ஆனால் டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் எல்லா வகையான இறக்குமதிகளுக்கும் 10 சதவிகித வரி விதிக்கும் யோசனையை முன்வைத்துள்ளார்.
வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட பொருளாதார மோதலுக்கான வாய்ப்பு, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் மோசமான மற்றும் பேரழிவுகரமான விளைவுகளாக பார்க்கப்படுகிறது.
"ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தண்டனைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். எனவே மற்றொரு சுற்று வர்த்தக போருக்கு நாம் தயாராக இருக்கவேண்டும்," என்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் நில்ஸ் ஷ்மிட் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், அதன் ராணுவ தயார் நிலைக்காக ஜெர்மனியை விமர்சித்திருந்தார்.
தனது நோக்கம் ஜெர்மனியை "விமர்சனம்" செய்வதல்ல. ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழில்களின் கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
வான்ஸின் இந்த அறிக்கை வருங்காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி மீது ’ஐரோப்பிய பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க’ அதிக அழுத்தத்தை கொடுக்கக்கூடும்.
2022 பிப்ரவரியில் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் "ராணுவ நடவடிக்கைக்கு" பிறகு, ஜெர்மன் ஆட்சித்துறை தலைவதலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் நாடாளுமன்றத்தில் தனது உரையில், ’இது வரலாற்றை மாற்றும் நிகழ்வு’ என்று அழைத்தார். யுக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்க தயங்குவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
யுக்ரேன் தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ஆயுத ஏற்றுமதிக்கு ஓலாஃப் கட்டுப்பாடுகளை விதித்தார். நாட்டின் பாதுகாப்பு செலவை அதிகரிப்பது குறித்தும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை தடை செய்வது குறித்தும் அவர் பேசினார்.

பட மூலாதாரம், MARYAM MAJD/GETTY IMAGES
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக யுக்ரேனுக்கு ராணுவ உதவி வழங்கக் கூடிய நாடு ஜெர்மனி என்று ஜெர்மனியின் நட்பு நாடுகள் கூறுகின்றன.
பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு முதல்முறையாக குறுகிய கால வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் இரண்டு சதவிகித பாதுகாப்பு பட்ஜெட் செலவு இலக்கை எட்டுவதில் ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது.
"நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக கவனம் செலுத்தப்படாத ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்,” என்று நில்ஸ் ஷ்மிட் கூறினார்.
ஆனால் திரைக்குப் பின்னால் ஐரோப்பாவின் ஏற்பாடுகள் தீவிரமானவை அல்லது போதுமானவை என்பதை இந்த விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் ஓலாஃப் ஷோட்ஸ் தனக்கே உரிய கட்டுப்பாடான அணுகுமுறையைக் கொண்டுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் முன்னணியில் செல்வதைத் தவிர்க்கிறார்.
அவர் அரசியல் விஷயங்களிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அவர் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டியிருக்கலாம்.
அதே நேரம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் திடீரென தேர்தலை அறிவித்தார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு பலவீனமான நிலைக்கு அவர் வந்துள்ளார். அந்த நாடு அரசியல் ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது.
''ரஷ்யாவிற்கு எதிரான போரில் யுக்ரேன் தோல்வியடைந்தால், மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யாவின் போர் வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும்" என்று போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா செவ்வாயன்று எச்சரித்தார்.
"போரை விரும்பும் இந்த ரஷ்ய அரக்கன் மேலும் தாக்க விரும்பும்,” என்றார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












