இலங்கை புதிய ஜனாதிபதி சட்டமியற்றுவதில் சிக்கல் - நாடாளுமன்றத்தில் காத்திருக்கும் சவால்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, நாடாளுமன்றத்தில் மூன்று இடங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.
இந்த மூன்று இடங்களை வைத்துக்கொண்டு அநுர குமார திஸாநாயக்க எவ்வாறு ஆட்சியை தொடர்வார் என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
அநுர குமார திஸாநாயக்க அடுத்து என்ன செய்ய போகின்றார் என்பது குறித்து இந்த தொகுப்பு ஆராய்கின்றது.

இலங்கை நாடாளுமன்றமும், தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் சவால்களும்
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆணை ஊடாகவும், 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவது வழமையானது.
இந்த நிலையில், ஆட்சியிலுள்ள கட்சியொன்று ஆகக் குறைந்தது 113 உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வேண்டும்.
ஆனால், தற்போதுள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் முழுமையாக நான்கு மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமே காணப்படுகின்றனர்.
இந்த நிலையில், சட்டமூலமொன்றை சாதாரணமாக நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை அவசியம் என்ற நிலையில், தேசிய மக்கள் சக்திக்கு அவ்வாறான பெரும்பான்மை இல்லை.
அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் வகையில் எந்தவொரு கட்சியும் தற்போது நாடாளுமன்றத்தில் கிடையாது.
இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இன்றி ஆட்சியை கொண்டு நடத்துவது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இதுவரை இல்லாதளவு சவால் மிகுந்த ஆட்சியாகவே இந்த ஆட்சி காணப்படுகின்றது என மூத்த நாடாளுமன்ற செய்தியாளர் ஆர்.யசி பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

பட மூலாதாரம், Yasi
“தேசிய மக்கள் சக்தியில் தற்போது நான்கு பேர் இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேரும் இதற்கு பின்னர் அமைச்சு பதவிகளை பங்கிடப் போகின்றார்கள். அமைச்சின் செயலாளர்கள் ஊடாக தீர்மானங்களை முன்நகர்த்துவார்கள்."
“அமைச்சின் செயலாளர்கள் இந்த நான்கு பேருக்கும் பொறுப்பு சொல்பவர்களாக இருப்பார்கள். அதற்கு பின்னர் 45 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பார்கள். இந்த காலப் பகுதியில் சட்டமூலமொன்றைக் கொண்டு வந்தாலும், அதனை நிறைவேற்ற முடியாத நிலைமை காணப்படும். ஏனென்றால், தேசிய மக்கள் சக்திக்கு தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை," என அவர் கூறுகின்றார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி கொள்ள முடியுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
''வெல்ல வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உண்டு. தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் கூட்டணி சேராதுள்ள ஒரே கட்சி இந்தக் கட்சி மாத்திரம் தான். இனிவரும் காலத்திலும் தாம் யாருடன் இணைந்து கூட்டணியாக போட்டியிட போவதில்லை என இவர்கள் அறிவித்துள்ளார்கள்,” என்கிறார்.
“என்னவாக இருந்தாலும் 113 ஆசனங்களை இவர்கள் நாடாளுமன்றத்தில் கைப்பற்ற வேண்டும். ஜனாதிபதியொருவர் வெற்றி பெற்றதன் பின்னர் அவரைச் சூழ்ந்த அரசாங்கங்கள் அமைவது தான் வழக்கமாக இருந்தது. 57 லட்சம் வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற்றதைப் போன்று, நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். ஆனால் அந்தளவு வாக்குகளை எடுப்பது நிச்சயமாக சவாலாகவே இருக்கும். அப்படியென்றால், ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் வரும்," என யசி குறிப்பிடுகின்றார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை சேர்ந்த மற்றும் சிங்கள அரசியல்வாதிகளை ஒன்றிணைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்ற முயற்சிக்கும் என அவர் கூறுகின்றார்.

பட மூலாதாரம், Getty Images
பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம் அமைந்தால் என்ன நடக்கும்?
தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில், அது எப்போது கலையும் என்பது தெரியாது என ஆர்.யசி தெரிவிக்கின்றார்.
''இவர்களது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்படும் பட்சத்தில், ஆட்சி கலைக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.” என்கிறார்.
மேலும் பேசிய அவர், சட்டப்படி தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு 50% வாக்குகள் கூடக் கிடைக்கவில்லை என்கிறார் அவர். அதனால் இது நிச்சயமற்ற சூழல் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பதவி விலகினார் பிரதமர் தினேஷ் குணவர்தன
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன, தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமர் ராஜினாமா செய்ததை அடுத்து, ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் காணப்பட்ட அமைச்சரவை இயல்பாகவே கலைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்க புதிய அமைச்சரவையொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியாக நியமிக்கப்படும் ஒருவருக்கு நேரடியாகவே பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் காணப்படுகின்றது.
எனினும், ஜனாதிபதியை ஆதரிக்காத வேறொரு கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருக்கும் போது சிக்கல் ஏற்படும்.
இந்தநிலையில், அநுர குமார திஸாநாயக்க தனது கட்சியிலுள்ள ஒருவரை இம்முறை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கை வரலாற்றில் எந்தவொரு கட்சியும் எதிர்கொள்ளாத பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என ஆர்.யசி தெரிவிக்கின்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












