இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், Anura Kumara Dissanayake
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9-வது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றார். தலைநகர் கொழும்புவில் உள்ள ஜனாதிபதியின் தலைமை செயலகத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கையின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்விற்கு தேசிய மக்கள் சக்தி கூட்டணி பிரதானிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.
பதவி பிரமாணம் செய்து கொண்ட பிறகு பேசிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, மொத்த உலகின் போக்கிலிருந்து இலங்கை மட்டும் தனித்து செயல்பட முடியாது என்றார்.
”நம் நாட்டிற்கு சர்வதேச உதவி தேவை என்பது நமக்கு தெரியும். எவ்வாறான பிரிவுகள் காணப்பட்டாலும், அந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.” என்று அவர் கூறினார்.
இலங்கையின் வளர்ச்சியில் தொழில்துறையினர் பங்கு மிகப்பெரியது என்றார் அதிபர் அநுர.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தேர்தலில்தான் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
தான் அதிபராவது குறித்துப் பேசியுள்ள அநுர குமார, “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிகள் இன்று பலித்துள்ளது.”

பட மூலாதாரம், Anura Kumara Dissanayake
“அதற்காக உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், இது என்னுடைய முயற்சி மட்டுமல்ல, நம் அனைவருடைய கூட்டுப் பணியும்கூட. இந்த வெற்றி நம் எல்லோருக்குமானது.”
“இந்த வெற்றிக்காக நாம் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் தங்கள் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் இந்தத் தியாகங்கள் வீண்போகவில்லை. அவர்களின் தியாகங்கள் வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். இலங்கையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது.”
“கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி தோன்றும். வாருங்கள், எல்லோரும் இதற்காகக் கைகோர்ப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ரணில் என்ன சொன்னார்?

இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாகத் தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டு வர முடியும் என நம்புவதாகவும் ரணில் அந்த தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், PMD SRI LANKA
விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டது எப்படி?
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தார். அவருக்கு 42.31% வாக்குகள் கிடைத்தன.
இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவுக்கு 32.76% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.27% வாக்குகளும் பதிவாகின.
எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டாததால், இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணும் நடைமுறையின்படி, ''அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்'' என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்னநாயக்க தெரிவித்திருந்தார்.
''இவ்வாறு போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய வேட்பாளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள், போட்டியிலுள்ள வாக்காளர்களுக்கு சாதகமாக உள்ளதா என்பது கணக்கிடப்படும்''
''22 தேர்தல் மாவட்டங்களிலும் தற்போது போட்டியிலுள்ள வேட்பாளர்களுக்கு சாதகமாக கிடைத்த வாக்குகள் எண்ணப்பட்டு கிடைக்கப் பெறும் விருப்ப வாக்குகள், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்து அதில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்'' எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
'அநுர குமார வென்றதாக ஏற்கிறோம்'
முன்னதாக, தேசிய மக்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வென்றுவிட்டதாகக் கூறியுள்ள அக்கட்சியின் எம்.பி விஜிதா ஹேரத், அதனால் கட்சியினர் பதற்றமடையத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
அக்கட்சியால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட காணொளியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டாலும், 50% வாக்குகள் இல்லாததால் விதிகளின்படி அநுர குமார திஸாநாயக்க வென்றுவிட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, அநுர குமார வென்றுவிட்டதாக தாங்கள் ஏற்றுக் கொள்வதாக சஜித் பிரேமதாசவின் கட்சியின் எம்.பி ரஞ்சித் மத்தும பண்டாரவும் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ஜனநாயக ரீதியாக அநுரவின் வெற்றியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
ஆரம்பத்திலிருந்தே அநுர குமார முன்னணி
இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
அநுர குமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே மக்களின் ஆதரவு அநுர குமார திஸாநாயக்கவுக்கு அதிகம் இருந்தது புலப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இறுதிகட்ட வாக்குகள் நிலவரம்
- அநுர குமார திஸாநாயக்க - 57,40,179
- சஜித் பிரேமதாச - 45,30,902
ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் இருந்தனர்.
தமிழ் பொது வேட்பாளர் தோல்விக்கு என்ன காரணம்?
தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பா. அரியநேத்திரன் தமிழ் மக்களிடையே பெரும்பான்மை வாக்குகளை பெறாத நிலையில், தமிழ் மக்கள் பொதுச் சபை தோல்விக்கான விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தமிழ் மக்கள் தங்களை தாங்களே பலப்படுத்தும் ஒரு தேர்தல் களம் என்ற அடிப்படையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஒருவித தன்னதிகாரம் அனுமதிக்கப்பட்டது. ஒரு மையத்திலிருந்து கட்டுப்படுத்தப்படாத இப்போக்கு காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய சில குழப்பமான தோற்றப்பாடுகளை தமிழ் மக்கள் பொதுச்சபை விளங்கிக் கொள்கின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக விமர்சிக்கப்படும் நிலையில், “ஒரு அமைப்பும் (தமிழ் மக்கள் பொதுச்சபை) கட்சிகளும் இணைந்து தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தியமை தமிழ் அரசியலில் ஒரு புதிய போக்கு” என்றும் தமிழ் பொது வேட்பாளரால் கூட்டுணர்வும் நம்பிக்கையும் ஒன்று திரட்டப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது.
நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு
வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் இன்று (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை காலையிலும் தொடர்ந்த நிலையில் இலங்கை முழுவதும் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












