திருப்பதி லட்டு சர்ச்சை: திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் உரிமையாளர் சொல்வது என்ன?

திருப்பதி லட்டு சர்ச்சை: திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் உரிமையாளர் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருப்பதி லட்டு சர்ச்சையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வழங்கிய நெய்யில்தான் கலப்படம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

திருப்பதி லட்டு தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் அனுப்பிய நெய்யில் கலப்படம் விலங்குக் கொழுப்பு இருந்ததாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அந்நிறுவன அதிகாரிகளும் உரிமையாளரும் கூறுவது என்ன? திருப்பதி கோவிலுக்கு திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் எவ்வளவு காலம் நெய் வழங்கியது?

இதுகுறித்து கடந்த 19ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருமலை திருப்பதியின் செயல் அதிகாரி சியாமள ராவ், "தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 டேங்கர்களில் நெய் கொண்டு வரப்பட்டதாகவும், அதில் பயன்படுத்தப்பட்டது போக மீதமிருந்த 4 டேங்கர்களை சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் விலங்குக் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும்" தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டை திண்டுக்கல்லில் செயல்படும் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் மறுத்துள்ளார். இதுதொடர்பான ஆய்வக அறிக்கைகள் தேவஸ்தானத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் சொல்வது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுரை சாலையில் செயல்படும் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம், ராஜ் என்ற பெயரில் பால், தயிர், நெய் ஆகிய பொருள்களை விற்பனை செய்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி அறங்காவலர் குழுவிலும் இந்நிறுவன உரிமையாளர் ராஜசேகர் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுக்கு திண்டுக்கல்லில் செயல்படும் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக தங்கள் நிறுவனம் சார்பில் இரண்டு முறை நெய் அனுப்பப்பட்டதாகவும் தற்போது நெய் அனுப்புவது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார், ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் கண்ணன்.

ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் கண்ணன்.
படக்குறிப்பு, ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் கண்ணன்

ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் இருந்து 0.5 சதவிகிதம் அளவு மட்டுமே திருப்பதிக்கு நெய் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்த கண்ணன், கடந்த 25 ஆண்டுகளாக பால் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தங்கள் நிறுவனம் இருப்பதாகவும் இப்போதும் தங்கள் தயாரிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய்யை அனுப்பியபோது, தரக் கட்டுப்பாட்டுத் துறை மூலம் ஆய்வு செய்த பிறகே அனுப்பப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார், இந்நிறுவனத்தின் மற்றொரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியான லைனி.

"திருப்பதி தேவஸ்தானத்துக்கு வெளியில் இருந்து பலர் நெய் அனுப்புகின்றனர். நாங்கள் அனுப்பியது 0.1 சதவிகிதம் மட்டுமே" என்கிறார் ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் கண்ணன்.

கடந்த ஜூலை மாதம் இதேபோன்ற பிரச்னை எழுப்பப்பட்டபோது, தங்கள் நிறுவனத்தின் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து பதில் வரவில்லை என்றும் தெரிவித்தார் கண்ணன்.

"இந்த விவகாரத்துக்குப் பிறகு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ அக்மார்க் தரச்சான்று அதிகாரிகளும் ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனத்தில் இருந்து நெய் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். அதில் குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை" என்றார் கண்ணன்.

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் உரிமையாளர் சொல்வது என்ன?

 ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர்
படக்குறிப்பு, ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர்

லட்டு சர்ச்சை குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

அதில் "இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்தின் நெய்யில் தரம் குறைந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் தரமான நெய்யை மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனம் விநியோகித்ததாகவும்" கூறியுள்ளார்.

'சட்டரீதியாக எதிர்கொள்ள தயார்'

தங்கள் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்தால் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள ராஜசேகர், "எங்கள் தரப்பில் அனைத்து ஆவணங்களையும் அவர்களுக்கு அனுப்பிவிட்டோம். தற்போது இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் தரத்தை நிரூபிக்க சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த மார்ச் மாதம் நெய் கொள்முதலுக்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

"இதற்காக, 1 கிலோ நெய்யின் விலை ரூ.319 என நிர்ணயிக்கப்பட்டது. மே மாதம் கொள்முதல் தொடங்கிய நிலையில், ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்கள் மட்டுமே ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் நெய்யை விநியோகித்துள்ளதாக" ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா தலைமையிலான குழுவினர் சனிக்கிழமையன்று ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

பழனி பஞ்சாமிர்த சர்ச்சை

திருப்பதி பிரசாத லட்டு தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் மீது வேறொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பழனி முருகன் கோவிலுக்கும் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் நெய் சப்ளை செய்ததாகவும் பழனி கோவில் அறங்காவலர் குழுவில் அந்நிறுவன உரிமையாளர் ராஜசேகர் இருப்பதாகவும் தமிழக பா.ஜ.க தொழிற்பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் செல்வகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதே கருத்தை தமிழக பா.ஜ.க இளைஞரணியின் மாநில தலைவர் வினோஜ் செல்வமும் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அறநிலையத்துறையின் விளக்கம்

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ்

பட மூலாதாரம், ARDairyFoods

படக்குறிப்பு, தங்கள் தரப்பில் அனைத்து ஆவணங்களையும் அனுப்பியுள்ளதாக, ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இந்தக் குற்றச்சாட்டை இந்து சமய அறநிலையத்துறை மறுத்துள்ளது. ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ராஜசேகர், பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்து வந்தாகவும் பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டுக்கு முன்பு அறங்காவலர் குழு கலைக்கப்பட்டதாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே நெய் வாங்கப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, பாஜக நிர்வாகிகள் இருவர் மீதும் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது தரப் பரிசோதனை செய்வதாகவும் இதற்கான மூலப்பொருள்களில் எந்தவித கலப்படமும் தரம் குறைந்த பொருள்களும் இருப்பதாக இதுவரையில் உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது இல்லை எனவும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வினோஜ் செல்வம்

பட மூலாதாரம், Vinoj Selvam/X

படக்குறிப்பு, வினோஜ் செல்வத்தின் எக்ஸ் பதிவு

இதுகுறித்து தமிழக பா.ஜ.க இளைஞரணியின் மாநில தலைவர் வினோஜ் செல்வத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "என் மீது காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். என்னுடைய பதிவில், ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் இருந்து பழனி கோவிலுக்கு நெய் வாங்கப்படுவதாக செய்தி உள்ளது.

'அது உண்மையாக இருந்தால் ஆவின் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் எனக் குறிப்பிட்டேன். இதில் எந்தவிதத் தவறும் இல்லை. அதை மறுக்கலாம். அதைவிடுத்து வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை. இதுதொடர்பாக இதுவரையில் எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)