சென்னையில் குவியும் வட மாநில குழந்தைத் தொழிலாளர்கள் - தீர்வு என்ன?

வடமாநில குழந்தைத் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், TN Labour Department

படக்குறிப்பு, சிறுவர்கள் தங்கியிருந்த இடத்தின் சமையல் கூடம்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஏழு வயது கூட நிரம்பாத விக்னேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். குக்கிராமமான ரூபாலி கிராமத்தில் இருந்து விக்னேஷ் இதுவரை ரயில் நிலையத்திற்கு வந்ததும் இல்லை. ரயிலைப் பார்த்ததும் இல்லை. அவனது முதல் ரயில் பயணம் அவனைச் சென்னையில் ஒரு பட்டறையில் கொத்தடிமை வேலைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பயணமாக இருக்கும் என்று அவனுக்கு தெரியாது.

கடந்த ஒரு வருட காலமாக விக்னேஷ், காலை ஒன்பது மணி முதல் இரவு 9 மணிவரை பள்ளிக்கூடப் பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தான். விக்னேஷைப் போல 29 சிறுவர்கள் அங்கு வேலை செய்வது குறித்துப் புலனாய்வில் தெரியவந்தபோது, அரசு அதிகாரிகள் அவர்களை மீட்கச் சென்ற நேரத்தில், விக்னேஷ் உள்ளிட்ட உயரம் குறைவான சிறுவர்கள் அடுக்கிவைக்கப்பட்ட பைகள் மற்றும் பஞ்சுக்குவியலுக்கு இடையில் சொருகிவைக்கப்பட்டிருந்தனர்.

''எனக்கு மூச்சு விட முடியல. எதுவும் பேசக்கூடாதுனு சேட் ஜி சொன்னார். எனக்கு எதுவும் தெரியவில்லை. என்னோட அம்மாகிட்ட போகனும். சீக்கிரம் என்னை கொண்டுபோய் விட்டுருங்க,'' என அந்தப் பிஞ்சு மொழியில் சொல்லிக்கொண்டே கலங்கிப்போனான். தன்னை பணியில் அமர்த்தியவரின் பெயர் கூட விக்னேஷுக்கு தெரியாவில்லை. ஒரு நாள் தன்னை ஒரு மாமா வந்து ரயிலில் கூட்டிவந்தார் என்றும் சென்னைக்கு வந்திருக்கிறோம் என்று சில நாட்கள் கழித்துத்தான் தெரியும் என்கிறான் விக்னேஷ்.

''பல மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து ஜிப் தைக்கவேண்டும். எனக்கு கைகள் மோசமாக வலிக்கும்,'' என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டான் விக்னேஷ்.

வடமாநில குழந்தைத் தொழிலாளர்கள்
படக்குறிப்பு, காய்ச்சிப்போய் இருக்கும் சிறுவனின் விரல்கள்

விக்னேஷ் உள்ளிட்ட 29 சிறுவர்களும் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசின் சிறார் இல்லத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பிபிசி தமிழ் நேரடியாகச் சந்தித்தது. 8 முதல் 15 வயதுள்ள சிறுவர்கள் பலரும் இதுவரை பள்ளிக்குச் சென்றதில்லை என்கிறார்கள். பைகளுக்கு ஜிப் தைப்பது, பைகளுக்குத் துணி வெட்டித் தைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்த சிறுவர்களின் விரல்களில் கத்திரிகோல் பிடித்த காய்ப்பு, கொப்பளங்கள் இருந்தன. விக்னேஷ் போன்ற சிறுவர்கள் ஒருவாரத்தில் சுமார் 400 பைகள் வரை தைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

விக்னேஷ் பிகாரின் சீதாமரி மாவட்டத்தில் ரூபாலி கிராமத்தைச் சேர்ந்தவன். விக்னேஷைப் போல பல குழந்தைகள் ரூபாலி கிராமத்தில் இருந்து பொருள் ஈட்டச் சென்னைக்கு வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்னர், சிறு குழுக்களாகப் பல நூறு குழந்தைத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளனர் எனத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதோடு, அவர்களைக் கணக்கெடுப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

13 வயதான சுபாஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. இரண்டு மூத்த சகோதரிகள் திருமணமாகி சென்றுவிட்டதால், சுபாஷ் மற்றும் மூத்த சகோதரன் என இருவரும் சென்னையில் வேலைக்கு வந்துவிட்டனர். ''எனக்கு படிப்பதில் ஆர்வம் இல்லை. அதனால் வேலைக்கு வந்துவிட்டேன். ஆனால் இங்கு வேலைக்கு சேர்ந்த பின்னர்தான், நான் சிக்கிக்கொண்டேன் என்று தெரிந்தது. ஒரு வாரத்திற்கு ஒரு முறை பெற்றோர்களிடம் பேசுவோம். ஆனால் எனக்கு இதுபோல வேலை செய்ய விருப்பம் இல்லை. ஓய்வு இல்லாமல், என் நண்பர்கள் இல்லாமல், என் அம்மாவின் சாப்பாடு இல்லாமல், எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை,'' என்கிறான் சுபாஷ்.

வடமாநில குழந்தைத் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், TN Labour Department

வீட்டுக்கு சென்றவுடன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடவேண்டும் என்றும் டிவியில் 'மோட்டு பத்லு' பார்க்கவேண்டும் என்று குழந்தைத்தனத்துடன் கூறிய சுபாஷ், ''நான் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிறது. எங்களுக்கு விடுமுறை கிடையாது. ஒரே அறையில், வேலைசெய்துகொண்டிருப்போம். தூங்குவோம், அங்கே ஓரத்தில் கழிவறை இருக்கும், பக்கத்தில் சமையல் அறை. எங்களை மீட்டு விடுதியில் சேர்த்த அன்றுதான் நாங்கள் எல்லோரும் நிம்மதியாக தூங்கினோம்,'' என குறிப்பிட்டான்.

கொரோனாவுக்குப் பின்னர் அதிகரித்த குழந்தைத் தொழிலாளர்கள்

விக்னேஷ், சுபாஷ் வேலை செய்த இடம் குறுகிய வீடாகவும், சுகாதாரமின்றியும் இருந்ததாக ஆய்வு செய்த தொழிலாளர் நலத்துறையின் சென்னை மண்டல உதவி ஆணையர் ஜெயலட்சுமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''ஒரே இடத்தில் எப்படி இத்தனை குழந்தைகள் இருந்தார்கள் என்று தெரியவில்லை. மோசமான பணிச்சூழலில் இருந்திருக்கிறார்கள். சரியான உணவு, இருப்பிடம் இல்லை. ஓய்வின்றி உழைத்திருக்கிறார்கள்,'' என்கிறார் அவர்.

கடந்த ஒரு வருடத்தில் சென்னை நகரத்தில் மட்டும் 113 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளார். அதில் கணிசமான குழந்தைகள் வடமாநிலக் குழந்தைகள். குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் மீட்கப்பட்ட 29 குழந்தைகளில் 28 பேர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு குழந்தை நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டது தொடர்பாக 160க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. ரூ.40.46 லட்சம் தண்டத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடமாநில குழந்தைத் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், TN Labour Department

படக்குறிப்பு, சிறுவர்கள் தங்கியிருந்த இடம்

''கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, நகரம் மற்றும் கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களைத் துப்பறிந்துவருகிறோம். குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் வைத்துள்ள நபர்கள், ஒரு குழுவாக அழைத்து வந்து, ஒரு வீட்டில் வைத்து வேலை வாங்குகிறார்கள் என்பதால், இவர்களைக் கண்டறிவதில் சிக்கல் உள்ளது. நாங்கள் மீட்கச்சென்ற நேரத்தில் இந்த 29 குழந்தைகளை இரண்டாவது மாடியில் ஒரு சிறிய வீட்டில் உள்புறமாக தாளிட்டு வைத்திருந்தார்கள். சில குழந்தைகளைப் பஞ்சுக் குவியலுக்கு இடையில் ஒளித்து வைத்திருந்தார்கள்,'' என பிபிசி தமிழிடம் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

மேலும், மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்களாக மாறாமல் இருப்பதை அந்த மாநில அரசுகள் தாம் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார். ''29 குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. குழந்தைகளை மீட்கச் சென்ற நேரத்தில் அவர்கள் எங்களை அச்சுறுத்தினர்,''என்கிறார் ஜெயலட்சுமி.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா கால ஊரடங்கு காரணமாகப் பலர் குழந்தைத் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

இந்திய அளவில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகப் பணியாற்றி வரும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2021ல் 81.2 லட்சமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2025ல் 74.3 லட்சமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் தொடர் முயற்சியாகக் குழந்தைகள் மீட்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவது மற்றும் மீண்டும் வேலைக்குச் செல்லாமல் தடுப்பது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

வடமாநில குழந்தைத் தொழிலாளர்கள்

பிகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த குழந்தைகள்

பிபிசி தமிழிடம் பேசிய ஒரு குழந்தைத் தொழிலாளியின் தாயார் ரஞ்சுதேவி (35), குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது ரூபாலி கிராமத்தில் புதிதல்ல என்கிறார்.

அலைபேசியில் நம்மிடம் பேசிய ரஞ்சுதேவி, ''எங்கள் கிராமத்தில் பல ஏழ்மையான குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் முதல் குழந்தையை இது போல வெளிஊர்களுக்கு அனுப்பும் பழக்கம் இருக்கிறது. என் கணவர் காய்ச்சலில் இறந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. நான் நான்கு குழந்தைகளுக்குப் பசியாற்றவேண்டும். அதனால், என் முதல் மகனைச் சென்னைக்கு அனுப்பி வைத்தேன். ரூ.30,000 கொடுத்தார்கள், அதனால் அனுப்பி வைத்தேன்,''என்றார்.

தற்போது தனது மகன் மீட்கப்பட்டது குறித்துக் கேட்டபோது இரண்டு வாரங்களுக்கு முன்னர் வேலை செய்யும் இடத்தில் இருந்து அதிகாரிகள் மீட்டிருக்கிறார்கள் என்று தனக்கு அழைப்பு வந்தது என்றார்.

''நான் வேறு என்ன செய்யமுடியும். குடும்பத்தில் வறுமை. செலவுக்குக் காசில்லை. அதனால், அனுப்பி வைத்தேன். கூட்டிச் சென்ற ஏஜென்ட்கள் மீண்டும் வந்து பணத்தை திருப்பிக் கேட்பார்களோ என்ற பயத்தில் இருக்கிறேன்,''என்கிறார் ரஞ்சுதேவி.

வடமாநில குழந்தைத் தொழிலாளர்கள்

நாடாளுமன்றத்தில் தேசியக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம் குறித்து 2021இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், பிகார், ஒடிஷா, உத்தரபிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் 2018 முதல் 2021வரை ஒரு குழந்தைத் தொழிலாளர் கூட மீட்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே கால கட்டத்தில், தமிழ்நாட்டில் அந்த மூன்று ஆண்டுகளில் குறைந்த பட்சமாக 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் மீட்கப்பட்டுள்ளார். அதிலும், 2019-2020ஆண்டு காலத்தில் மட்டும், 3,928 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சுதேவி போல, பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதைத் தடை செய்ய முடியுமா என்றும் குழந்தைகளுக்குச் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய கல்வியை உறுதிப்படுத்தாதது ஏன் என்றும் அறிந்துகொள்ள சீதாமரி ஆட்சியர் மனீஷ் குமார் மீனாவைத் தொடர்பு கொள்ளப் பலமுறை முயற்சித்தோம். அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. தொலைபேசி மற்றும் ஈ-மெயில் வாயிலாகத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

வடமாநில குழந்தைத் தொழிலாளர்கள்

இரண்டு மாநிலங்களுக்கும் பிரச்னை

பிற மாநிலங்களில் இருந்து குழந்தைத் தொழிலாளர்கள் வருவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசிய குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன், பிகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநில அதிகாரிகளும் தலையிட்டுத் தீர்வு காண்பது தான் உதவும் என்கிறார்.

''அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மீட்கப்படும் நேரத்தில், உடனடியாக அந்த மாநில அதிகாரிகளும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளும் பேசி, மீட்கப்பட்ட அந்தக் குழந்தைகள் மீண்டும் வேலைக்குச் செல்லாமல் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருப்பதை பிகார் மாநில அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் குழுவாக வடமாநிலக் குழந்தைகள் வந்தால், அவர்கள் யாருடன் வந்துள்ளனர், எதற்காக வந்துள்ளனர் என்று அவர்களை அச்சுறுத்தல் இன்றி விசாரிக்கவேண்டும். பல நேரத்தில், இந்த விசரணையில் குழந்தைகள் வேலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதை உடனடியாகக் கண்டறிய முடியும்,''என்கிறார் தேவநேயன்.

புலம்பெயர்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை குறித்துப் பதிவு செய்யப்படுவதில்லை என்பதால், இது போலக் குழந்தைத் தொழிலாளர்கள் வருவதும் கண்காணிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். ''குழந்தைகள் மீட்கப்படுவதுடன், அவர்கள் மீண்டும் தொழிலாளியாகாமல் இருந்தால் தான் நாம் அதில் வெற்றி அடைந்தோம் என்று அர்த்தம். பல நேரங்களில், இது போன்ற குழந்தைகள் மீண்டும் வேறு ஊர்களில் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள்,''என்கிறார் அவர். மேலும், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை என்பதை இரண்டு மாநிலங்களுக்கும் ஏற்படும் பிரச்னையாகப் பார்க்கவேண்டும் என்றும் தீர்வு காணும் நோக்கில் பிரச்னையை அணுகாமல் போனால், குழந்தைகள் வெறும் புள்ளிவிவரங்களாகத் தான் தெரிவார்கள் என்கிறார்.

குழந்தைத் தொழிலாளர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க உதவி எண்: 1098

புகார் பதிவு செய்ய : www.ebaalnidan.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: