மகாராணா பிரதாப்புக்கும் அக்பருக்கும் இடையே நடந்த போர், இந்து - முஸ்லிம் சண்டையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹர்பன்ஸ் முகியா
- பதவி, இடைக்கால இந்தியா தொடர்பான வரலாற்றாசிரியர்
இந்தியாவின் தேர்தல் அரசியலில் மகாராணா பிரதாப் பற்றி பல விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆனால் ஒரு வரலாற்றாசிரியர் மகாராணா பிரதாப்பை எப்படிப் பார்க்கிறார்?
மகாராணா பிரதாப்புக்கு வரலாற்றாசிரியர்கள் அநீதி இழைத்துள்ளனர் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் கூறியிருந்தார். அக்பர், ’அக்பர் தி க்ரேட்’ என்று அழைக்கப்படுகிறார். ஆனால் ஏன் மகாராணா பிரதாப்பை 'மஹான்' என்று அழைக்கவில்லை? மகாராணா பிரதாப் ஒரு தேசிய நாயகன் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருந்தார்.
நமது அரசுகள் வரலாற்றை தங்களுக்கு ஏற்றபடி மாற்றி எழுதி வந்துள்ளனவா? அக்பர் ஒரு படையெடுப்பாளரா? அக்பரை விட மகாராணா பிரதாப் உயர்ந்தவரா? ஹல்திகாட்டியில் மகாராணா தோற்கடிக்கப்பட்டாரா? அக்பர், மகாராணா பிரதாப் போர், இந்து-முஸ்லிம் போராட்டமா? மே 9ஆம் தேதி, மகாராணா பிரதாப்பின் பிறந்த தினம். இந்தச் சந்தர்ப்பத்தில் பிபிசி செய்தியாளர் ரஜ்னீஷ் குமார், நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் முகியாவிடம் இந்தக் கேள்விகள் அனைத்தையும் கேட்டுள்ளார்.
ஹர்பன்ஸ் முகியா இடைக்கால இந்திய வரலாற்றில் ஒரு அறிஞர். அவர் ஜேஎன்யுவில் வரலாற்றுப் பேராசிரியராக பணிபுரிந்தார். இந்த எல்லா கேள்விகளுக்கும் அவருடைய வார்த்தைகள் மூலம் பதில்களை தெரிந்துகொள்ளுங்கள்.

ஜார்ஜ் ஆர்வெல் தனது 1984 நாவலில் ’நிகழ்காலத்தை யார் கட்டுப்படுத்துகிறாரோ அவர் கடந்த காலத்தையும் கட்டுப்படுத்துகிறார்’ என்று எழுதினார்.
இதன் பொருள் என்னவென்றால், நிகழ்காலத்தில் உங்களுக்கு தேவை என்பதால் கடந்த காலத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். இது ஒரு நாவலில் கூறப்பட்ட விஷயம்தான். ஆனால் நம் நாட்டில் இது உண்மையாக நடப்பது போலத்தெரிகிறது.
வரலாற்றை திரித்துக்கூறல்
இன்றைய தேதியில் அவர்களின் தேவை என்னவென்றால், தங்கள் மன வரலாற்றை கற்பிப்பது. அதாவது ராஜஸ்தானில் அவர்களுக்கு அத்தகைய தேவை இருந்தது, எனவே அவர்கள் அதைச் செய்தார்கள். வரும் நாட்களில் நாட்டின் பிற பகுதிகளிலும் இதைப் பார்க்கலாம். வரலாறு இங்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அவர்களுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொய்யால் அரசியல் தேவைகள் நிறைவேறினால், பொய்யை உண்மை என்று சொல்வார்கள். மகாராணா பிரதாப் ஹல்திகாட்டியில் தோற்கடிக்கப்பட்டார் என்பது வரலாற்று உண்மை. இந்த தோல்விக்குப் பிறகு, அவர் தனது ’சேதக்’ குதிரையுடன் புறப்பட்டார். ஹல்திகாட்டிக்குப் பிறகு அவர் கடினமான வாழ்க்கையை நடத்தினார். அவர் நிறைய சிரமங்களை எதிர்கொண்டார். அவர் அக்பரிடம் ஹல்திகாட்டி போரில் தோற்றது உண்மைதான்.
நான் ஹல்திகாட்டிக்கு போயிருக்கிறேன். புகழ்பெற்ற போர் நடந்த களத்தைப் பார்க்க நான் விரும்பினேன். மைதானம் எவ்வளவு பெரியது என்பதை அறிய விரும்பினேன். அது ஒரு சிறிய மைதானம். மூன்று அல்லது நான்கு கால்பந்து மைதானங்களின் அளவு இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வீரர்கள் இருந்திருக்கமுடியாது என்பது கண்கூடான உண்மை.

பட மூலாதாரம், Getty Images
மகாராணா பிரதாப் எவ்வளவு பெரிய மஹான்?
அதாவது அங்கு பெரிய சண்டை நடக்கவில்லை. இரண்டாவது விஷயம், அக்பருக்கு முன் சரணடையாத ஒரே ராஜபுத்திர ஆட்சியாளர் மகாராணா பிரதாப் மட்டுமே. இந்தப்போருக்கு சிறப்பு வரலாற்று முக்கியத்துவம் எதுவும் இல்லை. 16, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்த விஷயத்தின் முக்கியத்துவம் இந்தப் பக்கமோ அல்லது அந்தப் பக்கமோ இருக்கவில்லை.
இருப்பினும் மக்களின் கற்பனையில் மகாராணா பிரதாப் ஒரு நாயகனாகவே காணப்பட்டார். மேலும் மண்டியிடாமல் கடைசி மூச்சு வரை போராடிய ஒரே ராஜபுத்திரன் என்பதால் அவரை அப்படிப்பார்க்க வேண்டியது நியாயம்தான். அவர் ஒரு நாயகனாக நினைவுகூரப்படுகிறார். ஹீரோக்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த நினைவுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பிரச்னை என்னவென்றால் மகாராணா பிரதாப் இந்தியாவின் பாதுகாப்பிற்காக வெளிநாட்டவர்களுடன் போரிட்டார் என்ற கருத்தை உருவாக்கி, அவர் தேசத்தின் மானத்திற்காக போராடிய ஒரு தேசிய ஹீரோ என்று பிம்பம் அவருக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. தேசம் என்ற கருத்து இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில்தான் உருவானது.
ஆங்கிலத்தில் நாடு என்றால் கண்ட்ரி. ஆனால் கன்ட்ரியை நாடு என்று அழைக்க முடியுமா? கிராமம், கண்ட்ரி என்று அழைக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் பெரிய மனிதர்களிடம் கண்ட்ரி ஹவுஸ் இருக்கும். நாடு என்பது கண்ட்ரி அல்ல. ஆங்கிலத்தில் மட்டுமல்ல பிரெஞ்சு மொழியிலும் அப்படித்தான். பிரெஞ்சு மொழியில் ’பெய்’ என்றால் கண்ட்ரி. பெய்ன்ஜா என்பது விவசாயி.
நாடு என்பதன் கற்பனை உருவம்
நாடு என்றால் இங்கும் கிராமம் என்றே பொருள். அதனால்தான் நாம் (பர்தேஸ்) வெளிநாடு செல்கிறோம் என்று சொல்கிறோம். பாட்னாவில் இருந்து கொல்கத்தா சென்றாலும் அது பர்தேஸ்தான். பர்தேஸ் பற்றி பல கவிதைகளும், நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. நாடு என்றால் நாம் பிறந்த இடம். 16ஆம் நூற்றாண்டில் நாடு, வெளிநாடு, வெளிநாட்டவர் என்ற கருத்து எங்கும் இருக்கவில்லை. மேலும் நாடு என்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை.
இந்த கருத்துக்கள் அனைத்தும் பிற்காலத்தில் வந்தவை. 19ஆம் நூற்றாண்டின் கருத்தை 16ஆம் நூற்றாண்டில் வைப்பதானது, ஹல்திகாட்டி போரில் அக்பரின் படைகள் போர் விமானங்களில் சென்றன என்று சொல்வதைப் போல் உள்ளது. இதைச் செய்ய யாராவது வற்புறுத்தினால் அதை முட்டாள்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் இந்த முட்டாள்தனத்தால் அவர்கள் பலனடைகிறார்கள். இந்த முட்டாள்தனம் அவர்களின் தேவை. பாஜகவின் வாக்கு வங்கி அரசியலுக்கு ராஜஸ்தான் சிறந்த உதாரணம். வரலாற்றைத் திரித்து எழுத விரும்புவது வலதுசாரிகள் மட்டுமே அல்ல. சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளும் அப்படிச் செய்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
வரலாற்றில் கம்யூனிச பார்வை
சோவியத் ரஷ்யாவில் எழுதப்பட்ட வரலாறு மிகவும் நகைப்புக்குரியதாக இருந்தது. அவர்கள் கூட ஒரு வகையான தேசியவாத கருதுகோளை வலுக்கட்டாயமாக செருகினார்கள். இப்படிப்பட்ட சிதைவு எந்தப் பக்கத்திலிருந்தும் சாத்தியம்தான். நமது நாட்டில் வலதுசாரிகள் இந்த வேலையை செய்கிறார்கள்.
காங்கிரஸில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என தனித்தனி பிரிவுகள் உருவாகத் தொடங்கின. ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொரு சமூகம் வந்தபோது, வகுப்புவாதத்திற்கும், தேசியவாதத்திற்கும் கொடுக்கப்பட்ட வடிவம் நமது தேசிய இயக்கத்தின் ஒரு குணாதிசயமாகும். அதன் நிழல் வரலாற்றிலும் விழுந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கற்பிக்கப்பட்ட வரலாறுதான் இந்து வெர்சஸ் முஸ்லிம். இது மத அலகுகளில் மட்டுமே பார்க்கப்பட்டது. 1950 மற்றும் 1970 க்கு இடையில் வரலாறை எழுதும் விதம் மாறியது. இந்து vs முஸ்லிம் தவிர புதிய வர்க்கப் போராட்டத்தின் வடிவம் வந்தது. இதை மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் வளர்த்தனர்.
இந்த வரலாற்றாசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. முதலாவதாக, டி.டி.கௌசம்பி, இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ்.ஷர்மா மற்றும் ஏ.ஆர்.தேசாய் போன்ற வரலாற்றாசிரியர்கள் எழுத்துக்கு ஒரு புதிய வளைவை அளித்தனர். வரலாற்றை எழுதும் போக்கை அவர்கள் மாற்றினார்கள். மத அலகுகள் இருந்த இடங்களில் அவர்கள் வர்க்கப் போராட்டத்தை நிறுவினார்கள். இது வரலாறு எழுதும் செயல்முறையை முற்றிலுமாக மாற்றியது. 1980 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த அலகுகளும் பலவீனமடையத் தொடங்கின. முதலாவதாக, மார்க்ஸியம் அதன் சொந்த பலவீனங்களைக் கொண்டிருந்தது. மார்ஸிசியத்தால் விளக்கமுடியாத பல புதிய தலைப்புகள் தோன்றின.
வரலாறு எழுத்தியல் அணுகுமுறை
உணர்ச்சிகளின் வரலாறு, தனிநபர்களின் பரஸ்பர உறவுகளின் வரலாறு, வாழ்விடத்தின் வரலாறு, சுற்றுச்சூழலின் வரலாறு மற்றும் பாலின வரலாறு போன்ற பல தலைப்புகள் வர ஆரம்பித்தன. இவ்வாறான நிலையில் வரலாறு எழுத்தியலில் மீண்டும் குழப்பம் சூழ்ந்தது. 1985 ஆம் ஆண்டுக்கு முன்பே, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த எழுத்து இந்து-முஸ்லிம் பிரிவுகளிலிருந்து வெகு தொலைவிற்கு போய்விட்டது.
வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் இப்போது இல்லை என்பது துரதிருஷ்டவசமானது. சிறந்த வரலாற்றாசிரியர்கள் முன்பு இருந்தனர். அவர்களில் மிகப் பெரிய பெயர் ஆர்.சி.மஜூம்தார். ராதாகிருஷ்ண முகர்ஜி லக்னெளவை சேர்ந்தவர். இவர்கள் வரலாற்றை முற்றிலும் இந்துத்துவ கண்ணோட்டத்தில் பார்த்தனர். ஆயினும்கூட அவர்கள் மிகவும் திறமையான வரலாற்றாசிரியர்களாக இருந்தார்கள். அவர்களுடன் வாதிடுவது சுவையானதாக இருந்தது. அப்போது நான் வயதில் சிறியவனாக இருந்ததால் என்னால் வாதிட முடியவில்லை. ஆனால் ஆர்.எஸ்.ஷர்மாவும் இர்ஃபான் ஹபீப்பும் மிகக் கடுமையாக வாதிடுவார்கள். ஆனால் இன்று வாதம் செய்வதற்கு யாருமே இல்லை.
இப்போது வரலாற்றின் விஷயங்கள் மாறிவிட்டன. இப்போது மீண்டும் மக்கள் இந்து vs முஸ்லிம் வரலாற்றை எழுத விரும்புகிறார்கள். அதற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்றாலும் கூட அவர்கள் மீண்டும் அங்கு செல்ல விரும்புகிறார்கள். உண்மையில் ஜேம்ஸ் மில் இந்திய வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்திருந்தார். இந்திய வரலாற்றில் இந்துக் காலம், முஸ்லிம் காலம், ஆங்கிலேயர் காலம் பற்றி நமக்குக் கற்றுத் தந்தவர் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இந்து மற்றும் முஸ்லிம் வரலாற்றின் உண்மை
ஆனால் இந்திய வரலாற்றாசிரியர்கள், ஜேம்ஸ் மில்லின் கண்ணாடி மூலமான வரலாற்றில் இருந்து வெகு தூரத்திற்கு வந்துவிட்டனர். ஏனென்றால் அதில் இந்து முஸ்லிம் மோதல் தெரியவில்லை என்பதால் அந்த வரலாறு அவர்களுக்கு பிடிக்கவில்லை. மகாராணா பிரதாப்பின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தனது படையின் தலைவராக இருந்தார். ஆனால் அவருக்குப் பிறகு அவரது மிகப்பெரிய தளபதி ஹக்கீம் கான். அவர் ஒரு முஸ்லிம்.
அக்பரின் தரப்பில் இந்து மதத்தைச் சேர்ந்த ராஜா மான் சிங் இருந்தார். அப்படியென்றால் அதை எப்படி இந்து vs முஸ்லிம் என்று சொல்வது? அந்தக் காலத்தில் இந்து vs முஸ்லிம் என்று எதுவும் கிடையாது. மகாராணா பிரதாப்பின் மிகப்பெரிய கூட்டாளி முஸ்லிம் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். மறுபுறம் இந்து ராஜா மான் சிங் அவருடன் சண்டையிடுகிறார், அதை எப்படி இந்து vs முஸ்லிம் என்று நிரூபிப்பீர்கள்? அந்தக் காலத்தில் அது அப்படிச்செய்யப்படவில்லை.
மகாராணா பிரதாப் அந்தக் காலத்தில் ஒரு ஹீரோவைப் போல இருந்தார். அவர் பிரபலமாகவும் இருந்தார். நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் மகாராணா பிரதாப்பின் புகழ் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அவர் ஒரு இந்து தேசியவாதி. தனது தேசத்தைப் பாதுகாக்க வெளிநாட்டவருடன் சண்டையிட்டார் என்று கூறுவது அபத்தமானது. அப்படி நடக்கவுமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களின் பிரச்னை என்னவென்றால் உண்மைகள் தங்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் உண்மைகளை திரித்துவிடுகிறார்கள். ஹல்திகாட்டியில் மகாராணா பிரதாப் வெற்றி பெற்றார் என்று சொல்கிறார்கள். குழந்தைகளுக்கு என்ன தெரியும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
வரலாற்று உண்மைகளால் வெட்கம்
ஔரங்கசீப்பின் காலத்தில் மிக உயர்ந்த மன்சப்தாரிகளாக இருந்தவர்கள் மகாராஜா ஜஸ்வந்த் சிங் மற்றும் மகாராஜா ஜெய் சிங். மராட்டியர்களும் அவரது படையில் நிறைந்திருந்தனர். அந்தக் காலத்தில் அது இந்து vs முஸ்லிம் என்று பார்க்கப்படவில்லை. முகலாயர்களுக்கும் - ராஜபுத்திரர்களுக்கும் இடையில், முகலாயர்களுக்கும் - சீக்கியர்களுக்கும் இடையில், முகலாயர்களுக்கும் - மராத்தியர்களுக்கும் இடையில், முகலாயர்களுக்கும் - ஜாட்களுக்கும் இடையில் போர்கள் நடந்துள்ளன. இந்தச் சண்டைகளில் ரத்தக்களரி இருந்தது, ஆனால் ஜேம்ஸ் மில் முஸ்லிம் ஆட்சி என்று அழைத்த 550 ஆண்டுகளில் ஒரு வகுப்புவாத கலவரம் கூட இல்லை.

பட மூலாதாரம், Getty Images
மதச்சார்பற்ற நாட்டில் அதிக வகுப்புவாத கலவரங்கள்
1713-14ல் அகமதாபாத்தில் முதல் வகுப்புவாத கலவரம் நடந்தது. இந்த கலவரம் ஹோலி மற்றும் பசுவைக் கொன்றது தொடர்பானது. ஒளரங்கசீப் 1707 இல் காலமானார். அதற்கு 6-7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக்கலவரங்கள் நடந்தன. யோசியுங்கள், ஔரங்கசீப் காலத்தில் கலவரம் நடக்கவில்லை. 18 ஆம் நூற்றாண்டு முழுவதிலுமாக வெறும் ஐந்து கலவரங்கள் மட்டுமே நடந்தன. இடைக்காலத்தில் வகுப்புவாத கலவரங்கள் இல்லை அதாவது இந்து முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கழுத்தை அறுக்க ஆர்வம் காட்டவில்லை. இன்று நமது நாடு சமயசார்பற்றதாக உள்ளது. ஆனால் எத்தனை கலவரங்கள் நடக்கின்றன என்று பாருங்கள்.
அந்த காலகட்டத்தின் சூழல் வித்தியாசமாக இருந்ததால் இந்த உண்மையை குறிப்பிடுகிறேன். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி தொடங்கியபோது, அடையாளத்திற்கான அணிதிரள்வு தொடங்கியது. ஒருவர் உறுதியான முஸ்லிமாக மாற வேண்டும் என்று முஸ்லிம் அடையாளமான ஷா ஹபிபுல்லா, ஊக்குவிக்கத் தொடங்கினார். கலப்பு கலாச்சாரம் நோக்கி நாம் நகர்ந்துவிட்டோம் என்றும் அதை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
18ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த அடையாளத்திற்கான போராட்டம் 19ஆம் நூற்றாண்டில் வலிமை பெற்றது. அதன் பின்னர் முஸ்லிம்களின் வலு முற்றிலுமாக முடிவுக்கு வந்ததை காணமுடிந்தது. ஆனால் முஸ்லிம்களின் அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறுவது நியாயமற்ற விளக்கமாகும். இடைக்கால ஆட்சியாளர்கள் முஸ்லிம்கள் இல்லையா?
அப்போதும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆனால் முஸ்லிம்களின் ஆட்சி அல்லது முஸ்லிம் சமூகத்தின் ஆட்சி, இந்து சமூக ஆட்சி என்று சொல்வது மிகவும் தவறான விஷயம். ஆட்சியாளர் என்பவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். முஸ்லிம்களின் வீழ்ச்சி, முஸ்லிம்களின் அழிவு என்பதும் தவறான விளக்கமாகும்.

பட மூலாதாரம், Getty Images
அடையாள அரசியல்
ஆனால் இந்த அடையாள உருவாக்கம் மீண்டும் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டில், சுதந்திரப் போராட்டம் தொடங்கியபோது, மக்களின் உணர்வு மதம் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஜாட்கள், சீக்கியர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் மராட்டியர்கள் முகலாயர்களுடன் நடத்திய போர்கள், அரசியல் மற்றும் ராணுவ மோதலாக இருந்தன. சொல்வது விநோதமாகத் தோன்றினாலும் உண்மை என்னவென்றால், வகுப்புவாதத்தின் எழுச்சி ஜனநாயகத்தின் ஒரு அம்சம். முன்பு பொதுமக்கள் அரசியலில் ஈடுபடுத்தப்பட்டதில்லை, ஆனால் ஜனநாயகத்தில் பொதுமக்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினர்.
மன்னராட்சி இருந்த வரை அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்து கிடந்தது. மக்களாட்சி உருவான பின்னர் வாக்கு வங்கியை உருவாக்கும் வகையில் அரசியல்வாதிகள் பிரிவினையை ஏற்படுத்தினர். பின்னர் அந்த பிரிவினை அனைத்துப் பிரிவுகளுக்கும் பரவியது. அவை இந்து vs முஸ்லிம், பெங்காலி vs மராத்தி, ஏழைகள் vs பணக்காரர்கள், இந்தி vs தமிழ் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதில் மிகப்பெரியது இந்து vs முஸ்லிம். காங்கிரஸின் தேசியவாத பிம்பம், மத அலகுகளுடன் கூடியது. அந்தக்காலத்தின் காங்கிரஸுக்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள். ஆனால் முஸ்லீம் லீக் கட்சிக்கு இந்துக்களும், முஸ்லிம்களும் எதிரிகள். இதுதான் வித்தியாசம். நாட்டில் ஜனநாயகமயமாக்கல் தொடங்கியபோது, இந்த அடையாளங்கள் அனைத்தும் முன்னே வர ஆரம்பித்தன.
இந்த அடையாளத்தின் அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையானது 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நீண்ட வரலாற்றுக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது, இதன் விளைவை இன்று நாம் காண்கிறோம், இப்போது அது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வரும் காலத்தில் இவையெல்லாம் முடிவுக்கு வரும் என்று நேரு நினைத்தார், ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்தது.

பட மூலாதாரம், Getty Images
வாக்கு வங்கி அரசியல்
நாட்டின் முதல் பொதுத்தேர்தலும் மதம், சாதி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. அது பின்தங்கிய சமுதாயமாக இருந்தது. அப்போது, கல்வி இல்லை- போதுமான விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை. பிற்காலத்தில் கொஞ்சம் அனுபவம் கிடைத்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும் என்று நேரு நம்பினார். ஒருவர் வாக்களிக்கச் சென்றால் அவர் ஒரு வாக்காளர் மட்டுமே என்றும் சாதி மற்றும் மதத்தின் பிரதிநிதி அல்ல என்றும் நேரு நம்பினார். மதம், சாதி மற்றும் பிராந்தியத்தின் அழுத்தத்திலிருந்து ஒரு நபர் விடுபடுவார் என்று அவர் நம்பினர், ஆனால் அது நடக்கவில்லை.
பிற்காலத்தில் சாதியின் பெயரால் மக்களை வாக்கு வங்கியாக்கும் முயற்சி நடந்தது. இது முலாயம் மற்றும் லாலு யாதவின் எம்-ஒய் (முஸ்லிம்-யாதவ்) ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டது. இந்த சூத்திரங்களால் வாக்குகள் கிடைத்தன.
மகாராணா பிரதாப்பை மகிமைப்படுத்துவது வாக்கு வங்கி திரட்டலின் ஒரு பகுதியாகும். அவர் ஒரு ராஜா. கடைசி மூச்சு வரை போராடினார். இதைத்தவிர அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அக்பரின் சாம்ராஜ்யத்தில் மேவார் ஒரு சிறிய பகுதி. பிற்காலத்தில் மகாராணா பிரதாப்பின் மகன், ஜஹாங்கீருக்கு நெருக்கமானவராக ஆனார். அவருக்கு எதிராக அவரது சகோதரர் சண்டையிட்டார். இவைதான் வரலாற்று உண்மைகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகாராணா பிரதாபிற்கும் அவரது ஆட்சிக்கும் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மேவாரைப் பெற அக்பர் நிறையப் போராட வேண்டியிருந்தது என்றுகூட சொல்லமுடியாது. மகாராணா பிரதாப் தொடர்ந்து சண்டையிட்டார், மற்ற ராஜபுத்திரர்கள் பார்வையாளர்களாக இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அக்பரின் விரிந்த பேரரசு
அக்பர் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவியது மட்டுமல்லாமல், ஒரு புதிய வகை சாம்ராஜ்யத்தையும் நிறுவினார். இந்தப் பேரரசின் தன்மை வித்தியாசமானது. 1947 ஆகஸ்ட் 15 முதல் இன்று வரை ஷாஜகானின் செங்கோட்டையில் இருந்து இந்தியப் பிரதமர் ஏன் உரை நிகழ்த்துகிறார்? சுதந்திர தினக்கொண்டாட்டம் செங்கோட்டையில் நடப்பது ஏன்? ஷாஜகானின் செங்கோட்டையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது? செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவோம் என்று சுபாஷ் சந்திரபோஸும் கூறியிருந்தார். ஒரு அடையாளமாக மாறும் அளவிற்கு செங்கோட்டையில் என்ன உள்ளது? அக்பர் நிறுவிய ராஜ்யத்தின் தன்மை மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக செங்கோட்டை மாறியுள்ளது.
எந்த மதத்தையும் அவமதிப்பது கடவுளை அவமதிக்கும் செயலாகும் என்று அக்பர் ஒருமுறை கூறியிருந்தார். அந்த சாம்ராஜ்யத்தின் குணம் இதுதான், அதனால்தான் அந்த குணத்திற்காக நீங்கள் செங்கோட்டைக்குச் செல்கிறீர்கள். மோதியும் இதே செங்கோட்டைக்குச்செல்கிறார். மேலும் சத்தீஸ்கரில் உள்ள செங்கோட்டையின் நகலில் இருந்து பிரதமர் ஆவதற்கு முன்பே மோதி உரையாற்றியுள்ளார்.
இது பெருமைக்கான போட்டி அல்ல. வரலாற்றில் இப்படி ஒரு போட்டி இருந்தில்லை. வரலாற்றாசிரியர்களுக்கு இது ஒரு முக்கிய விஷயம் அல்ல. அக்பர், 'அக்பர் தி கிரேட்' ஆன நிலையில், இன்னொருவர் ஏன் மஹான் அல்ல என்று ஒரு கேள்வியை உருவாக்கிவிட்டார்கள்.
மகாராணா பிரதாப் ஹல்திகாட்டி போரில் வெற்றி பெற்றதாக ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார். இதைக் கேட்டபின், அப்படியா சரி, நான் திருத்திவிடுகிறேன் என்று ஒரு பேராசிரியர் சொல்கிறார். இங்கு என்ன நடக்கிறது? அக்பரால் உருவாக்கப்பட்ட பேரரசின் தன்மை இறுதிவரை அப்படியே இருந்தது.
ராஜஸ்தானில் ராஜபுத்திரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் ராஜபுத்திரர்களின் பெருமை எந்த ஒரு ராஜஸ்தானியின் மீதும் திணிக்கப்படுகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் வாக்குகளைப் பெறுவதன் கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவுக்கு அரசியல் நம் வாழ்வில் வேரூன்றி விட்டது. பத்மினிக்கும் இதேதான் நடந்தது. பத்மினி என்பவர் மல்லிக் முகமது ஜெயசியின் இலக்கியக் கதாபாத்திரத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.
பத்மினிக்கு வரலாற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. ஜோதா பாய் விஷயமும் அப்படித்தான். வரலாற்றில் ஜோதா பாய் என்ற பெண் இல்லை. ஜஹாங்கீருக்கு ஜோத்பூரில் இருந்து ஒரு மனைவி இருந்தார். எனவே அவரை ஜோதா பாய் என்று சொல்லலாம். ஆனால் அக்பரின் மனைவி ஜோதா பாய் முற்றிலும் கற்பனையானவர். ஜோதா அக்பர் திரைப்படத்தை உருவாக்கியவர். பல வரலாற்றாசிரியர்களிடம் கேட்டபோது அப்படி ஒரு பெண் இல்லை என்று அனைவரும் கூறினார்கள். அப்படி இருந்தும் அவர் அந்தப்படத்தை எடுத்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












