விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக, நாம் தமிழர் ஆகிய இரண்டில் எந்தக் கட்சிக்கு அதிமுக வாக்குகள் கிடைக்கும்?

பட மூலாதாரம், FACEBOOK
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த போது, இடைத்தேர்தல் போட்டியில் அதிமுக இல்லாதது எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், "அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி திமுக தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்" என்று பேசினார்.
அதேபோல விக்கிரவாண்டியின் சாணிமேடு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இப்படி பாமகவும், நாம் தமிழர் கட்சியும் தங்களுக்கு வாக்களிக்குமாறு அதிமுகவினரிடம் கோரிக்கை வைப்பது ஏன்? இது குறித்து அதிமுக கூறுவது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பாமக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார்.
ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, "தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று அறிக்கை வெளியிட்டது.

பட மூலாதாரம், @EPSTamilNadu
விக்கிரவாண்டியில் அதிமுகவின் வாக்கு வங்கி
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 84,157 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா அஸ்மி 8,216 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தார்.
திமுகவுக்கு 48.41 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 43.47 வாக்குகளும் கிடைத்தன. திமுக மற்றும் அதிமுக இடையே இந்தத் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக எம்எல்ஏ புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் அப்போது அதிமுக, பாமக மற்றும் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி அடங்கியுள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 41.39%. இரண்டாம் இடத்தை அதிமுக-வின் பாக்யராஜ் (35.25% வாக்குகள்) பிடித்தார். பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் முரளிசங்கர் (15.78%) வாக்குகளைப் பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தங்கள் இருப்பை நிலைநிறுத்த வாய்ப்பு கிடைத்தும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற வலுவான தலைவர்கள் அம்மாவட்டத்தில் இருந்தும், இடைத்தேர்தலை புறக்கணித்ததன் மூலம் அதிமுக தனக்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் பாமக மற்றும் நாம் தமிழர்
அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளதால், தி.மு.க, பா.ம.க மற்றும் நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம்.
கடந்த திங்கள்கிழமை, பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “இத்தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பியுள்ளது. பணம் கொடுத்து இக்கூட்டத்துக்கு மக்கள் வரவிடாமல் தடுக்க முயற்சித்தார்கள். ஆனால், நாம் பணத்திற்கு மயங்குபவர்களா? இத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே என்று நினைத்து வாக்களிக்காதீர்கள். ஒரு வாக்கு கூட திமுகவுக்கு விழக்கூடாது. அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்று பேசினார்.

பட மூலாதாரம், @NaamTamilarOrg
அதேபோல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், இந்த இடைத்தேர்தல் என்பது தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்குமான போட்டி என்று கூறினார்.
"அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் உறவுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொது எதிரி திமுகவை விரட்ட உதவுங்கள். எத்தனையோ முறை உங்கள் கூட்டணியில் இல்லாதபோதும் கூட உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். எனவே இம்முறை எனக்கு ஆதரவு கொடுங்கள்" என்று கூறினார்.
விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "அதிமுகவின் நிறுவனரான மக்கள் தலைவர் எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக பதவி வகித்தவர். திமுக சார்பாக நின்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாங்கள் பாமக போல சாதியவாத, மதவாத கட்சி அல்ல. எனவே திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் அதிமுக தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் எங்களுக்கு தான் கிடைக்கும்" எனக் கூறினார்.
இவ்வாறு தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று கட்சிகளும் அதிமுகவின் வாக்குகளைப் பற்றி பேசும் நிலையில், அதிமுக வாக்குகள் யாருக்கு என்பது தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பட மூலாதாரம், AFP
பாமக மேடையில் ஜெயலலிதா புகைப்படம்
இதுகுறித்து பாமக வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டபோது, "அதிமுக உருவானதே திமுகவை எதிர்க்க தானே. அவர்களின் பரம அரசியல் எதிரி திமுக தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அதிமுக தேர்தல் களத்தில் இல்லாதபோது, திமுகவுக்கு எதிராக நாங்கள் தான் நிற்கிறோம். எனவே தான் அதிமுகவினரிடம் ஆதரவு கேட்கிறோம். இதில் என்ன தவறு. திமுகவை எதிர்க்க அவர்கள் எங்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள்" என்று கூறுகிறார்.
ஆனால் இதை மறுக்கும் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி, "தேர்தல் புறக்கணிப்பு என்றால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது மட்டுமல்ல, தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தான் பொருள். ஒரு குடிமகனாக அதிமுக தொண்டனுக்கு வாக்களிக்க உரிமை உண்டு தான். அதற்காக அவர்கள் இன்னொரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள். இதை எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் தெளிவாகக் கூறியுள்ளார்." என்கிறார்.
விக்கிரவாண்டியில் நடந்த பாமகவின் தேர்தல் பிரசார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மோதியுடன் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்ததும் சர்சையைக் கிளப்பியது.
இது தொடர்பாக பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, "ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராக தான் நாங்கள் பார்க்கிறோம். எனவே தான் அவரது புகைப்படத்தை வைத்தோம்" என்கிறார்.
ஆனால் ஜெயலலிதாவை ஊழல்வாதி என அழைத்த பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பாமகவுக்கு அவரது புகைப்படத்தை பயன்படுத்த உரிமையில்லை என்கிறார் அதிமுகவின் ஜவஹர் அலி.
"அம்மா ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராக பார்ப்பது சந்தோஷம் தான், ஆனால பாமக தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே இதைச் செய்கிறது. எப்போதும் போட்டி திமுக- அதிமுக இடையே தான்.
அதேபோல நாங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு அளித்தார்கள். அதற்கு நன்றி, மற்றபடி அதிமுக தேர்தலை புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறது. உண்மையான அதிமுக தொண்டர்கள் மற்ற கட்சியின் பக்கம் சாய மாட்டார்கள்" என்கிறார் ஜவஹர் அலி.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் கடந்த ஜூன் 27ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஒருநாள் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தினர்.
இதற்கு முழு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
'அதிமுக செய்த தவறு'

விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது என்றும் ஆனால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் கை ஓங்கும் என்பதால் தான் தோல்வியைத் தவிர்க்க அதிமுக இத்தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன்.
"அதிமுக செய்தது மிகப்பெரிய தவறு. தொடர்ந்து பல தோல்விகளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்துள்ளது உண்மைதான். ஆனாலும் அதிமுக களம் கண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவுக்கு போட்டி அதிமுக தான் என்ற நிலையை அவர்களே மாற்றுவது போல உள்ளது. அதிமுகவின் சில வாக்குகள் பாமக பக்கம் செல்லவும் வாய்ப்புள்ளது" என்கிறார் குபேந்திரன்.
அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பது இது புதிதல்ல. 2009ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார்.
"வெற்றி, தோல்வி மற்றும் பிரசார செலவுகள் என்பதைத் தாண்டி தேர்தல் என்பது தொண்டர்களைச் சந்திக்கவும் கள நிலவரத்தை தெரிந்துகொள்ளவும் ஒரு தலைவருக்கு உதவும். தொண்டர்களும் உற்சாகமாக செயல்படுவார்கள்.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மற்றும் ஆளுமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவரது முடிவு தொண்டர்களை பாதிக்கும். அதிமுக தொண்டர்களின் சோக மனநிலையைப் புரிந்துகொண்டு தான் மற்ற கட்சிகள் அவர்களை குறிவைக்கின்றன." என்கிறார் குபேந்திரன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












