ராகுல் காந்தி மற்றும் சபாநாயகர் இடையே வெடித்த மோதலின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், SANSAD TV
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை (ஜூலை 1) ஆற்றிய உரை பல புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க-வுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் ராகுல் காந்தி உரையின் ஒரு குறிப்பிட்டப் பகுதியின் வீடியோவைப் பகிர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர்.
இத்தனை பிரச்னைக்கும் மத்தியில் ராகுல் காந்தி தனது உரையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை குறிப்பிட்டு பேசிய ஒரு விஷயம் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
மீண்டும் சபாநாயகர் ஆன பிறகு, 'இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள் ஓம் பிர்லாவை எதிர்க்கட்சிகளுக்குச் சம வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதால் இந்த விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ராகுல் காந்தி, "நாடாளுமன்றம் எவ்வளவு அமைதியாகச் செயல்படுகிறது என்பது கேள்வி அல்ல. இந்திய மக்களின் குரலை எழுப்ப எவ்வளவு அனுமதி வழங்கப்படுகிறது என்பது தான் கேள்வி," என்றார்.
ஓம் பிர்லா அரசின் விருப்பப்படி செயல்படுகிறார் என்றும், சபாநாயகர் பதவி என்பது அரசியல் சாசனப் பதவி என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

பட மூலாதாரம், ANI
ராகுல் என்ன சொன்னார்?
ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் நடந்த ஒரு சம்பவத்தையும் ராகுல் காந்தி தனது உரையில் எடுத்துரைத்தார்.
சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து அன்று ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோதியால் ஓம் பிர்லா சபாநாயகர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.
"சபாநாயகர் ஐயா, உங்கள் நாற்காலியில் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். "முதலாவது இந்திய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவையின் சபாநாயகர். மற்றவர் ஓம் பிர்லா. மோதி ஜி உங்களிடம் கைகுலுக்கியபோதும், நான் கைகுலுக்கியபோதும் ஒன்றைக் கவனித்தேன்,” என்றார்.
"நான் உங்களிடம் கைகுலுக்கிய போது, நீங்கள் நேராக நின்றீர்கள். மோதி ஜி கைகுலுக்கியபோது, நீங்கள் குனிந்து வணங்கி அவருடன் கைகுலுக்கினீர்கள்,” என்றார்.
ராகுல் காந்தியின் கூற்றுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, திடீரென நாற்காலியில் இருந்து எழுந்து, "இது சபாநாயகர் மீதான தேவையற்ற குற்றச்சாட்டு," என்றார்.
ராகுலின் இந்தக் கருத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரே, மாண்புமிகு பிரதமர் அவர்கள் தான் இந்த அவையின் தலைவர். நான் வணங்கியது எனது கலாச்சாரம் கற்று கொடுத்தது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் இந்த இருக்கையில் கூட, நம்மை விடப் பெரியவர்களை வணங்கி வாழ்த்துங்கள் என்பதை கலாச்சாரம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. சமமானவர்களை சமமாக நடத்த வேண்டும்,” என்று விளக்கினார்.
ஓம் பிர்லா மேலும் கூறுகையில், "எனது கலாச்சாரம் மூத்தவர்களைக் குனிந்து, தேவைப்பட்டால் அவர்களின் கால்களைத் தொட்டு மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது. உங்களை விட இளையவர்களை சமமாக நடத்துங்கள். இது எங்கள் கலாச்சாரம். நான் அதைப் பின்பற்றுகிறேன்," என்றார்.
இதையடுத்து எழுந்து நின்று பேசிய ராகுல் காந்தி, "சபாநாயகர் ஐயா, உங்கள் கருத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த அவையில் சபாநாயகரை விடப் பெரியவர்கள் யாரும் இல்லை என்பதை நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்," என்றார்.
ஓம் பிர்லா முன் கைகூப்பியபடி வணங்கிய ராகுல் காந்தி, "நான் உங்கள் முன் தலை வணங்குவேன், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் உங்கள் முன் தலைவணங்கும்," என்றார்.
"இதுதான் ஜனநாயகம், இந்த மக்களவையின் தலைவர் நீங்கள். நீங்கள் யார் முன்பும் தலை வணங்கக் கூடாது. நீங்கள் பாதுகாவலர்," என்றார்.
இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி-க்கள், 'சபைத் தலைவர் பிரதமர் தான்' என்றனர்.
"மக்களவையில் சபாநாயகர் கூறுவது மட்டுமே ஏற்கப்படும்,'' என்றார் ராகுல். மக்களவையில் எம்.பி-க்களாக நாங்கள் சபாநாயகருக்கு அடிபணிய வேண்டும் என்று நான் நம்புகிறேன். இதனை ஏற்காத நபர் இந்தச் சபையில் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் நாங்கள் உங்களுக்கு அடிப்பணிவோம் என்று நானும் எதிர்க்கட்சிகளும் நம்புகிறோம்,” என்றார்.
எழுந்து நின்று ஆட்சேபனை தெரிவித்த மோதி

பட மூலாதாரம், SANSAD TV
மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றும் போது, பிரதமர் நரேந்திர மோதி இரண்டு முறை எழுந்து நின்று தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
எம்.பி ஒருவர் பேசும் போது பிரதமர் நரேந்திர மோதி நடுவில் எழுந்து நின்று எதிர் கருத்து சொன்னதைக் கடந்த காலங்களில் அரிதாகவே பார்க்க முடிந்தது.
அனைத்து மதங்களையும் பற்றி பேசிய ராகுல் காந்தி, இந்து மதத்தை குறிப்பிட்டு பா.ஜ.க-வை குறிவைத்து பேசியபோது தனது எதிர்ப்பை தெரிவிக்க முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி எழுந்து நின்றார்.
ராகுல் காந்தி, “நம்முடைய முன்னோர்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம் என்று சொன்னார்கள். சிவபெருமான் கூட பயப்படாதீர்கள், மற்றவரை பயம் கொள்ள வைக்காதீர்கள் என்று கூறி திரிசூலத்தை மண்ணில் புதைத்தார்,” என்றார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட ஆளும் கட்சியைச் சுட்டிக்காட்டி பேசிய ராகுல் காந்தி, இந்துக்களைப் பற்றிச் சில காட்டமான கருத்துக்களைக் கூறினார்.
ராகுல் காந்தி இதைக் கூறியவுடன் எழுந்து நின்ற பிரதமர் மோதி, “இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமாகிறது, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் 'வன்முறை’ என்று அழைப்பது தீவிரமான பிரச்னையை உருவாக்கும்,” என்றார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நரேந்திர மோதி ஜி, நான் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை சொல்லவேயில்லை. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முழுமையான இந்து சமுதாயம் இல்லை. உங்களை ஒட்டுமொத்த இந்து சமூகமாக காட்டிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம்,” என்றார்.
இதற்குப் பிறகு, ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கையில், பிரதமர் மோதி தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்த சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டது.
‘பாஜக-வினர் பயத்தில் இருக்கின்றனர்’
“இன்று ராஜ்நாத் சிங் நான் வணக்கம் சொன்னதற்கு புன்னகையுடன் பதில் வணக்கம் சொன்னார்,” என்று கூறிய ராகுல் காந்தி, பிரதமர் மோதியை தாக்கி, "ஆனால் மோதி ஜி நமஸ்தே கூட சொல்லாமல் 'சீரியஸாக’ அமர்ந்திருந்தார். ராஜ்நாத் சிங் என்னைப் பார்த்துச் சிரித்ததை மோதிஜி பார்த்தால் பிரச்னை வரும். கட்காரியின் கதையும் இதேதான். அனைவரும் பயத்தில் இருக்கின்றனர். அவர் பா.ஜ.க-வினரை பயமுறுத்துகிறார்,” என்றார்.
இதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா, "மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரே, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் இது. அதன் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்,” என்றார்.
அப்போது பிரதமர் மோதி மீண்டும் எழுந்து நின்று, "எதிர்க்கட்சித் தலைவரை 'சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என்பதை ஜனநாயகமும், அரசியல் சாசனமும் எனக்குக் கற்பித்துள்ளன," என்று கூறினார்.
ராகுல் காந்தியின் உரையின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் எழுந்து நின்று ஆட்சேபனை தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா சபாநாயகரிடம், "விதிகளை மீறி ஒருதலைப்பட்சமாக அவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்படுகிறன. எங்களைப் பாதுகாக்கவும். இது சரியில்லை,” என்றார்.

பட மூலாதாரம், SANSAD TV
கடந்த காலத்தில் என்ன நடந்தது?
மக்களவையில் ராகுல் காந்திக்கும் ஓம் பிர்லாவுக்கும் இடையே நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இது பற்றிய விவாதம் நடந்து வருகிறது.
2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
2009-ஆம் ஆண்டு மீரா குமார் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரை சபாநாயகர் நாற்காலியில் அமர வைக்க, அப்போதைய எதிர்க்கட்சியான பா.ஜ.க தலைவர் லால் கிருஷ்ண அத்வானியும், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் சென்றதை வீடியோவில் காண முடிகிறது.
சபாநாயகர் நாற்காலிக்குச் செல்லும் முன் மீரா குமார் மன்மோகன் சிங் மற்றும் அத்வானியைக் குனிந்து வணங்காமல் வாழ்த்து தெரிவிக்கிறார். சபாநாயகர் நாற்காலியை அடைந்த மீராகுமார் மீண்டும் இரு தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இருப்பினும், மீரா குமார் அத்வானிக்கு வணக்கம் செலுத்தும் போது தலை குனிந்து மரியாதை செலுத்தினார்.
2014-இல் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
2014-இல் சுமித்ரா மகாஜன் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் செல்ல பிரதமர் நரேந்திர மோதி, அத்வானி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட பல தலைவர்கள் சென்றிருந்தனர்.
அப்போது சுமித்ரா மகாஜன் பிரதமருக்கு நேரடியாக வாழ்த்து தெரிவித்தார். ஆனால், சுமித்ரா மகாஜன் அத்வானிக்கு அருகில் நின்று வணங்கி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், சுமித்ரா மகாஜனும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
2019-இல் ஓம் பிர்லா முதல்முறையாக சபாநாயகராக பதவியேற்றபோது, சபாநாயகர் இருக்கையை அடைந்ததும், பிரதமர் நரேந்திர மோதியைத் தலை குனிந்து வணங்கி வரவேற்றார். இருப்பினும், அவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பிற தலைவர்களை வணங்காமல் வெறுமனே வாழ்த்து தெரிவித்தார்.
இந்த தலைவர்களில் டி.எம்.சி எம்.பி சுதீப் பந்தோபாத்யாயும் இருந்தார். அவர் நரேந்திர மோதியை விட மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், SANSADTV
மாநிலங்களவைத் தலைவர் பற்றிய விவாதம்
கடந்த 2023-ஆம் ஆண்டு, மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் பற்றிய ஒரு செய்தியும் முன்னர் விவாதிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இருந்து 78 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டம் நடத்தியபோது இந்தச் சம்பவம் நடந்தது.
அப்போது டி.எம்.சி எம்பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குனிந்து வணங்கி மரியாதை செலுத்துவதைப் போல நடித்து மிமிக்ரி செய்து காட்டினார். இந்தக் காட்சியை ராகுல் காந்தியும் தனது போனில் பதிவு செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோவை காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் பகிர்ந்திருந்தார்.
இந்தக் காணொளிக்குப் பதிலளிக்கும் விதமாக தன்கர் கருத்து தெரிவித்திருந்தார், "தலைவர் மற்றும் சபாநாயகர் பதவிகளுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. கட்சி மோதல்கள் இருப்பது சகஜம். ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்வார்கள். ஆனால் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தலைவரைப் போல் மிமிக்ரி செய்கிறார், அதனைக் கட்சியின் முன்னணித் தலைவர் போனில் வீடியோ எடுப்பது எவ்வளவு அபத்தமானது, எவ்வளவு வருந்தத்தக்கது," என்றார்.
பின்னர், ராஜ்யசபாவில் பேசிய தன்கர், "இப்போதெல்லாம் நான் யாரை எவ்வளவு தலைவணங்க வேண்டும் என்பதைக் கவனமாக செய்ய வேண்டும் போலுள்ளது. நான் யார் முன் தலைவணங்க வேண்டும்? புகைப்படக்காரர் எங்கிருந்து அதை படம் எடுப்பார்? இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் யார் பதிவிடுவார்கள் என்று தயக்கமாக உள்ளது. இது மிகவும் மோசமான சம்பவம்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












