லைக்ஸ் பெற ஆபத்தான ‘சேலஞ்ச் ரீல்ஸ்’ செய்யும் இளைஞர்கள் - மனநோயாக மாறி வருகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிராச்சி குல்கர்னி
- பதவி, பிபிசி மராத்தி
தீபக் மாலி, மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு அருவியின் உயரமான பாறையிலிருந்து குதிப்பதைக் காணும்போது, ரீல்ஸ் விடியோவாக பார்க்கும் நமக்கு ஒரு நொடி இதயம் துடிப்பதை நிறுத்திவிடும் அளவுக்கு பேரதிர்ச்சி ஏற்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் பாலத்தில் இருந்து அவர் பக்கத்து கட்டிடத்திற்கு குதிக்கும் வீடியோவை பார்க்கும்போதும் ஒரு வித பயம் நம்மை ஆட்கொள்கிறது.
தீபக் மாலியின் சமூக ஊடக கணக்கில் இதுபோன்ற பல 'ரீல்ஸ்’ வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
தீபக் மாலியின் மற்றொரு வீடியோவில், புனேவில் உள்ள ஜம்புல்வாடி அருகே நெடுஞ்சாலையில் இருக்கும் 'அந்த' கட்டிடத்தில் மொட்டை மாடி விளிம்பிலிருந்து மிக சாதரணமாக குதிப்பதைக் காண முடிகிறது.
ஜம்புல்வாடி அருகே நெடுஞ்சாலையில் இருக்கும் அதே கட்டிடத்தில் தான் விளிம்பில் தொங்கி கொண்டிருந்த சிறுமியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது ஒரு கிரிப் சவாலுக்காக (grip challenge) உருவாக்கப்பட்ட வீடியோ, அதில் ஒரு இளம் பெண் ஒரு இளைஞரின் கைகளை பிடித்துக் கொண்டு விளிம்பில் இருந்து தொங்கும் காட்சி பதிவாகி உள்ளது.
கட்டிடத்தின் உயரத்தில் இருந்து தொங்கி கொண்டிருந்த சிறுமியும், அவருக்கு கீழே நெடுஞ்சாலையில் செல்லும் கார்களும் காணொலியை பார்ப்பவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரீல் வைரலானபோது, மக்களிடம் இருந்து பல எதிர்வினைகள் வந்தது.
இதுபோன்று ஆபத்தான ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்ததையடுத்து, பாரதி பல்கலைக்கழக போலீஸார் அந்த காணொளியில் இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்தனர்.
ரீல்ஸ் வீடியோவை எடுத்த நபருடன் சேர்த்து மீனாட்சி சலுங்கே மற்றும் மிஹிர் காந்தி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில், தற்கொலை முயற்சி என்ற குற்றப்பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூக ஊடகத்தில் இதுபோன்ற ஸ்டண்ட் வீடியோக்கள் வெளியாவது புதிதல்ல.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்டண்ட் வீடியோக்கள் செய்வது ஏன்?
இதுபோன்ற சாகச ரீல் வீடியோக்கள், ஸ்டண்ட் வீடியோக்களை வெளியிடும் தீபக் மாலி என்பவர் கடந்த 15-16 ஆண்டுகளாக தாண்டோட்டம் (parkour - பர்க்கூர்) துறையில் இருக்கிறார். 'தாண்டோட்ட’ விளையாட்டு என்பது வழியில் எதிர்படும் தடைகளைத் வேகமாக நேரடியாக தாண்டி தாவி ஓடுதல் ஆகும். 'தாண்டோட்ட’ விளையாட்டில் தேர்ச்சி பெற்ற ஒருவரும் அவருக்கு பயிற்சி அளிக்கிறார். தீபக் மாலி, தான் ஒரு தொழில்முறை விளையாட்டு வீரர் என்று கூறுகிறார்.
இதுபோன்ற சாகசங்கள் செய்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது குறித்து தீபக் மாலி பிபிசி மராத்தியிடம் பேசுகையில், "நான் ரீல்ஸ் செய்யத் தொடங்கியபோது ஸ்டண்ட் செய்வதை தொழிலாகக் கொண்டிருந்தேன். தாண்டோட்டம் ஒரு விளையாட்டு. இந்த 'ஸ்டண்ட்கள்’ நீங்கள் திரைப்படங்களில் பார்ப்பது போன்றே இருக்கும்,” என்று விளக்கினார்.
"சமூக வலைதளங்களில் இதுபோன்று சாகச வீடியோக்களை பகிரும்போது, அது சினிமாத் துறையில் இருப்பவர்களையும் சென்றடைகிறது. சினிமாத் துறையில் எனக்கு வேலை கிடைக்க உதவுகிறது,” என்கிறார்.
"நான் எந்த ஸ்டண்ட் செய்தாலும், மிகவும் கவனத்துடன் இருப்பேன். மேலும் மீட்புப் பணிகள் போன்றவற்றைச் செய்யும்போது, எந்தெந்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதை யூகிக்க முடியாது. ஆனாலும் செய்வோம். எங்களுக்கு அதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது," என்று விவரித்தார்.
"ஆனால் இதுபோன்ற சாகசங்களை முறையாகப் பயிலாத இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோவுக்காக ஸ்டண்ட் செய்யும் போது சமூகத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. எங்கள் விளையாட்டு மீதான நற்பெயர் கலங்கப்படுகிறது,” என்று தீபக் மாலி குறிப்பிடுகிறார்.
புனேவில் வைரலான ரீல்ஸ் பற்றி பேசுகையில், "தொழில்முறையாக கற்றுக் கொண்டு சாகசம் செய்பவர்கள் என்றால் பிரச்னை இல்லை. தற்போது வைரலாகும் ரீல் தவறாக காட்டப்பட்டுள்ளது. இதுபோன்று தவறுகளை சரிசெய்ய முயற்சிக்கிறோம்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
'ஃபாலோயர் போதை' ஏற்படக்கூடும்
சங்கேத் தேஷ்பாண்டே என்பவரும் தனது சமூக ஊடகப் பக்கங்களில் தாண்டோட்டம் (parkour) மற்றும் சுற்றுலாப் பயணங்கள் தொடர்பான ரீல்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் உடற்பயிற்சிக்கு மாற்றாக தாண்டோட்டம் கற்கத் தொடங்கினார்.
"நாம் கற்றுக்கொள்ளும் கலையை மக்கள் அறிந்து கொள்வதற்காகவே சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன,” என்கிறார். எனவே அவர் தனது சாகசங்களை பதிவிட்டு ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுகிறார், அவரைப் பொறுத்தவரை, "இந்த ரீல்ஸ்களை பதிவிடுவதன் நோக்கம் நாங்கள் முன்னேறி வருகிறோம் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதாகும்.”
சாகசங்கள் செய்வது குறித்து பேசிய அவர், "எல்லாவற்றையும் முறையாகப் பயிற்சி செய்து, வல்லுனர்களின் மேற்பார்வையில் தான் செய்து வருகிறோம். ஆபத்தான எதுவும் செய்யவில்லை. இந்த பயிற்சி தொடங்குவதற்கு முன்னர், உங்களுக்கு திறமை இருக்கிறதா என்று சோதித்து, உங்களால் செய்ய முடியுமா என்பதை உறுதிபடுத்திய பின்னரே அனுமதித்தனர். இதிலிருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன்,” என்றார்.
"நிச்சயமாக, ரீல்களைப் பதிவிடுவது ஒருவித அடிக்ஷனை ஏற்படுத்தும். உங்களை பின்தொடர்பவர்களை அதிகரிக்க நீங்கள் முடிவு செய்தவுடன், அது போதையாக மாறும். நீங்கள் எதையாவது தொடர்ந்து பதிவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவீர்கள். நான் எனது பயண வீடியோக்களை பதிவிடுகிறேன்,” என்று விவரித்தார்.
நடிகை ஆர்யா கரேயும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்களை பதிவேற்றம் செய்கிறார். நீங்கள் பின்தொடர்பவர்களை (followers) அதிகமாக்கவும் தக்கவைக்கவும் விரும்பினால், வீடியோக்களை தவறாமல் பதிவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
ஆர்யா கூறுகையில் “நான் சாகசங்கள் எதுவும் செய்வதில்லை. இந்தச் சமூக ஊடகங்களை வருமானம் பெறும் தளமாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்த ரீல்கள் எனக்கு சினிமாத் துறையில் வேலை கிடைக்க உதவுகின்றன. ரீல்ஸ் வீடியோக்களின் 'ரீச்' கிடைக்கும்போது அதன் மூலம் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. அதிக பின்தொடர்பவர்கள் இருப்பதும் வைரலான ரீல்கள் இருப்பதும் நம்மை தேர்வு செய்யும் தகுதியாக அமைகிறது” என்கிறது.
ஆனால் இது இளைஞர்களிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
"எனக்குப் பல ஃபாலோயர்கள் உள்ளனர். ஆனால் நான் இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பதில்லை, எனக்கு மற்ற சேனல்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது. எனக்கு 10,000 பின்தொடர்பவர்கள் இருந்தபோது, கொலாப் (Collaboration) மற்றும் Moj போன்ற தளங்களில் இருந்து வருமானம் பெறுகிறேன். ஆனால் புதுமையாக ஏதாவது செய்தால் தான் ரசிகர்களை தக்க வைக்க முடியும். பல இளைஞர்கள் இவற்றை வருமானமாக பார்க்கின்றனர்,” என்றார்.
ஒரு பத்திரிகையாளர், விமர்சகர் மற்றும் தற்போது ரீல்ஸ் வீடியோக்களில் 'புனேரி காகா' என்று பிரபலமாக அழைக்கப்படும் சுனந்தன் லேலே, "இன்ஸ்டா போன்ற சமூக ஊடக தளங்கள் நல்லதையும் செய்யும் கெட்டதையும் செய்யும். நாம் பதிவிடும் வீடியோவைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். இது நிறைய படைப்பாளிகளுக்கு பயனளித்துள்ளது, மேலும் ஒரு நல்ல ரீல்ஸை பார்ப்பதன் மூலம் நீங்கள் இரண்டு நிமிடங்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். அதே சமயம் மன அழுத்தத்தையும் கொடுக்கும்,” என்று விளக்கினார்.
ரீல்ஸ் பதிவிடுவது addiction ஆக மாறுமா?

பட மூலாதாரம், facebook
,தபோல்கர் சில நாட்களுக்கு முன்பு, மாணவர்களிடையே காணப்படும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் 'இணைய அடிமையாதல் (அடிக்ஷன்)’ குறித்து ஆய்வு செய்தார்.
இந்த நோக்கத்திற்காக, அவர் புனேவில் உள்ள மூன்று கல்வி நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,922 மாணவர்களை ஆய்வு செய்தார். இதில் மொத்தம் 541 பெண்களும் 1,381 ஆண்களும் அடங்குவர், அதே சமயம் 17 வயது முதல் 20 வயது வரை இருப்பவர்கள் ஆய்வு செய்யப்பட்டனர்.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, சுமார் 45.66% பெண்கள் இணைய அடிமையாதல் விளைவின் லேசான தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அதே சமயம் 31.24% பெண்கள் மிதமான அடிமையாதல் நிலையில் இருந்தனர். இணையத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டப் பெண்களின் எண்ணிக்கை 1.11% ஆக இருந்தது.
அதே சமயம் ஆண்களில் இந்த விகிதம்: லேசாக அடிமையாதல் - 47.72%, மிதமான அடிமையாதல் - 28.89%, மற்றும் கடுமையான தாக்கம் - 1.57% ஆக இருந்தது.
ஒட்டுமொத்தப் புள்ளி விவரத்தைப் பார்த்தால், 16.29% மாணவர்கள் மட்டுமே இணையத்தால் பாதிக்கப்படாமல் இருக்கின்றனர்.
இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், போட்டோ பதிவுகள் என அனைத்தும் இணைய போதையின் ஒரு பகுதி என்று தபோல்கர் கூறுகிறார்.
பிபிசி மராத்தியிடம் பேசிய தபோல்கர், "தற்போது, இணைய அடிமைத்தனம் ஒரு தீவிரமான பிரச்னையாகிறது, மேலும் இது மற்ற போதைப் பழக்கத்தைப் போலவே கருதப்பட வேண்டும். சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்," என்றார்.
"நம் வீடியோவுக்கு நிறைய லைக்ஸ் கிடைக்கிறது. பலரைச் சென்றடைகிறது, என்பது ஒரு வகையான போதை. மற்ற போதைப் பழக்கங்களைப் போலவே இதிலும் மூளை செயல்பாடுகள் தீவிரமாக இருக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது கவனத்தை ஈர்க்கப் பல ஆபத்தான புதிய வழிகளை உருவாக்குகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை முறையை உருவாக்க உள்ளோம்," என்றார்.
'சைபர் ஸ்பேஸ்’ படிக்கும் முக்தா சைதன்யா கூறுகையில், “ரீல்ஸ் பதிவிடுபவர்களை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகத்தின் அளவு அதிகரிக்கிறது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனவே, நீங்களும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். சிலர் ஆர்வ மிகுதியில் ரயிலைக் கடக்கும் ஸ்டண்ட் போன்ற ஆபத்தான வீடியோக்களை பதிவிடுவார்கள். பொதுவாக 25 வயதிற்கு உட்பட்டவர்கள் தான் இந்த ஆபத்தான வீடியோக்களை பதிவிடுகின்றனர்,” என்கிறார்.
"இந்த இளம் வயதில் ஹார்மோன், மூளை, உடல் அனைத்தும் இந்த உற்சாகத்தைப் பெறவே சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் சாகச விளையாட்டு, மலையேறுதல் போன்ற செயல்பாடுகளால் இளைஞர்கள் உற்சாகத்தோடு பெற்றனர். ஆனால் இப்போதெல்லாம் அந்த உற்சாக உணர்வை முயற்சி இல்லாமல் இன்ஸ்டாகிராமில் பெறுகிறார்கள்." என்று கூறுகிறார்.
இன்ஸ்டாகிராமில் இருந்து பணம் வருவதில்லை என்றும், ஆனால் யூடியூப் ஷார்ட்ஸ் பிரபலமடைந்தால், வருமானம் கிடைக்கும், ஒருவர் எவ்வளவு பிரபலமாக இருக்கிறாரோ, அவ்வளவு வாய்ப்புகளும் கிடைக்கும் என்று கூறுகிறார் முக்தா சைதன்யா.
"இங்கு பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைவிட த்ரில்லிங் உணர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. ரீல் பதிவிட்டு பிரபலமாகும் போது டோபமைன் வெளியிடப்படுகிறது. மூளையில் ரசாயன செயல்முறைகள் நிகழ்கின்றன. ஆனால் அதன் உச்ச வரம்பு தீர்மானிக்கப்பட வேண்டும். சுயக்கட்டுப்பாடுதான் ஒரே தீர்வு.” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












