ராகுல் காந்தியின் பேச்சு ‘சிறுபிள்ளைத்தனம் அல்ல’ - மக்களவையில் பிரதமர் மோதி சொன்னது என்ன?

பட மூலாதாரம், SANSAD TV
செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோதி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். திங்கள் (ஜூலை 2) அன்று ராகுல் காந்தி பா.ஜ.க-வைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்ததற்கு மோதி எதிர்வினையாற்றினார்.
அவர் பேசத் தொடங்கியபோது, எதிர்க்கட்சியினரிடமிருந்து தொடர்ந்து கோஷங்கள் எழுந்தன.
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள் (ஜூலை 1) ஆளும் கட்சியான பா.ஜ.க-வைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தது பலத்த சர்ச்சையாகியிருந்தது. அப்போதே அதற்கு மோதி உட்பட பா.ஜ.க அமைச்சர்கள் எழுந்து நின்று ஆட்சேபனை தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 2) பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ராகுல் காந்தியின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்.
நரேந்திர மோதி தனது உரையில், தேர்தல்கள், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரை, சமாதானக் கொள்கை, ஊழலைப் பொறுத்துக் கொள்ளாத தனது அரசின் கொள்கை உள்ளிட்டவற்றைப் பற்றி பேசினார்.
பிரதமர் மோதியின் உரையின் போது, அவர் பேசிக் கொண்டிருக்கையில், “மணிப்பூர்... எங்களுக்கு நீதி வேண்டும்... சர்வாதிகாரம் பலிக்காது... இந்தியாவை ஒன்றிணையுங்கள்…” போன்ற முழக்கங்கள் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

பட மூலாதாரம், SANSAD TV
‘சிறுபிள்ளைத்தனம் அல்ல’
பிரதமர் மோதி, எதிர்க்கட்சிகள் சபையின் கண்ணியத்தைப் பொருட்படுத்தாமல், அராஜகம் செய்வதாகவும், பொய்களைப் பேசுவதாகவும் குற்றம் சுமத்தினார். இது நாடு நெருக்கடியை நோக்கிச் செல்வதற்கான அறிகுறியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சபாநாயகர் இதைத் தீவிரமாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோதி வேண்டுகோள் விடுத்தார்.
ஒருநாள் முன்னதாக நடந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையைக் குறிப்பிட்டு பேசிய, பிரதமர் மோதி, "நேற்று நடந்ததைத் தீவிரமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போக்கு தொடரக் கூடாது. இப்படியே போனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. இந்தச் செயல்களை ‘சிறுபிள்ளைத்தனம்’ என்று சொல்லி புறக்கணிக்கக் கூடாது," என்றார்.
“இதற்குப் பின்னால் உள்ளவை நல்ல நோக்கங்களை கொண்டிருக்கவில்லை. அவை நாட்டுக்கு தீவிரமான அச்சுறுத்தலாக இருக்கின்றன," என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர், "நாட்டில் அராஜகத்தைப் பரப்பக் காங்கிரஸ் திட்டமிட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. புதிய திட்டங்களைப் பரப்பி வரும் காங்கிரஸ் கட்சி தாங்கள் விரும்பிய பலனை அடையாவிட்டால் ஜூன் 4-ஆம் தேதி நாடு முழுவதும் அராஜகம் நடக்கும் என அவர்கள் தரப்பில் பல்வேறு தளங்களில் இருந்து தெளிவாக அறிவிக்கப்பட்டது. மக்கள் கூடுவார்கள், அராஜகம் பரப்பப்படும் என்றனர். அராஜகத்தைப் பரப்புவதே அவர்களின் நோக்கம்," என்றார்.

பட மூலாதாரம், ANI
ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர்
பிரதமர் மோதி தனது உரையை தொடங்கும் போது எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்து கூச்சல்கள் வரத் தொடங்கியது.
பிரதமர் மோதியின் உரையைச் சிறிது நேரம் நிறுத்திவிட்டு, சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசினார்.
சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவரிடம், “நீங்கள் இப்படி செய்வது சபையின் கண்ணியத்துக்கு பொருந்தாது,” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய நரேந்திர மோதி, "உலகின் மிகப்பெரிய தேர்தல் பிரசாரத்தின் பலனாக பொது மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். தொடர்ந்து பொய்களைப் பரப்பியும் கடும் தோல்வியை சந்தித்த சிலரின் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது," என்றார்.
பிரதமர் மோதி, தனது அரசின் சாதனைகளைக் குறிப்பிட்டு, இதைப் பார்த்த பிறகுதான் மக்கள் தனக்கு வெற்றியைத் தந்திருப்பதாகக் கூறினார்.
தனது முதல் பதவிக் காலத்தைப் பற்றி மோதி குறிப்பிடுகையில், “ஊழலைப் பொறுத்துக் கொள்ளாததால் பொதுமக்கள் என்னை ஆசீர்வதித்தனர்”, என்று கூறினார்.
பிரதமர் தனது உரையில், எமர்ஜென்சியின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிப்பிட்டு, அப்போதைய இந்திரா காந்தியின் ஆட்சியை விமர்சித்தார்.

பட மூலாதாரம், SANSAD TV
ராகுல் என்ன பேசினார்?
திங்கள் (ஜூலை 2) அன்று மக்களவையில் பேசிய ராகுல், பா.ஜ.க-வின் இந்து அரசியல், அக்னிவீர் திட்டம் ஆகியவற்றை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். மேலும் நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, மணிப்பூர் விவகாரம், விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றைப் பற்றியும் பேசினார்.
அவர் பேசிய கருத்துக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆக்கியோர் அவையில் எழுந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












