சே குவேராவை கைது செய்த பொலிவிய ராணுவ ஜெனரல் மரணம்: சே-வை எப்படி சிறை பிடித்தார்?

பொலிவிய ராணுவ ஜெனரல்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கேரி ப்ரேடோ சல்மான்- 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். சே குவேராவை பிடித்தது குறித்து அவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்

பொலிவியாவில் கடந்த 1967ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உதவியுடன் அந்நாட்டு ராணுவம் ஜெனரல் கேரி ப்ரேடோ சல்மான் ஒரு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையின் மூலம் அந்நாட்டில் சே குவேரா உருவாக்கிய கம்யூனிச கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. அப்போது கைது செய்யப்பட்ட சே குவேராவை, ஒரு நாள் கழிந்து ராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றார்.

அந்தக் காலகட்டத்தில் பொலிவியாவில் வலதுசாரி ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது.

சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்த நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யூனிசம் வளர்ந்து வந்தது அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி சேகுவேராவின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளையும் அமெரிக்கா விரும்பவில்லை.

கியூபா நாட்டு கம்யூனிச தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவின் முக்கிய கூட்டாளியாகத் திகழ்ந்த சே குவேரா, உலக அளவில் புகழ்பெற்ற தலைவராக விளங்கினார். அந்நாட்டில் 1959ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிற நாடுகளில் கொரில்லா போரை நடத்துவதற்காக அவர் அங்கிருந்து வெளியேறினார்.

பொலிவிய ராணுவ ஜெனரல் ப்ரேடோ "ஓர் அசாதாரண நபர்" என்றும், "அன்பு மற்றும் இணைந்து செயல்படுதல், மன தைரியம்" போன்ற உன்னத குணங்களை விட்டுவிட்டு மறைந்துவிட்டதாகவும் அவரது மகன் தெரிவிக்கிறார்.

சே குவேராவை சுட்டுக் கொன்ற பொலிவிய ராணுவ அதிகாரி மரியோ டெரான் கடந்த ஆண்டு காலமானார்.

சே குவேராவின் கொரில்லா படை வீரர்கள் மீது, யாரும் எதிர்பாராத வேளையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி அவரைக் கைது செய்ததுடன், பொலிவிய ராணுவத்தைக் காப்பாற்றியதாக ஜெனரல் ப்ரேடோவை புகழ்ந்த பொலிவியா, அவரை ஒரு கதாநாயகனாகவே பார்த்தது.

பொலிவியாவில் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த சே குவேராவின் குழுவினரை பிடிப்பதற்காக அமெரிக்காவால் பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவ வீரர்களை ஜெனரல் ப்ரேடோ தலைமை தாங்கி வழி நடத்தினார். சே குவேராவின் குழுவில் தொடக்கத்தில் 120 பேர் இருந்த நிலையில், அப்போது வெறும் 20 பேர் மட்டுமே இருந்தனர்.

சே குவேரா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கியூபாவில் தொழில் துறை அமைச்சராக சே குவேரா பதவி வகித்தபோது 1965ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்

கடந்த 1980-களில் நடந்த ஒரு துப்பாக்கி சூட்டின்போது ஒரு குண்டு தவறுதலாக அவரது தண்டுவடத்தைப் பாதித்ததால் கடந்த 1981ஆம் ஆண்டு முதல் ராணுவ ஜெனரல் ப்ரேடோ ஒரு வீல் சேரைப் பயன்படுத்தி தான் வாழ்ந்து வந்தார். இந்தக் காலகட்டத்தில் 1967ஆம் ஆண்டு அவரது ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றது குறித்து 'சே குவேராவை எப்படி நான் பிடித்தேன்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார்.

அவருடைய மகனைப் பொறுத்தளவில், "அவரது வாழ்க்கையில் சே குவேராவைப் பிடித்தது ஒரு சாதனை எனக் கருத முடியாது - ஆனால், அரசமைப்பையும் சட்டத்தையும் மதிக்கும் ஜனநாயக இயக்கமாக அந்நாட்டு ராணுவத்தை மாற்றியதே அவரது சாதனை."

சே குவேரா எனப் பொதுவாக அனைவராலும் அறியப்படும் எர்னெஸ்டோ ரஃபேல் குவேரா டி லா செர்னா, பொலிவியா தலைநகர் லா பாஸிலிருந்து 830 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லா ஹிகுவேரா கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு ரகசிய இடத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டது. பின்னர் 1997ஆம் ஆண்டு அவரது உடல் கண்டுபிடித்து மீட்கப்பட்டு கியூபாவுக்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.

“சே குவேராவை நான் எப்படி சிறைபிடித்தேன்?”

கேரி ப்ராடோ பொலிவியாவில் நடந்த கொரில்லா போரில் சே குவேரா எப்படி வீழ்த்தப்பட்டார் என்பதை ஒரு நூலாக எழுதி 1990இல் வெளியிட்டார்.

அந்த நூலில், “அன்றைய தினம் எனது வீரர்கள் யூரோ பள்ளத்தாக்கிற்கு செல்லும் பாதையைக் கட்டுப்படுத்தி இருந்தார்கள். அந்தப் பகுதி அடர்ந்த புதர்கள், பாறை, மரங்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. தோராயமாக மதியம் 1 மணியளவில் எனது வீரர்கள் இரண்டு பேரை சிறைபிடித்து வைத்திருப்பதாகச் சத்தம் போட்டார்கள்.

அவர்கள் சிறை பிடித்திருந்த நபர்களைப் பார்க்க, அந்தப் பள்ளத்தாக்கில் நான் 20 மீட்டர் தொலைவுக்கு மேல்நோக்கி ஓடினேன். அந்த இருவரில் ஒருவரிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டபோது அவர் ‘சே குவேரா’ என்று கூறினார். மற்றொருவர் வில்லி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்,” என்று சே குவேராவை சிறைபிடித்த தருணம் குறித்து எழுதியுள்ளார்.

மேலும் அந்த நூலில், “நாங்கள் இருந்த பகுதியில் மூன்று அல்லது நான்கு சே குவேராக்கள் உலவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வதந்திகள் பரவியிருந்தன. ஆகவே, அவரது அடையாளத்தை உறுதி செய்தாக வேண்டிய கட்டாயம் நிலவியது.

சேவிடம் நான் அவரது வலது கையைக் காட்டுமாறு கூறினேன். ஏனென்றால், எனக்குக் கிடைத்திருந்த தகவலின்படி அவரது வலது கையின் பின்புறத்தில் ஒரு தழும்பு இருக்க வேண்டும். அந்தத் தழும்பு இருந்தது. ஆனால், அவர் புகைப்படங்களில் காட்டப்பட்டதைப் போல் இருக்கவில்லை. அவர் மிகவும் பரிதாபகரமான தோற்றத்துடன், அழுக்காக இருந்தார்.

அவர் மாதக்கணக்கில் தலைமறைவாக ஓடிக்கொண்டிருந்தார். அவரது தலைமுடி நீளமாக, அலங்கோலமாக இருந்தது, தாடி புதர் போல் இருந்தது. அவரது சீருடைக்கு மேலாக பட்டன்கள் இல்லாத நீல நிற ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தார். அவரிடம் 6 முட்டைகள் அடங்கிய ஒரு அலுமினிய பாத்திரம் இருந்தது. அவருக்கு உள்ளூர் மக்களுடன் தொடர்பு இருந்தது என்பதை அதன்மூலம் புரிந்துகொண்டேன்.

சே குவேரா

பட மூலாதாரம், Getty Images

பள்ளத்தாக்கில் தப்பி ஓடும்போது சுடப்பட்டதால், சேவின் வலது கால் பின்பகுதியில் குண்டடி பட்ட காயம் இருந்தது. நான் அந்தப் பகுதியைச் சுற்றியும் மிஷின் கன் ஏந்திய வீரர்களை நிறுத்தியிருந்தேன். அவர்கள் சே குவேராவை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார்கள்.

சே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். அவர் தனது இறுதி நாட்களை எதிர்நோக்கியிருந்தார். ஐந்து கொரில்லா வீரர்கள் இறந்திருந்தார்கள். அதை நினைத்து வருத்தத்தில் இருந்தார்.

நான் அவர் வைக்கப்பட்டிருந்த பகுதியைப் பாதுகாக்க கூடுதல் படையினரை அழைத்தபோது, ‘கவலைப்படாதீர்கள் கேப்டன், இதுதான் முடிவு. எல்லாம் முடிந்தது’ என்று கூறினார்.

அதற்கு நான், ‘உங்களுக்கு இது முடிவுக்கு வந்திருக்கலாம். இங்கு நீங்கள் கைதியாக இருக்கலாம். ஆனால், இந்தப் பள்ளத்தாக்கில் இன்னும் சில சக்தி வாய்ந்த கொரில்லா வீரர்கள் இருக்கிறார்கள்,’ என்று கூறினேன்,” என்று ப்ராடோ எழுதியுள்ளார்.

மேலும், சே குவேராவின் ரோலக்ஸ் கடிகாரத்தை அவரது வீரர்கள் எடுத்துக்கொண்டதாகவும் தான் அதை சேவிடம் திருப்பிக் கொடுக்குமாறு கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் எனது வீரர்களை அழைத்து அவரது கைக்கடிகாரத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொன்னேன். அதை வாங்கி சேவிடம் கொடுத்தபோது, அவர் எப்படியும் அடுத்த நாளில் வேறு யாராவது வீரர் வந்து எடுத்துக்கொள்வார் என்பதால் என்னையே வைத்திருக்கச் சொன்னார்.

அந்தக் கடிகாரம் என்னிடம் 1985ஆம் ஆண்டு வரை இருந்தது. பிறகு பொலிவியாவில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு, கியூபாவுடன் ராஜ்ஜிய உறவு புதுப்பிக்கப்பட்ட பிறகு, கியூப தூதரகம் மூலமாக அவரது குடும்பத்திற்கு அனுப்பி வைத்தேன்,” என்று தனது நூலில் ப்ராடோ குறிப்பிட்டுள்ளார்.

சே குவார்: புரட்சியாளர் ஆன மருத்துவர்

சே குவேரா

பட மூலாதாரம், KEYSTONE

பியூனோஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்த பயண அனுபவங்கள் அவரை மார்க்சிய சித்தாந்தத்தை நோக்கி இழுத்தன.

1951இல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார். அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் 'தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்' என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.

பயணங்களில் பேரார்வம் கொண்டிருந்த சே குவேரா, இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் முன்பே, ஜனவரி 1950இல் அர்ஜென்டினாவில் தனியாகவே தனது சிறிய எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சுமார் 4,500 கிலோ மீட்டர் பயணித்திருந்தார்.

சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார்.

பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்.

புரட்சியை நோக்கி ஈர்க்கப்பட்ட சே குவேரா

1959 முதல் 1961 வரை கியூபா மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றினார் சே குவேரா. அதே காலகட்டத்தில் கியூபாவின் நிதி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அப்போது நிலச் சீர்திருத்தம் மற்றும் தொழில் துறையை தேசியமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

கியூப அரசின் பிரதிநிதியாக, இந்தியா, சோவியத் யூனியன் உள்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார் சே குவேரா. 1964 டிசம்பரில் சே குவேரா தலைமையிலான கியூப பிரதிநிதிகள் குழு ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றது. அப்போது ஐ.நாவில் உரையாற்றிய சே தென்னாப்ரிக்காவில் நிலவிய வெள்ளை நிறவெறி மற்றும் அமெரிக்கா கறுப்பர் இன மக்களை நடத்திய விதம் ஆகியவற்றை விமர்சித்தார்.

1965 பிப்ரவரி 24 அன்று அல்ஜீரிய தலைநகர் அல்ஜெய்ர்ஸ்-இல் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் ஒற்றுமை குறித்து நிகழ்த்திய உரையே சே குவேரா கடைசியாக பொது வெளியில் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக அறியப்படுகிறது. அதன்பின் சில வாரங்களில் மாயமான சே குவேரா குறித்து சில மாதங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை.

அதே ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி, சே குவேரா கியூபா மக்களுக்கு எழுதிய 'பிரியாவிடைக் கடிதத்தை' பிடல் காஸ்ட்ரோ வெளியிட்டார். கியூபப் புரட்சிக்கான தனது ஆதரவை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த சே, தனக்கு வழங்கப்பட்ட கியூபக் குடியுரிமை மற்றும் பதவிகள் அனைத்தையும் துறப்பதாகக் கூறியிருந்தார்.

சே குவேரா

பட மூலாதாரம், AFP

அந்தக் காலகட்டத்தில் காங்கோ ஜனநாயக குடியரசில் முன்னாள் பிரதமர் பாட்ரைஸ் லுமும்பாவின் ஆதரவாளர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சிக்கு ஆதரவாகப் போரிட தனது கொரில்லா படையினர் 12 பேருடன் காங்கோ சென்றிருந்தார் சே.

காங்கோ கிளர்ச்சியாளர்களின் செயல் திறனின்மையால் ஏற்கனவே கவலையுற்றிருந்த சே குவேராவின் இருப்பிடம் மற்றும் நடவடிக்கை ஆகியவற்றை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ கண்டறிந்தது உள்ளிட்ட காரணங்களால் புரட்சியை செயல்படுத்த முடியவில்லை என்று சே நினைத்தார்.

அதன்பின் உண்டான உடல்நலக் குறைவைத் தொடர்ந்து தான்சானியா மற்றும் செக் குடியரசில் தங்கியிருந்த சே, ஒரு போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பொலிவியா சென்றார்.

1967 அக்டோபர் 7 அன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது வெளியே தெரிவிக்கப்படவில்லை.

பின்னர் 1995இல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சே குவேராவின் உடல் என்று கருதப்பட்ட உடல் ஒரு விமானதளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அது சேவின் உடல்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியபின், சே மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேரின் உடல்கள் கியூபா கொண்டுவரப்பட்டு அக்டோபர் 17, 1997 அன்று ராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: