"சிபிஆர் செய்யக்கூட நேரமில்லை": இரானில் வலுக்கும் போராட்டங்களால் மருத்துவமனைகளின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: ரானின் கராஜ் நகரில் போராட்டங்கள் தொடரும் நிலையில் தீப்பற்றி எரியும் அரசு கட்டிடம்
    • எழுதியவர், சௌரோஷ் பக்தாஸ்
    • எழுதியவர், ரோஜா அஸாடி
    • பதவி, பிபிசி செய்திகள் பெர்சியன்
    • எழுதியவர், ஹெலென் சலிவன்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மரணம் மற்றும் காயங்கள் தொடர்பான கடுமையான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன

இரானில் அரசுக்கு எதிரான பெரிய அளவிலான போராட்டங்கள் தொடரும் நிலையில், மூன்று மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள், உயிரிழந்தும் காயமடைந்தும் வரும் நோயாளிகளால் தங்களது மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவ பணியாளர் ஒருவர், "இளைஞர்களின் தலைகளிலும் இதயங்களிலும் நேரடியாக சுடப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன" என்று கூறினார். மேலும், தலைநகரில் உள்ள ஒரு கண் மருத்துவமனை நெருக்கடி நிலையை அறிவித்துள்ளதாக மற்றொரு மருத்துவர் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய மருத்துவ பணியாளர்களில் இருவர், நேரடி குண்டுகள் (live ammunition) மற்றும் பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காயங்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறினர்.

வெள்ளிக்கிழமை, போராட்டக்காரர்களைக் கொல்வது ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்தது. அதே நேரத்தில், அமைதியான போராட்டங்களை "வன்முறையான சீர்குலைவு நடவடிக்கைகள் மற்றும் பரவலான சேதப்படுத்தல்கள்" ஆக மாற்றியதற்கு அமெரிக்காவே காரணம் என்று இரான் குற்றம்சாட்டியது.

சமீபத்திய முன்னேற்றங்களுக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை எதிர்நோக்குகிறது. அதற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது!!!" என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

பொருளாதார பிரச்னைகளை முன்னிட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு தலைநகர் டெஹ்ரானில் இந்த போராட்டங்கள் தொடங்கின.

அதன் பின்னர், இரானின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் ஊர்களுக்கு அவை பரவியுள்ளன. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு குழந்தைகள் உட்பட 26 பேரின் அடையாளங்களை பிபிசி பெர்சியன் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புப் படை உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு மனித உரிமை அமைப்பு அவர்களின் எண்ணிக்கை 14 என தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு, ரஷ்ட் நகரில் உள்ள பூர்சினா மருத்துவமனைக்கு 70 உடல்கள் கொண்டு வரப்பட்டதாக பிபிசி பெர்சியன் உறுதிப்படுத்தியுள்ளது. அங்குள்ள பிணவறை முழுமையாக நிரம்பியிருந்ததால், உடல்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக விடுவிக்க, அவர்களின் உறவினர்களிடம் 7 பில்லியன் ரியால்கள் (£5,222; $7,000) செலுத்துமாறு அதிகாரிகள் கேட்டதாக, மருத்துவமனை சார்ந்த ஒரு தகவல் மூலர் தெரிவித்தார்.

பிபிசி மற்றும் பெரும்பாலான பிற சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு இரானுக்குள் இருந்து செய்தி வெளியிட முடியாத நிலை உள்ளது. மேலும், வியாழக்கிழமை மாலை முதல் நாடு முழுவதும் கிட்டத்தட்ட முழுமையான இணையத் துண்டிப்பு அமலில் இருப்பதால், தகவல்களைப் பெறுவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் கடினமாகியுள்ளது.

டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனை ஊழியர், "மிகவும் கொடூரமான காட்சிகள்" இருந்ததாக விவரித்தார். காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், சிபிஆர் (CPR) செய்யக்கூட நேரமில்லை என்றும் அவர் கூறினார்.

"சுமார் 38 பேர் உயிரிழந்தனர். அவசர சிகிச்சை படுக்கைகளுக்கு கொண்டு வந்த உடனேயே பலர் இறந்துவிட்டனர்… இளைஞர்களின் தலைகளிலும், இதயங்களிலும் நேரடியாக சுடப்பட்டிருந்தது. அவர்களில் பலர் மருத்துவமனைக்கு வந்து சேருவதற்கும் முன்பே உயிரிழந்துவிட்டனர்" என்று அவர்கள் கூறினர்.

"எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் பிணவறையில் போதிய இடம் இல்லை. உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கப்பட்டன. பிணவறை நிரம்பிய பிறகு, பிரார்த்தனை அறையிலும் உடல்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தனர்" என்று அவர் கூறினார்.

அந்த மருத்துவமனை ஊழியர், உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் இளைஞர்களே என்று தெரிவித்தார்.

"அவர்களில் பலரைப் பார்க்கவே முடியவில்லை. அவர்கள் 20 - 25 வயதுக்குள் இருந்தவர்கள்."

காணொளிக் குறிப்பு, காணொளி: வெள்ளிக்கிழமை இரவு தெஹ்ரான் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள்

வெள்ளிக்கிழமை இரவு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைப்பின் மூலம் பிபிசியுடன் தொடர்பு கொண்ட ஒரு மருத்துவர், டெஹ்ரானின் முக்கிய கண் நிபுணத்துவ மையமான பாராபி மருத்துவமனை நெருக்கடி நிலையை அறிவித்துள்ளதாகக் கூறினார். அவசர சேவைகள் தாங்க முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவசரமற்ற அனுமதிகளும் அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டு, அவசர நிலை சம்பவங்களை சமாளிக்கக் கூடுதல் பணியாளர்கள் அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

போராட்டக்காரர்களுடன் மோதல்களில், இரானின் பாதுகாப்புப் படைகள் பெல்லட் குண்டுகள் நிரப்பப்பட்ட கார்ட்ரிட்ஜ்களை பாய்ச்சும் ஷாட்கன்களை அடிக்கடி பயன்படுத்துகின்றன.

'கண்ணில் சுடப்பட்ட ஒருவரைப் பார்த்தேன்'

மத்திய இரானின் காஷான் நகரைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர், காயமடைந்த பல போராட்டக்காரர்கள் கண்களில் தாக்கப்பட்டிருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கலவரத்தின் போது, நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பலர் காயங்களுடன் கொண்டு வரப்பட்டதாக தனது சக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

வியாழக்கிழமை இரவும் இதே போன்ற தகவல்கள் வெளியாகின.

டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மருத்துவர் ஒருவர் பிபிசியிடம், "காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ஒருவரின் கண்களில் சுடப்பட்டு, குண்டு அவரது தலையின் பின்புறமாக வெளியேறியதை நான் பார்த்தேன்," என்று கூறினார்.

"நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த மையத்தின் கதவுகள் மூடப்பட்டன. அப்போது ஒரு குழு கதவை உடைத்து, குண்டடி பட்ட ஒருவரை உள்ளே வீசி விட்டு சென்றது. ஆனால் அப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. அவர் மருத்துவமனைக்கு வருவதற்கும் முன்பே உயிரிழந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற முடியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தென்மேற்கு இரானின் ஷிராஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர் ஒருவர் வியாழக்கிழமை அனுப்பிய வீடியோ மற்றும் ஆடியோ செய்திகளையும் பிபிசி பெற்றுள்ளது. அதில், பெருமளவில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கையை சமாளிக்க போதுமான அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இரானில் இருந்து வெளியாகி வரும் காட்சிகளில், வெள்ளிக்கிழமை இரவு டெஹ்ரானில் போராட்டக்காரர்கள் பெருமளவில் தெருக்களில் திரண்டதும், வாகனங்களுக்கு தீ வைத்ததும், தலைநகருக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் ஒரு அரசு கட்டிடம் தீப்பற்றியதும் காணப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து, பொது சொத்துகளைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து ராணுவமும் செயல்படும் என்று இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கலவரம் பரவியதால், இரான் பாதுகாப்புப் படைகள் பல இடங்களில் பரவலாகப் பிளவுபட்டு செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக வெளியான தகவல்களுக்கு பின்னணியாக இது அமைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை, இரான் அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த முறையில் பல எச்சரிக்கைகளை வெளியிட்டனர். 'ஆயுதம் ஏந்திய நாசகாரர்கள்' மீது தீர்மானமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை இரவு டெஹ்ரானில் யாரும் உயிரிழக்கவில்லை என்று இரான் காவல்துறை தெரிவித்துள்ளது. இருந்தாலும், 26 கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாகவும், அதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இரவுகளில் டெஹ்ரானில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற ஒரு நேரில் கண்ட சாட்சியர், பிபிசி பெர்சியன் தொலைக்காட்சியிடம், ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்த இரானியர்கள் தங்கள் பெற்றோர்களையும் மூத்தவர்களையும் பயப்பட வேண்டாம் என்று ஊக்குவித்து, போராட்ட பேரணிகளில் கலந்து கொள்ள அழைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவித்தார்.

சனிக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், இரானில் நடைபெறும் மக்களின் பெரும் போராட்டங்களுக்கு ஐரோப்பா ஆதரவளிப்பதாகவும், போராட்டக்காரர்களுக்கு எதிரான 'வன்முறையான ஒடுக்குமுறையை' கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ஸ்டெஃபான் டுஜாரிக், உயிரிழப்புகள் குறித்து அந்த சர்வதேச அமைப்பு மிகுந்த கவலையடைந்துள்ளதாக கூறினார்.

"உலகின் எந்த பகுதியிலும் மக்களுக்கு அமைதியாகப் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அந்த உரிமையை பாதுகாக்கவும், அது மதிக்கப்படுவதை உறுதி செய்யவும் அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் எமானுவல் மக்ரோன், இங்கிலாந்து பிரதமர் சர் கியர் ஸ்டார்மர் மற்றும் ஜெர்மனி அதிபர் ஃப்ரிட்ரிக் மெர்ஸ் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், "பழிவாங்கல் அச்சமின்றி கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் அமைதியாகக் கூடும் உரிமையையும் அனுமதிக்க வேண்டும்" என்று இரான் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.

இரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், Office of the Iranian Supreme Leader/WANA (West Asia News Agency)

படக்குறிப்பு, இரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி

வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட உரையில், இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி தனது கடும் நிலைப்பாட்டைத் தொடர்ந்தார்.

"பல லட்சம் மதிப்புமிக்க மக்களின் ரத்தத்தின் மூலம் இஸ்லாமிய குடியரசு அதிகாரத்திற்கு வந்தது. இதை மறுப்பவர்களின் முன் அது ஒருபோதும் பின்வாங்காது" என்று அவர் கூறினார்.

அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிந்தைய கருத்துக்களில், தனது ஆட்சியானது "அமெரிக்க அதிபரை மகிழ்விக்க முயற்சிக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்ட "அழிவுகரமான சக்திகளைக் கையாள்வதில் இருந்து பின்வாங்காது" என்று காமனெயி மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், 1979 இஸ்லாமிய புரட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரானின் கடைசி ஷாவின் மகன், இந்தப் போராட்டங்களை மிகச் சிறப்பானவை என்று வர்ணித்து, வார இறுதிவரை இரானியர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

"எங்களின் இலக்கு இனி தெருக்களில் இறங்குவது மட்டுமல்ல. நகர மையங்களை கைப்பற்றி, அவற்றை தக்கவைத்துக் கொள்வதற்குத் தயாராகுவதே" என்று ரேசா பெஹ்லவி சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறினார்.

அமெரிக்காவில் வசித்து வரும் பெஹ்லவி, தாம் நாட்டுக்கு திரும்பத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இரானில் ஆட்சி மாற்றம் குறித்து பேசும் போது, "நாம் அளவுக்கு மீறி முன்னேறி முடிவுகளை எடுக்கக் கூடாது" என்று இரானுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் சர் சைமன் காஸ், பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் கூறினார்.

இரானுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாததால், தற்போதைய சூழலில் மக்கள் ஒன்றிணையக்கூடிய மாற்று தலைவரோ முகமோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், இந்த ஆர்ப்பாட்டங்கள் முந்தைய திடீர் எழுச்சிகளை விட 'மிகவும் பரவலான இயக்கம்' என்றும் அவர் குறிப்பிட்டார், முந்தைய எழுச்சிகள் "பொருளாதாரத்தின் பேரழிவு காரணமாக இரானியர்களால் வாழ்க்கையை நடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக" இருந்ததால் தூண்டப்பட்டன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வெள்ளிக்கிழமை, இரான் தலைமையினருக்கு எதிரான தனது மிரட்டலை அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், அமெரிக்கா மிகவும் கடுமையாக தாக்கும் என்று அவர் கூறினார்.

ஆனால், இதன் பொருள் தரைப்படையை அனுப்புவது அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார். கடந்த ஆண்டு, அமெரிக்கா இரானின் அணு நிலையங்களை இலக்காகக் கொண்டு விமானத் தாக்குதல்களை நடத்தியது.

இதற்கிடையில், போராட்டங்களைத் தூண்டுவதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் காரணம் என்று இரான் வெளியுறவு அமைச்சர் சாட்டிய குற்றச்சாட்டுகள், ஆட்சி எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் "மாயை கலந்த முயற்சி" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்தது.

14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இரானிய அரசியல் செயற்பாட்டாளர் தாகி ரஹ்மானி, டிசம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்ட நோபல் அமைதிப் பரிசு பெற்ற தனது மனைவி நர்கிஸ் மொஹம்மதியை குறிப்பிட்டு, நிலையான மாற்றம் எதுவாக இருந்தாலும் அது வெளிநாட்டு தலையீட்டின் மூலம் அல்லாமல் இரானியர்களிடமிருந்தே வரவேண்டும் என்று கூறினார்.

"முறையாக ஹிஜாப் அணியவில்லை" என்ற குற்றச்சாட்டில் ஒழுக்கப் போலீசாரால் (morality police) கைது செய்யப்பட்டிருந்த மாசா அமினியின் மரணத்தால் தூண்டப்பட்ட 2022 எழுச்சிக்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் மிகவும் பரவலானவை. மனித உரிமை அமைப்புகளின்படி, 550-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடுதல் செய்தி சேகரிப்பு: சோரோஷ் நேகாதாரி, மல்லரி மோஎன்ச் மற்றும் அலெக்ஸ் பிலிப்ஸ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு