IND vs ENG: மழையால் ஆட்டம் நடக்காமல் போனால் யாருக்கு நன்மை? இந்தியாவின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான டாஸ் மழையால் தாமதமாகியுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டி நடந்தால் இரு அணிகளும் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும்? மழையால் ஆட்டமே நடக்காமல் போனால் அது யாருக்கு சாதகமாக இருக்கும்?
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணி ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் அரையிறுதிவரை வந்துவிட்டது. அதேநேரம், இங்கிலாந்து அணி, லீக் ஆட்டத்தைக் கடப்பதற்கே போராட்டத்தைச் சந்தித்தது. நடப்பு சாம்பியன் அணி, லீக் சுற்றோடு வெளியேறிவிடும் என்று கருதப்பட்டநிலையில், சூப்பர்-8 சுற்றுக்கு வந்து முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்திய அணி தொடர் வெற்றியைப் பெற்று வந்தாலும், கடந்த கால வரலாறு அந்த அணிக்குச் சாதகமாக இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வகையில் அணியின் பலவீனம் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அதனால் இங்கிலாந்துடனான ஆட்டம் இந்தியாவுக்கு எளிதாக அமைந்துவிடும் என யாரும் கணிக்கவில்லை.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, மழையால் ஸ்காட்லாந்துடன் ஆட்டம் ரத்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி என லீக் சுற்று போராட்டமாகத்தான் தொடங்கியது. ஆனால், அடுத்தடுத்து 2 மாபெரும் வெற்றிகளை பெற்று நிகர ரன்ரேட்டில் சூப்பர்-8 சுற்றுக்குள் இங்கிலாந்து வந்தது.
சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்தாலும், மேற்கிந்தியத்தீவுகளையும், அமெரிக்காவையும் வென்று நிகர ரன்ரேட்டில் வலுவாக அமர்ந்து குரூப்-2 பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தும்வரை இங்கிலாந்து அணிக்கு யாருடன் அரையிறுதி உறுதியாகவில்லை. இந்திய அணி வென்றபின்புதான், அரையிறுதி போட்டி நடக்கும் மைதானம் இங்கிலாந்து அணிக்கு உறுதியானது. அதன்பின்புதான் தனிவிமானத்தில் செவ்வாய்கிழமை காலை ஜார்ஜ்டவுன் சென்றது. இந்திய அணி திங்கள்கிழமை இரவு சென்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இங்கிலாந்தின் பலவீனம் என்ன?
அரைறுதி போட்டி நடக்கும் பிராவிடன்ஸ் அரங்கில் 2010ம் ஆண்டுக்குப்பின் இங்கிலாந்து அணி விளையாடியதில்லை என்பதே அந்த அணிக்கு பெரிய பின்னடைவு. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப்பின்புதான் அந்த அணி வீரர்கள் அந்த விக்கெட்டில் விளையாடுகிறார்கள். இதில் இங்கிலாந்து அணியில் இருக்கும் ஜோர்டான் மட்டும் கரீபியன் லீக்கில் விளையாடுவதால் அந்த விக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவர். மற்ற இங்கிலாந்து வீரர்கள் யாருக்கும் பிராவிடன்ஸ் விக்கெட் குறித்த அனுபவம் இல்லை.
ஆனால், இந்திய அணியில் இருக்கும் பல வீரர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிராவிடன்ஸ் மைதானத்தில் டி20 போட்டிகளை விளையாடியதால் விக்கெட் குறித்த அனுபவம் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆடுகளம் எப்படிப்பட்டது?
பிராவிடன்ஸ் விக்கெட்(ஆடுகளம்) சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி. இது ஸ்லோ விக்கெட் என்பதால், வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக்கொடுத்து வீசினாலும் ஸ்விங் ஆகாது, பவுன்ஸ் ஆவது கடினம்.
பந்துவீச்சில் வெவ்வேறு வேகத்தையும், சுழலையும் வெளிப்படுத்தும்போது அதற்கான பலன்களைப் பெற முடியும். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 146 ரன்களை ஆப்கானிஸ்தான் சேர்த்துள்ளது. இந்த உலகக் கோப்பைக்காக மைதானம் ஓரளவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
டாஸ் வெல்லும் அணி சிறிதுகூட யோசிக்காமல் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து விக்கெட் பற்றி யோசிக்காமல் பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தி ரன்களைச் சேர்க்க முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் 150 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது. முதலில் பேட் செய்த அணி 5 முறையும், சேஸிங் செய்த அணி 4 முறையும் இந்த விக்கெட்டில் வென்றுள்ளன.
இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் இங்கு 5 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணிகள் 3 முறையும் சேஸிங் செய்த அணிகள் 2முறையும் வென்றுள்ளன.
ஆதலால் இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இங்கிலாந்து அணியில் அதில் ரஷீத், மொயின் அலி, லிவிங்ஸ்டன் ஆகியோரும், இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம், தேவைப்பட்டால் சஹலுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி இடம் பறிக்கப்படுமா?
விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் மோசமான ஃபார்மோடு தவிக்கிறார். இதுவரை கோலி விளையாடிய போட்டிகளில் 2 டக்அவுட், என 66 ரன்கள்தான் சேர்த்துள்ளார், அதிகபட்சமே 37 ரன்கள்தான். வழக்கமாக விராட் கோலி 3வது வீரராகத்தான் களமிறங்குவார் ஆனால், அவரை டி20உலகக் கோப்பைக்காக புதிய பந்தை எதிர்கொள்ளச் செய்யும்போது அவரால் விக்கெட்டை தாக்குப்பிடித்து ஆடமுடியவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.
இதனால் அரையிறுதியில் விராட் கோலி வழக்கம்போல் 3-ஆவது இடத்திலும் தொடக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஆனால், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் கோலியுடன் சேர்ந்து ஆடிய ஏபிடி கோலியின் தொடக்க பேட்டிங் குறித்து யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கோலிக்கு தொடக்க ஆட்டக்காரர் வரிசை சரியாக வராது. அவரை எப்போதும்போல 3-ஆவது வீரராகக் களமிறக்குங்கள். அவர் 3-ஆவது வீரராக வந்தாலே எதிரணிக்கு ஒருவிதமான கலக்கம் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால் விராட் கோலி அரையிறுதி ஆட்டத்தில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்குவாரா அல்லது 3-ஆவது வீரராகக் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, ரோஹித் சர்மாவும், கோலியும் ஒரே ஒருமுறைதான் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்களை விளாசி அவரின் ஃபார்மை நிரூபித்துவிட்டார். ஆனால், கோலி இதுவரை பெரிதாக எந்த இன்னிங்ஸிலும் ஆடவில்லை. இதனால் அடுத்துவரும் அரையிறுதி, அல்லது பைனலில் கோலி தன்னுடைய பேட்டிங்கை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பும்ரா, குல்தீப் வருகை
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 10 விக்கெட்டில் வென்று இந்திய அணியை வெளியேற்றினர். அப்போது இந்திய அணியின் துருப்புச்சீட்டுகளாகக் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் இருவரும் அணியில் இல்லை.
ஆனால், இந்தமுறை பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, குல்தீப்பின் சமாளிக்க முடியாத சுழற்பந்துவீச்சு என இரு அஸ்திரங்களோடு இந்திய அணி களமிறங்குவது பெரிய பலமாகும்.
பிராவிடன்ஸ் விக்கெட் தொடக்கத்திலிருந்தே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பவர்ப்ளேயில் பட்லர், பில்சால்ட் இருவரும் பெரிய ஸ்கோர் செய்ய அதிரடியாக ஆடலாம்.
பும்ரா பந்துவீச்சில் 12 இன்னிங்ஸில் பட்லர் 4 முறை ஆட்டமிழந்துள்ளார். 82 பந்துகளில் 71 ரன்களை பட்லர் சேர்த்துள்ளார். ஆதலால் தொடக்கத்திலேயே பும்ரா புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவது வெற்றியை நோக்கி செல்ல எளிதாக அமையும்.
ஒருவேளை பட்லர் நிலைத்து நின்றால், நடுப்பகுதியில் குல்தீப் பந்துவீச்சை எதிர்கொள்ள நேரிடும். கடந்தஆண்டில் உலகளவில் அனைத்து தரப் போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளராக குல்தீப் அறியப்பட்டுள்ளார்.அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன்ரேட்டை இழுத்துப் பிடிப்பதில் வல்லவாக குல்தீப் இருந்து வருகிறார். இதுவரை 3 முறை குல்தீப் பந்துவீச்சில் பட்லர் ஆட்டமிழந்துள்ளார். 63 பந்துகளில் 87 ரன்களை பட்லர் சேர்த்துள்ளார்.
இங்கிலாந்து பேட்டர்கள் இடதுகை சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளனர். இருந்தாலும் அனுபவம் மிகுந்த அக்ஸர், ஜடேஜாவின் பந்துவீச்சை இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக ஆட முடியாது. இங்கிலாந்து அணிக்கு நடுப்பகுதி ஓவர்களில் பெரிய தொந்தராக இருக்கப் போதுவது குல்தீப் பந்துவீச்சுதான். பெரிய அணிகளுக்கு எதிராகவே குல்தீப் 6 எக்னாமி வைத்துள்ளது இங்கிலாந்து ரன்ரேட்டை இழுத்துப் பிடிக்க வைக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு தலைவலியாக இருக்கப்போகும் ஆர்ச்சர், மொயின் அலி
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 முறை ஜோப்ரா ஆர்ச்சரிடம் விக்கெட்டை இழந்துள்ளது எச்சரிக்கையாகும். டி20 போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சரின் 20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 17 ரன்கள் சேர்த்து 3 முறை விக்கெட்டை இழந்துள்ளார். அதேபோல மொயின் அலி பந்துவீச்சிலும் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால் இருவரின் பந்துவீச்சில் ரோகித் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டியிருக்கும்.
விராட் கோலியை மொயின் அலி 10 முறை சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 3 முறை, டி20 போட்டியில் ஒருமுறை, டெஸ்ட் போட்டியில் 6 முறை என கோலியின் விக்கெட்டை மொயின் அலி வீழ்த்தியது எச்சரிக்கையாகும். ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் கோலியின் விக்கெட்டை 2முறை மொயின் அலி வீழ்த்தியுள்ளார். மொயின் அலியின் 26 பந்துகளைச் சந்தித்த கோலி, 18 ரன்கள்தான் சேர்த்துள்ளார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் பவர்ப்ளேயில் மொயின்அலியை பந்துவீசச் செய்து பெரிதாக அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆதலால், பவர்ப்ளே ஓவருக்குப்பின்புதான் அவர் பந்துவீசக்கூடும் என்று எதிர்பார்த்தாலும், கோலிக்கும், ரோஹித்துக்கும் அழுத்தம் தர வேண்டும், ரன்ரேட்டைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து மொயின் அலியை பவர்ப்ளே ஓவருக்குள் பந்துவீசவும் வைக்க முடியும்.
பவர்ப்ளேயில் ஆர்ச்சர் 8 ஓவர்களை சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வலுவாக இருக்கிறார் என்பதால் அவரின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். டாப்ளியும் புதிய பந்தில் பந்துவீசும்போது, வலதுகை பேட்டர்களான ரோகித், கோலிக்கு பெரிய சவாலாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
ஒருவேளை ரோகித் சர்மா தொடக்கத்திலேயே ஆட்டமிழந்துவிட்டால், அடுத்துவரும் ரிஷப் பந்த், கோலிக்கு சுழற்பந்துவீச்சு மூலம் கடும் அழுத்தத்தை இங்கிலாந்து வழங்கலாம்.
ஏனென்றால் இருவருமே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிதாக ஸ்ட்ரைக் ரேட் இல்லை, சமாளித்து ஆடுவதிலும் சிரமப்படுவார்கள். 2021ம் ஆண்டிலிருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகவும், ரிஷப் பந்த் ஸ்ட்ரைக் ரேட்125 ஆகவும் இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், சுழற்பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்யக்கூடிய ஷிவம் துபேயை 3-ஆவது வீரராக களமிறக்கவும் இந்திய அணி முயற்சிக்கலாம். ஏனென்றால், சுழற்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தரும்போது அவர்களின் வியூகத்தை உடைக்க துபே போன்ற பவர் ஹிட்டர்கள் தேவை என்பதால், தேவைக்கு ஏற்றபடி திட்டங்களை மாற்றலாம்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆர்ச்சர் ஒருமுறை மட்டுமே தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெத் ஓவர்களை வீசி, 3விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்ற ஆட்டங்களில் நடுப்பகுதி ஓவர்களோடு ஆர்ச்சர் முடித்துவிடுவார்.
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடுப்பகுதியில் ஆர்ச்சர் பந்துவீசினால், சூர்யகுமார், ஹர்திக் ஆகியோருக்கு எதிராக பந்துவீசலாம். இருவரையும் ஐபிஎல் தொடரில் பலமுறை ஆர்ச்சர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பாண்டியாவை 3 முறையும், சூர்யகுமாரை ஒருமுறையும் ஆர்ச்சர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆர்ச்சருக்கு எதிராக இருவருமே 110 ஸ்ட்ரைக் ரேட்டுக்குள்ளாகவே வைத்துள்ளது இந்தியாவுக்கு கவலைக்குரியதுதான்.

பட மூலாதாரம், Getty Images
நிலைத்து ஆடாத இந்தியாவின் முக்கிய வீரர்கள்
இதுவரை நடந்த ஆட்டங்களில் ரிஷப் பந்த், துபே, ஜடேஜா, கோலி, என யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஐபிஎல் போட்டியில் மஞ்சள் ஆடை அணிக்கு சிறப்பாக ஆடிய துபேவை ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் தேர்ந்தெடுத்தும், இதுவரை பெரிய இன்னிங்ஸோ, கேமியோ என இந்திய அணிக்காக ஆடவில்லை.
விராட் கோலிக்கு இதுதான் கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் மனதில் நிற்கும் பங்களிப்பை அரையிறுதியில் அளித்தால் அணியின் வெற்றிக்கு உதவும்.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவருமே நடுவரிசை பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறார்கள். இருவரும் பல போட்டிகளில் சிறப்பாக பேட் செய்து கவுரமான ஸ்கோர் வரவும், வெற்றித் தேடித்தந்துள்ளனர். இவர்களின் பங்களிப்பு இங்கிலாந்துக்கு எதிராகவும் தொடர வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
சொதப்பும் இங்கிலாந்து பேட்டர்கள்
இங்கிலாந்து பேட்டர்களில் இதுவரை பட்லர், பேர்ஸ்டோ மட்டுமே ஒரு ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடித்துள்ளனர். ஹேரி புரூக் அரைசதம் அடித்துள்ளார். மற்றவகையில் பில்சால்ட், லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரன், ஜேக்ஸ் என யாரும் பெரிய ஸ்கோர் செய்யவில்லை என்பது இந்திய அணிக்கு ஆறுதலாகும்.
இங்கிலாந்து அணி பட்லர், பேர்ஸ்டோ, சால்ட் ஆகிய 3 பேட்டர்களை நம்பியே பெரும்பாலான ஆட்டங்களை நகர்த்தியுள்ளது. இந்த 3 பேரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டாலே இந்திய அணிக்கு பாதி வெற்றி கிடைத்தது போலத்தான்.
ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் மொயின் அலி, அதில் ரஷீத்துடன் சேர்த்து வில் ஜேக்ஸ் களமிறங்கலாம். மார்க்வுட்டுக்கு பதிலாக ஜோர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்கு விளையாடாமலே பைனல் வாய்ப்பு கிடைக்குமா?
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் இல்லை, மாறாக கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்தானால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும். ஏனென்றால் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியாகும்.
இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடக்கும் கயானாவில் 27ம் தேதி 88 சதவீதம் மழைக்கும் 18 சதவீதம் இடியுடன் மழைபெய்யவும் வாய்ப்புள்ளது. மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வசதியும் கயானா மைதான நிர்வாகத்திடம் இல்லை. ஆதலால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டு பின்னர் ஆட்டத்தை நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டால் இந்தியா-இறுதிப்போட்டி செல்வது உறுதியாகும்.
இந்திய அணி(உத்தேச வீரர்கள்)
ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப்யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்து அணி(உத்தேச வீரர்கள்)
ஜாஸ் பட்லர்(கேப்டன்), பில் சால்ட, ஜானி பேர்ஸ்டோ, ஹேரி ப்ரூக், மொயின் அலி, லியாம் லிவிங்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், ரீஸ் டாப்ளி அல்லது வில் ஜேக்ஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












