இலங்கையில் தேர்தல் நடக்குமா? பிரசாரத்தை ஆரம்பிக்காத வேட்பாளர்கள் - காரணம் என்ன?

இலங்கையில் தேர்தல் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இலங்கை, உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் தேதி, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது.

எனினும், தேர்தலை நடத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் பல தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு வலியுறுத்தி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், தேர்தலை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேர்தலை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை சட்டத்திற்குட்பட்டு நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதி வழங்கியுள்ளமையினால், தேர்தலை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது.

உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரை ராஜா இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி, தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித தடையும் கிடையாது.

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துமாறு கோரி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 23ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மார்ச் மாதம் 9ம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஓய்வு பெற்ற கேணல் டபிள்யூ.எம்.கே.விஜயசுந்தரவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுத்தாரர் தரப்பு, குறித்த மனுவை உரிய வகையில் தாக்கல் செய்யவில்லை என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மனுத்தாரர், தான் இலங்கையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் அவர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தேர்தல் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இதனால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும், நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முக்கியமான தேவைகளுக்கு மாத்திரம் பணத்தை செலவிட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சத்திய கடுதாசியில் தெரிவித்துள்ளதாக மேலதிக சொலிசிடர் ஜெனரல் நெரில் புல்லே தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிசிடர் ஜெனரல் நெரில் புல்லே உயர்நீதிமன்றத்தில் இன்று முன்னிலையானார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் 23ம் தேதி வரை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தேர்தலை நடத்த பணம் வழங்கப்படவில்லை

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான பிப்ரவரி மாத செலவினங்களை ஈடு செய்வதற்கு பணத்தை வழங்கக் கோரி, தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

பிப்ரவரி மாத செலவினங்களுக்கு மட்டும் 770 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு, நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

எனினும், இன்று வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தாம் தலை வணங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.

தேர்தலை நடத்துவதற்கு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா தமக்கு கிடைத்துள்ளமையினால், அதனை கொண்டு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் தேர்தல் நடக்குமா?

பட மூலாதாரம், RAJAMANI PRASHATH

படக்குறிப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளுராட்சி சபை வேட்பாளரும் கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளருமான ராஜமணி பிரசாத்

சூடு பிடிக்காத தேர்தல் களம்

இலங்கையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே காணப்படும்போதிலும், தேர்தல் களம் இன்று வரை சூடுபிடிக்கவில்லை.

இலங்கையில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்தல்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பிரசார நடவடிக்கைகளில் மந்த நிலைமை காணப்படுகின்றது.

தேர்தல் பிரசாரங்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளுராட்சி சபை வேட்பாளரும், கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளருமான ராஜமணி பிரசாத்திடம், பிபிசி தமிழ் வினவியது.

''தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி உள்ளது. பொருளாதார பிரச்சினை இன்று எல்லாருக்கும் உள்ளது. பிரசாரத்திற்கு பதாகைகள், போஸ்டர்கள் அச்சிட வேண்டும். தேர்தலுக்கு யாரிடமாவது கடனை வாங்கியே இதனை செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு பிரசாரத்திற்காக கடனை வாங்கி, இந்த வேலைகளை செய்து பின்னர், தேர்தல் இல்லை என அறிவித்தால், வாங்கிய கடனுக்கு எப்படி வட்டி கட்டுவது, எப்படி கடனை திருப்பி செலுத்துவது என்ற பயம் உள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், சம்பளத்தை சரி கொடுக்கலாம். அதுமாத்திரம் அல்ல. மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருப்போம். அதனையும் நிறைவேற்ற முடியாமல் போய்விடும். அதனால் நான் மாத்திரமல்ல, பெரும்பாலான வேட்பாளர்கள் இன்னும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை" என ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

இலங்கையில் தேர்தல் நடக்குமா?

பட மூலாதாரம், A.S.MAHROOF

படக்குறிப்பு, பொத்துவில் பிரதேச சபை P/6,7,8 சின்னப் புதுக்குடியிருப்பு வட்டார சுயேட்சை வேட்பாளர் ஏ.எஸ்.மஹரூப்

தேர்தல் நடக்குமா என்ற சந்தேகத்தினாலேயே தான் இன்னும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை என பொத்துவில் பிரதேச சபை P/6,7,8 சின்னப் புதுக்குடியிருப்பு வட்டார சுயேட்சை வேட்பாளர் ஏ.எஸ்.மஹரூப் குறிப்பிடுகின்றார்.

''தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற ஒரு சந்தேகம் எனக்குள் இருக்கிறது. நடக்கக்கூடிய சாத்தியம் இல்லை என தோன்றுகின்றது. நாட்டு நிலைமை அப்படி இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அந்த விடயங்களினால் பிரசாரத்தில் நான் ஈடுபடவில்லை" என சுயேட்சை வேட்பாளர் ஏ.எஸ்.மஹரூப் தெரிவிக்கின்றார்.

தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவி வருகின்றமையினால் பெரும்பாலான வேட்பாளர்கள் இதுவரை தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: